உதகை: வெற்றி, தோல்வியைத் தீர்மானிக்கும் சிறுபான்மையினர் வாக்குகள்

உதகை தொகுதியில் இதுவரை நடந்த தேர்தல்களில் படகர் சமுதாயத்தை சேர்ந்தவர்கள் மட்டுமே வெற்றி பெற்றுள்ளனர்.
ஊட்டி
ஊட்டி

நாட்டின் முக்கிய சுற்றுலா மையங்களில் ஒன்றான உதகை சட்டப்பேரவைத் தொகுதி மலை மாவட்டமான நீலகிரியின் தலைமையிடத்தில் அமைந்துள்ளது. நாடு சுதந்திரம் அடைந்த பிறகு முதலாவதாக 1951 இல் நடைபெற்ற தேர்தலில் நீலகிரி மாவட்டம் ஒரே தொகுதியாகவே இருந்தது. 1957 இல் நீலகிரி தொகுதி உதகை, குன்னூர் என இரண்டாகப் பிரிக்கப்பட்டது.

தொகுதிக்குள்பட்ட பகுதிகள்

இந்தத் தொகுதியில் உதகை, குந்தா ஆகிய இரண்டு வட்டங்கள் அடங்கியுள்ளன. கடநாடு, எப்பநாடு, கூக்கல், கக்குச்சி, தூனேரி, உல்லத்தி, நஞ்சநாடு, உதகமண்டலம், தும்மனட்டி கிராமங்கள், சோலூர் (பேரூராட்சி), உதகமண்டலம் (நகராட்சி) குன்னூர் வட்டம் (பகுதி), கேத்தி (பேரூராட்சி) ஆகியவை இந்தத் தொகுதியில் இடம் பெற்றுள்ளன.

சமூக, தொழில் நிலவரம்

பூங்காக்கள், அணைகள், அருவிகள், பள்ளத்தாக்குகள் உள்ளிட்ட ஏராளமான சுற்றுலாத்தலங்கள், உலகப் பிரசித்தி பெற்ற மலை ரயில், குதிரை பந்தய மைதானங்களைக் கொண்ட தமிழகத்தின் மிகப்பெரிய சுற்றுலாத்தலமாக விளங்கும் தொகுதி. சுற்றுலா, தேயிலை, மலைக் காய்கறிகளான கேரட், பீன்ஸ், உருளைக்கிழங்கு, முட்டைகோஸ் விவசாயம் போன்றவையே இங்கு பிரதான தொழில்களாகும்.

சுற்றுலாவை நம்பியே பல்வேறு உபரித் தொழில்களும் நடைபெற்று வருகின்றன. உணவகங்கள், தங்கும் விடுதிகள், வாடகை வாகனங்கள் உள்ளிட்டவை இவற்றில் அடங்கும். உதகைக்கு மட்டும் ஆண்டுக்கு சுமார் 30 லட்சம் சுற்றுலாப் பயணிகள் வந்து செல்கின்றனர். உதகையின் கோடை சீசன் காலமும், பனிக்காலமும் சுற்றுலாப் பயணிகளை அதிகளவில் ஈர்க்கும். வடகிழக்குப் பருவமழை, தென்மேற்கு பருவமழைக் காலங்களில் மாவட்டமே முடங்கி விடும்.

ஆதிவாசிகளான படகர், தோடர், குரும்பர், பனியர், இருளர், காட்டு நாயக்கர் இன மக்கள் அதிகளவில் வசிக்கின்றனர். உதகை தொகுதியில் நகரப் பகுதிகளைவிட கிராமப்பகுதிகளே அதிகளவில் உள்ளன. நகரிலும் சுமார் 75,000 மக்கள் தொகை உள்ள நிலையில் கிராமப் பகுதிகளிலிருந்து உதகை நகருக்கு தினந்தோறும் வந்து செல்பவர்களே அதிகளவில் உள்ளனர்.  கிராமப் பகுதிகளை பொருத்தமட்டில் படகர் சமுதாயத்தினர் அதிகளவில் உள்ளனர். நகரப் பகுதிகளில் சிறுபான்மையினர் அதிகளவில் உள்ளனர்.  

வாக்காளர்கள் விவரம்

ஆண்கள் - 98,353, பெண்கள் - 1,06,775, மூன்றாம் பாலினத்தவர் - 10, மொத்தம் - 2,05,138.

கடந்த தேர்தல்கள்

14 தேர்தல்களைச் சந்தித்துள்ள உதகை தொகுதியில் அதிகபட்சமாக 9 முறை காங்கிரஸ் கட்சி வெற்றி பெற்றுள்ளது. திமுக, அதிமுக ஆகியவை தலா 2 முறை வெற்றி பெற்றுள்ளன. 1977 தேர்தலுக்குப் பிறகு 2011 இல் தான் அதிமுக வெற்றி பெற்றது. தற்போது காங்கிரஸ் கட்சியின் ஆர்.கணேஷ் எம்எல்ஏவாக இருக்கிறார்.

உதகை சட்டப்பேரவைத் தொகுதி சென்னை ராஜதானியில் இருந்த காலத்தில் நடைபெற்ற 1957 தேர்தலில் காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த பி.கே.லிங்கா கவுடர் வெற்றி பெற்று முதல் சட்டப்பேரவை உறுப்பினரானார். இதையடுத்து 1962 இல் காங்கிரஸ் கட்சியின் கார்ச்சா கவுடர் வெற்றி பெற்றார். 1967 இல் நடைபெற்ற தேர்தலில் சுதந்திரா கட்சியின் போஜன் வெற்றி பெற்றார்.

தமிழ்நாடு என பெயர் மாற்றம் செய்யப்பட்ட பின்னர் 1971 இல் திமுகவின் தேவராஜ் வெற்றி பெற்றார். 1977 இல் அதிமுக சார்பில் போட்டியிட்ட பி.கோபாலன் வெற்றி பெற்றார். 1980, 1984 ஆம் ஆண்டு தேர்தல்களில் காங்கிரஸ் கட்சியின் கே.கல்லன் வெற்றி பெற்றார். இதையடுத்து 1984, 1989 ஆம் ஆண்டு நடைபெற்ற தேர்தல்களில் காங்கிரஸ் கட்சியின் எச்.எம்.ராஜூ வெற்றி பெற்றார்.

1996 இல் திமுக சார்பில் போட்டியிட்ட டி.குண்டன் வெற்றி பெற்ற  நிலையில், 2001 தேர்தலில் மீண்டும் எச்.எம்.ராஜூவே மூன்றாவது முறையாக வெற்றி பெற்றார். இதற்கிடையே அதிமுகவிலிருந்து விலகி காங்கிரஸ் கட்சியில் சேர்ந்த பி.கோபாலன் 2006 ஆம் ஆண்டு தேர்தலில் இரண்டாவது முறையாக வெற்றி பெற்றார். 2011 ஆம் ஆண்டு தேர்தலில் அதிமுக சார்பில் போட்டியிட்ட புத்திசந்திரன் வெற்றி பெற்று அமைச்சரான நிலையில், 2016 ஆம் ஆண்டு தேர்தலில் காங்கிரஸ் கட்சியின் ஆர்.கணேஷ் வெற்றி பெற்றார். உதகை தொகுதியில் படகர் சமுதாயத்தை சேர்ந்தவர்கள் மட்டுமே இதுவரை வெற்றி பெற்றுள்ளனர்.

நிறைவேற்றப்பட்ட திட்டங்கள்

உதகை தொகுதியில் கடந்த 5 ஆண்டுகளில் நடைபெற்ற முக்கிய சாதனையாக அரசு மருத்துவக் கல்லூரி அமைக்கும் பணிகள் தொடங்கப்பட்டிருப்பதைக் கூறலாம். அதேபோல உதகை பேருந்து நிலையம் சீரமைக்கப்பட்டது, குதிரைப்பந்தய மைதானத்தின் ஒரு பகுதி வாகன நிறுத்துமாக மாற்றப்பட்டது போன்றவற்றை முக்கிய சாதனைகளாக குறிப்பிடலாம்.

நிறைவேற்ற வேண்டியவை

சுற்றுலா நகரான உதகைக்கு ஹெலிகாப்டர் சேவை, மருத்துவ ஹெலிகாப்டர் சேவை, ரோப் கார் சேவை உள்ளிட்ட திட்டங்கள் எல்லாம் இன்னமும் கனவாகவே உள்ளன.

போட்டியிட வாய்ப்புள்ள கட்சிகள்

உதகை தொகுதியைப் பொருத்தமட்டில் படகர் சமுதாயத்தினர் 60 சதவீதம் பேர் இருப்பதால் அந்த சமுதாயத்தைச் சேர்ந்தவர்களே வேட்பாளர்களாகின்றனர். அதேநேரம் சிறுபான்மையினரின்  வாக்குகளே வெற்றி, தோல்வியை தீர்மானிக்கின்றன. 

உதகையைப் பொருத்தமட்டில் திமுக கூட்டணியில் உள்ள காங்கிரஸ் இத்தொகுதியை தக்கவைத்துக்கொள்ள  நினைக்கிறது. ஆனால், திமுக இந்த முறை போட்டியிட விரும்புவதால் காங்கிரஸ் விட்டுக் கொடுக்குமா என்பது கேள்விக்குறியாகும். அதிமுக போட்டியிடுவது உறுதி என்றாலும் வேட்பாளர் யார் என்பதில் குழப்பம் நீடிக்கிறது. கடந்த தேர்தலில் ஜெயலலிதா இருக்கும்போதே உதகையில் அதிமுக வெற்றி பெறாத நிலையில், தற்போதைய சூழலில் மாற்றம் ஏற்படுமா என்பது கேள்விக்குறியாகவே உள்ளது.

அதிமுகவும் திமுகவும் சமபலத்துடன் இருந்தாலும் பாஜகவில் பெண்கள் ஏராளமானோர் சேர்ந்திருப்பதும், மக்கள் நீதி மய்யத்தில்  இளைஞர்கள் அதிகளவில் சேர்ந்திருப்பதும், நாம் தமிழர் கட்சிக்கு குறிப்பிடத்தகுந்த அளவில் வாக்காளர்கள் இருப்பதும் வெற்றி தோல்வியை தீர்மானிக்கும் அம்சங்களாகக் கருதலாம்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com