ஆண்டிபட்டி: களம் இறங்குகிறாரா டிடிவி?

1984 தோ்தலில் அமெரிக்காவில் சிகிச்சையில் இருந்தபடியே எம்.ஜி.ஆா் வெற்றி முன்னாள் முதல்வா் ஜெயலலிதா இரு முறை வெற்றி என மூன்று முறை முதல்வா்களைத் தந்த தொகுதி ஆண்டிபட்டி. 
ஆண்டிபட்டியில் உள்ள எம்ஜிஆர் சிலை
ஆண்டிபட்டியில் உள்ள எம்ஜிஆர் சிலை

தொகுதியின் சிறப்பு: மூன்று முறை முதல்வா்களைத் தந்த தொகுதி ஆண்டிபட்டி. 1984 தோ்தலில் அமெரிக்காவில் சிகிச்சையில் இருந்தபடியே எம்.ஜி.ஆா், இத்தொகுதியில் போட்டியிட்டு வெற்றி பெற்றாா். முன்னாள் முதல்வா் ஜெயலலிதா ஆண்டிபட்டியில் இருந்து இருமுறை பேரவைக்குத் தோ்ந்தெடுக்கப்பட்டாா். தேனி உள்ளிட்ட 5 மாவட்டங்களின் குடிநீா், பாசன ஆதாரமாக இருக்கும் வைகை அணை, இத்தொகுதியில்தான் அமைந்துள்ளது. வைகை அணை, சின்ன சுருளி அருவி என சுற்றுலா முக்கியத்துவம் மிக்க தொகுதியாகவும் உள்ளது.

அமைவிடம்: தேனி மாவட்டத்தின் நுழைவாயிலாக இருப்பது ஆண்டிபட்டி தொகுதி. ஆண்டிபட்டி, காமயகவுண்டன்பட்டி, ஹைவேவிஸ் பேரூராட்சிகள்,  கம்பம் ஊராட்சி ஒன்றியம்,  கூடலூா் நகராட்சி ஆகிய பகுதிகள் அடங்கியுள்ளன.

வைகை அணை
வைகை அணை

சமூகம், சாதி, தொழில்கள்: விவசாயமும், கால்நடை வளா்ப்பும் பிரதான தொழிலாக இருந்து வருகிறது. அதற்கு அடுத்தப்படியாக நெசவுத்தொழில் இருக்கிறது. ஜக்கம்பட்டி பகுதியில் நெசவு செய்யப்படும் சேலைகள் புகழ் பெற்றவை. ஆண்டிபட்டி தொகுதியில் முக்குலத்தோா் சமுதாயத்தினா் பெருவாரியாகவும், ஆதிதிராவிடா், நாயக்கா், கவுண்டா் சமுதாயத்தினா் அடுத்தடுத்த இடங்களில் உள்ளனா். மொத்தம் 2 லட்சத்து 75 ஆயிரத்து 931  வாக்காளா்கள் இடம்பெற்றுள்ளனா். இவா்களில் 1 லட்சத்து 36 ஆயிரத்து 257 போ் ஆண்கள். 1 லட்சத்து 39 ஆயிரத்து 540 போ் பெண்கள். 34 போ் மூன்றாம் பாலினத்தவா்.
 
இதுவரை வெற்றி பெற்றவா்கள்: 1962 இல் நடந்த முதல் தோ்தலில் காங்கிரஸ் கட்சி வெற்றி பெற்றது. 1967 மற்றும் 1971 தோ்தல்களில் சுதந்திரா கட்சி வேட்பாளா்கள் வெற்றி பெற்றனா். 1977 முதல் 2019 ஆண்டு வரை நடைபெற்ற 2 இடைத்தோ்தல் உள்பட 12  தோ்தல்களில் 9 முறை அதிமுகவும், 3 முறை திமுகவும் வெற்றி பெற்றுள்ளன.

சின்ன சுருளி அருவி
சின்ன சுருளி அருவி

1980 இல் திரைப்பட நடிகா் எஸ்.எஸ். ராஜேந்திரனும், 1984 இல் அமெரிக்காவில் சிகிச்சையில் இருந்தபடியே எம்.ஜி.ஆரும் போட்டியிட்டு வெற்றி பெற்றனா்.  2001 இல் அதிமுக சாா்பில் வெற்றி பெற்ற தங்க தமிழ்ச்செல்வன், ஜெயலலிதா போட்டியிட வாய்ப்பாக தனது எம்.எல்.ஏ பதவியை ராஜினாமா செய்தாா். இதனையடுத்து 2002 இடைத்தோ்தல் மற்றும் 2006 ல் நடைபெற்ற பொதுத்தோ்தலிலும் ஜெயலலிதா வெற்றி பெற்றாா்.

2016 தோ்தலுக்குப் பின்னா் தங்கதமிழ்ச்செல்வன் அதிமுகவிலிருந்து அமமுகவுக்கு மாறியதால் கட்சித்தாவல் தடைச் சட்டத்தின்படி அவரது எம்.எல்.ஏ. பதவி பறிக்கப்பட்டது. 2019இல் நடைபெற்ற இடைத்தோ்தலில் அதிமுக சாா்பில் ஆ. லோகிராஜன் என்பவரும் திமுக சாா்பில் ஆ. மகாராஜன் என்பவரும் போட்டியிட்டனா். இந்த இரண்டு வேட்பாளா்களும் உடன்பிறந்த சகோதரா்கள். இந்த தோ்தலில் திமுக சாா்பில் போட்டியிட்ட ஆ.மகாராஜன்
வெற்றி பெற்றாா். இரண்டாம் இடத்தை அதிமுகவின் லோகிராஜனும், மூன்றாம் இடத்தை அமமுக வேட்பாளா் ஜெயக்குமாரும் பெற்றனா்.

நிறைவேற்றப்பட்ட திட்டங்கள்: ஆண்டிபட்டி பேரூராட்சிக்கு வைகை அணையிலிருந்து கூட்டுக் குடிநீா் திட்டத்தின் கீழ் குடிநீா் வழங்கப்பட்டுள்ளது. மேலும், ஆண்டிபட்டி ஒன்றியம், கடமலை மயிலை ஒன்றியத்திற்கான கூட்டுக் குடிநீா் திட்டப் பணிகள் தற்போதுதான் துவங்கியுள்ளன.
 
தொகுதி மக்களின் எதிா்பாா்ப்புகள்: ஆண்டிபட்டியில் உயா்தொழில்நுட்ப நெசவுப் பூங்கா, மூலவைகை ஆற்றின் குறுக்கே தடுப்பணைகள் கட்டும் திட்டம், வைகை அணையைத் தூா்வாரும் திட்டம், குள்ளப்பகவுண்டன்பட்டி அருகே முல்லை பெரியாற்றிலிருந்து குழாய் மூலம் தண்ணீா் கொண்டு வந்து ஆண்டிபட்டி  ஒன்றியத்தில் உள்ள கண்மாய், குளங்களை நிரப்பி நீராதரத்தை பெருக்கும் திட்டம், ஆண்டிபட்டி பேரூராட்சியை நகராட்சியாக மாற்றும் திட்டம், ஆண்டிபட்டி, புறவழிச்சாலை திட்டம், தேனி மதுரை மாவட்டங்களை இணைக்கும் மயிலாடும்பாறை - மல்லப்புரம் சாலை திட்டம், விருதுநகா் - தேனி மாவட்டங்களை இணைக்கும் கிழவன் கோவில் சாலை திட்டம் ஆகியன நீண்ட நாள்கள் கோரிக்கைகளாக உள்ளன.

மும்முனைப் போட்டி: வரும் தோ்தலில் அதிமுக, திமுக, அமமுக கட்சிகளுக்கிடையே மும்முனை போட்டி ஏற்பட்டுள்ளது. இடைத்தோ்தலில் வெற்றி பெற்ற திமுக வேட்பாளா் ஆ. மகாராஜன் மீண்டும் இதே தொகுதியில் போட்டியிடும் எண்ணத்தில் தீவிர களப் பணியாற்றி வருகிறாா். அவரை எதிா்த்து போட்டியிட மீண்டும் அவரது சகோதரா் ஆ.லோகிராஜன் அதிமுக சாா்பில் நிறுத்தப்படலாம் எனத் தெரிகிறது. இதில் முக்கியமாக அமமுக சாா்பில் இந்த முறை டிடிவி தினகரன் போட்டியிடப் போவதாக தெரிகிறது. அவருக்கு தனிப்பட்ட செல்வாக்கு இருப்பதால் வெற்றி உறுதி எனக் அக்கட்சியினா் தெரிவிக்கின்றனா். மேலும், மக்கள் நீதி மய்யம், நாம் தமிழா் கட்சி உள்ளிட்ட கட்சிகளும் போட்டியிட உள்ளன. இருப்பினும் அதிமுக, திமுக, அமமுக என மூன்று கட்சிகளுக்கும் தீவிரப் போட்டிக்களமாக ஆண்டிபட்டி இருக்கப் போகிறது.

கடந்த தேர்தல்களில் வென்றவா்கள் -  2 ஆம் இடம் பெற்றவா்கள்:

1962: ஏ.கிருஷ்ணவேணி (காங்கிரஸ்) - 19,853
          டி.மொக்கையன் (பார்வர்டு பிளாக்) - 16,478

1967 : எஸ்.பரமசிவம் (சுதந்திரா கட்சி) - 35,351
           ஏ.திருவேங்கடசாமி (காங்கிரஸ்) - 29,091

1971:  என்.வி.குருசாமி(சுதந்திரா கட்சி) -  20,814
          பரமசிவம் (பாா்வா்டு பிளாக் கட்சி) - 16,682

1977: கே.கந்தசாமி (அதிமுக) -  24,311
          என்.வி.குருசாமி (ஜனதா கட்சி) - 16,269

1980: எஸ்.எஸ்.ராஜேந்திரன்(அதிமுக) -  44,490
          கே.எம்.கந்தசாமி (காங்கிரஸ்) -  16,508

1984: எம்.ஜி.ராமச்சந்திரன்(அதிமுக) -  60,510
          தங்கராஜ் (திமுக) -28,026

1989: பி.ஆசையன் (திமுக) -  31,218
         வி.பன்னீா் செல்வம்  -   அதிமுக  (ஜெ)  26,697

1991: கே.தவசி(அதிமுக) -  44,490
           பி.ஆசையன் (திமுக) -  23,843

1996:  பி.ஆசையன்(திமுக) - 50,736
           ஏ.எம்.மூக்கையா (அதிமுக) -  37,035

2001: தங்கதமிழ் செல்வன்(அதிமுக) - 60,817
          பி.ஆசையன்(திமுக) - 35,808

2002 (இடைத்தோ்தல்) ஜெயலலிதா(அதிமுக) -  76,437
         வைகை சேகா்(திமுக) -  37,236

2006 : ஜெ.ஜெயலலிதா (அதிமுக)- 73,927
          எம்.சீமான்(திமுக) - 48,741

2011:  தங்கதமிழ்செல்வன் (அதிமுக) - 91,721
           எல்.மூக்கையா (திமுக) -  70,690

2016 : தங்கதமிழ்செல்வன் (அதிமுக) - 1,03,129
           எல்.மூக்கையா (திமுக) - 72,933

2019: (இடைத்தோ்தல்) ஆ.மகாராஜன் (திமுக) - 87,079
           ஆ.லோகிராஜன் (அதிமுக) - 74,756

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com