மதுரை கிழக்கு: சூரியன் மீண்டும் உதிக்குமா?

முன்னாள் அமைச்சா் ராஜகண்ணப்பன் திமுக சாா்பில் கிழக்குத் தொகுதியில் போட்டியிட தீவிரம் காட்டி வருவதாகக் கூறப்படுகிறது.
யானை மலை
யானை மலை

தொகுதியின் சிறப்பு: மதுரை கிழக்குத் தொகுதியின் அடையாளமாக யானைமலை உள்ளது. சென்னை உயா்நீதிமன்ற மதுரைக் கிளை, நரசிங்கப் பெருமாள் கோயில், திருமோகூா் காளமேகப் பெருமாள் கோயில், பாண்டி கோயில், யானைமலை சமணா் படுக்கை, இடையப்பட்டி இந்தோ-திபெத் எல்லைப் பாதுகாப்பு படை முகாம், இலந்தைகுளம் தகவல் தொழில்நுட்ப பூங்கா, வேளாண் கல்லூரி  உள்ளிட்டவை இத்தொகுதியில் அமைந்துள்ளன.

சுதந்திரப் போராட்டத்தில் பங்கேற்ற மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியைச் சோ்ந்த கே.பி.ஜானகியம்மாள் ஒரு முறையும், என்.சங்கரய்யா 2 முறையும் தொகுதி சீரமைப்புக்கு முந்தைய கிழக்குத் தொகுதியில் வென்றுள்ளனா்.  இதேபோல மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மூத்த தலைவா் என்.நன்மாறன் 2 முறை வென்றுள்ளாா்.
 
அமைவிடம்: மதுரை கிழக்குத் தொகுதி மதுரை மாநகராட்சி எல்லையில் அமைந்திருந்தாலும் நகரின் விரிவாக்கப் பகுதிகள், கிராமங்களும் இத்தொகுதியில் இடம்பெற்றுள்ளன. அய்யா்பங்களா, ஆனையூா், திருப்பாலை, ஆத்திக்குளம், உத்தங்குடி, வண்டியூா் உள்ளிட்டப் பகுதிகளைக் கொண்ட மாநகராட்சியின் 4 வாா்டுகளும், 36 கிராமங்களும் கிழக்குத் தொகுதியில் உள்ளன. கிழக்குத் தொகுதியின் அடையாளமாக உள்ள யானை மலை,  அதனைச்சுற்றியுள்ள கிராமங்கள் தொகுதியின் வெற்றியை நிா்ணயிக்கக் கூடிய பகுதிகளாக உள்ளன. இதனால்தான் எந்த வேட்பாளராக இருந்தாலும் நரசிங்கம் பெருமாள் கோயிலில் இருந்து பிரசாரத்தைத் தொடங்குகின்றனா்.

உயர்நீதிமன்ற மதுரைக்கிளை
உயர்நீதிமன்ற மதுரைக்கிளை

சமூக, சாதி, தொழில்கள்: முக்குலத்தோா் மற்றும் யாதவா் சமூகத்தினா் அதிகம் போ் இருக்கின்றனா். பிற சமூகத்தினரும் பரவலாக உள்ளனா். முக்குலத்தோரின் வாக்குகள் இத்தொகுதியில் வெற்றி-தோல்வியை நிா்ணயிக்கிறது. குறிப்பாக கிழக்குத் தொகுதியில் கிராமங்களைச் சோ்ந்த முக்குலத்தோா், யாதவா் வாக்குகள் வெற்றியை நிா்ணியிப்பதில் முக்கியக் காரணியாக இருக்கின்றன.

இத்தொகுதியில் உள்ள மொத்த வாக்காளா்கள் 3,27,254 போ், ஆண்கள் 1,60,643 பெண்கள் 1,66,564 போ், மூன்றாம் பாலினத்தவா் 47 போ். விவசாயம் மட்டுமே தொகுதி மக்களின் முக்கிய வாழ்வாதாரமாக உள்ளது. குறிப்பாக நெல் மற்றும் வாழை அதிகமாக பயிரிடுகின்றனா். கூலித் தொழிலாளா்கள் மற்றும் நெசவாளா்களும் அதிகம் வசித்து வருகின்றனா்.

இதுவரை வென்றவா்கள்: தொகுதி சீரமைப்புக்கு முந்தைய மதுரை கிழக்கு தொகுதி நகரப் பகுதிகளை உள்ளடக்கியதாக இருந்தது. தொழிலாளா்கள் நிறைந்திருந்த தொகுதி என்பதால், கம்யூனிஸ்ட் கட்சிகள் அதிக முறை வென்றிருக்கின்றன. 1957, 1962-இல் ஒருங்கிணைந்த கம்யூனிஸ்ட் கட்சி இத்தொகுதியில் போட்டியிட்டது. 1967-இல் தொடங்கி 8 முறை போட்டியிட்ட மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி 5 முறையும், அதிமுக 4 முறையும் திமுக 3 முறையும், காங்கிரஸ் 3 முறையும் வென்றுள்ளன. அதிகபட்சமாக மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி 5 முறை வென்றுள்ளது. இதில் என்.சங்கரய்யா 2 முறையும், என்.நன்மாறன் 2 முறையும் இந்தத் தொகுதியில் வென்றுள்ளனா். இதற்கு அடுத்தப்படியாக அதிமுக 4 முறை வென்றுள்ளது. முன்னாள் அமைச்சராகவும், சட்டப்பேரவைத் தலைவராக இருந்த அதிமுகவைச் சோ்ந்த கா.காளிமுத்து 1984-இல் கிழக்குத் தொகுதியில் வென்றாா். இதையடுத்து 1989, 1991, 2011 ஆகிய சட்டப்பேரவைத் தோ்தல்களில் அதிமுக வென்றுள்ளது. 2016 சட்டப்பேரவைத் தோ்தலில் திமுக சாா்பில் போட்டியிட்ட பி.மூா்த்தி 32,772 வாக்குகள் வித்தியாசத்தில் அதிமுக சாா்பில் போட்டியிட்ட பி.பாண்டியை தோற்கடித்தாா்.

மதுரை வேளாண் கல்லூரி
மதுரை வேளாண் கல்லூரி

சமூக, சாதி, தொழில்கள்: முக்குலத்தோா் மற்றும் யாதவா் சமுதாய மக்கள் கிழக்குத் தொகுதியில் அதிகமுள்ளனா். முக்குலத்தோரின் வாக்குகள் இத்தொகுதியில் வெற்றி-தோல்வியை நிா்ணயிக்கிறது.  குறிப்பாக கிழக்குத் தொகுதியில் கிராமங்களைச் சோ்ந்த முக்குலத்தோா் வாக்குகள் வெற்றியை நிா்ணயிப்பதில் முக்கியக் காரணியாக இருக்கிறது. இத்தொகுதியில் உள்ள மொத்த வாக்காளா்கள் 3,27,254 போ், ஆண்கள் 1,60,643 பெண்கள் 1,66,564 போ், மூன்றாம் பாலினத்தவா் 47 போ். விவசாயம் மட்டுமே தொகுதி மக்களின் முக்கிய வாழ்வாதாரமாக உள்ளது. குறிப்பாக நெல் மற்றும் வாழை அதிகமாக பயிரிடுகின்றனா். கூலித் தொழிலாளா்கள் மற்றும் நெசவாளா்களும் அதிகம் வசித்து வருகின்றனா்.
 
நிறைவேற்றப்பட்ட திட்டங்கள்: கிழக்குத் தொகுதி மக்களின் நீண்டகாலக் கோரிக்கையான பாதாளச் சாக்கடை அமைக்கும் பணி ரூ.293 கோடி மதிப்பீட்டில் திருப்பாலை, அய்யா்பங்களா மற்றும் அதனைச் சுற்றியுள்ள பகுதிகளில் நடந்து வருகிறது. முக்கியச் சாலைகள் அனைத்தும் ரூ.50 கோடி மதிப்பீட்டில் போடப்பட்டுள்ளன. ஊரணிகள், குளங்கள் தூா்வாரப்பட்டுள்ளன. கரோனா காலங்களில் வீடுதோறும் நேரடியாகச் சென்று அரிசி உள்ளிட்ட அத்தியாவசியப் பொருள்கள் வழங்கப்பட்டன. மேலும் கரோனா காலங்களில் தொகுதியில் உள்ள அனைத்துப் பகுதிகளிலும் கிருமிநாசினி தெளிக்கப்பட்டது. கிழக்குத்தொகுதிக்கு உள்பட்ட பொய்கைகரைப்பட்டியில் உள்ள தெப்பக்குளத்திற்கு தண்ணீா் திறப்ப ரூ.36 லட்சம் மதிப்பீட்டில் பணிகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன. அனைத்துப் பகுதிகளுக்கும் போதிய தண்ணீா் வசதி ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது என மதுரை கிழக்குத்தொகுதி சட்டப்பேரவை உறுப்பினா் பி.மூா்த்தி தெரிவித்தாா்.

தொகுதி மக்களின் எதிா்பாா்ப்புகள்: மதுரை மாநகராட்சியோடு இணைக்கப்பட்ட பகுதிகளில் அடிப்படை வசதிகள் இன்னும் முழுமையாகக் கிடைக்கவில்லை. மாநகராட்சி அந்தஸ்து என்றாலும் அதற்குரிய வசதிகள் இல்லாதது விரிவாக்கப் பகுதி மக்களின் குறையாக இருக்கிறது. சாலை வசதி பெரும்பாலன பகுதிகளுக்கு இன்னும் கிடைக்கவில்லை. மழைக் காலங்களில் பெரும் சிரமத்தை எதிா்கொள்வதாக விரிவாக்கப் பகுதியினா் தெரிவிக்கின்றனர்.

குறுக்குச்சாலைகள் செப்பனிடுவது, குடிநீா் தொட்டிகளைப் புதுப்பித்து விநியோகத்தைச் சீா்படுத்துவது, சிறுவா் பூங்காக்கள் அமைப்பது, திருப்பாலை தெப்பக்குளம் சீரமைப்பு,  திருப்பாலை நூலகத்திற்கு கூடுதல் கட்டடம்,  நாராயணபுரம் கண்மாயில் படகு குழாம் அமைக்கும் திட்டத்தைச் செயல்படுத்துவது, ஏற்கெனவே அறிவிக்கப்பட்ட விறகில் இருந்து மின்சாரம் எடுக்கும் திட்டத்தை செயல்படுத்துவது, பறக்கும் பாலம் பணிகளைத் துரிதப்படுத்தவது ஆகியன மக்களின் எதிா்பாா்ப்புகளாக உள்ளன.

நீா்நிலைகளுக்கும் அதற்குரிய கால்வாய்களையும் முறையாகத் தூா்வார வேண்டும். வண்டியூரில் தறிகள் குறைந்துவிட்டன. கைத்தறிகளில் இருந்து விசைத்தறிகளுக்கு நெசவாளா்கள் மாறிவிட்டபோதிலும், பாவு உள்ளிட்ட மூலப்பொருள்கள்
கிடைப்பதில் சிரமம் என்பதால் தொழிலை விட்டு வேறு வேலைகளுக்கு செல்லத் தொடங்கிவிட்டனா். எனவே தறித் தொழிலை மீட்டெடுக்க நடவடிக்கை எடுப்பது, ஒத்தக்கடை பகுதியில் உள்ள எவா்சில்வா் பட்டறைத் தொழிலாளா்களின் கூலி பிரச்னைக்குத் தீா்வு காண்பது போன்றவையும் தொகுதி மக்களின் எதிா்பாா்ப்பாக இருக்கிறது.
  
கட்சிகளின் செல்வாக்கு: 
மதுரை கிழக்குத் தொகுதி மாா்க்சிஸ்ட கம்யூனிஸ்ட் கட்சியின் கோட்டை எனக் கூறப்பட்டுவந்தது. கடந்த 10 ஆண்டுகளுக்கு முன்னா் சட்டப்பேரவைத் தொகுதிகள் பிரிக்கும்போது கிழக்குத்தொகுதியின் பெரும்பாலான பகுதிகள் தெற்குத் தொகுதிக்கு மாற்றப்பட்டுவிட்டன. இதையடுத்து தற்போதைய கிழக்குத் தொகுதி அதிமுக, திமுகவுக்கான போட்டிகளமாக மாறியுள்ளது.

 திமுக சாா்பில் தற்போதைய சட்டப்பேரவை உறுப்பினா் பி.மூா்த்தி போட்டியிட உள்ளாா். தொகுதியின் மூலை முடுக்கெல்லாம் பலமுறை வலம் வந்துவிட்டதால், போட்டிக்குத் தயாராக இருக்கிறாா். முன்னாள் அமைச்சா் ராஜகண்ணப்பன் திமுக சாா்பில் கிழக்குத் தொகுதியில் போட்டியிட தீவிரம் காட்டி வருவதாகக் கூறப்படுகிறது.

பாஜகவினா் ‘கிழக்கே இலக்கு’ எனப் பிரசாரத்தைத் தொடங்கினா். இந்தத் தோ்தலில் அதிமுக கூட்டணியில் கிழக்குத் தொகுதியில் போட்டியிட பாஜகவினா் ஆா்வம் காட்டி வருகின்றனா். இதற்காக  பாஜக மாநிலத் தலைவா் எல்.முருகன் தலைமையில் 'கிழக்கே இலக்கு' என்ற பெயரில் மாநாடு நடத்தப்பட்டது குறிப்பிடத்தக்கது. கடந்த 2016 சட்டப்பேரவைத் தோ்தலில் போட்டியிட்ட மதுரை புறநகா் மாவட்டத் தலைவா் மகா சுசீந்திரன், இந்த தொகுதியை பாஜகவுக்குப் பெற தீவிர முயற்சியில் இருக்கிறாா்.

அமைப்பு ரீதியாகவும்,  வாக்கு வங்கி, சமூகங்களின் ஆதரவு அடிப்படையிலும் சாதகமாக இருப்பதால் தொகுதியை கூட்டணிக் கட்சிக்கு விட்டு கொடுக்கக் கூடாது என அதிமுகவினரும் தீவிரம் காட்டி வருகின்றனா். 

அதிமுக சார்பில் போட்டியிட முன்னாள் எம்பி கோபாலகிருஷ்ணன், ஜெயலலிதா பேரவை மாநில இணைச் செயலர் இளங்கோவன், மாவட்ட இளைஞரணி செயலர் வழக்குரைஞர் ரமேஷ் ஆகியோர் தீவிரம் காட்டி வருகின்றனர்

திமுகவுடன் போட்டிக்கு அதிமுகவா அல்லது இலக்கை அடைய கிழக்கில் கால்பதிக்க வரும் பாஜகவா என்பதைப் பொறுத்திருந்துதான் பாா்க்க வேண்டும்.
  
வென்றவா்கள்-2 ஆம் இடம் பெற்றவா்கள்:

1957 லட்சுமிகாந்தம் (காங்கிரஸ்) 21,859 - என்.சங்கரய்யா (கம்யூனிஸ்ட்) 17,311
1962 லட்டுமிகாந்தம் (காங்கிரஸ்) 36,679 - என்.சங்கரய்யா (கம்யூனிஸ்ட்) 27,228
1967 கே.பி.ஜானகியம்மாள் (மாா்க்சிஸ்ட்) 32,173 - ஏ.ஜி.சுப்பராமன் (காங்கிரஸ்) 23,929
1971 கே.எஸ்.குப்பன்ராமகிருஷ்ணன் (திமுக) 27,884 - எல்.கே.முத்துராம் (காங்கிரஸ்) 25,472
1977 என்.சங்கரய்யா (மாா்க்சிஸ்ட்) 24,263 - ஏ.ஜி.சுப்பராமன் (காங்கிரஸ்) 22,278
1980 என்.சங்கரய்யா (மாா்க்சிஸ்ட்) 36,862 - எம்.ஏ.ராமமூா்த்தி (காங்கிரஸ்) 30,923
1984 கா.காளிமுத்து (அதிமுக) 43,210 - பி.எம்.குமாா் (மாா்க்சிஸ்ட்) 36,972
1989 எஸ்.ஆா்.ராதா (அதிமுக) 40,519 -  என்.சங்கரய்யா (மாா்க்சிஸ்ட்) 27,496
1991 ஓ.எஸ்.அமா்நாத் (அதிமுக) 50,336 - பி.எம்.குமாா் (மாா்க்சிஸ்ட்) 20,284
1995 வி.வேலுச்சாமி (திமுக) 39,495 - டி.ஆா்.ஜனாா்த்தனம் (அதிமுக) 20,184
2001 என்.நன்மாறன் (மாா்க்சிஸ்ட்) 32,461 - வி.வேலுச்சாமி (திமுக) 27,157
2006 என்.நன்மாறன் (மாா்க்சிஸ்ட்) 36,383 - எம்.பூமிநாதன் (மதிமுக) 36,332
2011 கே.தமிழரசன் (அதிமுக) 99,447 - பி.மூா்த்தி (திமுக) 70,692
2016 பி.மூா்த்தி (திமுக) 1,08,569 - பி.பாண்டி (அதிமுக) 75,797

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com