ஒட்டப்பிடாரம்: நான்கு முனைப் போட்டிக்கு வாய்ப்பு

வரும் தேர்தலில் ஒட்டப்பிடாரம் தொகுதியில் நான்கு முனை போட்டி இருக்கும் என அரசியல் ஆர்வலர்கள் தெரிவிக்கின்றனர்.
ஒட்டப்பிடாரம்: நான்கு முனைப் போட்டிக்கு வாய்ப்பு

தூத்துக்குடி மாவட்டத்தில் உள்ள ஓரே தனி தொகுதியான ஒட்டப்பிடாரம் சட்டப்பேரவைத் தொகுதியில் தூத்துக்குடி மாநகராட்சிக்குள்பட்ட 9 வார்டுகள், ஒட்டப்பிடாரம் ஊராட்சி ஒன்றியம், தூத்துக்குடி ஊராட்சி ஒன்றியத்துக்குள்பட்ட சேர்வைக்காரன்மடம்,  அய்யனடைப்பு,  குலையன்கரிசல், குமாரகிரி ஆகிய ஊராட்சிகள் ஸ்ரீவைகுண்டம் வட்டத்துக்குள்பட்ட செக்காரக்குடி, வடக்குகாரசேரி, சிங்கத்தாகுறிச்சி, முறப்பநாடு, வல்லநாடு (கஸ்பா), வசப்பபுரம், அழிகுடி, முறப்பநாடு புதுக்கிராமம், நாணல்காடு, மணக்கரை, வித்தலாபுரம், முத்தாலங்குறிச்சி மற்றும் வித்தலாபுரம் கிராமங்களை உள்ளடக்கியுள்ளது.

தூத்துக்குடி புறநகர் பகுதியில் பல்வேறு தொழிற்சாலைகளும், புதியம்புத்தூர் பகுதியில் பின்னலாடைத் தொழிலும் உள்ளது. மற்றபடி மானாவாரி பகுதியான இங்கு விவசாயமும், விவசாயம் சார்ந்த தொழிலும் மட்டுமே உள்ளது. இந்தத் தொகுதிக்குள்பட்ட தருவைகுளம் பகுதியில் மீனவர்கள் அதிகம் உள்ளனர். பாசனப்பகுதியான அத்திமரப்பட்டி உள்ளிட்ட பகுதிகளில் விவசாயம் மட்டுமே பிரதானத் தொழில்.

கடந்த 1962 ஆம் ஆண்டு பொதுத் தொகுதியாக இருந்தபோது நடைபெற்ற தேர்தலில் காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த ஏ.எல். ராமகிருஷ்ண நாயக்கர் வெற்றி பெற்றார். 1967 ஆண்டு சுதந்திரா கட்சியைச் சேர்ந்த எம். முத்தையாவும், 1971 ஆம் ஆண்டு பார்வர்டு பிளாக் கட்சியைச் சேர்ந்த எம். முத்தையாவும், 1977 ஆம் ஆண்டு காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த  ஓ.எஸ். வேலுச்சாமியும், 1980 ஆம் ஆண்டு இந்திய கம்யூனிஸ்ட் கட்சியைச் சேர்ந்த எம். அப்பாத்துரையும், 1984 ஆம் ஆண்டு தேர்தலில் காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த  ஆர்.எஸ். ஆறுமுகமும், 1989 ஆம் ஆண்டு தேர்தலில் திமுகவைச் சேர்ந்த எம். முத்தையாவும் வெற்றி பெற்றுள்னர்.

பின்னர், பட்டியலினத்தவருக்காக ஒதுக்கப்பட்ட இந்தத் தொகுதியில் 1991 ஆம் ஆண்டு தேர்தலில் அதிமுகவைச் சேர்ந்த எஸ்.எக்ஸ். ராஜமன்னார் வெற்றி  பெற்றார். தொடர்ந்து, 1996 ஆம் ஆண்டு தேர்தலில் தற்போதைய புதிய தமிழகம் கட்சி தலைவர் க. கிருஷ்ணசாமி ஜனதா கட்சி சார்பில் போட்டியிட்டு வெற்றி பெற்றார். 2001 ஆண் ஆண்டு அதிமுகவைச் சேர்ந்த ஏ. சிவபெருமாளும், 2006 ஆம் ஆண்டு அதிமுகவைச் சேர்ந்த பி. மோகனும், 2011 ஆம் ஆண்டு அதிமுக கூட்டணியில் போட்டியிட்ட புதிய தமிழகம் கட்சி தலைவர்  க. கிருஷ்ணசாமியும், 2016 ஆம் ஆண்டு அதிமுக சார்பில் போட்டியிட்ட இரா. சுந்தரராஜனும் வெற்றி பெற்றனர்.

பின்னர் சுந்தரராஜன் அமமுகவுக்குச் சென்றதால் கடந்த 2019 ஆம் ஆண்டு நடைபெற்ற இடைத்தேர்தலில் திமுகவைச் சேர்ந்த சி. சண்முகையா வெற்றி பெற்று தற்போது உறுப்பினராக உள்ளார். இந்தத் தொகுதியை பொருத்தமட்டில் பின்தங்கிய தொகுதியாகவே காணப்படுகிறது. மக்களின் குடிநீர்ப் பிரச்னை தீர்க்க முடியாததாக உள்ளது. கொம்பாடி பகுதியில் தடுப்பணை கட்டுதல், தாமிரவருணி தண்ணீரை தொகுதி மக்களுக்கு வழங்குதல் போன்ற திட்டங்களை நிறைவேற்றினால் மட்டுமே தொகுதி மக்கள் முன்னேற்றமடைய வாய்ப்பு உள்ளது.

புதியம்புத்தூர் பகுதியில் ஒரு ஜவுளி பூங்கா அமைக்க வேண்டும் என்பது மக்களின் நீண்டநாள் கோரிக்கையாக உள்ளது. நடைபெற உள்ள தேர்தலில் திமுக கூட்டணியில் திமுகவுக்கு இந்தத் தொகுதி ஒதுக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது. அப்படியெனில், தற்போதைய உறுப்பினர் சி. சண்முகையா மீண்டும் போட்டியிட வாய்ப்பு உள்ளது. இடைத்தேர்தலில் வெற்றி பெற்றவர் என்பதால் சி. சண்முகையாவை தவிர புதுமுகங்களுக்கு வாய்ப்பு இல்லை என திமுக மூத்த நிர்வாகிகள் தெரிவிக்கின்றனர்.

அதிமுக கூட்டணியில் இத்தொகுதி அதிமுகவுக்கு ஒதுக்கப்பட்டால் சட்டப்பேரவை முன்னாள் உறுப்பினர் பி. மோகன், தற்போதைய ஆவின் தலைவர் என். சின்னத்துரை ஆகியோரில் ஒருவருக்கு வாய்ப்பு கிடைக்கும் என கூறப்படுகிறது. அதிமுக கூட்டணி கட்சிக்கு ஒதுக்கப்படும்பட்சத்தில் புதிய தமிழகம் கட்சி தலைவர் க. கிருஷ்ணசாமி அல்லது அவரது மகன் ஷியாம், தமிழக மக்கள் முன்னேற்றக் கழகத் தலைவர் ஜான் பாண்டியன ஆகியோர் போட்டியிட முயற்சி செய்து வருகின்றனர்.

இதுதவிர, தற்போது அம்மா மக்கள் முன்னேற்றக் கழகத்தில் உள்ள சட்டப்பேரவை முன்னாள் உறுப்பினர்களான இரா. சுந்தரராஜன், ஏ.சிவபெருமாள் ஆகியோரில் ஒருவருக்கு வாய்ப்பு கிடைக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

வரும் தேர்தலில் இந்தத் தொகுதியில் நான்கு முனை போட்டி இருக்கும் என அரசியல் ஆர்வலர்கள் தெரிவிக்கின்றனர். ஒட்டப்பிடாரம் பேரவைத் தொகுதியில் ஒரு லட்சத்து 22 ஆயிரத்து 372 ஆண் வாக்காளர்களும், ஒரு லட்சத்து 27 ஆயிரத்து 653 பெண் வாக்காளர்களும் 28 திருநங்கைகளும் என மொத்தம் 2 லட்சத்து 50 ஆயிரத்து 53 வாக்காளர்கள் உள்ளனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com