சீர்காழி(தனி): தொகுதியைப் பெற முயற்சிக்கும் விசிக, காங்கிரஸ்

திமுக - அதிமுக நேரடிப் போட்டிக்கு வாய்ப்பு இருப்பினும், திமுக கூட்டணியில் உள்ள காங்கிரஸ் கட்சியும், விடுதலைச் சிறுத்தைகள் கட்சியும் இத்தொகுதியை பெற முயற்சிப்பதாகக் கூறப்படுகிறது. 
சீர்காழி அருள்மிகு திருநிலைநாயகி உடனுறை அருள்மிகு பிரம்மபுரீசுவரர் கோயில்
சீர்காழி அருள்மிகு திருநிலைநாயகி உடனுறை அருள்மிகு பிரம்மபுரீசுவரர் கோயில்

சமயக் குரவர்களுள் ஒருவரான திருஞானசம்பந்தருக்கு உமையம்மை ஞானப்பால் வழங்கிய பிரம்ம தீர்த்த குளத்துடன் சீர்காழி அருள்மிகு திருநிலைநாயகி உடனுறை அருள்மிகு பிரம்மபுரீசுவரர் கோயில்.

உமையம்மையிடம் ஞானப்பால் உண்டவரும், சமயக் குரவர்களுள் ஒருவரான திருஞானசம்பந்தர் அவதரித்த சீர்காழியைத் தலைமையிடமாகக் கொண்டது சீர்காழி சட்டப்பேரவைத் தொகுதி.  தமிழிசை மூவரான முத்துதாண்டவர், அருணாச்சல கவிராயர், மாரிமுத்தாப்பிள்ளை அவதரித்த ஊர், உலக நூலகத் தந்தை  எஸ்.ஆர்.அரங்கநாதன் பிறந்த ஊர் என பல்வேறு சிறப்புகளைக் கொண்டது சீர்காழி.

நவக்கிரக தலங்களில் செவ்வாய் கிரகத்துக்கு உரிய தலமான வைத்தீஸ்வரன் கோயில், புதன் தலமான திருவெண்காடு, 11 திவ்ய தேசங்களை உள்ளடக்கிய நாங்கூர் உள்பட பல்வேறு ஆன்மிகச் சிறப்புகள் கொண்ட திருத்தலங்களை உள்ளடக்கியது சீர்காழி சட்டப்பேரவைத் தொகுதி. 1952-ஆம் ஆண்டு முதல் இதுவரை தனி தொகுதியாக உள்ள சட்டப்பேரவைத் தொகுதி இது.

நில அமைப்பு: மயிலாடுதுறை மாவட்டத்துக்கு உள்பட்ட இத்தொகுதி,  சீர்காழி நகராட்சி பகுதிகளையும், வைத்தீஸ்வரன்கோவில் பேரூராட்சி பகுதிகளையும், சீர்காழி, கொள்ளிடம் என 2 ஊராட்சி ஒன்றியப் பகுதிகளையும் உள்ளடக்கியது. மயிலாடுதுறை மாவட்டத்தின் வடப்புற எல்லையாக உள்ளது இத்தொகுதி. பல்வேறு மாவட்டங்களுக்கு வடிகாலாக அமைந்துள்ள கொள்ளிடம் ஆறு, கடலில் கலக்கும் பகுதி. கடலும், கடல் சார்ந்த பகுதியுமாக உள்ள தொகுதி.

வாக்காளர் எண்ணிக்கை: ஆண்கள்- 1,20,329.  பெண்கள்- 1,23,310.  மூன்றாம் பாலினத்தவர்- 12. மொத்த வாக்காளர்கள் எண்ணிக்கை -  2,43,651.
 
சாதி, தொழில் அமைப்பு: இத்தொகுதியில் தலித்துகள், வன்னியர்கள் பெரும்பான்மைப் பெற்றுள்ளனர். அடுத்தடுத்த நிலைகளில் மீனவர்கள், முக்குலத்தோர் கணிசமான எண்ணிக்கையில் வசிக்கின்றனர். இதர சமூகத்தினர் பரவலாக உள்ளனர்.

விவசாயம் மற்றும் மீன்பிடித் தொழில் இங்கு பிரதானம் பெற்றுள்ளது. சீர்காழி தொகுதிக்கு உள்பட்ட தைக்கால், சேந்தங்குடி, புத்தூர் போன்ற பகுதிகளில் பாய் மற்றும் பிரம்புகளால் ஆன கைவினைப் பொருட்கள் தயாரிக்கும் தொழில் சிறப்புப் பெற்று விளங்குகிறது.  

சீர்காழி வட்டத்தில் கொடியம்பாளையம் தீவு கிராமம் முதல் வானகிரி வரை உள்ள 18 மீனவ கிராமங்களில் சுமார் 80 ஆயிரம் மீனவர்கள் வசிக்கின்றனர். அவர்களில், சுமார் 40 ஆயிரம் மீனவர்கள் நேரடியாக மீன்பிடித் தொழிலில் ஈடுபட்டுள்ளனர். மீன்பிடித் தொழில் சார்ந்த தொழில்கள் மூலம் சுமார் 30 ஆயிரத்துக்கும் அதிகமானோர் வாழ்வாதாரம் பெறுகின்றனர்.

சீர்காழி மற்றும் கொள்ளிடம் பகுதிகளில் சுமார் ஒரு லட்சம் ஏக்கர் விளை நிலங்கள் உள்ளன. நெல் விவசாயம் பிரதானம் பெற்றிருந்தாலும், கொள்ளிடம் ஆற்றின் கரையோரம் தோட்டப் பயிர்களான சாமந்தி பூ, செங்கரும்பு, மணிலா, வாழை, காய்கனி  பயிர்களின் சாகுபடி நடைபெறுகிறது.

கடந்த தேர்தல்களில் வென்றவர்கள்

1962 - தங்கவேலு (காங்கிரஸ்) : கே.பி.எஸ். மணி (சுயேச்சை)
1967 - கே.பி.எஸ். மணி (சுயேச்சை) : ஆர். தங்கவேலு (காங்கிரஸ்)
1971 - எஸ். வடிவேலு (கம்யூனிஸ்ட்) : கே.பி.எஸ். மணி (காங்கிரஸ்)
1977 - கே. சுப்ரவேலு (திமுக) : கே. பாலசுப்பிரமணியன் (அதிமுக)
1980 - கே. பாலசுப்பிரமணியன் (அதிமுக) : கே. சுப்ரவேலு (திமுக)
1984 - கே. பாலசுப்பிரமணியன் (அதிமுக) : டாக்டர் எம். பன்னீர்செல்வம் (திமுக)
1989 - எம். பன்னீர்செல்வம்(திமுக) : என். ராமசாமி (காங்கிரஸ்)
1991 - டி. மூர்த்தி (அதிமுக) : டாக்டர் எம். பன்னீர்செல்வம் (திமுக)
1996 - எம். பன்னீர்செல்வம் (திமுக) : வி. பாரதி (அதிமுக)
2001 - என். சந்திரமோகன் (அதிமுக) : ஜெ. இறைஎழில் (திமுக)
2006 - எம். பன்னீர்செல்வம் (திமுக) : பி. துரைராஜன் (விசிக)
2011 - ம. சக்தி (அதிமுக) : பி. துரைராஜன் (விசிக)
2016 - பி.வி. பாரதி (அதிமுக) : எஸ். ரவீந்திரன் (திமுக)
 
இத்தொகுதியில் 1952 ஆம் ஆண்டு முதல்  இதுவரை நடைபெற்ற சட்டப்பேரவைத் தேர்தல்களில் அதிமுக 5 முறையும், திமுக 4 முறையும், காங்கிரஸ் கட்சி 3 முறையும், இந்திய கம்யூனிஸ்ட் கட்சி மற்றும் சுயேச்சை தலா 1 முறையும் வென்றுள்ளன.

அரசியல் கட்சிகளின் செல்வாக்கு உள்ள பகுதிகள்

கடந்த காலங்களில் இத்தொகுதி திமுகவின் கோட்டையாகக் கருதப்பட்ட தொகுதி. இருப்பினும் தற்போதைய நிலையில், வெற்றி எண்ணிக்கையில் அதிமுக முன்னிலை பெற்றுள்ளது. கொள்ளிடம் ஒன்றியத்தில் உள்ள மீனவ கிராமங்கள் உள்பட அப்பகுதியில் உள்ள பல கிராமங்கள் அதிமுகவுக்கு சாதகமான பகுதிகளாகக் குறிப்பிடப்படுகின்றன.  சீர்காழி நகர பகுதிகளில் திமுக அதிக செல்வாக்குப் பெற்றுள்ளது. சீர்காழி ஒன்றியப் பகுதிகளில் திமுக, அதிமுக ஆகிய இரு கட்சிளும் சம பலத்தில் உள்ளன. இவைத் தவிர, விடுதலைச் சிறுத்தைகள் கட்சி, பாமக, தேமுதிக ஆகிய கட்சிகளும் இங்கு குறிப்பிடத்தக்க செல்வாக்குப் பெற்ற கட்சிகளாக உள்ளன.  

கட்சிகளுக்கான வெற்றி வாய்ப்புகள் 

கடந்த 10 ஆண்டுகளாக அதிமுக சட்டப்பேரவை உறுப்பினர்கள் மூலம் இத்தொகுதியில் பல்வேறு திட்டங்கள் நிறைவேற்றப்பட்டுள்ளன. இது, அதிமுகவுக்கு சாதகமாக கருதப்படுகிறது.  அதேபோல் 10 ஆண்டுகளாக ஒரே கட்சியைச் சேர்ந்தவர்களே வெற்றி பெற்றிருப்பதால் மாற்றத்தை விரும்பும் மக்களின் வாக்குகள் தங்களுக்கு சாதகமாகும் எனக் கருதுகிறது திமுக மற்றும் அதன் கூட்டணிக் கட்சிகள்.

நிறைவேற்றப்பட்ட திட்டங்கள்

சீர்காழி தொகுதியில் பல ஆண்டு கால கோரிக்கைக்குத் தீர்வாக அரசு கல்லூரி அமைக்கப்பட்டுள்ளது. வெள்ளப்பள்ளம் உப்பனாற்றில் ரூ. 32 கோடியில் தடுப்பணை, தென்னாம்பட்டினத்தில் கடல் நீர் உள்புகுவதை தடுக்க கதவணை, கிட்டி அணையில் ரூ.10 கோடியில் கதவணை. இவைத் தவிர, தொகுதியில் பல்வேறு இடங்களில் பள்ளிக் கட்டடங்கள், அங்காடி கட்டடங்கள், சிறுபாலங்கள் என பல திட்டங்கள் நிறைவேற்றப்பட்டுள்ளன.

நிறைவேற்றப்படாத திட்டங்கள்

சீர்காழியில் நிலவும் சுகாதார சீர்கேட்டுக்குத் தீர்வாக புதை சாக்கடைத் திட்டம் அறிவிக்க வேண்டும் என்ற மக்களின் நீண்ட கால கோரிக்கை இதுவரை நிறைவேற்றப்படவில்லை. சீர்காழி நகரில் ஏழை, எளிய மாணவ, மாணவிகள் கல்வி பயில நகரில் அரசு மேல்நிலைப்பள்ளி ஏற்படுத்தப்படவில்லை. நூலகத் தந்தை பிறந்த ஊரான சீர்காழியில் உள்ள நூலகத்துக்கு இதுவரை சொந்தக் கட்டடம் கட்டப்படவில்லை.  மாவட்ட அரசு இசைப் பள்ளிக்கு சொந்தக் கட்டடம் கட்ட இடம் தேர்வு செய்யப்பட்டும், இதுவரை கட்டடம் கட்டப்படவில்லை. வைத்தீஸ்வரன்கோயிலில் போக்குவரத்து நெரிசலை குறைக்க ஒரு வழிப்பாதை சாலைக்கு புதிய வழித்தடம் இதுவரை அமைக்கப்படவில்லை என்பவை இத்தொகுதியில் நிறைவேற்றப்படாத முக்கியத் திட்டங்களில் குறிப்பிடத்தக்கவை.  

பிரச்சனைகளும் எதிர்பார்ப்புகளும்

பழையாறு, திருமுல்லைவாசல் பகுதியில் மீன்பிடிப்புக்குச் சென்று கரை திரும்பும் படகுகள், முகத்துவாரப் பகுதியில் தரை தட்டி விபத்துக்குள்ளாவதால் பல லட்சம் ரூபாய் மதிப்பிலான படகுகள் தொடர்ந்து சேதமாகி வருகின்றன. இது, இத்தொகுதியில் உள்ள முக்கிய பிரச்னைகளில் ஒன்றாக உள்ளது. பழையாறு, திருமுல்லைவாசல் பகுதியில் கடல் முகத்துவாரப் பகுதிகளை தூர்வாரி, இருபுறங்களிலும் கல் தடுப்புச் சுவர் அமைக்க வேண்டும் என்பது இப்பகுதி மக்களின் எதிர்பார்ப்பாக உள்ளது.

கடலோரக் கிராமங்களின் கடைகோடி பகுதி வரை தட்டுப்பாடு இல்லாமல் குடிநீர் விநியோகம் கிடைக்க கொள்ளிடம் கூட்டு குடிநீர்த் திட்டத்தை விரிவாக்கம் செய்ய வேண்டும், கடல் நீர் உள்புகுந்து வேளாண்மை பாதிக்கப்படுவதைத் தடுக்க கொள்ளிடம் ஆற்றின் குறுக்கே அளக்குடி பகுதியில் கதவணை கட்ட வேண்டும் என்பது விவசாயிகளின் நீண்ட கால எதிர்பார்ப்பு.

சுதந்திரமடைந்து 70 ஆண்டுகளைக் கடந்த நிலையிலும், இத்தொகுதி தனி தொகுதியாகவே தொடர்வதை மறுவரையறை செய்து, இத்தொகுதியைப் பொது தொகுதியாக மாற்ற வேண்டும் என்பது முக்கிய எதிர்பார்ப்புகளில் ஒன்றாக உள்ளது.

போட்டியிட வாய்ப்புள்ள கட்சிகள்

இருமுறை தொடர்ந்து வென்ற இத்தொகுதியைத் தக்க வைத்துக்கொள்ள வேண்டும் என்பதில் அதிமுக முனைப்புடன் உள்ளது. எனவே, இத்தொகுதியில் அதிமுக நேரடியாக களம் காணவே அதிக வாய்ப்புகள் உள்ளன. அதேபோல, திமுகவும் இத்தொகுதியில் நேரடியாக களம் காணவே வாய்ப்பு இருப்பதாகத் தெரிகிறது. இருப்பினும், திமுக கூட்டணியில் உள்ள காங்கிரஸ் கட்சியும், விடுதலைச் சிறுத்தைகள் கட்சியும் இத்தொகுதியைக் கேட்டுப் பெறுவதில் முனைப்புக் காட்டுவதாகக் கூறப்படுகிறது.

இவைத் தவிர, அமமுக, மக்கள் நீதி மய்யம், நாம் தமிழர் போன்ற கட்சிகள் போட்டியிடலாம். இருப்பினும், அந்தக் கட்சிகள் மும்முனை போட்டியை ஏற்படுத்துமா? என்பது வேட்பாளர்கள் தேர்வைப் பொருத்தே உள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com