பரமக்குடி: அதிமுகவின் இரும்புக் கோட்டையைத் தகர்க்குமா திமுக?

பரமக்குடி தொகுதியில் அதிமுக, திமுக மற்றும் கூட்டணி கட்சிகளான பாஜக, காங்கிரஸ் கட்சி சார்பில் போட்டியிட வேட்பாளர்கள் தயாராக உள்ளனர்.
பரமக்குடி ஸ்ரீ சுந்தரராஜப் பெருமாள் கோவில்
பரமக்குடி ஸ்ரீ சுந்தரராஜப் பெருமாள் கோவில்

ராமநாதபுரம் மாவட்டத்தில் உள்ள 4 சட்டப்பேரவைத் தொகுதிகளில் பரமக்குடி தனி தொகுதியில் 16 முறை நடைபெற்ற சட்டபேரவைத் தேர்தலில் அதிமுக 8 முறை வெற்றி பெற்று இத்தொகுதியை எந்த கட்சியும் வெற்றிபெற முடியாத இரும்புக் கோட்டையாக உள்ளது. இதில் வரும் 2021 சட்டப்பேரவைத் தேர்தலில் தொகுதியை கைப்பற்றுவது யார் என்பது பெரும் எதிர்பார்ப்பாக உள்ளது. 

தொகுதியின் சிறப்பு: 

இத்தொகுதியில் நெல், மிளகாய், பருத்தி, வேர்க்கடலை பயிரிடும் விவசாயிகள், கைத்தறி பட்டு நெசவுத் தொழில் செய்யும் நெசவாளர்கள், வணிகர்கள், கரிமூட்டம் தொழில் செய்வோர் என பலதரப்பட்ட மக்கள் வசித்து வருகின்றனர். கமுதக்குடியில் மத்திய அரசின் என்டைஸ் நூற்பாலையும், அச்சங்குளம் கூட்டுறவு நூற்பாலையும் 500 பேருக்கு மேல் வேலைவாய்ப்பு அளித்து வருகிறது. வைகை நீரை பாசனத்திற்காக பயன்படுத்தும் வகையில் பார்த்திபனூர் மதகணையும், 6 இடங்களில் தடுப்பணைகளும் கட்டப்பட்டுள்ளன. 2 அரசுக் கல்லூரிகள், தனியார் பொறியியல் கல்லூரி, அரசு தொழிற்பயிற்சி நிலையம் ஆகியன உள்ளன.

   பரமக்குடி அருள்மிகு முத்தாலபரமேஸ்வரி அம்பாள் ஆலயம்  
   பரமக்குடி அருள்மிகு முத்தாலபரமேஸ்வரி அம்பாள் ஆலயம்  

தொகுதியில் மக்கள் தொகையில் ஆதிதிராவிடர், முக்குலத்தோர், யாதவர், சௌராஷ்டிர சமுகத்தினர், செட்டியார் இன மக்கள் அதிகளவில் வெற்றி வேட்பாளர்களை தேர்வு செய்யும் நிலையில் உள்ளனர். கடந்த 1952 முதல் 2019 வரை 16 முறை இத்தொகுதியில் சட்டப்பேரவைத் தேர்தல் நடைபெற்றுள்ளது. பொதுத் தொகுதியாக இருந்த இத்தொகுதி கடந்த 1967 முதல் தனித்தொகுதியாக அறிவிக்கப்பட்டு தேர்தல் நடத்தப்பட்டு வருகிறது. 

கடந்த தேர்தல்களில் வெற்றி பெற்றவர்களின் விவரம்

1952 தேர்தலில் இந்திய தேசிய காங்கிரஸ் கட்சி சார்பில் கோவிந்தன் என்பவரும்,  1957 தேர்தலில் கே.ராமச்சந்திரன் சுயேட்சை வேட்பாளரும், 1962 தேர்தலில் இந்திய தேசிய காங்கிரஸ் கட்சி சார்பில் சி.சீனிவாசன் என்பவரும் வெற்றி பெற்றுள்ளனர்.

1967 இல் தனித்தொகுதியாக அறிவிக்கப்பட்ட நிலையில் அத்தேர்தலில் திமுக வேட்பாளர் டி.கே.சிறைமீட்டான் வெற்றி பெற்றார். இதனைத் தொடர்ந்து 1971 தேர்தலிலிலும் அவர் திமுக சார்பில் மீண்டும் போட்டியிட்டு 42,614 வாக்குகளுடன் வெற்றி பெற்றார்.

1977 தேர்தலில் அதிமுக வேட்பாளர் கே.உக்கிரபாண்டியன் 27,303 வாக்குகள் பெற்றும், 1980 தேர்தலில் அதிமுக வேட்பாளர் ஆர்.தவசி 43,710 வாக்குகள் பெற்றும், 1984 தேர்தலில் அதிமுக வேட்பாளர் ஆ.பாலுச்சாமி 54,401 வாக்குகள் பெற்றும், அதிமுக வேட்பாளர் டாக்டர் எஸ்.சுந்தரராஜ் 1989 தேர்தலில் 37,494 வாக்குகள் பெற்றும்,

1991 தேர்தலில் 63,577 வாக்குகள் பெற்றும் வெற்றி பெற்றனர். 1996 தேர்தலில் திமுக வேட்பாளர் உ.திசைவீரன் 44,472 வாக்குகள் பெற்றும், 2001 தேர்தலில் தமிழ் மாநில காங்கிரஸ் கட்சி வேட்பாளர் கே.வி.ஆர்.ராம்பிரபு 53,746 வாக்குகள் பெற்றும், 2006 தேர்தலில் மீண்டும் அவரே இந்திய தேசிய காங்கிரஸ் கட்சி சார்பில் 51,075 வாக்குகள் பெற்றும் வெற்றி பெற்றனர்.

பரமக்குடி நகரின் மையப்பகுதியில் அமைந்துள்ள
காந்தி சிலை

2011 தேர்தலில் அதிமுக வேட்பாளர் டாக்டர் எஸ்.சுந்தரராஜ் 86,150 வாக்குகள் பெற்றும், 2016 தேர்தலில் அதிமுக வேட்பாளர் டாக்டர் எஸ்.முத்தையா 79,254 வாக்குகள் பெற்றும் வெற்றி பெற்றனர்.

2016 பொதுத் தேர்தலில் தேர்ந்தெடுக்கப்பட்ட எஸ்.முத்தையா, ஜெயலலிதா மறைவுக்குப் பின்னர் டிடிவி தினகரன் அணிக்குச் சென்றதால் அவர் தகுதிநீக்கம் செய்யப்பட்டு இத்தொகுதியில் 2019-இல் இடைத்தேர்தல் நடைபெற்றது. இதில் அதிமுக வேட்பாளர் என்.சதன்பிரபாகர் 82,438 வாக்குகள் பெற்று வெற்றி பெற்றார். இத்தொகுதியில் 1952 முதல் நடைபெற்ற 16 சட்டப்பேரவைத் தேர்தல்களில் 8 முறை அதிமுகவும், திமுக 3 முறையும், இந்திய தேசிய காங்கிரஸ் 3 முறையும், தமிழ் மாநில காங்கிரஸ் 1 முறையும், சுயேட்சை 1 முறையும் வெற்றி பெற்றுள்ளனர்.

கடந்த 5 ஆண்டுகளில் அதிமுக சார்பில் போட்டியிட்ட வேட்பாளர்கள் வெற்றி பெற்ற நிலையிலும் இத்தொகுதியில் எந்த திட்டங்களும் நிறைவேற்றவில்லை என பொதுமக்கள் மத்தியில் பெரும் அதிருப்தி நிலவி வருகிறது.

அரசியல் நிலவரம்

பரமக்குடி தொகுதியில் அதிமுக, திமுக மற்றும் கூட்டணி கட்சிகளான பாஜக, காங்கிரஸ் கட்சி சார்பில் போட்டியிட வேட்பாளர்கள் தயாராக உள்ளனர். கடந்த உள்ளாட்சித் தேர்தலில் அதிகளவில் பல்வேறு ஊராட்சிகளில் திமுகவினர் வெற்றி பெற்றுள்ளனர். அதிமுக மீது எதிர்ப்பலைகள் இல்லை என்றாலும் உள்கட்சி பூசலால் பின்தங்கும் நிலை உள்ளது. கடந்த காலங்களில் செய்த திட்டங்களும் போட்டியிடும் வேட்பாளரை பொருத்தே வெற்றி அமையும். அதிமுகவும், திமுகவும் நேரடியாகப் போட்டியிட்டால் யாருக்கு வெற்றி என்பது மதில்மேல் பூனையாக உள்ளது. கூட்டணி கட்சிகளுக்கு தொகுதி ஒதுக்கப்படும் நிலையில் நிறுத்தப்படும் வேட்பாளரை பொருத்தே வெற்றி உறுதி செய்யப்படும்.

இத்தொகுதியில் மொத்த வாக்காளர்கள் 2,54,381 பேர் உள்ளனர். இதில் ஆண் வாக்காளர்கள் 1,26,068 பேரும், பெண் வாக்காளர்கள் 1,28,298 பேரும், மூன்றாம் பாலினத்தவர்கள் 15 பேரும் உள்ளனர். தொகுதியில் மொத்தம் 302 வாக்குச்சாவடி மையங்கள் உள்ளன. 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com