தூத்துக்குடி: திமுக - அதிமுக இடையே கடும்போட்டி

அதிமுக சார்பில் சி.த. செல்லப்பாண்டியனுக்கு மீண்டும் போட்டியிடவும் திமுக சார்பில் தற்போதைய எம்எல்ஏ கீதாஜீவனுக்கும் வாய்ப்பு வழங்கப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. 
தூத்துக்குடி: திமுக - அதிமுக இடையே கடும்போட்டி


தூத்துக்குடி மாவட்டத்தில் உள்ள 6 சட்டப்பேரவைத் தொகுதிகளில் மாநகராட்சி மற்றும் சில ஊராட்சிப் பகுதிகளை உள்ளடக்கிய தூத்துக்குடி சட்டப்பேரவைத் தொகுதி கடந்த 1952 ஆம் ஆண்டு உருவாக்கப்பட்டது. இந்த தொகுதியின் முதல் சட்டப்பேரவை உறுப்பினர் காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த ஜான் லடிஸ்லால் பிச்சையா ரோச் விக்டோரியா. பின்னர், 1957 மற்றும் 1962 ஆம் ஆண்டு நடைபெற்ற தேர்தல்களில் காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த பொன்னுசாமி நாடார் வெற்றி பெற்றார்.

1967 ஆம் ஆண்டு திமுக சார்பில் போட்டியிட்ட எம்.எஸ். சிவசாமி வெற்றி பெற்றார். அதன்பிறகு 1971 ஆம் ஆண்டு திமுகவைச் சேர்ந்த ராமலிங்கமும், 1977 ஆம் ஆண்டு அதிமுகவைச் சேர்ந்த தனசேகரனும் வெற்றி பெற்றனர். தொடர்ந்து 1980 மற்றும் 1984 ஆம் ஆண்டுகளில் நடைபெற்ற தேர்தலில் அதிமுகவைச் சேர்ந்த எஸ்.என். ராஜேந்திரன் வெற்றிபெற்று அமைச்சரானார். பின்னர், 1989 ஆம் ஆண்டு திமுகவைச் சேர்ந்த முன்னாள் மாவட்டச் செயலர் என். பெரியசாமியும், 1991 ஆம் ஆண்டு அதிமுகவைச் சேர்ந்த விபிஆர் ரமேஷூம், 1996 இல் மீண்டும் பெரியசாமியும் வெற்றி பெற்றனர்.

2001 ஆம் ஆண்டு நடைபெற்ற தேர்தலி்ல் அதிமுகவைச் சேர்ந்த எஸ். ராஜம்மாள் வெற்றி பெற்றார். பின்னர், 2006 ஆம் ஆண்டு நடைபெற்ற தேர்தலில் திமுகவைச் சேர்ந்த மறைந்த பெரியசாமியின் மகள் கீதாஜீவன் வெற்றி பெற்று சமூக நலத்துறை அமைச்சரானார். 2011 ஆம் ஆண்டு நடைபெற்ற தேர்தலில் அதிமுகவைச் சேர்ந்த சி.த. செல்லப்பாண்டியன் வெற்றி பெற்று சில ஆண்டுகள் தொழிலாளர் நலத்துறை அமைச்சராக பணியாற்றினார். 2016 ஆம் ஆண்டு தேர்தலில் திமுகவைச் சேர்ந்த முன்னாள் அமைச்சர் கீதாஜீவன் வெற்றி பெற்று தற்போது எம்எல்ஏவாக உள்ளார்.

தூத்துக்குடி தொகுதியில் பிரதான தொழிலாளாக உப்பளம், மீன்பிடித் தொழில் ஆகியவை உள்ளது. மீன்பிடித் தொழிலில் 50 ஆயிரத்திற்கும் மேற்பட்டோரும், உப்பளத் தொழிலில் 25 ஆயிரத்திற்கும் மேற்பட்டோரும் ஈடுபட்டு உள்ளனர். தூத்துக்குடியில் உள்ள வ.உ.சிதம்பரனார் துறைமுகம் (பழையது) இலங்கை, மாலத்தீவு, லட்சத்தீவு, மினிகாய்த்தீவுகள் உள்ளிட்ட பகுதிகளுக்கு உணவுப் பொருள்கள், காய்கனி, கட்டுமானப் பொருள்கள் உள்ளிட்டவைகள் சிறிய ரக சரக்கு கப்பல்கள் மற்றும் இழுவை கப்பல்கள் (பார்ஜ்) மூலம் ஏற்றுமதி செய்யப்படுகிறது.

புதிய துறைமுகம் இந்திய பெருந்துறைமுகங்களில் முக்கிய துறைமுகமாக உள்ளது. இங்கிருந்து உலக நாடுகள் அனைத்திற்கும் திருப்பூர் ஆயத்த ஆடைகள், கரூர், ஈரோடு பகுதிகளில் உற்பத்தி செய்யப்படும் விரிப்புகள் ஏற்றுமதி செய்யப்படுகிறது. மேலும் தேங்காய் நார், சணல் கொண்டு தயாரிக்கப்படும் தரை விரிப்புகள் தூத்துக்குடி, ஆலப்புழை போன்ற பகுதிகளில் உற்பத்தி செய்யப்படும் பொருள்கள் ஏற்றுமதி செய்யப்படுகிறது. நாட்டின் பிற துறைமுகங்களைவிட சரக்கு கையாள்வதில் குறைவான நேரமாகவும் விரைவாகவும் மேற்கொள்ளப்படுகிறது.

தூத்துக்குடி துறைமுகம் வழியாக தூத்துக்குடி அனல்மின் நிலையம், நெய்வேலி தமிழ்நாடு மின் நிறுவனம், கோஸ்டல் எனர்ஜைன் தனியார் மின் நிறுவனங்களுக்கு தேவையான நிலக்கரி இறக்குமதி செய்யப்படுகிறது. தூத்துக்குடி மாவட்டத்தில் தனியார் அனல்மின் நிலையங்கள் இயக்கப்படாத நிலை உள்ளது. இதில் தூத்துக்குடி அனல்மின் நிலையம் மற்றும் நெய்வேலி அனல்மின் நிலையத்திற்கு தேவையான நிலக்கரி கப்பலில் இருந்து கன்வேயர் மூலமாக துறைமுகம் அருகிலேயே அமைந்துள்ள ஆலைக்கு கொண்டு செல்லப்படுகிறது. தனியார் அனல்மின் நிலையத்திற்கு கனரக வாகனம் மூலம் கொண்டு செல்லப்பட்டு வருகிறது.

2018 ஆம் ஆண்டு தனியார் ஆலையான ஸ்டெர்லைட் காப்பர் ஆலைக்கு எதிராக நடைபெற்ற போராட்டத்தின்போது துப்பாக்கிச்சூடு நடத்தியதில் 15 பேர் உயிரிழந்தனர். இதனைத் தொடர்ந்து நச்சு காரணமாக தமிழக அரசு அந்த ஆலையை இழுத்து மூடியது. இவ்வழக்கு உச்ச நீதிமன்றத்தில் விசாரணையில் உள்ளது.

வெளிநாட்டில் இருந்து ஆலைக்குத் தேவையான பொருள்கள் இறக்குமதி செய்யப்படவில்லை. கப்பலில் இறக்குமதி செய்யப்படும் தாதுமணலை கனரக வாகனம் மூலம் ஆலைக்கு கொண்டு செல்லும் நிலை இருந்ததால் தூத்துக்குடியில் கனரக வாகனங்கள் அதிகம் இருந்தன. தற்போது ஆலை இயங்காத நிலையில் லாரிகளை இயக்க இயலாத சூழல் உள்ளதாக லாரி உரிமையாளர்கள் தெரிவிக்கின்றனர். தூத்துக்குடி மீன்பிடி துறைமுகத்தை பொருத்தவரை 250 விசைப்படகுகள் உள்ளன. இவர்கள் காலை 5 மணிக்கு கடலுக்குச் சென்று இரவு 9 மணிக்கு மீண்டும் துறைமுகம் வர வேண்டும் என மீன்வளத்துறை அறிவித்துள்ளது.

விசைப்படகுகளை ஆழ்கடல் மீன்பிடிப்பிற்கு அனுமதிக்க வேண்டும் என தொடர்ந்து கோரிக்கை விடுத்து வருகின்றனர். உப்பளத் தொழில் வடகிழக்கு பருவமழை துவங்கிய பின்னர் சுமார் மூன்று நான்கு மாதங்களுக்கு முற்றிலும் பணி இழப்பு காரணமாக தொழிலாளர்கள் மிகவும் பாதிக்கப்படும் நிலை உள்ளது.

கடந்த 2016 ஆம் ஆண்டு நடைபெற்ற தேர்தலின்போது மழைக்கால நிவாரணமாக உப்பளத் தொழிலாளர்களுக்கு ரூ.5 ஆயிரம் நிவாரணத் தொகை வழங்கப்படும் என அதிமுக முன்னாள் முதல்வர் ஜெயலலிதா அறிவித்து இருந்தார். ஆனால், தற்போதுவரை செயலுக்கு வராத நிலையில் தங்களுக்கு நிவாரணத் தொகை வழங்கப்பட வேண்டும் என வலியுறுத்துகின்றனர். சிறு, குறு தொழில் நிறுவனங்களை பொறுத்தவரை பெரிய ஆலைகள் வராததால் இழப்பை சந்திப்பதாகத் தெரிவிக்கின்றனர்

தூத்துக்குடி தொகுதியின் பிரதான பிரச்னை நெருக்கடியான போக்குவரத்து, மற்றும் சாலைகள் குண்டும் குழியுமாக இருப்பது. பத்து ஆண்டுகளுக்கும் மேலாக நடைபெற்று கொண்டே இருக்கும் புதை சாக்கடைப் பணி, விரிவாக்கப் பகுதிகளில் மாநகராட்சியாக அறிவிக்கப்பட்டு 11 ஆண்டுகளைக் கடந்த பின்னரும் சாலைகள், கழிவு நீரோடைகள் அமைக்கபடாததால் மழை பெய்தால் தண்ணீரை வெளியேற்ற இயலாத நிலை  உள்ளது.

முன்னாள் முதல்வர் ஜெயலலிதா அறிவித்த விவிடி சிக்னல் மேம்பாலம் மற்றும் நான்கு வழிச்சாலை அமைக்கப்படாததால் போக்குவரத்தில் ஆம்புலன்ஸ்களும் சிக்கும் நிலை உள்ளது. தூத்துக்குடிக்கு ஒருங்கிணைந்த பேருந்து நிலையம் அமைக்கப்படும் என ஜெயலலிதா அறிவித்து இருந்தார். அத்திட்டம் இன்னும் நிறைவேற்றப்படவில்லை  தற்போது ஸ்மார்ட் சிட்டி திட்டப் பணிகள் நடைபெறுவதால் சாலைகள் அமைக்கும் பணி, கழிவு நீரோடைகள் அமைக்கும் பணி போன்றவைகளுக்காக ஆங்காங்கே குழிகள் தோண்டப்பட்டு உள்ளதால் பொதுமக்கள் மிகவும் சிரமத்திற்கு ஆளாகி உள்ளனர்.தற்போதைய நிலவரப்படி அதிமுக சார்பில் சி.த.செல்லப்பாண்டியனுக்கு மீண்டும் போட்டியிட வாய்ப்பு வழங்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது. இதுதவிர, மாவட்ட மத்திய கூட்டுறவு வங்கித் தலைவர் இரா. சுதாகரும் முயற்சி செய்து வருகிறார். பாஜக சார்பில் மாநிலங்களவை முன்னாள் உறுப்பினர் சசிகலா புஷ்பா போட்டியிட முயற்சி செய்து வருகிறார். திமுக சார்பில் மீண்டும் கீதாஜீவனுக்கே வாய்ப்பு வழங்கப்படும் என கூறப்படுகிறது. இந்தத் தொகுதியில் யாருக்கு வெற்றி என்பது இழுபறி நிலையில் இருக்கும்.

தூத்துக்குடி சட்டப்பேரவைத் தொகுதியில் மாநகராட்சி, மொத்த 60 வார்டுகளில் 51 வார்டுகளை உள்ளடக்கியது.

தொகுதியின் மொத்த வாக்காளர்கள்: 2,84,164.
ஆண்கள்: 138879, பெண்கள்: 145232, மூன்றாம் பாலினத்தோர்: 53

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com