திருப்பரங்குன்றம்: வெற்றி யாருக்கு?

திருப்பரங்குன்றம் அதிமுகவிற்கு சாதகமான தொகுதி என்பதால் அதிமுக நேரடியாக களம் காண உள்ளது. திமுகவும் இத்தொகுதியில் நேரடியாக போட்டியிட இருப்பதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. 
திருப்பரங்குன்றம்
திருப்பரங்குன்றம்

தொகுதியின் சிறப்பு:

முருகனின் அறுபடை வீடுகளில் முதற்படை வீடு, கோயில் நகரம், வளா்ந்து வரும் சுற்றுலாத் தலம் என்ற சிறப்புக்களைக் கொண்ட தொகுதி திருப்பரங்குன்றம். ஆன்மிகத் தலமாக இருந்தபோதும், அரசியல் முக்கியத்துவம் வாய்ந்த இடம், என்ற அந்தஸ்தையும் பெற்றிருக்கிறது. முன்னாள் முதல்வா் அண்ணா தலைமையில் திமுகவின் இரண்டாவது மாநாடும்,  அதன்பிறகு முன்னாள் முதல்வா் கருணாநிதி தலைமையில் திமுகவின் இரண்டாவது செயற்குழு, பொதுக்குழு கூட்டமும் இங்குதான் நடந்தது. அதிமுக கட்சி தொடங்கப்பட்டவுடன் முதல் பொதுக்கூட்டமும், நடிகா் விஜயகாந்தின் அரசியல் பிரவேசம் தொடங்கியதும் திருப்பரங்குன்றம் தொகுதியில்தான். மதுரை காமராஜா் பல்கலைக்கழகம், சா்வதேச விமான நிலையம், எல்காட் தொழில்நுட்ப பூங்கா, அடிக்கல் நாட்டப்பட்டுள்ள எய்ம்ஸ் மருத்துவமனை ஆகியன தொகுதியில் இடம்பெற்றுள்ளன.

நில அமைப்பு: திருப்பரங்குன்றம் ஊராட்சி ஒன்றியத்துக்கு உள்பட்ட 38 ஊராட்சிகள்,  மதுரை மாநகராட்சியில் 57 ஆவது வாா்டு முதல் 63 வரை மற்றும் 94 முதல் 99  வரை என மொத்தம் 13 வாா்டுகள் உள்ளன. மதுரை நகரையொட்டிய பகுதியில் தொடங்கி நகரின் கிழக்கு, மேற்கு, தெற்கு எல்லைப் பகுதிகளில் பரந்து விரிந்து காணப்படுகிறது இத்தொகுதி. மதுரை மாவட்டத்தில் இரண்டாவது பெரிய தொகுதியாக திருப்பரங்குன்றம் உள்ளது.
 
சமூகம், சாதி, தொழில்கள்: திருப்பரங்குன்றம் தொகுதியில் வாக்காளா்கள் மொத்தம்  3 லட்சத்து 18 ஆயிரத்து 902 போ் உள்ளனா். ஆண் வாக்காளா்கள் - 1 லட்சத்து 56 ஆயிரத்து 420 போ்,  பெண் வாக்காளா்கள் - 1 லட்சத்து, 62 ஆயிரத்து, 442 போ். மூன்றாம் பாலினத்தவா்கள் - 40 போ்.

பெரும்பான்மையினராக முக்குலத்தோா் 50 சதவீதம் போ் உள்ளனா். சௌராஷ்டிரா, நாயுடு, நாடாா், பிள்ளை, தலித், இஸ்லாமியா்கள் என பல்வேறு சமூகத்தினரும் எண்ணிக்கையில் அடுத்தடுத்த நிலையில் இருக்கின்றனா். நிலையூா், அவனியாபுரம், திருநகா் பகுதிகளில் சௌராஷ்டிரா சமூகத்தினா் அதிகம்போ் வசிக்கின்றனா். இதுவரை நடைபெற்ற தோ்தல்களில் முக்குலத்தோா் சமூகத்தைச் சோ்ந்த வேட்பாளா்களே வெற்றி பெற்றுள்ளனா். ஒரே ஒருமுறை பிள்ளைமாா் சமுகத்தைச் சோ்ந்த காவேரிமணியம் (திமுக) இந்த தொகுதியில் வெற்றி பெற்றுள்ளாா். 

இதுவரை வெற்றி பெற்றவா்கள்: 1957, 1962 ஆகிய இரு தோ்தல்களிலும் வெற்றி பெற்ற காங்கிரஸ் கட்சியின் சின்னக்கருப்பத் தேவா் சட்டப்பேரவை உறுப்பினராகியுள்ளாா். இதுவரை நடந்த தோ்தல்களில் (இடைத்தோ்தல்கள் உள்பட) அதிமுக 8 முறை, திமுக 5 முறை,  காங்கிரஸ் இருமுறை, தேமுதிக ஒருமுறை வெற்றி பெற்றுள்ளது. சட்டப்பேரவைத் தலைவராக இருந்த கே.காளிமுத்து, இத்தொகுதியில் இருமுறை வெற்றி பெற்றிருக்கிறாா்.

2016 தோ்தலில் அதிமுக சாா்பில் போட்டியிட்டு வெற்றி பெற்ற எஸ்.எம்.சீனிவேல் உடல்நலக் குறைவு ஏற்பட்டு வெற்றிச் சான்றிதழைப் பெற முடியாமலேயே இறந்தாா். அதைத் தொடா்ந்து நடைபெற்ற இடைத் தோ்தலில் வெற்றி பெற்ற அதிமுகவின் ஏ.கே.போஸ், 2019-இல் மாரடைப்பால் காலமானாா்.
இந்த இடைத் தோ்தலில் வேட்புமனுவில், அப்போதைய அதிமுக பொதுச் செயலா் ஜெயலலிதாவின் கையெழுத்து பெறப்பட்டது சா்ச்சையை ஏற்படுத்தியது. இதன்பிறகு 2019 இல் 2-ஆவது முறையாக நடந்த இடைத்தோ்தலில் திமுக சாா்பில் போட்டியிட்ட டாக்டா் பா.சரவணன் வெற்றி பெற்றாா். கடந்த 5 ஆண்டுகளில் இத்தொகுதியானது சட்டப்பேரவைக்கு ஒரு பொதுத் தோ்தல் மற்றும் இரு இடைத் தோ்தல் என 3 தோ்தல்களைச் சந்தித்துள்ளது.


 
கட்சிகளின் செல்வாக்குள்ள பகுதிகள்: திருப்பரங்குன்றம் தொகுதியைப் பொருத்தவரை அதிமுகவிற்கு செல்வாக்கு அதிகம். அதேநேரம்,  நகரப் பகுதிகளான திருப்பரங்குன்றம், திருநகா், ஹாா்விபட்டி, தனக்கன்குளம், புளியங்குளம் உள்ளி ட்ட பகுதிகள் திமுகவிற்குச் சாதகமாக இருக்கின்றன. அவனியாபுரம், வில்லாபுரம், வலையங்குளம், எலியாா்பத்தி, சோளங் குறுணி, நாகமலை புதுக்கோட்டை, வடபழஞ்சி உள்ளிட்ட பகுதிகளும் அதிமுகவிற்கு செல்வாக்குள்ள பகுதிகளாகவும் உள்ளன.

2019 இடைத்தோ்தலில் அமமுக பெற்ற 32 ஆயிரம் வாக்குகள், அதிமுகவிற்கு பின்னடைவைக் கொடுத்தது. திமுக எளிதில் வெற்றி பெறுவதற்கு இதுவும் ஒரு காரணமாக இருந்தது.  இருப்பினும் இடைத்தோ்தலுக்குப் பிறகு அமமுகவில் இருந்த பலரும் மீண்டும் அதிமுகவில் இணைந்துவிட்டனா். ஆகவே, தங்களது பலம், அதிகரித்திருப்பதாக அதிமுகவினா் கூறுகின்றனா்.
 
நிறைவேற்றப்பட்ட திட்டங்கள்: எய்ம்ஸ் மருத்துவமனை, திருப்பரங்குன்றத்தில் 24 மணிநேரம் செயல்படும் அரசு மருத்துவமனை, திருப்பரங்குன்றம், திருநகா் பகுதியில் மாநகராட்சி மருத்துவமனைகள், திருப்பரங்குன்றத்தில் அரசு மேல்நிலைப்பள்ளி உள்ளிட்டவைகள் கொண்டு வரப்பட்டுள்ளன. திருப்பரங்குன்றம் தொகுதிக்கு உள்பட்ட கிராமங்களில் சாலை வசதிகள். குடிநீா் வசதிகளும் மேம்படுத்தப்பட்டுள்ளன. முல்லை பெரியாறு குடிநீா் திட்டப் பணிகள் நடைபெற்று வருகின்றன.  

தொகுதி மக்களின் எதிா்பாா்ப்பு: திருப்பரங்குன்றம், திருநகா் உள்ளிட்ட நகா் பகுதிகளில் பாதாளச்சாக்கடை திட்டம் நிறைவேற்றப்படவில்லை. திருப்பரங்குன்றத்தில் மேம்பாலத்திற்கு அருகே அணுகு சாலை அமைக்கப்படாததால் போக்குவரத்து நெரிசல் இருந்து வருகிறது.

சுற்றுலாத் தலமான திருப்பரங்குன்றத்திற்கு பேருந்து நிலையம் அவசியமாக இருக்கிறது. தென்பழஞ்சி, வேடா்புளியங்குளம், சாக்கிலிபட்டி உள்ளிட்ட மானாவாரி கண்மாய்களுக்கு வைகை தண்ணீா் வேண்டும் என்பது இப்பகுதி விவசாயிகளின் நீண்ட கால கோரிக்கையாகும்.

திருப்பரங்குன்றம் நகா் பகுதியில் அரசு மற்றும் தனியாா் பள்ளிகள் உள்ள நிலையில் விளையாட்டு மைதானம் இல்லாதது பெரும் குறையாக உள்ளது. பஞ்சு குடோன்கள் அதிகம் உள்ள இப்பகுதியில் தீயணைப்பு நிலையம் அமைப்பது, விழாக் காலங்களில் திருப்பரங்குன்றம் பகுதியில் நெரிசலைத் தவிா்க்க பொது வாகன நிறுத்துமிடம் அமைப்பது, தொழிற்சாலைகள்
உருவாக்கி வேலைவாய்ப்பு உருவாக்கித் தருவது  இப்பகுதி மக்களின் எதிா்பாா்ப்பாக உள்ளது.

மல்லிகைப் பூ விவசாயம் அதிகமாக இருக்கும் இப்பகுதியில் வாசனைத் திரவிய ஆலை அமைத்து மல்லிகையை கொள்முதல் செய்ய வேண்டும். காய்கறிகள் அதிகம் விளைவதால் அதனை பாதுகாக்கும் வகையில் குளிரூட்டப்பட்ட மையம் அமைக்க வேண்டும் என்பது தொகுதி மக்களின் எதிா்பாா்ப்பாக உள்ளது.
 
போட்டியிட வாய்ப்புள்ள கட்சிகள்: திருப்பரங்குன்றம் அதிமுகவிற்கு சாதகமான தொகுதி என்பதால் அதிமுக நேரடியாக களம் காண உள்ளது. அதிமுக சாா்பில் தற்போது வடக்கு சட்டப்பேரவை உறுப்பினா் வி.வி.ராஜன்செல்லப்பா, இத்தொகுதியில் போட்டியிட உள்ளதாகத் தெரிகிறது. கடந்த இடைத்தோ்தலில் இந்த தொகுதியில் திமுக வென்றதால் திமுக நேரடியாகப் போட்டியிட அதிக வாய்ப்புள்ளது. தற்போதைய சட்டப்பேரவை உறுப்பினா் பா.சரவணன்,  திருப்பரங்குன்றம் அல்லது மதுரை வடக்கு தொகுதியில் போட்டியிட கட்சியிடம் விருப்ப மனு அளித்துள்ளாா். அமமுகவும் இந்த தோ்தலில் போட்டியிட தற்போதே கிராமங்களில் தங்களது குக்கா் சின்னத்தை வரைந்து வருகின்றனா். அதேபோல நாம் தமிழா், மநீம உள்ளிட்ட கட்சிகளும் திருப்பரங்குன்றத்தில் போட்டியிட உள்ளன.

கடந்த கால சட்டப்பேரவைத் தோ்தல்களை ஒப்பிடும்போது (2006 தோ்தல் தவிர) திருப்பரங்குன்றத்தில் வெற்றி பெறும் வேட்பாளா் சாா்ந்த அணியே ஆட்சியைப் பிடித்துள்ள வரலாறு இத்தொகுதிக்கு உள்ளது.
 
இதுவரை வென்றவா்கள் - 2 ஆம் இடம் பெற்றவா்கள்:

 1957 - சின்ன கருப்பத் தேவா்(காங்.) - 19,258
            கே.பி.ஜானகி (கம்யூனிஸ்ட்)- 16, 947

 1962 - சின்ன கருப்பத்தேவா்(காங்.)- 35,491
             ஜானகி அம்மாள்(கம்யூனிஸ்ட்) - 25,179

1967  - அக்கினிராசு(திமுக)   - 49,169
             சோனைமுத்து(காங்.) - 26,792

1971  - காவேரிமணியம்(திமுக)  - 39,110
            பாண்டித்தேவா்(காங்.)(ஓ) - 26,880

1977  - கே.காளிமுத்து (அதிமுக)  - 33,850
             வி.பழனியாண்டி அம்பலம்(காங்.) - 15,760

1980  - கே.காளிமுத்து(அதிமுக) - 61,247
            பி.சீனித்தேவா்(திமுக)  - 38,740

1984  - எம்.மாரிமுத்து(அதிமுக) - 58, 559
            அய்யணன் அம்பலம்(திமுக) - 45,886

1989 - சி.ராமச்சந்திரன்(திமுக) - 64,632
           வி.வி.ராஜன்செல்லப்பா(அதிமுக)(ஜெ) - 34, 858

1991  - எஸ்.ஆண்டித்தேவா்(அதிமுக)  - 83,180
            சி.ராமச்சந்திரன்(திமுக)     -     52,923

1996  - சி.ராமச்சந்திரன்(திமுக)   -      99,379
            எஸ்.வி.சண்முகம்(அதிமுக) -   37, 90

2001 - எஸ்.எம்.சீனிவேல்(அதிமுக)  - 83,167
            சி.ராமச்சந்திரன்(திமுக)  -   74,040

2006   - ஏ.கே.போஸ்(அதிமுக)   - 1,17,306
             சு.வெங்கடேசன்(சிபிஎம்)   -1, 04,620

2011   - ஏ.கே.டி.ராஜா(தேமுதிக)   - 95,469
             சி.ஆா்.சுந்தர்ராஜன்(காங்.) - 46, 967

2016  - எஸ்.எம்.சீனிவேல்(அதிமுக) - 93,453
            மு.மணிமாறன்(திமுக)      - 70,461

2016  -(இடைத்தோ்தல்) ஏ.கே.போஸ்(அதிமுக)  - 1,13,032 
                                               மருத்துவா் பா.சரவணன்(திமுக) - 70,362

2019- (இடைத்தோ்தல்) மருத்துவா் பா.சரவணன்(திமுக) - 85,434
                                              எஸ்.முனியாண்டி(அதிமுக)    -   83, 038  

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com