மீன்பிடி படகுகள்
மீன்பிடி படகுகள்

நாகப்பட்டினம்: தொகுதியைப் பெற கூட்டணிக் கட்சிகள் போட்டி

திமுக கூட்டணியில் இந்திய கம்யூனிஸ்ட் கட்சியும், அதிமுக கூட்டணியில் கடந்த முறை கூட்டணிக் கட்சியான மனிதநேய ஜனநாயகக் கட்சியும் தொகுதியைப் பெற முனைப்பு காட்டி வருகின்றன.

தமிழகத்தின் நெற்களஞ்சியமாகக் குறிப்பிடப்படும் ஒருங்கிணைந்த தஞ்சை மாவட்டத்தின் ஒரு பகுதியாக இருந்து, 1991 ஆம் ஆண்டு அக். 18-ம் தேதி புதிய மாவட்டமாக உருவான நாகை மாவட்டத்தின் தலைநகரம், நாகப்பட்டினம். ஆதி தமிழர்களான நாகர்கள் வாழ்ந்த பகுதியாகக் குறிப்பிடப்படும் இப்பகுதி, பிற்காலத்தில் சோழர்களின் துறைமுக நகரமாக விளங்கி, பன்னாட்டு வாணிபத்தில் கோலொச்சியிருந்த பகுதி. இந்தியாவில் அதிகளவில் இயற்கை சீற்றத்துக்கு உள்ளாகும் பகுதிகளில் ஒன்றாகவும் உள்ளது இப்பகுதி.

தேவாரம் பாடிய மூவராலும் பாடல் பெற்றதும், பல ஊழிக் காலங்களைக் கடந்ததுமான நாகை அருள்மிகு நீலாயதாட்சியம்மன் சமேத அருள்மிகு காயாரோகணசுவாமி திருக்கோயில், அஜ்மீர் தர்காவுக்கு இணையானதாகவும் உலக புகழ்ப் பெற்ற இஸ்லாமிய வழிபாட்டுத் தலங்களில் ஒன்றானதுமான நாகூர் ஆண்டவர் தர்கா, போர்த்துக்கீசியர்களால் கட்டப்பட்ட தலை சாய்த்து அருளும் புனித மாதரசி மாதா கோயில் என பல்வேறு ஆன்மிகத் தலங்களைத் தன்னகத்தே கொண்ட தொகுதி நாகை சட்டப்பேரவைத் தொகுதி.

நாகூர் ஆண்டவர் தர்கா அலங்கார வாசல்
நாகூர் ஆண்டவர் தர்கா அலங்கார வாசல்

வாக்காளர்கள் எண்ணிக்கை: ஆண்கள் - 95,558. பெண்கள் - 1,01,748. மூன்றாம் பாலினத்தவர்- 10. மொத்த வாக்காளர்கள்- 1,97,316.

நில அமைப்பு

கடல் நகரம் எனப்படும் நாகை சட்டப்பேரவைத் தொகுதியின் கிழக்குப் பகுதி வங்கக் கடலின் எல்லையாக உள்ளது. தெற்கு மற்றும் மேற்குப் பகுதிகள் கீழ்வேளூர் சட்டப்பேரவைத் தொகுதிக்கு உள்பட்ட வேளாங்கண்ணி,  கீழ்வேளூர் பகுதிகளும், திருவாரூர் மாவட்டத்துக்கு உள்பட்ட கங்களாஞ்சேரி, கொங்கராயநல்லூர் ஆகிய ஊர்களாலும் வரையறுக்கப்பட்டுள்ளன. வடக்கே யூனியன் பிரதேசமான காரைக்கால் மாவட்டம் உள்ளது.

நாகை நகராட்சிக்கு உள்பட்ட 36 வார்டுகளையும், நாகை ஊராட்சி ஒன்றியத்துக்குள்பட்ட 29 ஊராட்சிகளில் 13 ஊராட்சிகளையும், திருமருகல் ஊராட்சி ஒன்றியத்துக்குள்பட்ட 39 ஊராட்சிகளையும், திட்டச்சேரி பேரூராட்சிக்கு உள்பட்ட 15 வார்டுகளையும் உள்ளடக்கிய தொகுதியாக உள்ளது நாகை சட்டப்பேரவைத் தொகுதி.

சாதி, தொழில்கள் - அமைப்பு

நாகை தொகுதியில் இஸ்லாமியர்கள், தலித்துகள், மீனவர்கள் பெரும்பான்மையினராக உள்ளனர். அடுத்தடுத்த நிலைகளில் வெள்ளாளர், கள்ளர் உள்ளிட்ட இதர சமூகத்தினர் வசிக்கின்றனர். மீன்பிடி மற்றும் விவசாயம் இத்தொகுதியின் பிரதான தொழில்களாக உள்ளன. கடல் உணவுப் பொருள்கள் ஏற்றுமதி மூலம் நாட்டுக்கு அன்னியச் செலாவணியை ஈட்டித் தருவதில் முக்கியத்துவம் பெற்றது இத்தொகுதி.

நாகையின் அடையாளமான கலங்கரை விளக்கம்.
நாகையின் அடையாளமான கலங்கரை விளக்கம்.

கடந்த தேர்தல்களில் வென்றவர்கள், தோற்றவர்கள்

1957 - என்.எஸ். ராமலிங்கம் (காங்கிரஸ்); பி. ஜீவானந்தம் (கம்யூனிஸ்ட்)
1962 - பாலகங்காதரன் (காங்கிரஸ்); ஜி. பக்தவச்சலம் (கம்யூனிஸ்ட்)
1967 -கே.ஆர்.ஞானசம்பந்தம் (மார்க்சிஸ்ட்); வரதராஜூலு நாயுடு (காங்கிரஸ்)
1971 - ராஜமாணிக்கம் (திமுக); ராமநாத தேவர் (காங்கிரஸ்)
1977 - ஆர். உமாநாத் (மார்க்சிஸ்ட்); அம்பலவாணன் (திமுக)
1980 - ஆர். உமாநாத் (மார்க்சிஸ்ட்); ராமநாத தேவர் (காங்கிரஸ்)
1984 - ஜி. வீரய்யன் (மார்க்சிஸ்ட்); தென்கோவன் (அதிமுக)
1989 - ஜி. வீரய்யன் (மார்க்சிஸ்ட்); பொன். பழனிவேலு (காங்கிரஸ்)
1991 - கோடிமாரி (அதிமுக); ஜி. வீரய்யமன் (மார்க்சிஸ்ட்)
1996 - நிஜாமுதீன் (திமுக); ஆர். ஜீவானந்தம் (அதிமுக)
2001 - ஆர். ஜீவானந்தம் (அதிமுக); எஸ்.பி. தங்கையா (திமுக)
2006 - வி. மாரிமுத்து (மார்க்சிஸ்ட்); கே.ஏ.ஜெயபால் (அதிமுக)
2011 - கே.ஏ. ஜெயபால் (அதிமுக); முகமது ஷேக்தாவூது (திமுக)
2016 - எம். தமிமுன் அன்சாரி (அதிமுக); ஏ.எம். ஜபருல்லா (மமக)

அரசியல் கட்சிகளின் செல்வாக்குள்ள பகுதிகள்

தொகுதிகள் மறுவரையறையின்போது நாகை நகரையொட்டியுள்ள மீனவக் கிராமங்களான கீச்சாங்குப்பம், அக்கரைப்பேட்டை ஆகிய பகுதிகள் கீழ்வேளூர் தொகுதியில் இணைக்கப்பட்டன. நாகையின் தலைமையிடமான நாகப்பட்டினம் ஊராட்சி ஒன்றியத்தில் உள்ள 29 ஊராட்சிகளில் பெரும்பான்மையான(16) ஊராட்சிகள் கீழ்வேளூர் தொகுதியில் இணைக்கப்பட்டன.

அதேபோல, நன்னிலம் தொகுதியில் இடம்பெற்றிருந்த திருமருகல் ஊராட்சி ஒன்றியப் பகுதிகள் முழுமையும் நாகை தொகுதியில் இணைக்கப்பட்டன. இதனால்,   திமுக, அதிமுக ஆகிய 2 கட்சிகளும் இத்தொகுதியில் செல்வாக்குப் பெற்றுள்ளன. அடுத்த நிலையில் இடதுசாரிகள் உள்ளன.

கட்சிகளுக்கான வெற்றிவாய்ப்புகள்

1957 ஆம் ஆண்டு முதல் 2016 ஆம் ஆண்டு வரை நடைபெற்ற 14 சட்டப்பேரவைத் தேர்தல்களில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி இத்தொகுதியில் 6 முறை வென்று, அதிக முறை வெற்றி பெற்ற கட்சியாக உள்ளது. அடுத்த நிலையில் அதிமுக இத்தொகுதியில் 4 முறை வென்றுள்ளது. இவைத் தவிர, திமுக 2 முறையும், காங்கிரஸ் கட்சி 2 முறையும் வென்றுள்ளன.

தொகுதி மறுவரையறைக்குப் பின்னர், நடைபெற்ற 2 தேர்தல்களிலும் தொடர்ந்து வென்றிருப்பதன் மூலம் அதிமுகவுக்கு அதிக செல்வாக்கும் நம்பிக்கையும் உள்ளது இத்தொகுதியில். அடுத்த நிலையில் உள்ள திமுக தனிப்பெரும் செல்வாக்குப் பெற்ற கட்சியாக உள்ளது. இடதுசாரிகளுடன் கூட்டணி அமைக்கும் திராவிடக் கட்சி இத்தொகுதியில் ஒரு வலுவான போட்டியை ஏற்படுத்தும். தற்போதைய நிலையில், மும்முனைப் போட்டி ஏற்படும் நிலை இத்தொகுதியில் இல்லை.

நிறைவேற்றப்பட்ட திட்டங்கள்

கடந்த 5 ஆண்டுகளில் நாகை மாவட்டத்துக்குக் கிடைத்த மிகப்பெரிய திட்டம், அரசு மருத்துவக் கல்லூரி. இந்த மருத்துவக் கல்லூரி அமைந்துள்ள ஒரத்தூர் பகுதி, நாகை ஊராட்சி ஒன்றியத்துக்கு உள்பட்டது. எனினும், கீழ்வேளூர் தொகுதிக்கு உள்பட்டதாக உள்ளது. தன்னிறைவு திட்டத்தின் கீழ் நாகை நம்பியார் நகரில் ரூ.34.30 கோடி மதிப்பில் சிறு மீன்பிடித் துறைமுகம் அமைக்கும் பணி தொடங்கப்பட்டுள்ளது.

மீன்வளப் பல்கலைக்கழகத்துக்குப் புதிய கட்டடம், தீயணைப்பு நிலைய கட்டடம், வருவாய்க் கோட்டாட்சியர் அலுவலகக் கட்டடம், பாரதிதாசன் பல்கலைக்கழக உறுப்புக் கல்லூரி கட்டடம் என பல்வேறு கட்டடப் பணிகள் நடைபெற்றுள்ளன. ஒருங்கிணைந்த நீதிமன்ற வளாகம் கட்டும் பணி நிறைவடையும் தருவாயில் உள்ளது. நாகையில் உள்ள மிகப் பெரிய குளமான அக்கரைக்குளம் ரூ. 3 கோடி மதிப்பில் தூர்வாரி சீரமைக்கப்பட்டு, நடைபாதை அமைக்கப்பட்டு, பொலிவுபடுத்தப்பட்டுள்ளது. 11 பூங்காக்கள், திருக்கண்ணபுரத்தில் புறக்காவல் நிலையம், நாகூர் பட்டினச்சேரியில் ரூ. 20 கோடி மதிப்பில் நடைபெறும் கடல் தடுப்புச் சுவர் அமைக்கும் பணி ஆகியன குறிப்பிடத்தக்க பணிகள் ஆகும்.

இத்தொகுதிக்கு உள்பட்ட பனங்குடியில், மத்திய அரசு நிதி உதவியுடன் ரூ. 31,500 கோடி மதிப்பில் கச்சா எண்ணெய் சுத்திகரிப்பு நிலையம் அமைக்க அண்மையில் அடிக்கல் நாட்டப்பட்டுள்ளது.

நிறைவேற்றப்படாத திட்டங்கள்

கடந்த 2011-ம் ஆண்டில் 3 ஆவது முறையாக தமிழக முதல்வராகப் பொறுப்பேற்ற முதல்வர் ஜெயலலிதா, சட்டப்பேரவையில் ஆளுநர் உரை மீதான விவாதத்தில் பேசும்போது, ரூ. 380 கோடியில் அனைத்துப் பருவ நிலைகளிலும் இயங்கக் கூடிய பசுமை சூழ் கப்பலணை துறைமுகமாக நாகை துறைமுகம் மேம்படுத்தப்படும் என அறிவித்தார். ஆனால், இத்திட்டத்தை நிறைவேற்ற இதுவரை எவ்வித நடவடிக்கையும் இல்லை.

மக்கள் கோரிக்கையை ஏற்று கடந்த 2013 ஆம் ஆண்டில் அப்போதைய முதல்வர் ஜெயலலிதாவால் அறிவிக்கப்பட்டது நாகை அக்கரைப்பேட்டை ரயில்வே மேம்பாலம் திட்டம். 2016 ஆம் ஆண்டில் தேர்தல் அறிவிப்புக்கு முன்பாக இத்திட்டப் பணியை மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதா தொடங்கி வைத்தார். 5 ஆண்டுகளைக் கடந்த நிலையிலும் இந்தப் பாலம் முழுமைப் பெறாமல் அந்தரத்திலேயே நிற்கிறது.

நாகை நகரின் மையப் பகுதியில் உள்ள தாமரைக் குளத்தை தூர்வாரி, பொலிவுபடுத்தி, பொழுதுபோக்கு அம்சங்களைக் கொண்டதாக மேம்படுத்தும் பணி, ஓ.என்.ஜி.சி. நிதி உதவியுடன் கடந்த 2012 ஆம் ஆண்டு தொடங்கப்பட்டது. இப்பணிகள் ஏறத்தாழ நிறைவுற்று, விரைவில் திறப்பு விழா காணும் எனக் கருதப்பட்ட நிலையில், 2014-ஆம் ஆண்டு நவம்பர் 1 ஆம் தேதி இந்தக் குளக்கரையின் புதிய தடுப்புச் சுவர்கள் இடிந்து விழுந்தன. மறு சீரமைப்புக்காக நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளதாக பல அறிவிப்புகள் வெளியாகின. ஆனால், இதுவரை பொலிவுபடுத்தப்பட்ட தாமரைக்குளம் திறக்கப்படவில்லை.

தொகுதியின் பிரச்சனைகள்

இந்தியாவில் இயற்கை இடர்பாடுகளால் அதிகம் பாதிக்கும் பகுதியாக உள்ள நாகை மற்றும் அதன் சுற்றுப்பகுதிகளின் மிக முக்கியப் பிரச்னைகளில் ஒன்றாக உள்ளது சுற்றுச்சூழல் கேடு. காரைக்காலில் உள்ள தனியார் துறைமுகத்தில் நிலக்கரி இறக்குமதி செய்யப்பட்டு, கையாளப்படுவதால் நாகூர், திட்டச்சேரி, நாகை உள்ளிட்ட பகுதிகளில் காற்றில் கலக்கும் நிலக்கரி துகள்களால் இப்பகுதி மக்கள் பல்வேறு நோய்களுக்கு உள்ளாகி வருவது, இங்குள்ள முக்கிய பிரச்னைகளில் ஒன்று.

காவிரி நீர் பிரச்னையுடன், இப்பகுதி மக்கள் கடல் நீராலும் பிரச்னைக்கு உள்ளாகி வருகின்றனர். ஆறுகளின்  முகத்துவாரங்கள்  மூலம்  அவ்வப்போது  உள்புகும் கடல் நீரால், வேளாண் நிலங்களின் உவர் தன்மை தொடர்ந்து அதிகரித்து வருகிறது. இதனால், காவிரி கடைமடை பகுதியான நாகை தொகுதியின் விவசாயம் தொடர்ந்து நலிவை சந்தித்து வருகிறது. இலங்கை ராணுவத்தின் அத்துமீறல்கள், இப்பகுதி மீனவர்களின் வாழ்வாதாரத்துக்குப் பெரும் அச்சுறுத்தலாக உள்ளது.

எதிர்பார்ப்புகள்

நாகை துறைமுகத்தை கப்பலணையும் துறைமுகமாக மேம்படுத்தி, இழந்த பெருமையை, பன்னாட்டு வாணிபத்தை மீட்டெடுக்க வேண்டும் என்பது நாகை தொகுதி மக்களின் முக்கிய எதிர்பார்ப்பு. நாகை கிழக்குக் கடற்கரை சாலை பகுதியில் மத்தியப் பேருந்து நிலையம் அமைக்க வேண்டும். நாகையில் சட்டக் கல்லூரி தொடங்க வேண்டும். திருமருகலைத் தலைமையிடமாகக் கொண்டு தனி வட்டம் அமைக்க வேண்டும். நாகை நகராட்சியை விரிவாக்கம் செய்து, தரம் உயர்த்த வேண்டும். நாகூரைத் தலைமையிடமாகக் கொண்டு தனி நகராட்சி அமைக்க வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு எதிர்பார்ப்புகள் உள்ளன.
 
போட்டியிட வாய்ப்புள்ள கட்சிகள்

தற்போதைய நிலையில், திமுக கூட்டணியில் இத்தொகுதியைப் பெறுவதில் இந்திய கம்யூனிஸ்ட் கட்சி முனைப்புக் காட்டி வருவதாகக் கூறப்படுகிறது. அதிமுக கூட்டணியில் கடந்த முறை கூட்டணிக் கட்சியான மனிதநேய ஜனநாயகக் கட்சிக்கு ஒதுக்கப்பட்டதால், இந்த முறை நேரடியாக அதிமுக களம் காண வேண்டும் என்பதே அதிமுகவினரின் விருப்பமாக உள்ளது. இதன்படி, இங்கு அதிமுக நேரடியாக களம் காணும் எனப்படுகிறது. அதேபோல, கடந்த முறை திமுக கூட்டணி கட்சியான மமகவுக்கு இத்தொகுதி ஒதுக்கப்பட்டதால், இம்முறை திமுக நேரடியாக களம் காண வேண்டும் என்பது திமுகவினரின் விருப்பமாக உள்ளது. எப்படியாக இருந்தாலும், கடல் நகரில் கரையேற  நீச்சல் அவசியம்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com