ராமநாதபுரம்: வெற்றியைத் தீர்மானிக்கும் வேட்பாளர்கள் தேர்வு

ராமநாதபுரத்தைப் பொருத்தவரையில் அதிமுகவும், அதன் கூட்டணிக் கட்சிகளுமே அதிகமாக வென்றுள்ளன. தற்போது அதிமுகவே நேரடியாக போட்டியிட விரும்புகிறது
பாம்பன் பாலம்
பாம்பன் பாலம்

ராமநாதபுரம் சட்டப்பேரவைத் தொகுதியானது நாட்டின் இருபெரும் இதிகாசங்களில் முக்கியமான ராமாயணத்தின் நிகழிடத் தலமாக விளங்குகிறது. அகில உலக ஆன்மிக மாநாட்டுக்கு சுவாமி விவேகானந்தரை அனுப்பிப் பாரதப் பண்பாட்டை உலகறியச் செய்த சேதுபதி மன்னர்களால் ஆளப்பட்ட சேதுபூமியின் தலைநகராகவும் இத்தொகுதி இருந்துள்ளது.

தொகுதியைப் பொருத்தவரையில் ராமேசுவரம் ராமநாதசுவாமி திருக்கோயில், திருஉத்தரகோசமங்கை மரகத நடராஜர், திருப்புல்லாணி ஆதிஜெகநாதப் பெருமாள், தேவிப்பட்டினம், ஏர்வாடி தர்ஹா, ஓரியூர் தேவாலயம் என அனைத்து மதத்தவர்களுக்கான முக்கிய வழிபாட்டுத் தலங்கள் உள்ளன.

நில அமைப்பு: நாட்டிலேயே மூன்று புறம் கடல், ஒரு புறம் நிலம் என தீபகற்பத் தொகுதியாக உள்ளது ராமநாதபுரம் மட்டுமே.

சமூகம், சாதி, தொழில்கள்: முக்குலத்தோர் (மறவர், அகமுடையார், கள்ளர்), தேவேந்திரகுல வேளாளர், நாடார், வல்லம்பர், செட்டியார், பிள்ளைமார், யாதவர், தெலுங்கு பேசும் தலித்துகள் என அனைத்துத் தரப்பினரும் வசிக்கின்றனர். தொகுதியில் விவசாயிகள், மீனவர்கள் அதிகம். பனைமரம் சார்ந்த தொழிலில் ஈடுபடுவோர், கால்நடை வளர்ப்போரும் வசிக்கின்றனர். கூலித் தொழிலாளர்கள் நிறைந்த தொகுதியாகவும் உள்ளது. இத்தொகுதியில் ஆட்சியர் அலுவலகம் உள்ளிட்ட முக்கிய அலுவலகங்கள்கூட திருவாடானைத் தொகுதிக்கு உட்பட்ட இடங்களிலேயே உள்ளதும் குறிப்பிடத்தக்கது.

அரசியல் முக்கியத்துவம்: ஒருங்கிணைந்த ராமநாதபுரம் மாவட்டத்தில் இடம் பெற்ற விருதுநகர், தேனி பகுதிகளில் இருந்துதான் காமராஜர், எம்.ஜி.ஆர். ஆகியோர் தேர்வாகி முதல்வரானார்கள் என்பதும் குறிப்பிடத்தக்கது. பசும்பொன் முத்துராமலிங்கத் தேவர், மறைந்த குடியரசுத் தலைவர் ஏ.பி.ஜே. அப்துல்கலாம் போன்ற பெரிய தலைவர்கள் உருவான மாவட்டமாகவும் ராமநாதபுரம் திகழ்கிறது.

பெரும்பான்மை சமூகம்: ராமநாதபுரத்தில் மதரீதியாக இந்துக்கள் அதிகம். இஸ்லாமியர்கள், கிறிஸ்துவர்கள் என அனைத்துத் தரப்பினரும் இங்கு சகோதரர்களாக மதநல்லிணக்கத்தோடு வாழ்கின்றனர்.

மக்கள்தொகையில் சமூகங்களின் நிலை: மத ரீதியாகப் பார்த்தால் தொகுதியில் இந்துக்களே அதிகம். இஸ்லாமியர்களைப் பொருத்தவரையில் கீழக்கரையில் பாதிக்கு பாதி உள்ளனர். ராமநாதபுரம் நகராட்சியில் இந்துக்களுக்கு அடுத்த இடத்தில் உள்ளனர். மண்டபம், திருப்புல்லாணி ஒன்றியங்களிலும் இஸ்லாமியர்கள் குறிப்பிடத்தக்க எண்ணிக்கையில் உள்ளனர். பெரியபட்டினம், புதுமடம் ஊராட்சிகளில் இஸ்லாமியம் சார்ந்த கட்சியினரே தலைவர்களாக இருப்பதும் குறிப்பிடத்தக்கது. தங்கச்சிமடம், பாம்பன், ராமேசுவரம், முத்துப்பேட்டை, பெரியபட்டிணம் ஆகிய பகுதியில் கிறிஸ்துவர்கள் அதிகமாக உள்ளனர்.

கடந்த தேர்தல்களில் வென்றவர்கள்:

கடந்த 1952 ஆம் ஆண்டு காங்கிரஸ் சார்பில் வென்ற ராஜா சண்முகராஜேஸ்வர சேதுபதி, 1957-ல் சுயேச்சையாகவும், பின் 1962-ல் காங்கிரஸிலும் வென்றுள்ளார். கடந்த 1967 ஆம் ஆண்டு திமுக சார்பில் டி. தங்கப்பா (ராஜாவைத் தோற்கடித்து) வென்றுள்ளார். 

அவரைத் தொடர்ந்து 1971-ல் திமுகவைச் சேர்ந்த எம்.எஸ்.கே. சத்தியேந்திரன், கடந்த 1977 ஆம் ஆண்டு அதிமுக சார்பில் போட்டியிட்ட டி.ராமசாமி, அவரே தொடர்ந்து 1980, 1984 ஆகிய இருமுறை வெற்றி வாகை சூடியுள்ளார். 

கடந்த 1989 ஆம் ஆண்டு திமுகவைச் சேர்ந்த எம்.எஸ்.கே. ராஜேந்திரன் வென்ற நிலையில், 1991-ல் அதிமுகவைச் சேர்ந்த எம்.தென்னவன் வென்றார். 1989 வரையில் முக்குலத்தோர் (குறிப்பாக அகமுடையர்) வேட்பாளர்களே வென்ற நிலையில், 1991 ல் வேளாளர் பிரிவைச் சேர்ந்த தென்னவன் அதிமுக சார்பில் வெற்றி பெற்று அமைச்சராகியது குறிப்பிடத்தக்கது.

கடந்த 1996 ஆம் ஆண்டு திமுக சார்பில் ஏ.ரஹ்மான்கான் வென்றார். கடந்த 2001 ஆம் ஆண்டு அதிமுக சார்பில் இஸ்லாமியரான ஏ. அன்வர்ராஜா வென்று அமைச்சரானார். கடந்த 2006 ஆம் ஆண்டு காங்கிரஸைச் சேர்ந்த கே.அசன்அலியும், 2011-ல் அதிமுக கூட்டணியில் மனிதநேய மக்கள் கட்சியைச் சேர்ந்த பேராசிரியர் எம்.எச். ஜவாஹிருல்லாவும் வென்றனர்.

கடந்த 2016 தேர்தலில் அதிமுக தனித்துப் போட்டியிட்ட நிலையில், மருத்துவர் எம்.மணிகண்டன் வென்று அமைச்சராகி பாதியிலேயே பதவியை இழந்து சட்டப்பேரவை உறுப்பினராகத் தொடர்கிறார்.

உள்ளாட்சிகளில் கட்சி நிலவரம்: தொகுதியில் ராமநாதபுரம், திருப்புல்லாணி, மண்டபம் ஆகிய 3 ஒன்றியங்கள் உள்ளன. அத்துடன் ராமநாதபுரம் சிறப்பு நிலை நகராட்சி, கீழக்கரை, ராமேசுவரம் நகராட்சிகளும், மண்டபம் பேரூராட்சியும் உள்ளன.

அரசியல் கட்சிகளின் செல்வாக்கு விவரம்: அதிமுகவுக்கு தொகுதியில் செல்வாக்கு அதிகமாகும். மண்டபம் ஒன்றியம், ராமேசுவரம் நகராட்சி, மண்டபம் பேரூராட்சி, திருப்புல்லாணி ஒன்றியம் ஆகிய பகுதிகளில் அதிமுகவுக்கு செல்வாக்கு அதிகமாக உள்ளது. தற்போது அமமுகவால் அப்பகுதியில் அதிமுக செல்வாக்கு பாதியாகியுள்ளதும் குறிப்பிடத்தக்கது. திமுகவைப் பொருத்தவரையில் ராமநாதபுரம் நகர், கீழக்கரை நகராட்சி, திருப்புல்லாணி பகுதிகளில் செல்வாக்குள்ளது. காங்கிரஸைப் பொருத்தவரையில் ராமநாதபுரம் நகர், ராமேசுவரம், கீழக்கரை ஆகிய பகுதிகளில் ஓரளவு வாக்குகள் உள்ளன.

தொகுதியில் திருப்புல்லாணி, மண்டபம் ஒன்றியக் குழுத் தலைவர்களாக திமுக தலைவர்களே, ஊராட்சிகளில் பெரும்பாலானவையும் திமுக வசமே உள்ளன.

பாஜக வளர்ச்சி: கடந்த 10 ஆண்டுகளில் ராமநாதபுரம் மாவட்டத்தில் பாஜக பெரிய வளர்ச்சியைக் கண்டுள்ளது. ராமேசுவரம், மண்டபம், ராமநாதபுரம் அரண்மனைப் பகுதியில் செல்வாக்குடன் உள்ளது. கம்யூனிஸ்ட்டுகள் ராமேசுவரம், தங்கச்சிமடம் ஆகிய மீனவக் குடியிருப்புப் பகுதிகளில்  செல்வாக்குடன் உள்ளனர்.

அமமுகவைப் பொறுத்தவரையில் மண்டபம், ராமநாதபுரம் நகர், திருப்புல்லாணி ஒன்றியங்களில் குறிப்பிடத்தக்க அளவுக்கு வாக்கு வங்கி உள்ளது.

மொத்தத்தில் ராமநாதபுரம் சட்டப்பேரவைத் தொகுதியில் அதிமுக 6 முறையும், திமுக 4 முறையும், காங்கிரஸ் 3 முறையும், சுயேச்சை ஒரு முறையும், மனிதநேய மக்கள் கட்சி அதிமுக ஆதரவுடன் ஒரு முறையும் வென்றுள்ளன.

கட்சிகள் செல்வாக்கு நிலை: அதிமுகவைப் பொறுத்தவரை கடந்த 2014 மக்களவைத் தேர்தலிலும், 2016 சட்டப்பேரவைத் தேர்தலிலும் தனித்து நின்று வெற்றி பெற்றுள்ளது குறிப்பிடத்தக்கது. தற்போது அதிமுக, திமுக இரு கட்சிகளிலும் ஜெயலலிதா, கருணாநிதி ஆகியோர் இல்லாத நிலையில் வேட்பாளர்கள் தேர்வும் வெற்றியைத் தீர்மானிக்கும் காரணியாக இருப்பது தெரிகிறது.

நிறைவேறிய திட்டங்கள்: ராமநாதபுரம் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனை, அரசு சட்டக் கல்லூரி, ராமேசுவரத்தில் மறைந்த குடியரசுத் தலைவர் ஏ.பி.ஜே.அப்துல்கலாம் பெயரில் கலை, அறிவியல் கல்லூரி. பாம்பனில் புதிய கடல் ரயில் பாலம், ராமேசுவரம்-தனுஷ்கோடி தரைப்பாதை மற்றும் ரயில் பாதை அமைப்புக்கான பணி தொடக்கம், உப்பூர் அனல்மின் திட்டம், குந்துகால் மீன் இறங்குதள துறைமுகம், ஆழ்கடல் மீன்பிடி நவீன படகுகள் வழங்கும் திட்டம், அச்சுந்தன் வயல் முதல் கிழக்கு கடற்கரைச் சாலை வரையில் ராமநாதபுரம் நகர் பகுதிக்குள் செல்லும் நான்கு வழிச்சாலை, ராமநாதபுரத்தில் இருந்து திருப்புல்லாணி வழியாக கீழக்கரைப் பகுதிக்குச் செல்ல ரயில்வே மேம்பாலம், ராமநாதபுரம் அம்மா பூங்கா, பாம்பன், தங்கச்சிமடம் மீன் இறங்குதளம், மிளகாய் வத்தல் சேமிப்பு குடோன்கள் மற்றும் சமீபத்தில் அறிவிக்கப்பட்ட விமான நிலையம் அமைக்கும் திட்டம்.

நிறைவேற்றப்படாத திட்டங்கள்: ராமநாதபுரம் நகராட்சியை விரிவாக்கும் திட்டம், பரமக்குடி முதல் ராமேசுவரம் வரையிலான இரு வழிச்சாலையை நான்கு வழிச்சாலையாக மாற்றும் திட்டம், பாம்பனில் புதிய தரை மேம்பாலம் கட்டும் பணி, காரைக்குடி -ராமநாதபுரம் வழியாக தூத்துக்குடிக்கு புதிய ரயில் பாதைத் திட்டம்.

தொகுதிப் பிரச்னைகள்: ராமேசுவரம், பாம்பன் பகுதி மீனவர்கள் தொடர்ந்து இலங்கை கடற்படையினரால் தாக்கப்பட்டு வருவது முக்கியப் பிரச்னையாகும். கடல் பகுதியில் கஞ்சா, தங்கம், மஞ்சள் போன்றவை கடத்துவது அதிகரித்திருப்பதும், அதனால் ஏற்படும் சமூக பிரச்னைகளும். நாட்டுப் படகு மீனவர்கள் பிடிக்கும் மீன்களையும், பெண்கள் சேகரிக்கும் கடல் பாசிகளையும் அரசே கொள்முதல் செய்யவேண்டும் என்ற கோரிக்கை நிறைவேற்றப்பட வேண்டும். மீனைக் குறைந்த விலையில் பதப்படுத்தும் கிடங்குகள் அமைக்க வேண்டும். பனை தொழில் சார்ந்த வர்த்தகத்தை பெருக்க நடவடிக்கை தேவை. 

மக்கள் எதிர்பார்ப்பு: ராமநாதபுரம் நகரில் அரசு மேல்நிலைப் பள்ளி அமைக்க வேண்டும். வேலைவாய்ப்பும், விவசாயத்துக்கான கண்மாய் ஆக்கிரமிப்புகளை அகற்றி, தண்ணீர் வரத்துக்கு கால்வாயை தூர்வாருவதை முழுமையாக மேற்கொள்ளவும் சீமைக்கருவேல மரங்களை முழுமையாக அகற்ற வேண்டுமெனவும் மக்கள் எதிர்பார்க்கின்றனர்.

கட்சிகள் நிலை: ராமநாதபுரத்தைப் பொருத்தவரையில் அதிமுகவும், அதன் கூட்டணிக் கட்சிகளுமே அதிகமாக வென்றுள்ளன. தற்போது அதிமுகவே நேரடியாக போட்டியிட விரும்புகிறது. ஆனால், அதன் முக்கிய கூட்டணிக் கட்சியான பாஜக முதன்முறையாகக் களமிறங்க நினைக்கிறது. அதிமுக முன்னாள் அமைச்சர்கள் ஏ.அன்வர்ராஜா, எம்.மணிகண்டன் ஆகியோர் போட்டியிட விரும்புகின்றனர். பாஜக சார்பில் மாநில செய்தித் தொடர்பாளர் டி.குப்புராம் உள்ளிட்டோர் போட்டியிட விரும்புகின்றனர்.

திமுக சார்பில் முன்னாள் மக்களவை உறுப்பினர் எம்.எஸ்.கே.பவானி ராஜேந்திரன், மாவட்ட இளைஞரணி அமைப்பாளர் இன்பாரகு, ஓய்வு பெற்ற அரசு அதிகாரியும், திமுக தலைமை செயற்குழு உறுப்பினருமான குணசேகரன் உள்ளிட்டோர் போட்டியிட விருப்பம் தெரிவித்துள்ளனர்.

வாக்காளர்கள் விவரம்: கடந்த ஜனவரி நிலவரப்படி ராமநாதபுரம் சட்டப்பேரவைத் தொகுதியில் மொத்தம் 3 லட்சத்து 6372 வாக்காளர்கள் உள்ளனர். அவர்களில் ஆண்கள் 1 லட்சத்து 51 ஆயிரத்து 772 பேரும், பெண்கள் 1 லட்சத்து 54 ஆயிரத்து 579 பேரும் மூன்றாம் பாலினத்தவர் 21 பேரும் உள்ளனர். தொகுதியில் ஆண் வாக்காளர்களே அதிகமாக உள்ளனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com