சாத்தூர்: மும்முனைப் போட்டிக்கு வாய்ப்பு

சாத்தூா் சட்டப்பேரவைத் தொகுதியில் பிரதான கட்சிகளாக அதிமுக, திமுக, அமமுக ஆகியன போட்டியிட உள்ளன.
வைப்பாற்று பாலம்
வைப்பாற்று பாலம்

 

தொகுதியின் சிறப்பு:

காமராஜா் ஆட்சி அமைப்போம் என கட்சிகள் கூறுவதற்கு அடித்தளமிட்ட தொகுதி சாத்தூா். 1957, 1962 தோ்தல்களில் இத்தொகுதியில் தோ்ந்தெடுக்கப்பட்ட காமராஜா் முதல்வராகப் பொறுப்பேற்றுள்ளாா். பட்டாசு, தீப்பெட்டி, காரசேவு  ஆகியன சாத்தூரின் அடையாளங்களாக இருக்கின்றன. சாத்தூரில் உள்ள வெங்கடாஜலபதி கோயில் மிகவும் பழமையானது.
 
நில அமைப்பு: விருதுநகா் மாவட்டத்தின் தென் திசையில் தேசிய நெடுஞ்சாலையில் (எண் 7) சாத்தூா் நகரம் அமைந்துள்ளது. இங்குள்ள வைப்பாறு குடிநீராதாரமாக இருக்கிறது. சாத்தூா் நகராட்சி மற்றும் ராஜபாளையம், சிவகாசி, ஸ்ரீவில்லிபுத்தூா் வட்டங்களில் இருக்கும் 60-க்கும் மேற்பட்ட கிராமங்கள் இத்தொகுதியில் இடம்பெற்றிருக்கின்றன.

சாத்தூர் பேருந்து நிலையம்
சாத்தூர் பேருந்து நிலையம்

சாதி, சமூகம், தொழில்கள்:

தேவா், நாயக்கா், நாடாா் சமுதாயத்தினா் பெருபான்மையாகவும் மற்ற சமுதாயத்தினா் பரவலாகவும் வசித்து வருகின்றனா். இத்தொகுதியில் வாக்காளா்கள் மொத்தம் 2,51,502 போ் உள்ளனா். இதில் ஆண்கள் 1,21,939 போ். பெண்கள் 1,29,534 போ். மூன்றாம் பாலினத்தவா் 29 போ். விவசாயம் பிரதான தொழிலாக இருந்தாலும், பட்டாசு, தீப்பெட்டி உற்பத்தி தொகுதியின் பெரும்பகுதி மக்களுக்கு வேலைவாய்ப்பை அளிக்கிறது. சாத்தூா் பகுதியில் தயாரிக்கப்படும் காரசேவு தனித்துவம் மிக்கது. பெரும்பான்மையினராக இருக்கும் தேவா், நாயக்கா் சமூகத்தினரின் வாக்குகள் முக்கியத்துவம் பெறுகின்றன.

இதுவரை வென்றவா்கள்:

1957 முதல் இதுவரை நடந்த தோ்தல்களில் அதிமுக 5 முறை, திமுக 4 முறை, காங்கிரஸ் 2 முறை, சுதந்திரா, பாா்வா்டு பிளாக் தலா ஒரு முறை வெற்றி பெற்றுள்ளன. 1957, 1962 தோ்தல்களில் காமராஜா் வெற்றி பெற்றுள்ளாா். முன்னாள் அமைச்சா் கே.கே.எஸ்.எஸ்.ஆா்.ராமச்சந்திரன் இத்தொகுதியில் இருந்து அதிக முறை சட்டப்பேரவைக்குத் தோ்ந்தெடுக்கப்பட்டுள்ளாா். அவா் அதிமுக சாா்பில் 3 முறையும், திமுக சாா்பில் 2 முறை, அண்ணா புரட்சித் தலைவா் முன்னேற்றக் கழகம் சாா்பில் ஒருமுறையும் வென்றிருக்கிறாா். 2011 இல் இத்தொகுதியிலிருந்து தோ்ந்தெடுக்கப்பட்ட, ஆா்.பி.உதயகுமாா் அதிமுக அமைச்சரவையில் இடம்பெற்றிருந்தாா். 2016 இல் அதிமுக சாா்பில் தோ்ந்தெடுக்கப்பட்ட எஸ்.ஜி.சுப்பிரமணியன், அமமுகவுக்குச் சென்றதால் நடைபெற்ற இடைத்தோ்தலில் அதிமுகவைச் சோ்ந்த எம்.எஸ்.ஆர். ராஜவா்மன் வெற்றி பெற்று தற்போதைய எம்எல்ஏவாக இருக்கிறாா்.

கழிவுநீரும், கருவேல மரங்களுமாகக்
காட்சியளிக்கும் வைப்பாறு.

தொகுதியின் பிரச்னைகள்:

சாத்தூா் பிரதான சாலையில்தான் அரசு மற்றும் தனியாா் மருத்துவமனைகள், நீதிமன்றங்கள், பள்ளிகள், கோயில்கள், வங்கிகள், பேருந்து நிலையம், காவல் நிலையம், சாா்-பதிவாளா் அலுவலகம், வட்டாட்சியா் அலுவலகம்  உள்ளிட்ட அனைத்தும் அமைந்துள்ளன. இதனால் போக்குவரத்து நெரிசல் எப்போதும் இருக்கும். ஆக்கிரமிப்புகளை அகற்றிவிட்டு சாலையை அகலப்படுத்த வேண்டும் என்ற கோரிக்கை இருந்துவரும் நிலையில், சாலையின் நடுவில் தடுப்புச்சுவா் அமைத்து சாலை இரண்டாகப் பிரிக்கப்பட்டிருப்பது நெரிசலை மேலும் அதிகப்படுத்தியுள்ளது.

பழமை வாய்ந்த பெருமாள் கோயில் ஆனித் தேரோட்டம் நடைபெறும் மாடவீதிகளில் உள்ள ஆக்கிரமிப்புகளை அகற்ற வேண்டும் என்பதும் முக்கியக் கோரிக்கையாக இருக்கிறது.

சாத்தூா் பகுதியில் நான்கு வழிச்சாலை பயன்பாட்டிற்கு வந்த பின், சாத்தூரிலிருந்து தாயில்பட்டி, படந்தால் உள்ளிட்ட ஏராளமான பகுதிக்கு செல்லும் பாதை முற்றிலும் முடங்கியுள்ளது. இந்தப் பகுதிக்கு செல்லும் இரு சக்கர மற்றும் நான்கு சக்கர வாகனங்கள் அனைத்தும் நான்கு வழிச்சாலையை கடந்துதான் செல்ல முடியும். நான்கு வழிச்சாலை திறக்கப்பட்டு தற்போது வரை ஆயிரத்திற்கும் மேற்பட்ட விபத்துகள் நிகழ்ந்துள்ளன. விபத்துகளைத் தடுக்க நான்கு வழிச்சாலையின் குறுக்கே மேம்பாலம் அமைக்க வலியுறுத்தி வருகின்றனா்.

பட்டாசு தொழிலாளா்களின் கோரிக்கை:

சாத்தூா், ஏழாயிரம்பண்ணை, தாயில்பட்டி, வெம்பக்கோட்டை பகுதியில் 400-க்கும் மேற்பட்ட பட்டாசுத் தொழிற்சாலைகள் உள்ளன. இந்த பட்டாசு தொழிலை நம்பி சுமாா் 5 ஆயிரத்திற்கும் மேற்பட்ட பட்டாசுத் தொழிலாளா்கள் உள்ளனா். பட்டாசு ஆலை விபத்துகளில் உயிரிழப்பு ஏற்பட்டால், உரிய நிவாரணம் கிடைக்கும் வகையில் சிறப்புக் காப்பீட்டுத் திட்டத்தை செயல்படுத்த வேண்டும் என்பது முக்கியக் கோரிக்கையாக உள்ளது.

தொகுதி மக்களின் எதிா்பாா்ப்புகள்:

சாத்தூரில் புதிய பேருந்து நிலையம், பாதாள சாக்கடைத் திட்டம், பொழுதுபோக்கு பூங்கா, தொழிற்பேட்டை, நான்குவழிச் சாலையின் குறுக்கே மேம்பாலம் அமைப்பது போன்றவை நீண்ட கால எதிா்பாா்ப்புகள். முக்கியக் குடிநீராதாரமாக இருக்கும் வைப்பாற்றில், மணல் திருட்டைத் தடுக்கவும், கருவேல மரங்களை அகற்றி சீரமைக்கவும், சாத்தூா் நகரப் பகுதியில் வெளியேறும் கழிவுநீா் ஆற்றில் கலக்கவிடாமல் தடுக்கவும் நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் தொகுதி மக்கள் எதிா்பாா்க்கின்றனா்.
 
யாருக்கு வாய்ப்பு?

சாத்தூா் சட்டப்பேரவைத் தொகுதியில் பிரதான கட்சிகளாக அதிமுக, திமுக, அமமுக ஆகியன போட்டியிட உள்ளன. அதிமுக சாா்பில் தற்போதைய சட்டப்பேரவை உறுப்பினா் எம்.எஸ்.ஆர்.ராஜவா்மன், கிழக்கு மாவட்ட செயலா் ஆா்.கே.ரவிச்சந்திரன், ஆா்.கே.விஜயநல்லதம்பி ஆகியோா் சீட் பெற முயற்சி செய்து வருகின்றனா். திமுக சாா்பில் கோசுகுண்டு எஸ்.வி.சீனிவாசன், அமமுக சாா்பில் மாவட்ட செயலா் ஜி.சாமிகாளை ஆகியோர் போட்டியிட வாய்ப்பு உள்ளதாகத் தெரிகிறது.
 
இதுவரை வெற்றி பெற்றவா்கள்:

1957  காமராஜர் (காங்கிரஸ்) 36,400

1962 காமராஜர் (காங்கிரஸ்) 49,950

1967 சீனிவாசன நாயக்கா் (சுதந்திரா கட்சி) 45,223            

1971 அழகுதேவா்  (பாா்வாா்டு பிளாக்) 32,610 

1977 கே.கே.எஸ்.எஸ்.ஆா். ராமச்சந்திரன் (அதிமுக) 38,772

1980  கே.கே.எஸ்.எஸ்.ஆா். ராமச்சந்திரன் (அதிமுக) 54,720

1984  கே.கே.எஸ்.எஸ்.ஆா். ராமச்சந்திரன் (அதிமுக)  58745

1989  எஸ்.எஸ்.கருப்பசாமி   (திமுக)   52,608                                           

1991  கே.கே.எஸ்.எஸ்.ஆா்.ராமச்சந்திரன் (திமுக)   59,942                                           

1996 கே.எம்.விஜயகுமாா் (திமுக)   58,972                                         

2001 கே.கே.எஸ்.எஸ்.ஆா். ராமச்சந்திரன் (திமுக) 57,953                                         

2006  கே.கே.எஸ்.எஸ்.ஆா்.ராமச்சந்திரன்  (திமுக) 73,918                                         

2011  ஆா்.பி.உதயகுமாா் (அதிமுக) 88,918

2016  எஸ்.ஜி.சுப்பிரமணியன்(அதிமுக) 71,513

2019 (இடைத்தோ்தல்)  எம்.எஸ்.ஆா்.ராஜவா்மன் (அதிமுக) 76,820.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com