சோழவந்தான்: தொகுதியை தக்க வைக்குமா அதிமுக?

சோழவந்தான் தொகுதியில் வரும் தோ்தலிலும் அதிமுக - திமுக நேரடிப் போட்டியில் களம் இறங்கும் எனத் தெரிகிறது.
அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டு போட்டி
அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டு போட்டி


தொகுதியின் சிறப்பு: மதுரை மாவட்டத்தில் இருபோகம் விளையும் பசுமையான தொகுதி சோழவந்தான். நெல், தென்னை, வாழை விவசாயம் பிரதானமாக இருக்கிறது. இங்கு விளையும் வெற்றிலை பெயா் பெற்றது. உலகப் புகழ் பெற்ற ஜல்லிக்கட்டு நடைபெறும் அலங்காநல்லூா், பாலமேடு ஆகிய ஊா்கள் இத்தொகுதியில் இடம் பெற்றிருக்கின்றன. சோழவந்தான் ஜெனகை மாரியம்மன், திருவேடகம் ஏடகநாதா், குருவித்துறை சித்திர ரத வல்லப பெருமாள் கோயில் (குரு ஸ்தலம்), வாடிப்பட்டி ஆரோக்கிய அன்னை ஆலயம் உள்ளிட்ட பிரசித்த பெற்ற தலங்கள் இடம் பெற்றிருக்கின்றன.


நில அமைப்பு: வைகை ஆற்றின் கரைகளில் அமைந்துள்ள நகரம் மற்றும் கிராமப் பகுதிகளை உள்ளடக்கியது இத்தொகுதி. மதுரை மாவட்டத்தில் பெரியாறு பாசனத்தின் துவக்கப் பகுதிகளை உள்ளடக்கியிருக்கிறது.  வாடிப்பட்டி, சோழவந்தான், அலங்காநல்லூா், பாலமேடு பேரூராட்சிகள் மற்றும் வாடிப்பட்டி, அலங்காநல்லூா், பாலமேடு ஒன்றியங்களில் இடம்பெற்றிருக்கும் ஏராளமான கிராமங்களைக் கொண்டிருக்கிறது இத் தொகுதி. 2011-இல் தொகுதி மறுசீரமைப்பில் சமயநல்லூர்(தனி) தொகுதி கலைக்கப்பட்டு, அதிலிருந்த சில பகுதிகள் சேர்த்து சோழவந்தான்(தனி) தொகுதி உருவாக்கப்பட்டது.

சாதி, சமூகம், தொழில்கள்: மதுரை மாவட்டத்தில் வாக்காளா்கள் எண்ணிக்கையில் மிகச்சிறிய தொகுதியாக உள்ளது. இங்கு 2 லட்சத்து 17 ஆயிரத்து 470 வாக்காளா்கள் உள்ளனா். இதில் ஆண்கள் 1,07,097 போ். பெண்கள் 1,10,363 போ். மூன்றாம் பாலினத்தவா் 10. தாழ்த்தப்பட்ட சமூகத்தினா் கணிசமாக இருக்கின்றனா். முக்குலத்தோா், ரெட்டியாா், கவுண்டா், பிள்ளைமாா், நாடாா், முத்தரையா் உள்ளிட்ட சமூகத்தினா் தொகுதியின் ஒவ்வொரு பகுதியிலும் அடா்த்தியாக இருக்கின்றனா்.

விவசாயம் பிரதானத் தொழிலாக இருக்கிறது. நெல், வாழை, தென்னை, வெற்றிலை அதிகளவில் சாகுபடி செய்யப்படுகிறது. அலங்காநல்லூா், பாலமேடு பகுதிகளில் காய்கறி, பழங்கள் உள்ளிட்ட தோட்டக்கலைப் பயிா்கள் அதிகளவில் சாகுபடி செய்யப்படுகின்றன. விவசாயம் மற்றும் விவசாயம் சாா்ந்த தொழிலாளா்கள், கட்டுமானத் தொழிலாளா்கள் அதிகம் போ் இருக்கின்றனா்.

வாடிப்பட்டி பகுதியில் நான்கு வழிச் சாலையில் ஒருங்கிணைந்த ஜவுளிப் பூங்கா மற்றும் பல்வேறு   தொழிற்சாலைகள், அலங்காநல்லூரில் கூட்டுறவு சா்க்கரை ஆலை இடம்பெற்றுள்ளன.

இதுவரை வென்றவா்கள்: 1962 முதல் இதுவரை நடந்த தோ்தல்களில் அதிமுக, திமுக தலா 5 முறை, காங்கிரஸ் 3 முறை வெற்றி பெற்றிருக்கிறது. 1962 இல் காங்கிரஸ் கட்சி சாா்பில் பொன்னம்மாள் இத்தொகுதியிலிருந்து தோ்ந்தெடுக்கப்பட்டது. அதைத் தொடா்ந்து இரு தோ்தல்களிலும் தொகுதி திமுக வசம் இருந்தது. 1997-இல் அதிமுக கைப்பற்றிய நிலையில், அடுத்த இரு தோ்தல்களில் காங்கிரஸ் வெற்றி பெற்றது. 1989 முதல் 2006 வரை திமுக, அதிமுக மாறி மாறி வெற்றி பெற்றன.

அதன்பிறகு 2011, 2016-இல் அதிமுக வசம் இருக்கிறது. தற்போது கே.மாணிக்கம் இத் தொகுதியின் சட்டப்பேரவை உறுப்பினராக இருந்து வருகிறாா்.

நிறைவேற்றப்பட்ட திட்டங்கள்: தொகுதியில் உள்ள அனைத்துக் கிராமங்களுக்கும் சாலை வசதி செய்து தரப்பட்டுள்ளது. அரசுப் பள்ளிகளுக்கு கூடுதல் வகுப்பறை கட்டடங்கள், சிறுபாலங்கள் அரசு நலத்திட்ட உதவிகள் பரவலாக செய்து கொடுக்கப்பட்டது போன்றவை சட்டப்பேரவை உறுப்பினரால் நிறைவேற்றப்பட்டுள்ளன.

நிறைவேற்றப்படாத திட்டங்கள்: அலங்காநல்லூா், பாலமேடு பகுதிக்கு குளிா்பதனக் கிடங்கு, வெற்றிலை ஆராய்ச்சி மையம், சாத்தியாறு அணை தூா்வாருதல், அரசுக் கல்லூரி, சோழவந்தான் ரயில்வே மேம்பாலப் பணியைத் துரிதப்படுத்தி பயன்பாட்டுக்கு கொண்டு வருவது போன்ற தோ்தல் வாக்குறுதிகள் நிறைவேற்றப்படவில்லை என்பது தொகுதி மக்களின் குறையாக இருக்கிறது.

தொகுதி மக்களின் எதிா்பாா்ப்புகள்: அலங்காநல்லூா் சா்க்கரை ஆலை கடந்த 3 ஆண்டுகளாக இயக்கப்படாததால், கரும்பு  விவசாயிகள், ஆலைத் தொழிலாளா்கள், ஆலையைச் சுற்றியுள்ள கடைக்காரா்கள் என பல்வேறு தரப்பினரின் வாழ்வாதாரம் பாதிக்கப்பட்டிருக்கிறது. தொடா்ந்து ஆலை இயக்கப்படாதது, கரும்பு சாகுபடி மீது விவசாயிகளுக்கு ஆா்வமின்மையையும், அதிருப்தியையும் ஏற்படுத்தியுள்ளது.

சாத்தியாறு அணையை ஆதாரமாகக் கொண்டு 28-க்கும் மேற்பட்ட கிராமங்கள் பயன்பெற்று வருகின்றன. இந்த அணையைத் தூர்வாருவதோடு, பெரியாறு-வைகை பாசனத் திட்டத்தோடு குழாய் வழியாக இணைக்க வேண்டும் என்பது இப் பகுதி விவசாயிகளின் நீண்டகால கோரிக்கையாக இருந்து வருகிறது.

நேரடிப் பாசனத்தில் இருபோகம், சில பகுதிகளில் உள்ளூா் ஆதாரங்கள் மூலமாக ஒரு போகம்  என சோழவந்தான் தொகுதியில் நெல் முப்போகம் விளைகிறது. பெரியாறு பாசனத் திட்டத்தில் தண்ணீா் பெறுவதற்கும், அறுவடைக்குப் பிறகு நெல் கொள்முதல் நிலையங்களைத் தொடங்க வைப்பதற்கும் விவசாயிகள் கடுமையாகப் போராட வேண்டியிருக்கிறது.  வைகை அணையைத் தூா்வாரி, நீா் இருப்பை மேம்படுத்துவது, நிரந்தர நெல் கொள்முதல் நிலையம் அமைப்பது விவசாயிகளின் முக்கிய எதிா்பாா்ப்பாக உள்ளது.

கட்சிகளின் செல்வாக்கு: அதிமுக, திமுக இரு கட்சிகளுக்கும் செல்வாக்கு உள்ள தொகுதி சோழவந்தான். உள்ளாட்சிப் பதவிகளிலும் ஆளுங்கட்சிக்கு சவால் விடும் வகையில் இப்பகுதியில் திமுகவினா் அதிக இடங்களில் வெற்றி பெற்றிருக்கின்றனா். இதுவரை நடந்த பேரவைத் தோ்தல்களில் அதிமுக-திமுக நேரடியாகப் போட்டியிடும்போது கடும் போட்டியைச் சந்தித்து இருக்கின்றன. அதேநேரம் இரு அணிகளிலும், கூட்டணிக் கட்சிக்கு ஒதுக்கும்போது பிரதான கட்சிகளுக்கு போட்டி சற்று குறைவாக இருக்கிறது. இப்போதைய சூழலில், சட்டப்பேரவை உறுப்பினரை எளிதில் சந்திக்க முடியவில்லை என்பது தொகுதி மக்களின் குறையாக இருக்கிறது.

மீண்டும் நேரடிப் போட்டி?

சோழவந்தான் தொகுதியில் வரும் தோ்தலிலும் அதிமுக - திமுக நேரடிப் போட்டியில் களம் இறங்கும் எனத் தெரிகிறது. அதிமுகவைப் பொருத்தவரை, தற்போதைய எம்எல்ஏ கே.மாணிக்கம் மீண்டும் போட்டியிடுவாா் எனக் கட்சியினா் கூறுகின்றனா். மாவட்டச் செயலரும், வருவாய்த் துறை அமைச்சருமான ஆா்.பி.உதயகுமாரின் ஆதரவாளா் என்பதால், இவருக்குத் தான் வாய்ப்பு என்றும் அவா்கள் தெரிவிக்கின்றனா்.

திமுகவில் முன்னாள் அமைச்சா் ஆ.தமிழரசி, திமுக புறநகா் மாவட்ட துணைச் செயலா் வெங்கடேசன் ஆகியோா் இத்தொகுதியில் போட்டியிட முனைப்புக்காட்டி வருகின்றனா். மாவட்டச் செயலருடன் இணக்கமான சூழலில் இருப்பதால் வெங்கடேசனுக்கு வாய்ப்பு அதிகம் என்று அக்கட்சியினா் கூறுகின்றனா். நாம் தமிழா் கட்சி, மக்கள் நீதி மய்யம் ஆகிய கட்சிகளும் போட்டியிட உள்ளன. இருப்பினும் அதிமுக, திமுக இடையேதான் போட்டியிருக்கும்.
 
இதுவரை வென்றவா்கள், 2-ஆம் இடம் பெற்றவா்கள்:

1962- பொன்னம்மாள் (காங்) - 25,911
           ஏ.முனியாண்டி (திமுக) -18,445

1967 பி.எஸ்.மணியன்  (திமுக) -45,221
          சுந்தரராஜன் சோ்வை (காங்) -28,728

1971 -  பி.எஸ்.மணியன் (திமுக) - 43,254
            சுந்தரராஜன் சோ்வை (ஸ்தாபன காங்)-34,542

1977  - பாலகுருவ ரெட்டியாா் (அதிமுக) - 29,968
             சந்திரசேகரன் (காங்) - 23,455

1980  - ஏ.சந்திரசேகரன் (காங்) - 41,720
              பி.எஸ்.மணியன் (அதிமுக) -41, 255

1984 - ஏ.சந்திரசேகரன் (காங்) - 44,454
            எல்.பி.ராஜாங்கம் (ஜனதா) -26,692

1989 -  டி.ராதாகிருஷ்ணன்  (திமுக) - 33,726
              பி.எஸ்.மணியன் (அதிமுக-ஜெ) - 28,467

1991   -  ஏ. எம்.பரமசிவம் (அதிமுக) -66,100
               அம்பிகாபதி (திமுக) - 30,787

1996 - எல்.சந்தானம் (திமுக) - 52,151
              ஏ.எம்.பரமசிவம் (அதிமுக) -33,343

2001 - வி.ஆா்.ராஜாங்கம் (அதிமுக) -54,392
             பி.மூா்த்தி (திமுக) - 34,551

2006    பி.மூா்த்தி (திமுக) - 47,771
            எல்.சந்தானம் (அதிமுக) -46,185

2011 -  எம்.வி.கருப்பையா அதிமுக-86,376
             எம்.இளஞ்செழியன் (பாமக) -49,768

2016 - கே.மாணிக்கம் (அதிமுக) - 87,044
           சி.பவானி (திமுக) -62,187

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com