பர்கூர்: சமபலத்தில் அதிமுக - திமுக

மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதா, மக்களவை துணை சபாநாயகர் தம்பிதுரை, திரை உலகப் பிரபலம் டி.ராஜேந்திரன் ஆகியோர் போட்டியிட்ட தொகுதி பர்கூர். 
போச்சம்பள்ளி வாரச் சந்தை.
போச்சம்பள்ளி வாரச் சந்தை.

தமிழகத்தில் உள்ள விஐபி தொகுதிகளில் முக்கியமான தொகுதியாக கருதப்படுகிறது பர்கூர் சட்டப் பேரவைத் தொகுதி. மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதா, மக்களவை துணை சபாநாயகர் தம்பிதுரை, திரை உலகப் பிரபலம் டி.ராஜேந்திரன் ஆகியோர் போட்டியிட்ட தொகுதியாகும்.  1977 ஆம் உருவான இந்த தொகுதி, கிருஷ்ணகிரி மாவட்டத்தில் தனித் தொகுதியாக விளங்கும் ஊத்தங்கரை தொகுதியிலிருந்து பிரிக்கப்பட்டது.

வாக்காளர்கள் விவரம்: ஆண்கள் - 1,20,188, பெண்கள் - 1,21,807, இதரர் - 14, மொத்தம்- 2,42,009.

தொழில் வளம்: பர்கூர் தொகுதி மக்களின் பிரதானத் தொழிலாக விவசாயமும், வியாபாரமும் கொண்டுள்ளது. குட்டி சூரத் என அழைக்கப்படும் பர்கூரில் ஜவுளி உற்பத்தி இல்லை என்றாலும், ஜவுளிச் சந்தை தினமும் செயல்படுகிறது. ஓரே இடத்தில் ஆயிரத்துக்கும் மேற்பட்ட கடைகள் உள்ளன. விவசாயத்தைப் பொருத்தவரை, மா, தென்னை போன்ற பயிர்கள் சாகுபடி செய்யப்படுகின்றன. பனை மரங்கள் அதிக அளவில் காணப்படுகின்றன. ஜவுளி வியாபாரம், மாங்கூழ் தொழிற்சாலைகள், கிரானைட் குவாரிகள், கிரானைட் கற்களை மெருகூட்டும் தொழிற்சாலைகள் அதிக அளவில் உள்ளன. இதன் மூலம் ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் வேலைவாய்ப்பை பெறுகின்றனர். பர்கூரிலும், போச்சம்பள்ளியிலும் சிப்காட் தொழிற்சாலைகள் அமைந்துள்ளன. போச்சம்பள்ளி சிப்காட்டில் காலணி தயாரிக்கும் நிறுவனம் மூலம் பர்கூர் தொகுதி மக்கள் மட்டுமல்லாமல், திருப்பத்தூர், கிருஷ்ணகிரி, தருமபுரி மாவட்ட மக்களும் வேலைவாய்ப்பைப் பெறுகின்றனர். தற்போது, மின்கல மோட்டார் உற்பத்தித் தொழிற்சாலையும் தொடங்கப்பட உள்ளது.  

மக்கள் நிலவரம்: பர்கூர் தொகுதியானது புதியதாக உருவான திருப்பத்தூர் மாவட்டத்தையும், கிருஷ்ணகிரி, தருமபுரி தொகுதிகளையும் ஆந்திர மாநிலத்தையும் எல்லையாகக் கொண்டுள்ளது. பர்கூர் தொகுதியில் தமிழ், தெலுங்கு, உருது, ஆங்கிலம் மொழி பேசுபவர்கள் பரவலாக உள்ளனர். வன்னியர்கள் பரவலாக வசிக்கும் இந்தத் தொகுதியில் நக்கல்பட்டி, ஐகுந்தம் புதூர், தொகரப்பள்ளி, மங்கல்பட்டி, சிந்தகம்பள்ளி, கிட்டனூர் மற்றும் அதை சுற்றியுள்ள பகுதிகளில் கொங்கு வேளாளர்களும், வரட்டனப்பள்ளி, பர்கூர், பி.ஆர்.ஜி.மாதேப்பள்ளி, சந்தலப்பள்ளி, பெருகோபனப்பள்ளி மற்றும் அதை சுற்றியுள்ள கிராமங்களில் 24 மனை தெலுங்கு செட்டியார்களும், காரகுப்பம், குருவிநாயனப்பள்ளி, சின்ன மட்டாரப்பள்ளி மற்றும் அதை சுற்றியுள்ள கிராமங்களில் பலிஜ நாயுடு சமுகத்தினரும் வசிக்கின்றனர். பெரும்பாலும் இந்துக்கள் வசிக்கும் இந்த தொகுதியில் சில கிராமங்களில் இஸ்லாமியர்களும், கிறிஸ்துவ வாக்காளர்களும் உள்ளனர். 

தொகுதியின் பிரச்னைகள்: 2011 ஆம் ஆண்டு சட்டப்பேரவைத் தொகுதி மறுசீரமைப்பின்போது, கிருஷ்ணகிரி, காவேரிப்பட்டணம் ஆகிய தொகுதிகளில் இருந்து புதிய ஊராட்சிகள் சேர்க்கப்பட்டன. நீர்ப்பாசனத் திட்டங்கள், பாசனக் கால்வாய்கள் ஏதும் இல்லாததால், வறண்டு காணப்படும் இந்தத் தொகுதியில் விவசாயத்தை கைவிட்டோர் ஏராளம்.

பருவமழை குறைந்த இந்தத் தொகுதியில் குடிநீர்ப் பிரச்னை தீர்க்கப்படாமல் உள்ளது. கிருஷ்ணகிரி, தருமபுரி மாவட்ட மக்களின் குடிநீர்த் தேவையைப் போக்கத் தொடங்கப்பட்ட ஒகேனக்கல் கூட்டுக் குடிநீர்த் திட்டமானது, இந்தத் தொகுதியில் முழுமையாக நிறைவேற்றப்படாதது பெரும் குறையாக உள்ளது.  தமிழகத்தில் மிகப் பெரிய சந்தையாகக் கருதப்படும் போச்சம்பள்ளி சந்தை இந்தத் தொகுதியில்தான் உள்ளது. குண்டூசி முதல் தங்கம் வரையில் அனைத்துப் பொருள்களும் விற்பனை செய்யப்படும் இந்த வாரச் சந்தையானது போதிய பராமரிப்பு இல்லாததால், அதன் பெருமையை இழந்து வருகிறது.

பர்கூர் தொகுதியில் உள்ள கிருஷ்ணகிரி - திண்டிவனம் தேசிய நெடுஞ்சாலை பணி தொடங்கி பல ஆண்டுகள் கடந்தும் இன்னும் நிறைவேற்றப்படாமல் உள்ளது. மேலும், விவசாயிகளின் பிரச்னையைத் தீர்க்கும் வகையில் அறிவிக்கப்பட்ட படேதலாவ் ஏரி, தென்பெண்ணை ஆற்று நீரை மின்மோட்டார் மூலம் ஓதிகுப்பம் ஏரிக்கு தண்ணீர் கொண்டு வருதல் போன்ற திட்டங்கள் நிறைவேறாமல் இருப்பது பெரும் குறை. ஆந்திர மாநில எல்லையில், அந்த மாநில அரசு தடுப்பணையைக் கட்டியதால் பர்கூர் தொகுதியில் வறட்சி தாண்டவமாடுகிறது. 

அரசியல் நிலவரம்: 1991 ஆம் ஆண்டு இந்தத் தொகுதியில் முதல்வர் வேட்பாளராக ஜெயலலிதா போட்டியிட்டு வெற்றி பெற்றார். இதனால், இந்தத் தொகுதி வளர்ச்சி பெற்றது. அரசு மகளிர் கலை கல்லூரி, அரசு பொறியியல் கல்லூரி, அனைத்து மகளிர் காவல் நிலையம், பெண்கள் மட்டுமே பணியாற்றும் கிரானைட் மெருகூட்டும் தொழிற்சாலை, ஐடிஐ போன்ற அமைப்புகள் இந்தத் தொகுதியில் உருவாக்கப்பட்டன. இருந்தபோதிலும், அடுத்து நடைபெற்ற 1996 ஆம் ஆண்டு தேர்தலில், உள்ளூர் வேட்பாளரான திமுகவைச் சேர்ந்த இ.ஜி.சுகவனத்திடம், தமிழக முதல்வரான ஜெயலலிதா தோல்வியை தழுவியது பரபரப்பை ஏற்படுத்தியது.

இதுவரை நடைபெற்ற இந்தத் தொகுதிக்கான தேர்தலில் அதிமுக அதிக முறை வெற்றி பெற்றுள்ளது. 1977, 1980, 1984, 1989, 1991, 2001, 2006, 2011, 2016 ஆகிய சட்டப் பேரவைத் தேர்தல்களில் அதிமுக வேட்பாளர்களே வெற்றி பெற்றுள்ளனர். 1996, 2009 ஆகிய ஆண்டுகளில் நடைபெற்ற தேர்தல்களில் திமுக வேட்பாளர்கள் வெற்றி பெற்றனர்.

2001, 2006 ஆம் ஆண்டுகளில் நடைபெற்ற தேர்தலில் அதிமுக பிரமுகர்  மு.தம்பிதுரை வெற்றி பெற்றார். 2009 ஆம் ஆண்டு நடைபெற்ற இடைத் தேர்தலில் திமுக உறுப்பினர் கே.ஆர்.கே.நரசிம்மன் வெற்றி பெற்றார். 2016 ஆம் ஆண்டு தேர்தலில் அதிமுகவைச் சேர்ந்த சி.வி.ராஜேந்திரன் வெற்றி பெற்று சட்டப் பேரவை உறுப்பினராக உள்ளார்.

இன்றைய நிலவரப்படி, பர்கூர் தொகுதியில் அதிமுக, திமுக இரு கட்சிகளும் சம பலத்துடன் உள்ளன. தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டு, கூட்டணிகள் முடிவாகி, வேட்பாளர்கள் அறிவிக்கப்பட்ட பின்னரே இந்தத் தொகுதியில் யாருக்கு வெற்றி வாய்ப்பு உள்ளது என கணிக்க முடியும்.
 
இதுவரை வென்றவர்கள்


1977:  எச்.ஜி.ஆறுமுகம் (அதிமுக ) -28,812
           திம்மராயன் (திமுக) -15,420  

1980: பி.என்.எஸ்.துரைசாமி (அதிமுக) -39,893
          கே.முருகேசன் (திமுக) -29,045

1984: டி.எம்.வெங்கடாஜலம் (அதிமுக) -57,388
          பி.வி.வீரமணி (திமுக) -24,577

1989: ராஜேந்திரன் (அதிமுக ஜெ) -30,551
          இ.ஜி.சுகவனம் (திமுக ) -29,522 

1991: ஜெ.ஜெயலலிதா (அதிமுக ) -67,680
          டி.ராஜேந்தர் (சுயேட்சை) -30,465

1996: இ.ஜி.சுகவனம் (திமுக) -59,148
          ஜெ.ஜெயலலிதா (அதிமுக) -50,782

2001: மு.தம்பிதுரை (அதிமுக) -82,039
         இ.ஜி.சுகவனம் (திமுக ) -32,733 

2006: மு.தம்பிதுரை (அதிமுக) -57,813
           வெற்றிசெல்வன் (திமுக ) -55,151 

2009: கே.ஆர்.கே.நரசிம்மன் (திமுக ) -89,481
          சந்திரன் (தேமுதிக) -30,378 

2011: கே.இ.கிருஷ்ணமூர்த்தி (அதிமுக) -88,711
          டி.கே.ராஜா (பாமக) - 59,271

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com