கீழ்வேளூர்(தனி): இடதுசாரி கூட்டணி எதிர்பார்க்கும் வெற்றி வாய்ப்பு

முழுவதும் ஊரகப் பகுதிகளை மட்டுமே உள்ளடக்கியது கீழ்வேளூர் தொகுதி. ஆட்சியாளர்களின் போதுமான கவனம் இத்தொகுதியின்பால் ஈர்க்கப்படவில்லை என்பது மக்களின் ஆதங்கம்.
கீழ்வேளூர் அட்சயலிங்கசுவாமி கோயில் நுழைவு வாயில்
கீழ்வேளூர் அட்சயலிங்கசுவாமி கோயில் நுழைவு வாயில்

தமிழகத்தில் மிகக் குறைந்த வாக்காளர்களைக் கொண்ட தொகுதிகளில் ஒன்றாக உள்ளது நாகை மாவட்டத்தில் உள்ள கீழ்வேளூர் (தனி) சட்டப்பேரவைத் தொகுதி. 2011-ஆம் ஆண்டு தொகுதிகள் மறுவரையறையின்போது புதிதாக உருவாக்கப்பட்டது இத்தொகுதி.

வாக்காளர்கள் எண்ணிக்கை: ஆண்கள் - 87,677. பெண்கள் - 91,578. இதரர் - 9. மொத்த வாக்காளர்கள் - 1,79,264.

தொகுதியின் சிறப்பு:

உலகப் புகழ்பெற்ற வேளாங்கண்ணி புனித ஆரோக்கிய அன்னை பேராலயம், சிக்கல் அருள்மிகு சிங்காரவேலவர் கோயில், எட்டுக்குடி முருகன் கோயில், அட்சயலிங்கசுவாமி கோயில், பஞ்ச நாராயணத் தலங்கள் என சிறப்புப் பெற்ற பல்வேறு ஆன்மிகத் தலங்களைக் கொண்டது இத்தொகுதி. கூலி உயர்வுக்காகவும், வர்க்க ஒற்றுமைக்காகவும் போராடிய விவசாயத் தொழிலாளர்கள் 44 பேர் உயிருடன் எரித்துக் கொல்லப்பட்ட வெண்மணி, தமிழகத்தின் 50 ஆண்டு கால அரசியல் வரலாற்றில் தவிர்க்க முடியாத ஆளுமையான மறைந்த திமுக தலைவர் மு. கருணாநிதியின் சொந்த ஊரான திருக்குவளை ஆகியன இத்தொகுதிக்கு உள்பட்டவை ஆகும்.

   வேளாங்கண்ணி புனித ஆரோக்கிய அன்னை பேராலயம்     
   வேளாங்கண்ணி புனித ஆரோக்கிய அன்னை பேராலயம்     

நில அமைப்பு: கீழ்வேளூர், திருக்குவளை என இரு வருவாய் வட்டத்துக்குள்பட்ட பகுதிகளையும்,  கீழ்வேளூர் ஊராட்சி ஒன்றியத்துக்குள்பட்ட 38 ஊராட்சிகள், கீழையூர் ஊராட்சி ஒன்றியத்தில் 11 ஊராட்சிகள், தலைஞாயிறு ஊராட்சி ஒன்றியத்தில் 10 ஊராட்சிகள், நாகை ஊராட்சி ஒன்றியத்தில் 12 ஊராட்சிகள் என  71  ஊராட்சிகளையும் உள்ளடக்கியது இத்தொகுதி.  

சாதி, தொழில்கள் அமைப்பு: ஆதிதிராவிடர்கள் உள்ளிட்ட பட்டியல் இனத்தவர்கள் இத்தொகுதியில் பெரும்பான்மையாக உள்ளனர். மீனவர்கள் மற்றும் பிற சமூகத்தினர் பரவலாக உள்ளனர். விவசாயமும், மீன்பிடித் தொழிலும் இங்கு பிரதானத் தொழில்களாக உள்ளன.

வென்றவர்கள், இரண்டாமிடம் பெற்றவர்கள்:

2011 -   மாலி என்ற பி. மகாலிங்கம் (மார்க்சிஸ்ட்)
              உ. மதிவாணன் (திமுக)

2016 -   உ. மதிவாணன் (திமுக)                                        
              என். மீனா (அதிமுக)

இத்தொகுதியின் வெற்றிக் கணக்கைத் தொடங்கியது மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி. ஆனால், அடுத்து நடைபெற்ற 2016-ஆம் ஆண்டு நடைபெற்ற தேர்தலில் மூன்றாவது அணியாக போட்டியிட்ட மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி இத்தொகுதியில் மூன்றாமிடத்தையே பெற்றது. இருப்பினும், மூன்றாவது அணி கணிசமான வாக்குகளைப் பெற்ற தொகுதிகளில் இத்தொகுதியும் ஒன்றாக இருந்தது.

அரசியல் கட்சிகளின் செல்வாக்கு: திராவிடக் கட்சிகளுக்கு இணையாக இடதுசாரிகள் வலுவாக உள்ள தொகுதிகளில் ஒன்றாக உள்ளது கீழ்வேளூர் தொகுதி. திமுக, அதிமுகவைப் பொருத்தவரை இரு கட்சிகளும் ஏறத்தாழ சம நிலையிலேயே உள்ளன. இருப்பினும், ஒரு முறை வென்ற கட்சி என்ற அளவில் தனிப் பெரும் செல்வாக்கில் திமுக முதன்மைப் பெற்றுள்ளது.  இடதுசாரிகளுடன் கூட்டணி அமைக்கும் கட்சிக்கு வெற்றி வாய்ப்பு அதிகம் கொண்ட தொகுதி.

நிறைவேற்றப்பட்ட திட்டங்கள்: நாகை மாவட்ட அரசு மருத்துவக் கல்லூரி, நாகை மீன்பிடித் துறைமுகம் ஆகியன இத்தொகுதியில் நிறைவேறியுள்ள மிகப்பெரியத் திட்டங்கள் ஆகும். இவை தவிர, வருவாய் நிர்வாக அலுவலகக் கட்டடங்கள், தீயணைப்பு நிலையம் உள்ளிட்ட கோரிக்கைகளும் நிறைவேறியுள்ளன.

நிறைவேற்றப்படாத திட்டங்கள்: கீழ்வேளூரில் பேருந்து நிலையம் அமைக்க வேண்டும், ஏற்கெனவே அறிவிக்கப்பட்ட வேளாண் கல்லூரியை அமைக்க வேண்டும், பொது நூலகத்துக்கு நிரந்தரக் கட்டடம் வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகள் இதுவரை நிறைவேறாத கோரிக்கைகளாக உள்ளன.

போட்டியிட வாய்ப்புள்ள கட்சிகள்: திமுக கூட்டணியில் இத்தொகுதியில் போட்டியிடும் வாய்ப்பைப் பெற இடதுசாரிகள் ஆர்வம் காட்டுகின்றன. இதில், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி கூடுதல் கவனம் செலுத்தி வருகிறது. அதேநேரத்தில், தொகுதியைத் தக்கவைத்துக்கொள்ள வேண்டும் என்பதில் திமுகவினரும் ஆர்வமாக உள்ளனர். அதிமுக கூட்டணியில், அதிமுக நேரடியாக களம் காணவே வாய்ப்பு அதிகம் எனப்படுகிறது.

தன்னிறைவு எதிர்பார்ப்பு: முழுவதும் ஊரகப் பகுதிகளை மட்டுமே உள்ளடக்கியது கீழ்வேளூர் தொகுதி. ஆட்சியாளர்களின் போதுமான கவனம் இத்தொகுதியின்பால் ஈர்க்கப்படவில்லை என்பது மக்களின் ஆதங்கம். இத்தொகுதி மக்கள், தங்களின் அத்தியாவசியத் தேவைகளுக்குக்கூட நாகை அல்லது திருவாரூரைச் சார்ந்தே வாழ வேண்டியுள்ளது. போதுமான சாலை வசதி, கல்வி வசதி, குடிநீர் வசதி போன்ற அடிப்படைத் தேவைகளை முழுமையாகப் பூர்த்தி செய்து,  தன்னிறைவு பெற்ற தொகுதியாக இத்தொகுதியை வார்த்தெடுக்க வேண்டும் என்பது இத்தொகுதி மக்களின் எதிர்பார்ப்பு.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com