ஒசூர்: திமுகவுக்கு வெற்றி வாய்ப்பு

ஒசூர் தொகுதியில் திமுக கூட்டணியில் தற்போது சட்டப்பேரவை உறுப்பினர் எஸ்.ஏ.சத்யா, இந்தத் தொகுதியில் மீண்டும் போட்டியிட பிரகாசமான வாய்ப்பு உள்ளது.
ஒசூர் கெலவரப்பள்ளி அணையில் இருந்து வெளியேற்றப்படும் தண்ணீர்.
ஒசூர் கெலவரப்பள்ளி அணையில் இருந்து வெளியேற்றப்படும் தண்ணீர்.

ஆங்கிலேயர் ஆட்சிக் காலத்தில் சேலம் ஜில்லாவின் தலைநகராகத் திகழ்ந்த பெருமை கொண்டது ஒசூர் நகரமாகும். ஆசியாவிலேயே மிகப்பெரிய கால்நடைப் பண்ணையும், மூதறிஞர் ராஜாஜி பிறந்த கிராமமான தொரப்பள்ளி கிராமமும் இந்த தொகுதியின் சிறப்புகள். மேலும் ஒரே நேர்கோட்டில் மலைமீது அமைந்துள்ள பிரம்மா, சிவன், விஷ்ணு மூன்று கோயில்களில் மும்மூர்த்திகள் உள்ளது ஒசூரின் மற்றொரு சிறப்பு.

வாக்காளர்கள் விவரம்: ஆண்கள் - 1,69,923; பெண்கள் - 1,60,807; மூன்றாம் பாலினத்தவர்- 96; மொத்தம் - 3,30,826

சமூக நிலவரம்: தமிழக எல்லையில், கர்நாடகம், ஆந்திரம் மாநிலங்களை ஒட்டி அமைந்துள்ளது தொழில் நகரமான ஒசூர். இங்கு ரெட்டி, கவுடா, நாயுடு, வன்னியர், தாழ்த்தப்பட்ட மக்கள் உள்ளிட்ட சமுதாய மக்கள் பரவலாக உள்ளனர். மேலும் கிறிஸ்துவ, முஸ்லிம் சமுதாய மக்களும் அதிக அளவில் உள்ளனர். இங்கு பெரும்பாலும் தெலுங்கு, கன்னட மொழி பேசுபவர்கள் அதிகமாக உள்ளனர். இதனைத்தவிர வெளி மாவட்டத்தைச் சேர்ந்தவர்கள் 50 சதவீதத்திற்கும் மேல் உள்ளனர்.

குறிப்பாக, கேரளம்,  கர்நாடகம், ஆந்திர மாநிலங்களைச் சேர்ந்தவர்கள் 40 ஆயிரத்திற்கும் மேற்பட்டவர்கள் வசித்து வருகின்றனர். இதனால் ஒசூர் தொகுதியில் வெற்றி வாய்ப்பை நிர்ணயிப்பதில் வெளி மாவட்ட, வெளி மாநில மக்களின் வாக்குகள் முக்கிய இடம் வகிக்கின்றன.

தொழில்வளம்: குண்டூசி முதல் விமானம் வரை தயாரிக்கும் நிறுவனங்கள் உள்ளடங்கிய ஒசூர் தொகுதியில் 2 ஆயிரத்திற்கும் மேற்பட்ட சிறு, குறு, தொழிற்சாலைகள் இயங்கி வருகின்றன. மேலும்  டி.வி.எஸ்., அசோக் லேலண்ட் போன்ற வாகன உற்பத்தி நிறுவனங்கள் உள்பட 300-க்கும்  மேற்பட்ட பெரிய தொழில் நிறுவனங்கள் இங்கு இயங்கி வருகின்றன. இதில் ஒரு லட்சத்திற்கு அதிகமான தொழிலாளர்கள் பணியாற்றுகின்றனர்.

நிறைவேற்றப்படாத திட்டங்கள்: இத்தொகுதியில் தேசிய நெடுஞ்சாலை தவிர கிராமப்புறச் சாலைகள் மிகவும் மோசமாக உள்ளன. போக்குவரத்து நெரிசலைக் குறைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும். கிராமப்புறங்களுக்கு போதிய பேருந்து வசதி ஏற்படுத்தித் தர வேண்டும். மகளிருக்கென தனியாக பேருந்தும், தொழிலாளர்கள் தங்கும் விடுதியும் ஏற்படுத்த வேண்டும். குற்றச் செயல்கள் அதிகம் நடப்பதால், கூடுதல் காவலர்களை நியமிக்க வேண்டும். இஎஸ்ஐ மருத்துவமனையை தரம் உயர்த்த வேண்டும் என்பது உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை முன்வைக்கிறார்கள். மேலும், பெங்களூரில் இயக்கப்படும் மெட்ரோ ரயில் திட்டத்தை ஒசூர் வரை இயக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்ற கோரிக்கையும்  நீண்ட நாட்களாக நிலுவையில் உள்ளது.

இந்த தொகுதியில் தகுந்த தட்பவெப்ப நிலை உள்ளதால் பல்வேறு கொய்மலர்கள் சாகுபடி செய்யப்படுகின்றன. ரோஜா மலர்கள், கொய் மலர்கள், ஜெர்பரா, சாமந்தி உட்பட பல்வேறு மலர்கள் உற்பத்தி செய்யப்பட்டு, அவை வெளிநாடு ஏற்றுமதி மட்டுமின்றி, உள்நாட்டிலும்  விற்பனை செய்யப்படுகின்றன. இதேபோல, அனைத்து வகையான காய்கறிகளும் பயரிடப்பட்டு தமிழகம் மட்டுமின்றி அண்டை மாநிலங்களுக்கும் அனுப்பி வைக்கின்றனர். இங்கு விளைவிக்கப்படும் மலர்களை சேமிக்க குளிர்பதனக் கிடங்குகள் தேவை. குளிர்பதனக் கிடங்களுக்கு இலவச மின் வினியோகம் வழங்க வேண்டும், அதேபோல பொருள்களை கொண்டு செல்ல குளிரூட்டப்பட்ட வாகனங்கள் தமிழக அரசு மூலம் ஏற்படுத்திக் கொடுக்க வேண்டுமெனவும் கோரிக்கை எழுந்துள்ளது.

நீண்டநாள் கோரிக்கைகள்: இத் தொகுதியில் நீண்ட கால பிரச்னைகளுக்கு குறைவில்லை. கெலவரப்பள்ளி அணையை சுற்றுலாத் தலமாக மாற்ற வேண்டும். சிவன், விஷ்ணு, பிரம்மன் ஆகிய மூன்று தெய்வங்களுக்கு மலைகள் ஒரே நேர்கோட்டில் இருப்பதால், ரோப் கார் வசதி செய்து சுற்றுலாத் தலமாக்க வேண்டும். நீண்ட கால தேர்தல் வாக்குறுதியான ராமநாயக்கன் ஏரிக்கு கெலவரப்பள்ளி அணையில் இருந்து நீரைக் கொண்டுவந்து நிரப்பி சுற்றுலாத் தலமாக்க வேண்டும். தொழிலாளர்களுக்கு என பொழுதுபோக்குப் பூங்கா உள்ளிட்ட  கோரிக்கைகளை பொதுமக்களும் விவசாயிகளும், தொழிலாளர்களும் தொடர்ந்து வலியுறுத்தி வருகின்றனர்.

கெலவரப்பள்ளி அணையில் இருந்து வரும் நீர், ஏரியில் நிரப்பப்பட்டால் நிலத்தடி நீரும் உயரும்; இதனால் குடிநீர்ப் பிரச்னை குறையும். மேலும் திமுக ஆட்சியில் கொண்டு வரப்பட்ட ஒகேனக்கல் கூட்டுக் குடிநீர் திட்டத்தை முழுமையாகச் செயல்படுத்த வேண்டும் என இப்பகுதி பொதுமக்கள் தெரிவிக்கின்றனர்.

ஒசூர் நகரின் பெரும்பாலான சாலைகள் குண்டும் குழியுமாக காணப்படுகின்றன. இதனால் வாகன ஓட்டிகள் பெருமளவில் பாதிக்கப்படுகின்றனர். அதேசமயம் மழைக் காலங்களில் மழைநீர் சாலைகளில் தேங்குகிறது. இதனால் தாங்கள் கடுமையாகவும் பாதிக்கப்படுவதாக மக்கள் தெரிவிக்கின்றனர்.

ஒசூர்- தளி சாலையில் குறுக்கே ரயில் பாதை செல்வதால், ரயில் வரும் நேரங்களில் நீண்ட நேரம் ரயில்வே கேட் அடைக்கப்படுவதால் பொதுமக்கள் தொழிலாளர்கள், பள்ளி மாணவர்கள் ஆகியோர் பாதிக்கப்படுகிறார்கள். எனவே, இப்பகுதியில் மேம்பாலம் அமைக்க வேண்டும் என்ற கோரிக்கை உள்ளது. ஒசூர் நகரில் இரு சாலைகளிலும் கடுமையான போக்குவரத்து நெருக்கடி ஏற்படுகிறது. சாலைகளின் இருபுறமும் இரண்டு சக்கர வாகனங்களை நிறுத்துவதாலும், வியாபாரிகள் சாலைகளை ஆக்கிரமித்து உள்ளதாலும் மிகவும் சிரமப்படுவதாக பொதுமக்கள் தெரிவிக்கின்றனர். இதற்கு மாநகராட்சி சார்பில் வாகனங்கள் நிறுத்துவதற்கு தனி இடம் ஒதுக்கித் தர வேண்டும் என கோரிக்கை எழுந்துள்ளது.

அரசியல் நிலவரம்: ஒசூர் சட்டப்பேரவைத் தொகுதி, இதுவரை 15 சட்டப்பேரவைத் தேர்தல்களைக் கண்டுள்ளது. இதில் காங்கிரஸ் கட்சி 9 முறையும்,  சுதந்திரா கட்சி 2 முறையும், சுயேச்சைகள் 2 முறையும் , ஜனதா தளம், அதிமுக ஆகியவை தலா ஒருமுறையும் வெற்றி பெற்றுள்ளன. கடந்த 2016 ஆம் ஆண்டு நடைபெற்ற சட்டப்பேரவைத் தேர்தலில் வெற்றி பெற்ற அதிமுகவைச் சேர்ந்த பாலகிருஷ்ணா ரெட்டி நீதிமன்ற வழக்கு தொடர்பாக பதவி இழந்தார்.

இதையடுத்து 2019 ஆம் ஆண்டு நடைபெற்ற இடைத்தேர்தலில், அதிமுக வேட்பாளர் ஜோதி பாலகிருஷ்ணா ரெட்டியை விட 23,213 வாக்குகள் அதிகம் பெற்று, திமுக வேட்பாளர் சத்யா வெற்றியடைந்தார். (திமுக வேட்பாளர் சத்யா பெற்ற வாக்குகள் - 1,15,027. அதிமுக வேட்பாளர் ஜோதி பாலகிருஷ்ணா ரெட்டி பெற்ற வாக்குகள் - 91,814.வித்தியாசம் - 23,213).

ஒசூர் தொகுதியில் திமுக கூட்டணியில் தற்போது சட்டப்பேரவை உறுப்பினர் எஸ்.ஏ.சத்யா, இந்தத் தொகுதியில் மீண்டும் போட்டியிட பிரகாசமான வாய்ப்பு உள்ளது. காங்கிரஸ் கட்சி சார்பில் முன்னாள் சட்டப்பேரவை உறுப்பினர் கே.ஏ.மனோகரன் திமுக கூட்டணியில் காங்கிரஸ் கட்சி சார்பில் போட்டியிட விருப்புமனு அளிக்க வாய்ப்பு உள்ளது.

அதிமுக கூட்டணியில் முன்னாள் அமைச்சரின் மனைவி ஜோதி பாலகிருஷ்ணா ரெட்டி, அதிமுக ஒசூர் மாநகரச் செயலாளர் எஸ்.நாராயணன் ஆகியோர் இந்த முறை விருப்ப மனு அளிக்க உள்ளனர். அதிமுக கூட்டணியில் இடம் பெற்றுள்ள பாஜக இந்தத் தொகுதியில் போட்டியிட விருப்பம் தெரிவித்துள்ளது. அவ்வாறு இந்தத் தொகுதி பாஜகவுக்கு ஒதுக்கீடு செய்யப்பட்டால் பாஜக மாநில துணைத் தலைவர் கே.எஸ்.நரேந்திரன், மாவட்டச் செயலாளர் எம். நாகராஜ் இவர்களில் ஒருவர் போட்டியிட வாய்ப்பு உள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com