ஸ்ரீவைகுண்டம்: திமுக கூட்டணியில் காங்கிரஸ் போட்டியிட வாய்ப்பு

திமுக கூட்டணியில் இத்தொகுதி காங்கிரஸுக்கு ஒதுக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது. அப்படி ஒதுக்கப்பட்டால் முன்னாள் எம்எல்ஏ ஊர்வசி செல்வராஜின் மகன் அமிர்தராஜ் வேட்பாளராக களமிறங்குவார். 
ஸ்ரீவைகுண்டம் அணை
ஸ்ரீவைகுண்டம் அணை

வேலைவாய்ப்புக்கான தொழிற்சாலைகள் ஏதும் இல்லாத நிலையில் விவசாயத்தை மட்டுமே வாழ்வாதாரமாகக் கொண்டது  ஸ்ரீவைகுண்டம் சட்டப்பேரவைத் தொகுதி. ஸ்ரீவைகுண்டம், ஏரல், சாத்தான்குளம் ஆகிய 3 வட்டங்களை உள்ளடக்கியது.

கடந்த தேர்தல்களில் வென்றவர்கள்

இந்தத் தொகுதியில் கடந்த 1957 ஆம் ஆண்டு நடைபெற்ற பொதுத்தேர்தலில் காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த ஏபிசி வீரபாகு வெற்றி பெற்றார். தொடர்ந்து 1962 தேர்தலிலும் அவர் வெற்றி பெற்றார்.

அதன்பிறகு 1967 மற்றும் 1971 ஆம் ஆண்டுகளில் நடைபெற்ற தேர்தலில் திமுகவைச் சேர்ந்த சி.பா.ஆதித்தனார் வெற்றி பெற்று அமைச்சர் ஆகினார். 1977 ஆம் ஆண்டு அதிமுகவைச் சேர்ந்த சாது செல்வராஜுயும், 1980 ஆம் ஆண்டு அதிமுகவைச் சேர்ந்த ராமசுப்பிரமணியனும் வெற்றி பெற்றனர்.

அதன்பிறகு 1984 ஆம் ஆண்டு, 1989 ஆம் ஆண்டு, 1991 ஆம் ஆண்டு ஆகிய தேர்தல்களில் காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த எஸ். டேனியல் ராஜ் வெற்றி பெற்றார். பின்னர், 1996 ஆம் ஆண்டு திமுகவைச் சேர்ந்த டேவிட் செல்வினும், 2001 ஆம் ஆண்டு அதிமுகவைச் சேர்ந்த எஸ்.பி. சண்முகநாதனும் வெற்றி பெற்றனர். அப்போது, சில மாதங்கள் சண்முகநாதன் அமைச்சராக இருந்தார்.
அதன்பிறகு 2006 ஆம் ஆண்டு தேர்தலில் காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த ஊர்வசி செல்வராஜ் வெற்றி பெற்றார். அவர் மறைவைத் தொடர்ந்து 2009 ஆம் ஆண்டு நடைபெற்ற இடைத்தேர்தலில் காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த எஸ். சுடலையாண்டி வெற்றி பெற்றார்.

அதன்பிறகு 2011 ஆம் ஆண்டு, 2016 ஆம் ஆண்டு ஆகிய தேர்தல்களில் அதிமுகவைச் சேர்ந்த எஸ்.பி. சண்முகநாதன் வெற்றி பெற்றார். தற்போது தூத்துக்குடி தெற்கு மாவட்ட அதிமுக செயலராக உள்ள எஸ்.பி. சண்முகநாதனே மீண்டும் அதிமுக சார்பில் களம் காணுகிறார். 

நிறைவேற்றப்பட்டதும் நிறைவேற்றப்படாததும்

தேர்தல் வாக்குறுதியில் தெரிவித்தபடி தாமிரவருணி ஆற்றின் குறுக்கே கொங்கராயகுறிச்சி, கருங்குளம் இடையே உயர்மட்ட பாலம், ஏரல் பகுதியில் தாமிரவருணி ஆற்றின் குறுக்கே உயர்மட்ட பாலம் அமைக்கும் பணி, சாத்தான்குளம் வட்டத்துக்குள்பட்ட பெரியதாழையில் தூண்டில் வளைவு அமைக்கும் பணி உள்ளிட்ட பொது மக்களின் நீண்ட கால கோரிக்கைகள் நிறைவேற்றப்பட்டுள்ளன.

மேலும், ஸ்ரீவைகுண்டம் வட்டத்துக்குள்பட்ட பகுதியாக இருந்த ஏரல் தனி வட்டமாக தரம் உயர்த்தப்பட்டுள்ளது அப்பகுதி மக்களிடையே வரவேற்பை பெற்றுள்ளது.

ஆனால், ஸ்ரீவைகுண்டத்தில் 25 ஆண்டுகளுக்கு முன்பு செயல்பட்டு வந்த வாரச்சந்தை மீண்டும் தொடங்கப்பட வேண்டும் என்ற மக்களின் நீண்ட கால கோரிக்கை இதுவரை நிறைவேற்றப்படாமல் உள்ளது.

அரசியல் நிலவரம்

திமுக கூட்டணியில் இந்தத் தொகுதி காங்கிரஸ் கட்சிக்கு ஒதுக்கப்படும் என எதிர்பார்ப்பு நிலவுகிறது. அப்படி ஒதுக்கப்பட்டால் சட்டப்பேரவை முன்னாள் உறுப்பினர் ஊர்வசி செல்வராஜின் மகன் அமிர்தராஜ் வேட்பாளராக களம் இறங்கத் தயாராகி வருகிறார். 

திமுகவுக்கு இந்தத் தொகுதி ஒதுக்கப்பட்டால் இளைஞரணி மாநில துணைச் செயலர் எஸ். ஜோயல், மக்களவை முன்னாள் உறுப்பினர் எஸ்.ஆர். ஜெயதுரை ஆகிய இருவரில் ஒருவருக்கு வாய்ப்பு கிடைக்கும். அமமுக சார்பில் கடந்த மக்களவைத் தேர்தலில் போட்டியிட்டு வெற்றி வாய்ப்பை இழந்த புவனேஸ்வரன் அல்லது மாவட்ட விவசாய அணி செயலராக உள்ள உதயசூரியனுக்கு வாய்ப்பு கிடைக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

வாக்காளர்கள் எண்ணிக்கை: ஸ்ரீவைகுண்டம் பேரவைத் தொகுதியில் ஒரு லட்சத்து 10 ஆயிரத்து 132 ஆண் வாக்காளர்களும், ஒரு லட்சத்து 13 ஆயிரத்து 622 பெண் வாக்காளர்களும் 10 திருநங்கைகளும் என மொத்தம் 2 லட்சத்து 23 ஆயிரத்து 764 வாக்காளர்கள் உள்ளனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com