மேட்டுப்பாளையம்: சிறுபான்மையினர் வாக்குகள் கிடைக்கப் போவது யாருக்கு?

சிறுபான்மையின வாக்குகள் யாருக்குக் கிடைக்கும் என்பதைத் பொருத்தே தொகுதியின் வெற்றி இருக்கும். 
மேட்டுப்பாளையம்
மேட்டுப்பாளையம்

மேற்குத் தொடர்ச்சி மலையடிவாரத்தில், உலகப் புகழ்பெற்ற சுற்றுலா மையமான உதகையின் நுழைவு வாயிலாக இருப்பது மேட்டுப்பாளையம். மேற்குத் தொடர்ச்சி மலைகளில் இருந்து பவானி ஆறு சமவெளியை அடைந்து மேட்டுப்பாளையம் வழியாகவே ஈரோடு மாவட்டத்துக்குச் செல்கிறது. பவானி ஆற்றின் கொடையால் வேளாண்மை இங்கு முக்கிய தொழிலாக நடைபெறுகிறது.

தமிழகத்தில் உள்ள கோயில் யானைகளுக்கு ஆண்டுதோறும் நடத்தப்படும் நலவாழ்வு முகாம் மேட்டுப்பாளையத்தில் பவானி ஆற்றின் கரையில்தான் நடத்தப்படுகிறது. இதே ஆற்றின் கரையில்தான் பிரசித்தி பெற்ற வனபத்திர காளியம்மன் கோயில் உள்ளது. அதேபோல் காரமடை அரங்கநாதர் கோயில் திருத்தேர் விழா விமரிசையாக நடைபெறும்.

மேட்டுப்பாளையத்தில் இருந்து தினசரி உதகைக்கு இயக்கப்படும் பாரம்பரிய மலை ரயில் யுனெஸ்கோவின் அந்தஸ்து பெற்றது. மேட்டுப்பாளையம் கல்லாற்றிலுள்ள அரசு பழப்பண்ணை, பிளாக் தண்டர் போன்றவை முக்கிய சுற்றுலா மையங்களாக உள்ளன.

பில்லூர் அணை
பில்லூர் அணை

தொகுதியில் உள்ள பகுதிகள்

மேட்டுப்பாளையம் வட்டம், கோவை வடக்கு வட்டத்தின் ஒரு பகுதிகளை உள்ளடக்கியது மேட்டுப்பாளையம் தொகுதி. மேட்டுப்பாளையம் நகராட்சி, காரமடை, சிறுமுகை, கூடலூர் கவுண்டம்பாளையம், நம்பர் 4 வீரபாண்டி ஆகிய நான்கு பேரூராட்சி பகுதிகள், 17 ஊராட்சிகள் இந்தத் தொகுதியில் அடங்கியுள்ளன.
 
தொழில், சமூக நிலவரம்

மேட்டுப்பாளையம் தொகுதி மக்களின் முக்கியத் தொழில் வேளாண்மை. இங்கு வாழை, கரும்பு, சோளம், கறிவேப்பிலை, காய்கறி பயிர்கள் அதிகம் பயிரிடப்படுகின்றன. சிறுமுகை பகுதியில் கைத்தறி நெசவுத் தொழில் முதன்மையானதாக உள்ளது. இந்த பகுதியில் 5,000 ஆயிரத்துக்கும் மேற்பட்ட குடும்பத்தினர் கைத்தறி நெசவு செய்து வருகின்றனர். இங்கு கோரா காட்டன், சாப்ட் சில்க்ஸ் , திருமண பட்டுப் புடைவைகள் உள்ளிட்ட பல்வேறு வகையான பட்டு ஆடைகள் தயாரிக்கப்பட்டு பல்வேறு பகுதிகளுக்கு அனுப்பப்படுகின்றன.

அத்துடன் மேட்டுப்பாளையம், காரமடை, சிறுமுகை பகுதிகளில் விளையும் நாட்டு காய்கள்தான் கோவை, நீலகிரி மாவட்டங்களுக்கும், கேரள மாநிலத்துக்கும் அனுப்பப்பட்டு வருகிறது. அத்துடன் நீலகிரியில் விளையும் உருளைக்கிழங்கு, கேரட், முட்டைக்கோஸ், பூண்டு உள்ளிட்ட அனைத்து மலைப் பயிர்களுக்கும், மேட்டுப்பாளையமே முக்கிய விற்பனை மையமாக உள்ளது. வேளாண்மை அதைச் சார்ந்த தொழில்களின் மூலமே அதிகமானோர் வேலைவாய்ப்பைப் பெறுகின்றனர். ஒக்கலிகர் சமுதாயத்தைச் சேர்ந்தவர்கள் அதிகம் வசிக்கின்றனர். இவர்களைத் தவிர தாழ்த்தப்பட்டவர்கள், முத்தரையர், கவுண்டர், நாயக்கர் உள்ளிட்ட பல்வேறு ஜாதியினர் வசிக்கின்றனர். நகர்ப்புறத்தில் இஸ்லாமியர்கள் குறிப்பிடத்தக்க அளவில் உள்ளனர்.

வாக்காளர் விவரம்

ஆண்கள் - 1,43,198, பெண்கள் - 1,52,566, மூன்றாம் பாலினத்தவர் - 38, மொத்தம் 2,95,802.

கடந்த தேர்தல்கள்

இந்தத் தொகுதியில் கடந்த 1951 முதல் நடைபெற்றுள்ள தேர்தல்களில் அதிமுக அதிகபட்சமாக 8 முறை வெற்றி பெற்றுள்ளது. காங்கிரஸ் 4 முறையும், திமுக 2 முறையும், சுயேச்சை ஒரு முறையும் வெற்றி பெற்றுள்ளது. கடந்த 2001 ஆம் ஆண்டு முதல் அதிமுக தொடர்ந்து வெற்றி பெற்று வருகிறது. கடந்த 2006 ஆம் ஆண்டு முதல் அதிமுகவின் ஓ.கே.சின்னராஜ் எம்எல்ஏவாக இருந்து வருகிறார்.

1951 - கெம்பே கவுடர்  - சுயேச்சை
1957 - டி. ரகுபதிதேவி - காங்கிரஸ்
1962 - என். சண்முகசுந்தரம் - காங்கிரஸ்
1967 - டி. டி. எஸ். திப்பையா - காங்கிரஸ்
1971 - எம். சி. தூயமணி -  திமுக     
1977 - எஸ். பழனிசாமி - அதிமுக
1980 - எஸ். பழனிசாமி - அதிமுக
1984  - எம். சின்னராசு - அதிமுக
1989 - வி.கோபாலகிருஷ்ணன் - காங்கிரஸ்
1991 - எல். சுலோச்சனா - அதிமுக     
1996 - பி. அருண்குமார் - திமுக 
2001 - ஏ. கே. செல்வராஜ் - அதிமுக
2006 - ஒ. கே.சின்னராஜ் - அதிமுக
2011 - ஒ. கே.சின்னராஜ் - அதிமுக
2016 - ஒ. கே.சின்னராஜ் - அதிமுக

கடந்த 5 ஆண்டுகளில் நிறைவேற்றப்பட்ட திட்டங்கள்
 
கடந்த தேர்தல் பிரசாரத்தின்போது மேட்டுப்பாளையம் தொகுதி மக்களுக்கு அளித்த பெரும்பாலான வாக்குறுதிகளை ஓ.கே.சின்னராஜ் நிறைவேற்றிக் கொடுத்திருக்கிறார். மேட்டுப்பாளையம் பகுதி மக்களின் நீண்டநாள் கோரிக்கையான அரசு கலைக் கல்லூரி கடந்த 3 ஆண்டுகளுக்கு முன்பே குட்டையூர் பகுதியில் தொடங்கப்பட்டது. அனைத்து கிராமங்களுக்கும் மின்சார வசதி செய்து தரப்பட்டது. குடிநீர் பிரச்னையைத் தீர்க்க 5 திட்டங்கள் அறிவிக்கப்பட்டு அனைத்துத் திட்டங்களும் செயல்படுத்தப்பட்டு வருகின்றன. 
கிராமப் பகுதிகளில் 20 வழித்தடங்களில் புதிய பேருந்துகள், பவானி ஆற்றுநீர் மாசுபடுவதைத் தடுக்க ரூ. 99 கோடியில் புதை சாக்கடைத் திட்டம், தொகுதியில் உள்ள அனைத்து கிராமங்களுக்கும் தார் சாலை, சிறுபாலங்கள் அமைக்கப்பட்டுள்ளன. கோவை மாவட்டத்தில் இருந்து நீலகிரிக்கு 3 ஆவது மாற்றுப் பாதையாக வெள்ளியங்காட்டில் இருந்து கெத்தை சாலை அமைக்கப்பட்டுள்ளது. சிறுமுகை லிங்காபுரம் காந்தவயல் ஆற்றுப் பாலம் மழைக்காலங்களில் நீரில் மூழ்கி விடுவதால் பொதுமக்கள் கோரிக்கையை ஏற்று  உயர்மட்ட பாலம் அமைக்க ரூ. 15 கோடி நிதி கேட்டு அரசு ஒப்புதல் பெற அனுப்பப்பட்டுள்ளது. மேட்டுப்பாளையம் தொகுதியில் 200க்கும் மேற்பட்ட ஒடைகள், குளங்கள் தூர்வாரப்பட்டுள்ளன.

தொகுதியின் பிரச்னைகள்

நீண்ட நாள் கோரிக்கையான காரமடை மேம்பாலம் கட்டி முடிக்கப்பட்டாலும் பாலத்தின் அடியில் வாகனங்கள் சென்று வர போதுமான அளவில் சாலை வசதி ஏற்படுத்திக் கொடுக்காததால் உள்ளூர்வாசிகள் அதிருப்தியில் உள்ளனர். மேட்டுப்பாளையத்துக்கு புறவழிச்சாலை அமைக்க மறைந்த முதல்வர் ஜெயலலிதா நிதி ஒதுக்கீடு செய்தார். ஆனால் 8 ஆண்டுகளுக்கு மேலாகியும் இன்னும் பணிகள் ஏதும் தொடங்கவில்லை.

நெல்லித்துறை அருகே விளாமரத்தூர் குடிநீர் திட்டம்  நடைமுறைபடுத்தப்படாமல் உள்ளது. 2 ஆண்டுகளுக்கு மேலாகியும் நகராட்சியில் புதை சாக்கடைத் திட்டத்தை முடிக்கவில்லை. 110 விதியின் கீழ் ஜெயலலிதா அறிவித்த கறிவேப்பிலை மதிப்புக் கூட்டுத் தொழிற்சாலை அமைக்கப்படவில்லை. மேட்டுப்பாளையத்தில் உள்ள சாலைகள் அனைத்தும் குண்டும் குழியுமாக கடந்த ஓராண்டாக உள்ளது. இதை அரசு கண்டுகொள்ளவில்லையே என்ற ஆதங்கம் மக்களுக்கு உள்ளது. வனப் பகுதியையொட்டி இருக்கும் பகுதி என்பதால் விலங்கு - மனித மோதல் பிரச்னைகள் அதிகளவில் ஏற்படுகின்றன. இந்த பிரச்னைக்கு நிரந்தரத் தீர்வு எட்டப்படவில்லை என்பது விவசாயிகளின் ஆதங்கமாக உள்ளது.

போட்டியிட வாய்ப்புள்ள கட்சிகள்

2021 தேர்தலில் மேட்டுப்பாளையம் தொகுதியில் அதிமுக சார்பில் மீண்டும் போட்டியிட ஒ.கே.சின்னராஜ் முயற்சித்து வருகிறார். அதேபோல், மாநிலங்களவை முன்னாள் உறுப்பினர் ஏ.கே.செல்வராஜ், சிக்காரம்பாளையம் ஊராட்சி மன்றத் தலைவர் ஞானசேகரன் ஆகியோரும் போட்டியிட ஆர்வத்துடன் இருக்கின்றனர்.

திமுகவில் முன்னாள் எம்எல்ஏ பா. அருண்குமார், திமுக தலைமை செயற்குழு உறுப்பினர் டி.ஆர்.சண்முகசுந்தரம், காரமடை கிழக்கு ஒன்றிய பொறுப்பாளர் எஸ்.எம்.டி.கல்யாணசுந்தரம் ஆகியோர் போட்டியிட ஆர்வம் காட்டி வருகின்றனர். அதிமுகவுக்கு எப்போதும் சாதகமான தொகுதிகளில் ஒன்றாக மேட்டுப்பாளையம் இருப்பதால் இந்தத் தொகுதியில் வெற்றி பெற்றுவிட முடியும் என்ற நம்பிக்கை அதிமுகவினருக்கு உள்ளது. அதேநேரம் பலமான திமுக வேட்பாளர், சிறுபான்மையின வாக்குகள் யாருக்குக் கிடைக்கும் என்பது போன்ற கேள்விகளுக்கு விடை கிடைத்தால் மட்டுமே யாருக்கு சாதமாக இருக்கும் என்பது தெரிய வரும்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com