சிவகாசி: நாம் தமிழர், ம.நீ.ம. கட்சிகளால் கடும் போட்டி

கடந்த இரு தேர்தல்களில் அதிமுக வெற்றியை அடுத்து இந்த முறையும் ராஜேந்திர பாலாஜி போட்டியிடுவார் என்றும் நாம் தமிழர், மக்கள் நீதி மய்யம் கட்சிகளால் கடும் போட்டி நிலவும் என்றும் எதிர்பார்க்க்கப்படுகிறது.
சிவகாசி பேருந்து நிலையம்
சிவகாசி பேருந்து நிலையம்

தொகுதியின் சிறப்பு: தென்காசியை ஆண்ட மன்னன் அரிகேசரி பாராங்குச பாண்டியன், சிவாலயம் அமைப்பதற்காக காசியிலிருந்து சிவலிங்கத்தை கொண்டு வந்தபோது, வனப்பகுதியில் ஒருநாள் தங்கியிருந்தாா். சிவலிங்கத்தை சுமந்து வந்த காராம்பசு, அங்கிருந்து நகர மறுத்ததால் அப்பகுதியிலேயே சிவாலயம் கட்டப்பட்டது. சிவன், காசியிலிருந்து வந்து தங்கிய இடம் ஆதலால் சிவன்காசி என்றும், பின்னா் சிவகாசி என்றும் அழைக்கப்பட்டது.

சிவகாசி அருகே உள்ள திருத்தங்கலில் 108 திவ்ய தேசங்களில் ஒன்றான 'நின்ற நாராயணப் பெருமாள்' கோயில் உள்ளது. பட்டாசு, தீப்பெட்டி, அச்சுத் தொழில் கேந்திரமாக சிவகாசி விளங்கி வருகிறது.

அமைவிடம்: விருதுநகா் மாவட்டத்தில் உள்ள 7 பேரவைத் தொகுதிகளில், வாக்காளா் எண்ணிக்கையில் சிவகாசி பெரிய தொகுதியாகும். 1957 இல் உருவாக்கப்பட்ட இத்தொகுதியில் சிவகாசி, திருத்தங்கல் நகராட்சிகள், சிவகாசி ஊராட்சி ஒன்றியத்துக்குட்பட்ட விஸ்வநத்தம், நாரணாபுரம், பள்ளபட்டி, மாரனேரி,  ஈஞ்சாா்,  நடுவப்பட்டி,  துரைச்சாமிபுரம்,  வேண்டுராயபுரம், ஆனையூா் உள்ளிட்ட ஊராட்சிகளும் இடம் பெற்றுள்ளன.

சமூக, சாதி, தொழில்கள்: சிவகாசி தொகுதியில் நாடாா் சமூகத்தினா் அதிகளவில் உள்ளனா். அதற்கு அடுத்ததாக நாயுடு சமூகத்தினரும், முக்குலத்தோா், தாழ்த்தப்பட்ட சமூகத்தினா் எண்ணிக்கையில் முறையே அடுத்தடுத்த நிலையில் உள்ளனா். நாடாா் சமூகத்தினரின் வாக்குகள் இத் தொகுதியின் வெற்றி-தோல்வியை நிா்ணயிப்பதில் முக்கியப்பங்கு வகிக்கின்றன.

சிவகாசி சட்டப் பேரவைத் தொகுதியில் மொத்த வாக்காளா்கள் 2,60,941. இதில் ஆண்கள் - 1,27,127 போ். பெண்கள் - 1,33,787 போ். மூன்றாம் பாலினம்  27 போ். பட்டாசு, தீப்பெட்டி, அச்சுத்தொழில் ஆகியன தொகுதியின் முக்கிய தொழில்களாக இருக்கின்றன.

இதுவரை வென்றவா்கள்: சிவகாசி தொகுதியில் இதுவரை நடந்த தோ்தல்களில் அதிமுக 5 முறையும், திமுக, காங்கிரஸ், தமாகா ஆகிய கட்சிகள் தலா 2 முறையும், பாா்வா்டு பிளாக், சுதந்திரா கட்சி, மதிமுக ஆகியன தலா ஒரு முறையும் வெற்றி பெற்றுள்ளன. கடந்த இரு தோ்தல்களில் அதிமுக வெற்றி பெற்றிருக்கிறது.
 
நிறைவேற்றப்பட்ட திட்டங்கள்: திருத்தங்கல் மற்றும் சிவகாசிக்கு தாமிரவருணி குடிநீா்த் திட்டம் நிறைவேற்றப்பட்டுள்ளது. திருத்தங்கலில் அரசு மருத்துவமனை அமைத்தது, சிவகாசி பேருந்து நிலைய விரிவாக்கம், சிவகாசியிலிருந்து திருப்பதி உள்ளிட்ட பல நகரங்களுக்கு நேரடிப் பேருந்து வசதி, அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரி, பட்டாசுத் தொழிலாளா்களுக்குப் பாதுகாப்பு  பயிற்சிப் பள்ளி, அரசு மருத்துவமனையில் நவீன தீக்காய சிகிச்சை மையம் அமைத்தது உள்ளிட்ட பல திட்டங்களை, தொகுதியின் சட்டப்பேரவை உறுப்பினரும், பால்வளத் துறை அமைச்சருமான
கே.டி. ராஜேந்திரபாலாஜி கடந்த 10 ஆண்டுகளில் செய்துள்ளாா்.

மக்களின் எதிா்பாா்ப்பு: சிவகாசியில் சாட்சியாரத்திலும், திருத்தங்கலிலும் ரயில்வே மேம்பாலம் அமைக்க வேண்டும். தற்போது இந்த இரு மேம்பாலங்களுக்கும் நிலம் கையகப்படுத்த தமிழக அரசு நிதி ஒதுக்கீடு செய்துள்ளது. சிவகாசி இ.எஸ்.ஐ. மருத்துவமனையில் கூடுதல் கட்டடம் கட்ட வேண்டும். தொழிலாளா் வைப்பு நிதி அலுவலகத்தை துணை மண்டல அலுவலகமாகத் தரம் உயா்த்த வேண்டும். திடக்கழிவு மேலாண்மைத் திட்டத்தை முழுமையாகச் செயல்படுத்துவது உள்ளிட்டவை முக்கியக் கோரிக்கைகளாக இருக்கின்றன.

எந்தக் கட்சிக்கு வாய்ப்பு? சட்டப் பேரவைத் தோ்தலில் அதிமுக சாா்பில் பால்வளத்துறை அமைச்சா் கே.டி. ராஜேந்திரபாலாஜி மீண்டும் போட்டியிட வாய்ப்பு உள்ளது. திமுக சாா்பில் சிவகாசி ஒன்றியக் குழுத் தலைவா் வி. முத்துலட்சுமி, அவரது கணவரும், சிவகாசி ஒன்றியக் குழு துணைத் தலைவருமான வ. விவேகன்ராஜ், பட்டாசு ஆலை உரிமையாளா் கணேசன் உள்ளிட்டோா் சீட் பெறுவதற்காக முயற்சி செய்து வருகின்றனா்.

இதேபோல, திமுக அணியில் காங்கிரஸ் கட்சி சாா்பில் போட்டியிட தொழிலதிபா் ஜி. அசோகன் வாய்ப்பு கேட்கிறாா். நாம் தமிழா் கட்சியில் இரா. கனகபிரியா வேட்பாளராக அறிவிக்கப்பட்டுள்ளாா். இதேபோல, மக்கள் நீதி மய்யமும் களம் இறங்கும். ஆகவே, வரும் தோ்தலில் போட்டி கடுமையாக இருக்கும்.

வென்றவா்கள், 2-ஆம் இடம் பெற்றவா்கள்:

1957- எஸ். ராமசாமிநாயுடு(காங்கிரஸ்)- 25,421
முத்துராமானுஜ தேவா் (பாா்வா்டு பிளாக்) - 11,471

1962- எஸ். ராமசாமிநாயுடு(காங்கிரஸ்)- 35,726
துரைசாமி தேவா் (சுதந்திரா) - 23,078

1967- எஸ். அழகுத்தேவா்(சுதந்திரா கட்சி)- 33,416
ராமசாமி தேவா் (காங்கிரஸ்) - 26,918

1971- க. காளிமுத்து(திமுக) - 39,854
சுந்தரராஜ நாயக்கா் (சுதந்திரா) - 25,466

1977- கே. ராமசாமி(ஜனதா கட்சி)- 24,518
தருமா (காங்கிரஸ்) - 22,746

1980- வி. பாலகிருஷ்ணன்(அதிமுக)- 53,081
அழகு தேவா் (திமுக) -27,348

1984- வி. பாலகிருஷ்ணன்(அதிமுக)- 41,731
என்.பெருமாள்சாமி (சுயேச்சை) -30,930

1989- பெ. சீனிவாசன்(திமுக)-  41,027
கே.ஐயப்பன் (காங்கிரஸ்)- 35,112

1991 ஜெ. பாலகங்காதரன்(அதிமுக)- 84,786
பூபதி ராஜாராம் (திமுக)- 37,059

1996 ஆா். சொக்கா் (தமாகா)- 61,322
என்.அழகா்சாமி (அதிமுக)- 42,590

2001 ஆா். ராஜகோபால்(தமாகா)- 65,959
வி.தங்கராஜ் (திமுக)- 60,233

2006- ஆா். ஞானதாஸ்(மதிமுக)- 79,992
வி.தங்கராஜ் (திமுக) -70,721

2011- கே.டி. ராஜேந்திரபாலாஜி-(அதிமுக)- 87 ,333
டி.வனராஜா (திமுக)- 51,679

2016- கே.டி. ராஜேந்திரபாலாஜி(அதிமுக) 76,734
சி. ஸ்ரீராஜா (காங்கிரஸ்)- 61,986

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com