காட்பாடி: 8 ஆவது வெற்றியை பதிவு செய்வாரா துரைமுருகன்?

காட்பாடி சட்டப்பேரவைத் தொகுதியில் போட்டியிட்டு இதுவரை 7 முறை வெற்றி பெற்றுள்ள திமுகவின் துரைமுருகன் 8 ஆவது முறையாக களம் காண்கிறார்.
காட்பாடி ரயில் நிலையம்
காட்பாடி ரயில் நிலையம்

வேலூர் மாவட்டத்தில் நட்சத்திர அந்தஸ்து பெற்ற தொகுதியாக விளங்கிறது காட்பாடி சட்டப்பேரவைத் தொகுதி. விஐடி பல்கலைக்கழகம், திருவள்ளுவர் பல்கலைக்கழகம், காட்பாடி ரயில் நிலைய சந்திப்பு, கிருபானந்த வாரியார் பிறந்த காங்கேயநல்லூரில் உள்ள ஞானவளாகம், வள்ளிமலை முருகன் கோயில் ஆகியவை தொகுதியின் அடையாளங்களாகும்.

தமிழக - ஆந்திர மாநில எல்லையில் அமைந்துள்ள இந்த தொகுதி 1962 ஆம் ஆண்டு முதல் தேர்தலை சந்தித்து வருகிறது. எனினும், தொகுதி மறுசீரமைப்பில் காட்பாடி தொகுதியில் இருந்த பெரும்பகுதி பிரிக்கப்பட்டு கே.வி.குப்பம்(தனி) தொகுதி உருவாக்கப்பட்டதுடன், காட்பாடி வட்டத்தின் இதர பகுதிகளுடன் ராணிப்பேட்டை மாவட்டம் வாலாஜா வட்டத்துக்கு உள்பட்ட 9 ஊராட்சிகள் காட்பாடி தொகுதியில் இணைக்கப்பட்டு 2011-இல் தேர்தலை சந்தித்தது.

தொழில்: விவசாயமும், வணிகமும் தொகுதியின் பிரதான தொழில்களாக உள்ளன. தவிர, பீடி சுற்றுதல், கால்நடை வளர்ப்பு ஆகியவையும் நடைபெற்று வருகிறது. வேலூர் கூட்டுறவு சர்க்கரை ஆலை, காந்திநகர் சிட்கோ தொழிற்பேட்டை, பிற தொழிற்சாலைகளும் நிறைந்துள்ளன. இரு பல்கலைக்கழகங்கள், அரசு சட்டக்கல்லூரி, தனியார் கல்வி நிறுவனங்கள் என மாவட்டத்திலேயே அதிக கல்வி நிறுவனங்கள் கொண்ட தொகுதியாகவும் விளங்குகிறது.

திருவள்ளுவர் பல்கலைக்கழகம்
திருவள்ளுவர் பல்கலைக்கழகம்

கடந்த தேர்தல்கள்

காட்பாடி தொகுதியில் 1962-இல் பி.ராஜகோபால்நாயுடு (காங்கிரஸ்), 1967-இல் ஜி.நடராசன் (திமுக), 1971-இல் துரைமுருகன் (திமுக), 1977-இல் எம்.ஏ.ஜெயவேலு (அதிமுக), 1980-இல் என்.ஏ.பூங்காவனம் (இந்திய கம்யூனிஸ்ட் கட்சி), 1984-இல் ஜி.ரகுபதி (அதிமுக), 1989-இல் துரைமுருகன், 1991-இல் கே.எம்.கலைச்செல்வி (அதிமுக), 1996 முதல் 2016 வரை துரைமுருகன் (திமுக) ஆகியோர் சட்டப்பேரவை உறுப்பினர்களாக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளனர்.

பிரச்னைகள்

காட்பாடி வட்டத்தில் அனைத்து வசதிகளுடன் கூடிய அரசு மருத்துவமனை அமைக்க வேண்டும் என்பதே தொகுதி மக்களின் நீண்ட கால எதிர்பார்ப்பாகும். தவிர, காட்பாடி ரயில் நிலையம் அருகே போக்குவரத்து நெரிசலைத் தவிர்க்கக் கூடுதலாக ஒரு ரயில்வே மேம்பாலம், சேர்க்காட்டில் உள்ள திருவள்ளுவர் பல்கலைக்கழகத்துக்கு சென்றுவர வேலூர், ஆற்காடு, காட்பாடி பகுதிகளிலிருந்து தொடர் நகர பேருந்து வசதி, காட்பாடியில் அரசு கலைக் கல்லூரி, சிப்காட் தொழிற்பேட்டை, காங்கேயநல்லூர்-சத்துவாச்சாரி இடையே பாலாற்றின் குறுக்கே பாலம், மாங்கூல் தொழிற்சாலை ஆகிய முக்கிய கோரிக்கைகளும், மூடப்பட்டுள்ள தமிழ்நாடு வெடிபொருள்கள் நிறுவனத்தை மீண்டும் திறந்து வேலைவாய்ப்பை ஏற்படுத்த வேண்டும் உள்ளிட்டவை மக்களின் எதிர்பார்ப்பாகும்.

5 ஆண்டுகளில் நிறைவேற்றப்பட்ட திட்டங்கள்

கிருபானந்தவாரியார் பிறந்தநாள் அரசு விழாவாகக் கொண்டாட அறிவிக்கப்பட்டிருப்பதும், காட்பாடி தொகுதியில் பல்நோக்கு விளையாட்டு மைதானம் அமைப்பு, காங்கேயநல்லூர் - ரங்காபுரம் இடையே பாலாற்றின் குறுக்கே பாலம் கட்ட நிலம் எடுப்புப் பணிகள் தொடக்கம், ரூ. 2 கோடி நிதி ஒதுக்கீட்டில் பழுதடைந்த காட்பாடி ரயில்வே பாலம் சீரமைப்புப் பணி தொடக்கம் ஆகியவை குறிப்பிடத்தக்க முக்கியப் பணிகளாகும்.

சாதி வாக்குகள்: காட்பாடி தொகுதியைப் பொருத்தவரை வன்னியர்கள் 25 சதவீதமும், அதே அளவுக்கு தலித்துகளும் உள்ளனர். மேலும், முதலியார், செங்குந்த முதலியார் 20 சதவீதமும், நாயுடு உள்ளிட்ட மொழி சிறுபான்மையினர் 20 சதவீதமும், யாதவர்கள், இதர சமூகத்தினர் 10 சதவீதமும் உள்ளனர். ஆந்திர மாநில எல்லையில் அமைந்துள்ள இத்தொகுதி படித்தவர்களையும், பாமரர்களையும் கணிசமான அளவில் கொண்டுள்ளது.

தற்போதைய அரசியல் நிலவரம்: தமிழகத்தில் 3 முறை அமைச்சர் பதவி வகித்த திமுக பொதுச் செயலர் துரைமுருகனின் சொந்த தொகுதியான காட்பாடியில் அவர் 1971-76, 1989-91 மட்டுமின்றி 1996 முதல் தொடர்ந்து சட்டப்பேரவை உறுப்பினராக இருந்து வருகிறார். அவரே 8ஆவது முறையாகவும் களம் காண்கிறார். இதனாலேயே வேலூர் மாவட்டத்திலுள்ள 5 சட்டப்பேரவை தொகுதிகளில் காட்பாடி தொகுதி நட்சத்திர அந்தஸ்து பெற்று விளங்குகிறது.

தொகுதியை தன்வசப்படுத்தி வைத்துள்ள துரைமுருகனை வெல்ல தொடர்ந்து போராடி வரும் அதிமுக சார்பில் இம்முறை மாவட்ட மத்திய கூட்டுறவு வங்கி தலைவர் வி.ராமு போட்டியிட வாய்ப்பு கோரியுள்ளார். அதேநேரத்தில், ஏற்கனவே 2011, 2016 தேர்தல்களில் இத்தொகுதியில் போட்டியிட்டு தோல்வியை தழுவிய மாநகர் மாவட்ட அதிமுக செயலரான எஸ்.ஆர்.கே.அப்பு, வேலூர் தொகுதி கூட்டணிக்கு ஒதுக்கப்படும் பட்சத்தில் காட்பாடி தொகுதியில் போட்டியிட வாய்ப்புள்ளது. அதற்காக எஸ்.ஆர்.கே.அப்பு காட்பாடி தொகுதியில் அரசுத் திட்டப் பணிகளை கொண்டு வருவதில் கூடுதல் கவனம் செலுத்தி செயலாற்றி வந்தார்.

தவிர, மாவட்ட அம்மா பேரவை இணைச் செயலர் தனசேகரன், காட்பாடி அதிமுக மத்திய ஒன்றியச் செயலர் சின்னதுரை, வாலாஜா ஒன்றியச் செயலர் தமிழரசன் ஆகியோரும் போட்டியிட வாய்ப்பு கேட்டு வருகின்றனர். 10 ஆண்டு கால அதிமுக அரசின் சாதனைத் திட்டங்களும், துரைமுருகன் மீதான அதிருப்தி வாக்குகளும் அதிமுகவுக்கு பலம் சேர்க்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

அதிமுக, திமுக தவிர மக்கள் நீதி மய்யம், நாம் தமிழர் கட்சி ஆகியவையும் இந்த தொகுதியில் போட்டியிட வாய்ப்புள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com