ஒரத்தநாடு: மும்முனைப் போட்டிக்கு வாய்ப்பு

ஒரத்தநாடு சட்டப்பேரவைத் தொகுதியில் வரும் தேர்தலில் அதிமுக, திமுக, அமமுக இடையே மும்முனைப் போட்டி நிலவும் என எதிர்பார்க்கப்படுகிறது. 
முத்தம்மாள் சத்திரம்
முத்தம்மாள் சத்திரம்

தொகுதியின் சிறப்புகள்:

தஞ்சாவூர் மக்களவைத் தொகுதிக்கு உள்பட்ட ஒரத்தநாடு சட்டப்பேரவைத் தொகுதியில் அரசு கல்வியியல் கல்லூரி, அரசு கால்நடைக் கல்லூரி மற்றும் ஆராய்ச்சி மையம், தமிழ்நாடு வேளாண் கல்லூரி மற்றும் ஆராய்ச்சி நிலையம், அரசு மகளிர் கல்லூரி, ஒருங்கிணைந்த நீதிமன்றம் உள்ளிட்டவை ஒருங்கே அமைந்துள்ளது தொகுதியின் சிறப்பு.

நில அமைப்பு:

ஒரத்தநாடு ஒன்றியத்தின் 58 ஊராட்சிகள், தொகுதி சீரமைப்பில் நீக்கப்பட்ட திருவோணம் தொகுதியின் 19 ஊராட்சிகள், தஞ்சாவூர் ஒன்றியத்தின் 19 ஊராட்சிகள், புதுக்கோட்டை மாவட்டம் கறம்பக்குடி ஒன்றியத்தின் கல்வராயன் விடுதி ஊராட்சி மற்றும் ஒரத்தநாடு பேரூராட்சியை உள்ளடக்கிய தொகுதி.  ஒரத்தநாடு தொகுதியில் ஏற்கனவே இருந்த நீடாமங்கலம் ஒன்றியம், தொகுதி சீரமைப்பில் மன்னார்குடி தொகுதியில் சேர்க்கப்பட்டுள்ளது.

சமூக நிலவரம்

கள்ளர் சமூகத்தினர் பெரும்பான்மையாகவும், முக்குலத்தோர், முத்தரையர், செட்டியார் உள்ளிட்ட மற்ற சமூகத்தினர் பரவலாகவும் உள்ளனர். தற்போதைய மாநிலங்களவை உறுப்பினரும், முன்னாள் வீட்டு வசதி, நகர்ப்புற வளர்ச்சி மற்றும் வேளாண்மைத் துறை அமைச்சர் ஆர். வைத்திலிங்கம் இத்தொகுதிக்கு உள்பட்ட தெலுங்கன்குடிகாடைச் சேர்ந்தவர். இவரைப்போல திமுக முன்னாள் சட்டப்பேரவை உறுப்பினர் எல். கணேசன், முன்னாள் அமைச்சர்கள் வெள்ளூர் டி.வீராசாமி, அழகு திருநாவுக்கரசு ஆகியோரும் இத்தொகுதியில் போட்டியிட்டு வெற்றி பெற்றவர்கள் .

கட்சி நிலவரங்கள்: இந்த முறை திமுக சார்பில் தற்போதைய சட்டப்பேரவை உறுப்பினர் எம்.ராமசந்திரன், திருவோணம் முன்னாள் சட்டப்பேரவை உறுப்பினர் மகேஷ் கிருஷ்ணசாமி, மருத்துவர் அஞ்சுகம் பூபதி, முன்னாள் சட்டப்பேரவை உறுப்பினர் எல்.கணேசனின் மகனான எல்.ஜி.அண்ணா உள்ளிட்ட 40க்கும் மேற்பட்ட திமுகவினர் விருப்பமனு தாக்கல் செய்துள்ளனர். அதிமுக சார்பில் ஆர்.வைத்திலிங்கம் கடந்த முறை தேர்தலில் தோல்வியை சந்தித்த நிலையில் மீண்டும் தனது இழந்த செல்வாக்கை மீட்டெடுக்க வேண்டும் என்ற நிலைப்பாட்டில் போட்டியிடுகிறார். அமமுக சார்பில் தஞ்சை மாவட்டச் செயலாளர்  ம.சேகருக்கு ஆதரவாளர்கள் அதிகம் இருப்பதால் அவரையும் ஒரு  முக்கிய வேட்பாளராக எதிர்பார்க்கின்றனர். 

இதுவரை வெற்றி பெற்றவர்கள்:

1967 - எல். கணேசன்(திமுக): 45,232

1971 - எல். கணேசன்(திமுக): 49,269

1977 - டி.எம். தைலப்பன் (திமுக): 31,866

1980 - வெள்ளூர் டி. வீராசாமி(அதிமுக): 47,021

1984 - வெள்ளூர் டி. வீராசாமி (அதிமுக):46,717

1989 - எல். கணேசன் (திமுக): 49,554

1991 - அழகு திருநாவுக்கரசு(அதிமுக): 68,208

1996 - பி. ராஜமாணிக்கம் (திமுக): 68,213

2001 - ஆர். வைத்திலிங்கம்(அதிமுக): 63,836

2006 - ஆர். வைத்திலிங்கம்(அதிமுக): 61,595

2011 - ஆர். வைத்திலிங்கம்(அதிமுக) 91,724

2016-   எம். ராமசந்திரன் (திமுக) 84,378

பருத்தியப்பர் கோயில்
பருத்தியப்பர் கோயில்

கோரிக்கைகள்:

ஆளும் கட்சியாக அதிமுகவும், இத்தொகுயின் சட்டப்பேரவை உறுப்பினராக திமுக இருந்ததும் இந்த ஐந்தாண்டில் ஒரத்தநாடு பகுதிக்கு சொல்லும்படியான திட்டங்கள் ஏதும் நடைபெறவில்லை என்பது இப்பகுதி மக்களின் குறையாகவே உள்ளது.

இந்தத் தொகுதியில் பெரும்பாலும் நெல், தென்னை மற்றும் கரும்பு அதிகளவில் சாகுபடி செய்யப்பட்டு வருவதால் உற்பத்தியான நெல்லை தேக்கமின்றி கொள்முதல் செய்வதற்கான ஒரத்தநாடு ஒன்றிய அளவிலான நுகர்பொருள் வாணிபக் கழகம் அமைக்க வேண்டும், தென்னையைச் சார்ந்த பொருள்களை  மூலப்பொருளாக கொண்டு இயங்கும் தொழிற்சாலைகள் அமைக்க வேண்டும். இந்தத் தொகுதியில் பிரதான நீர் ஆதாரமாக உள்ள கல்லணைக் கால்வாயைத் தூர்வாரி கரைகளைப் பலத்தப்படுத்த வேண்டும். மேலும், அதைச் சார்ந்த கிளை வாய்க்கால்களில் கடைமடை வரை தூர் வார வேண்டும். திருவோணத்தைத் தலைமையிடமாகக் கொண்ட புதிய வட்டம் உருவாக்க வேண்டும்.

போட்டியிட வாய்ப்புள்ள கட்சிகள்:

கடந்த 1967 முதல் 2016 வரை நடைபெற்ற 12 சட்டப்பேரவைத் தேர்தல்களில் 6 முறை அதிமுகவும், 6 முறை திமுகவும் வெற்றிபெற்றுள்ளன. 1977-க்குப் பிறகு திமுக சார்பில் ஒரத்தநாடு ஒன்றியத்திற்கு உள்பட்ட வேட்பாளர் திமுக சார்பில் நிற்கவில்லை என்பது இப்பகுதியில் உள்ள திமுகவினரின் ஏக்கமாக உள்ளது. அதேநேரம் முதல்முறையாக அமமுக தொகுதியில் களம் காண்கிறது. தனிப்பட்ட செல்வாக்கையும், ஜாதிய வாக்குகளையும் நம்பி களம் இறங்குகிறது. 

அதிமுக ஏற்கனவே 6 முறை தொகுதியில் வெற்றி பெற்ற நிலையில் அதில் மூன்று முறை வெற்றி பெற்ற தற்போது மாநிலங்களவை உறுப்பினராக உள்ள வைத்திலிங்கம் போட்டியிடும்பட்சத்தில் வெற்றி வாய்ப்பு கிடைக்கும் என கட்சியினர் நம்புகின்றனர். இந்நிலையில் ஒரத்தநாடு தொகுதியில் மும்முனை போட்டி ஏற்படும் நிலை உள்ளது.

வாக்காளர்கள் விவரம்:

ஆண்கள்: 1,18,112; பெண்கள்: 1,24,892; மூன்றாவது பாலினத்தவர்: 10; மொத்தம்: 2,43,014.                    

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com