திருவாரூர்: 7 ஆவது தொடர் வெற்றியை பதிவு செய்யுமா திமுக?

திருவாரூரில் அதிமுக, திமுக, அமமுக, நாம் தமிழர் கட்சி, மக்கள் நீதி மய்யம் கட்சிகளின் சார்பில் வேட்பாளர்கள் களம் காணலாம். இருப்பினும்,  திமுக அதிமுகவுக்கு இடையில் நேரடிப் போட்டி இருக்கும்.
திருவாரூர் ஆழித்தேர்
திருவாரூர் ஆழித்தேர்

தொகுதியின் சிறப்பு

பிறக்க முக்தி தரும் தலமாகக் கருதப்படும் திருவாரூரில் அமைந்துள்ள அருள்மிகு  தியாகராஜர் கோயில் சப்தவிடங்க தலங்களில் முதன்மையானது ஆகும். கர்நாடக சங்கீத மும்மூர்த்திகளான தியாகராஜர், முத்துசாமி தீட்சிதர், சியாமா சாஸ்திரிகள்  அவதரித்த ஊர், பசுவின் கன்றைக் கொன்ற மகனை தேர்க்காலில் இட்டு நீதியை நிலைநாட்டிய மனுநீதிச்சோழன் ஆட்சி புரிந்த ஊர் என பல்வேறு சிறப்புகளைக் கொண்டது திருவாரூர். பல ஆண்டுகள் தனி தொகுதியாக இருந்த திருவாரூர் சட்டப்பேரவைத் தொகுதி, 2011 ஆம் ஆண்டு முதல் பொதுத் தொகுதியாக இருந்து வருகிறது.

வாக்காளர் எண்ணிக்கை: ஆண்கள் - 1,36,740. பெண்கள்- 1,44,762. மூன்றாம் பாலினத்தவர் 32. மொத்த வாக்காளர்கள் 2,81,534.

நில அமைப்பு

நாகை மக்களவைத் தொகுதிக்குட்பட்ட திருவாரூர் சட்டப்பேரவைத் தொகுதியானது மன்னார்குடி, திருத்துறைப்பூண்டி, நன்னிலம், கீழ்வேளூர் ஆகிய சட்டப்பேரவைத் தொகுதிகளின் எல்லைகளால் வரையறுக்கப்பட்டுள்ளது.

கமலாலயம் குளத்துடன் திருவாரூர் அருள்மிகு தியாகராஜசுவாமி கோயிலின் மேற்குக் கோபுர தோற்றம்.
கமலாலயம் குளத்துடன் திருவாரூர் அருள்மிகு தியாகராஜசுவாமி கோயிலின் மேற்குக் கோபுர தோற்றம்.

திருவாரூர் நகராட்சியின் 30 வார்டுகளையும், திருவாரூர் ஊராட்சி ஒன்றியத்துக்குள்பட்ட 35 ஊராட்சிகளையும், கொரடாச்சேரி பேரூராட்சி பகுதிகளையும், கொரடாச்சேரி ஒன்றியத்துக்குள்பட்ட 44 ஊராட்சிகளையும், மன்னார்குடி ஒன்றியத்துக்குள்பட்ட 21 ஊராட்சிகளையும், கூத்தாநல்லூர் நகராட்சி பகுதிகளையும், கோட்டூர் ஒன்றியத்துக்குள்பட்ட 5 ஊராட்சிகளையும் உள்ளடக்கியது திருவாரூர் சட்டப்பேரவைத் தொகுதி.

சமூகம், தொழில் அமைப்பு

விவசாயத்தை பிரதானமாகக் கொண்ட இத்தொகுதியில் விவசாயிகளும், விவசாயத் தொழிலாளர்களும் அதிகமாக உள்ளனர். நெல் பயிர் பிரதானமாகவும், பருத்தி, உளுந்து, பயறு உள்ளிட்டவை அடுத்தடுத்த நிலைகளிலும் சாகுபடி செய்யப்படுகின்றன.

இங்கு வெள்ளாளர் சமூகத்தினர் அதிகம் உள்ளனர். முக்குலத்தோர்,  ஆதிதிராவிடர், செட்டியார், முதலியார், நாடார் உள்ளிட்ட பல்வேறு சமூகத்தினர் வசித்து வருகின்றனர். எனினும் சமூகம் ரீதியான வாக்கு வங்கிகள் இங்கு வெற்றி, தோல்வியை நிர்ணயிப்பதில்லை. 2011 ஆம் ஆண்டு கணக்கெடுப்பின்படி, திருவாரூர் சட்டப்பேரவைத் தொகுதியில், 72.63 சதவீதம் கிராமப்புறத்திலும், 27.37 சதவீதம் நகர்ப்புறத்திலும் வசிக்கின்றனர்.

திருவாரூர் ரயில் நிலையம்.
திருவாரூர் ரயில் நிலையம்.

கடந்த காலங்களில் வென்றவர்கள், தோற்றவர்கள்:

1961 - அம்பிகாபதி (காங்கிரஸ்) : வடிவேலு (கம்யூனிஸ்ட்)
1967 - தனுஷ்கோடி (மார்க்சிஸ்ட்) : வேதையன் (காங்கிரஸ்)
1971 - தாழை மு. கருணாநிதி (திமுக) : வேதையன் (காங்கிரஸ்)
1977 - தாழை மு. கருணாநிதி (திமுக) :  பி.எஸ். தனுஷ்கோடி (மார்க்சிஸ்ட்)
1980 - எம். செல்லமுத்து (மார்க்சிஸ்ட்) :  கோவி. குப்புசாமி (திமுக)
1984 - எம். செல்லமுத்து (மார்க்சிஸ்ட்) :  கோவி. குப்புசாமி (திமுக)
1989 - வி. தம்புசாமி (மார்க்சிஸ்ட்) :  நாகூரான் ராஜா (அதிமுக)
1991 - வி. தம்புசாமி (மார்க்சிஸ்ட்) :  எம். ராமசாமி (காங்கிரஸ்)
1996 - ஏ. அசோகன் (திமுக) :    பி. ஆறுமுகப்பாண்டியன் (காங்கிரஸ்)
2001 - ஏ. அசோகன் (திமுக)  : கே. ரெங்கசாமி (மார்க்சிஸ்ட்)
2006 -  உ. மதிவாணன் (திமுக) : ஏ. தங்கமணி (அதிமுக)
2011 - மு. கருணாநிதி (திமுக)  : எம். ராஜேந்திரன் (அதிமுக)
2016 - மு. கருணாநிதி (திமுக) :  ஏ.என்.ஆர். பன்னீர்செல்வம் (அதிமுக)
2019 - பூண்டி கே. கலைவாணன் (திமுக) : ஆர். ஜீவானந்தம் (அதிமுக)

அரசியல் கட்சிகளின் செல்வாக்கு

மறைந்த முன்னாள் முதல்வரும், திமுக தலைவருமான மு.கருணாநிதி வாழ்ந்த ஊர் என்ற அடிப்படையில், இத்தொகுதியில் திமுக எப்போதும் தனிப்பெரும் செல்வாக்குக் கொண்ட கட்சியாக உள்ளது. கிராமப் பகுதிகளில் இடதுசாரிகளின் ஆதிக்கம் கணிசமாக உள்ளது. நகர்ப்புறங்களை பொருத்தவரை, திமுக, அதிமுக இரண்டு கட்சிகளுமே சமமான செல்வாக்கு மிகுந்தவையாக காணப்படுகின்றன.  

தேமுதிக, விடுதலை சிறுத்தைகள் கட்சியினருக்கு ஒரு சில கிராமப்புறங்களில் செல்வாக்கு இருந்தாலும், தேர்தல் வெற்றித் தோல்விகளில் தாக்கம் ஏற்படுத்தக் கூடியதாக இல்லை. கூத்தாநல்லூர், அடியற்கைமங்கலம் பகுதிகளில் இஸ்லாமியர்கள் அதிகம் வசிக்கின்றனர். அவர்களின் வாக்குகள் பாஜகவுக்கு எதிராக மாறினால், அது திமுகவுக்கு கூடுதல் சாதகமாகவே இருக்கும்.

கட்சிகளின் வெற்றி வாய்ப்புகள்

திருவாரூர் தொகுதியில் திமுக வலுவான நிலையில் உள்ளது. மேலும், திமுக கூட்டணியில், இடது சாரிகள், விடுதலைச் சிறுத்தைகள், முஸ்லீம் லீக் உள்ளிட்ட கட்சிகள் இடம்பெற்றிருப்பது அந்தக் கூட்டணிக்கு கூடுதல் பலமாகவே கருதப்படுகிறது. இதன் அடிப்படையில், வெற்றி வாய்ப்பில் திமுக முன்னிலைப் பெற்றிருப்பதாகவே கணிக்கப்படுகிறது.

அதேநேரம், வேளாண்மை சார்ந்த தொகுதி என்பதால் அதிமுக அரசு அறிவித்துள்ள  விவசாயக் கடன் தள்ளுபடி, நிவர், புரெவி புயல் பாதிப்புகளுக்கான நிவாரணம், காவிரிப் படுகை மாவட்டங்களை பாதுகாக்கப்பட்ட வேளாண் மண்டலமாக அறிவிப்பு செய்ததது போன்றவை அதிமுகவுக்கு வலுச் சேர்க்கின்றன.

இத்தொகுதியில் திமுக நேரடியாக களம் காணும் என்றே எதிர்பார்க்கப்படுகிறது. அதேபோல, அதிமுகவும் இத்தொகுதியில் நேரடியாக களம் காண வாய்ப்புள்ளதாகக் கூறப்படுகிறது.  

திட்டங்கள் நிறைவேறியதும், நிறைவேறாததும்

சீனிவாசபுரம் பாலத்தை அகலப்படுத்தியது, குடிமராமத்துப் பணிகள் மூலம் குளங்களை தூர்வாரியது உள்ளிட்ட பணிகள் மக்களிடையே அதிமுகவின் செல்வாக்கை உயர்த்தியுள்ளன. திருவாரூர் புதிய பேருந்து நிலையம் திறந்ததற்கு திமுக, அதிமுக இரண்டுமே உரிமை கொண்டாடுகின்றன.

மடப்புரம் பாலம் அகலப்படுத்தப்படும், போக்குவரத்து நெரிசலுக்குத் தீர்வு காணப்படும் என்ற கடந்த கால வாக்குறுதிகள் இதுவரை நிறைவேற்றப்படாமலேயே உள்ளன.

எதிர்பார்ப்புகளும், பிரச்னைகளும்

திருவாரூர் - காரைக்குடி ரயில் சேவை, திருவாரூரில் போக்குவரத்தைக் குறைக்கும் வகையில் அரை வட்டச்சாலை, சுற்றுலாத் தலமாக அறிவிக்கப்பட்ட பெரும்பண்ணையூர் தேவாலயத்தை மேம்படுத்தும் நடவடிக்கைகள் மக்களின் முக்கிய எதிர்பார்ப்புகளாக உள்ளன.  திருவாரூரில் வேளாண் கல்லூரி தொடங்க வேண்டும், மடப்புரம் பகுதியில் உள்ள சிறிய பாலத்தை அகற்றிவிட்டு, பெரிய பாலமாக மாற்ற வேண்டும், கொள்முதல் செய்யப்படும் நெல் மூட்டைகளை பாதுகாக்க  நவீன  சேமிப்புக் கிடங்குகள் அமைக்க வேண்டும்,  திருவாரூரிலிருந்து பகல் நேரங்களில் சென்னைக்கு ரயில் இயக்க வேண்டும்,  காலை 8 மணிக்கு முன்பாக திருவாரூர் - திருச்சிக்கு ரயில் சேவை வேண்டும் என்ற எதிர்பார்ப்புகள் உள்ளன.

புதிய பேருந்து நிலையம் திறக்கப்பட்டதிலிருந்து பழைய பேருந்து நிலையத்து்ககான போக்குவரத்து புறக்கணிக்கப்படுவது திருவாரூர் நகர்ப் பகுதியில் பெரும் பிரச்னையாக உள்ளது. திருவாரூர் பழைய பேருந்து நிலையத்துக்கு வழக்கம்போல பேருந்துகள் வந்து செல்ல நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பதும் முக்கிய கோரிக்கைகளில் ஒன்றாக உள்ளது.

போட்டியிட வாய்ப்புள்ள கட்சிகள்

திருவாரூர் தொகுதியில் அதிமுக, திமுக, அமமுக, நாம் தமிழர் கட்சி, மக்கள் நீதி மய்யம் ஆகிய கட்சிகளின் சார்பில் வேட்பாளர்கள் களம் காணலாம். இருப்பினும்,  திமுக அதிமுகவுக்கு இடையில் நேரடிப் போட்டியே இருக்கும். அமமுகவின் வேட்பாளர் அறிவிப்பைப் பொருத்தே மும்முனை போட்டிக்கான முகாந்திரத்தை அறிய முடியும்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com