ஸ்ரீரங்கம்: அதிமுக கோட்டையை அசைக்க முயலும் திமுக

அதிமுகவின் கோட்டையாக விளங்கும் ஸ்ரீரங்கம் தொகுதியை அசைத்துப் பார்க்க திமுக களம் இறங்கி பணியாற்றி வருகிறது.
ஸ்ரீரங்கம் திருக்கோயில்
ஸ்ரீரங்கம் திருக்கோயில்

தொகுதியின் சிறப்பு: பூலோக வைகுண்டம் என போற்றப்படும் ஸ்ரீரங்கம் திருக்கோயில் தமிழகத்தில் சிறந்த வழிப்பாட்டுத் தலமாகவும், 108 வைணவத் தலங்களில் முதன்மையானதாகவும் விளங்குகிறது. நாட்டின் பல்வேறு மாநிலங்களிலிருந்தும், வெளிநாட்டுப் பயணிகளும் இத்திருக்கோயிலைக் காண்பதற்கு பக்தர்கள் நாள்தோறும் வந்து செல்கின்றனர். திருவரங்கம் கோயிலில் பள்ளி கொண்ட அரங்கனின் சிறப்பை "விரிதிரைக் காவிரி வியன் பெருந்துருத்தித் திருவமர் மார்பன் கிடந்த வண்ணமும்" என சிலப்பதிகாரம் எடுத்துரைக்கும் சிறப்பு மிகுந்த தொகுதியாக விளங்குகிறது.

மேலும், திருச்சி மாவட்டத்தில் உள்ள 9 தொகுதிகளில் ஸ்ரீரங்கம் தொகுதி முக்கியத்துவம் வாய்ந்ததாக உள்ளது. கடந்த சட்டப்பேரவைத் தேர்தலில் அதிமுக பொதுச் செயலாளரும், முன்னாள் முதல்வருமான ஜெயலலிதா போட்டியிட்டு வெற்றி பெற்று முதல்வராகப் பொறுப்பேற்றார்.

இதனால், இத்தொகுதி முதல்வர் தொகுதி என்றும் அழைக்கப்படுவதுண்டு. கடந்த 1952 ஆம் ஆண்டிலிருந்து இத்தொகுதி பாரம்பரிய மிக்க தொகுதியாக விளங்கி வருகிறது.

சமூக நிலவரம்: திருச்சி மாநகராட்சியின் 6 வார்டுகள் மாநகரப் பகுதியாகவும், இதர பகுதிகள் ஊரகப் பகுதிகளாகவும் உள்ளன. இத்தொகுதியில் முத்துராஜா, தலி மற்றும் உடையார் சமூகத்தினர் பெருமளவில் உள்ளனர். இவர்கள் தவிர பிராமணர்கள், நாயுடு, பிள்ளைமார், கோனார், தேவேந்திர குல வேளாளர் ஆகிய சமூகத்தினரும், பிற சாதியினரும் கணிசமாக உள்ளனர்.

தொகுதியில் அடங்கியுள்ள பகுதிக‌ள்: திருச்சிராப்பள்ளி (மாநகராட்சி) வார்டு எண். 1 முதல் 6 வரை. மற்றும் ஸ்ரீரங்கம் வட்டத்திற்குபட்ட பனையபுரம், உத்தமசேரி, கிளிக்கூடு, மல்லியம்பத்து, சோமரசம்பேட்டை, குமாரவயலூர், முள்ளிக்கரும்பூர், கோப்பு (வடக்கு), கோப்பு (தெற்கு), போதாவூர், புலியூர், அதவத்தூர் (மேற்கு), அதவத்தூர் (கிழக்கு), நாச்சிக்குறிச்சி, சோழங்கநல்லூர், கே.கள்ளிக்குடி (வடக்கு-தெற்கு), தாயனூர், நாவலூர் குட்டப்பட்டு, அரியாவூர்-உக்கடை அரியாவூர், பெரியநாயகி சத்திரம், அம்மாப்பேட்டை, கொளத்தூர், மாத்தூர், சேதுராப்பட்டி, அளுந்தூர், பாகனூர், நாகமங்கலம், கொட்டப்பட்டு, மேக்குடி, முடிகண்டம், கொழுக்கட்டைக்குடி, தொரக்குடி, திருமலைசமுத்திரம்,ஓலையூர், பழூர், முத்தரசநல்லூர், கம்பரசம்பேட்டை, மருதன்காகுறிச்சி, பேட்டவாய்த்தலை, பெருகமணி, திருப்பராய் துறை, அந்தநல்லூர், கொடியாலம்,குலுமணி, பெரியகருப்பூர், திருச்செந்துறை, கடியாக்குறிச்சி, மேக்குடி, அல்லூர் மற்றும் பேரூர் கிராமங்கள், சிறுகமணி (பேரூராட்சி), மணப்பாறை வட்டம் (பகுதி) தொப்பம்பட்டி, மொண்டிப்பட்டி, கே.பெரியப்பட்டி (வடக்கு), இடையப்பட்டி, செட்டிச்சத்திரம்,, சித்தாநத்தம், கே.பெரியப்பட்டி (தெற்கு), சமுத்திரம், சத்திரப்பட்டி, கண்ணுடையான்பட்டி, கலிங்கப்பட்டி மற்றும் மாதம்பட்டி கிராமங்கள். இலுப்பூர் வட்டம் (பகுதி) புதுக்கோட்டை மாவட்டம் கோமங்கலம் கிராமம் (கோமங்கலம் கிராமம் புதுக்கோட்டை மாவட்ட நிர்வாகத்தின் கீழ்வந்தாலும், கன மற்றும் பூகோள ரீதியாக ஸ்ரீரங்கம் (139) சட்டப்பேரவை தொகுதியின் எல்லைப் பரப்பிற்குட்பட்டதாக உள்ளது.

கடந்த தேர்தலில் வென்றவர்கள்: ஸ்ரீரங்கம் சட்டப்பேரவைத் தொகுதியில் இதுவரை 15 முறை நடைபெற்ற தேர்தலில் 8 முறை அதிமுக வெற்றி பெற்று தனது கோட்டையாக தக்கவைத்துள்ளது.

1952ல் சிதம்பரம் (இ.கம்யூனி.), 1957ல் வாசுதேவன் (காங்கிரஸ்), 1962ல் சுப்ரமணியன் (காங்கிரஸ்), 1967ல் ராமலிங்கம் (காங்கிரஸ்), 1971ல் ஜோதி வெங்கடாச்சலம் (என்சிஓ), 1977, 1980, 1984 ஆகிய தேர்தலில் சவுந்தரராஜன் (அதிமுக), 1989ல் வெங்கடேச தீக்சிதர்(ஜனதா தளம்), 1991ல் கு.ப.கிருஷ்ணன் (அதிமுக), 1996ல் மாயவன்(திமுக), 2001ல் பாலசுப்ரமணியன் (அதிமுக), 2006ல் பரஞ்ஜோதி (அதிமுக), 2011ல் ஜெ.ஜெயலலிதா (அதிமுக), 2015 இடைத்தேர்தல், 2016 பேரவைத் தேர்தலில் மீண்டும் அதிமுகவைச் சேர்ந்த வளர்மதி வெற்றி பெற்றார்.

2011 ஆம் ஆண்டு சட்டப்பேரவைத் தேர்தலில் தேர்ந்தெடுக்கப்பட்ட ஜெயலலிதா சொத்துக் குவிப்பு வழக்கில் தண்டனை வழங்கப்பட்டதால், இந்த தொகுதியில் 2015 பிப்ரவரி மாதம் நடைபெற்ற இடைத் தேர்தலில் அதிமுக வேட்பாளர் எஸ். வளர்மதி வெற்றி பெற்றார். இவரை எதிர்த்துப் போட்டியிட்ட திமுகவைச் சேர்ந்த ஆனந்த் தோல்வியடைந்தார்.

நிறைவேற்றப்பட்ட வாக்குறுதிகள்:

கடந்த 2011 ஆம் ஆண்டு தேர்தலில் அதிமுகவின் பொதுச்செயலரும், முன்னாள் முதல்வருமான ஜெ.ஜெயலலிதா இத்தொகுதியில் போட்டியிட்டு வெற்றி பெற்றார். 4 ஆண்டுகள் முதல்வர் தொகுதியாக இருந்ததால், அவர் வாக்குறுதி அளித்ததில், புதிய காகிதத் தொழிற்சாலை, ஆசியாவிலேயே மிகப்பெரிய வண்ணத்துப்பூச்சி பூங்கா, ஒரே நேரத்தில் 1,000 பேர் தங்கக்கூடிய யாத்ரிகர் நிவாஸ் என பல்வேறு வளர்ச்சித் திட்டங்கள் ரூ. 3,000 கோடி அளவுக்கு நிறைவேற்றப்பட்டுள்ளன.


தொகுதியின் பிரச்னைகள்:

பல ஆண்டுகளாக நிலுவையில் அடிமனை பிரச்னை நிலுவையில் உள்ளது. குறிப்பாக, கடந்த 2011 சட்டப்பேரவைத் தேர்தலில் வெற்றி பெற்றால் தீர்க்கப்படும் என ஜெயலலிதாவால் வாக்குறுதி அளிக்கப்பட்ட ஸ்ரீரங்கம் அடிமனை பிரச்சினை 5 ஆண்டுகளாகியும் தீர்க்கப்படாதது இந்த தொகுதியின் முக்கிய பிரச்னையாக உள்ளது. மேலும், மணிகண்டம், அந்தநல்லூர் பகுதியில் ஒருங்கிணைந்த பூ வணிக வளாகம், திருவானைக்கா பகுதியில் மதுரை - சென்னை தேசிய நெடுஞ்சாலையில் சுரங்கப் பாதை உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகள் இன்றும் நிலுவையில் உள்ளன. சொந்த கட்டடத்தில் நீதிமன்றம், கால்நடை மருத்துவமனை மேம்படுத்துதல், அரசு மருத்துவமனையில் போதிய அளவில் மருத்துவப் பணியாளர்கள் இல்லாதது, வேலைவாய்ப்பு சூழலை ஏற்படுத்துவது, பேருந்து நிலையம் உள்ளிட்டவை தொகுதியின் முக்கிய பிரச்னைகளாகவும், நிறைவேற்றப்படாத தேர்தல் வாக்குறுதிகளாகவே உள்ளன.

கட்சிகளின் செல்வாக்கு: அதிமுகவைச் சேர்ந்த குப.கிருஷ்ணன், கே.கே.பாலசுப்பிரமணியன், வளர்மதி, பரஞ்சோதி ஆகியோர் இத்தொகுதியில் போட்டியிட்டு வென்றுள்ளதால் தொகுதியில் செல்வாக்கு உடைவர்களாக விளங்குகின்றனர். மேலும், முன்னாள் முதல்வர் ஜெயலலிதா 2011 சட்டபேரவைத் தேர்தலில் வெற்றி பெற்று அதிமுகவின் செல்வாக்கை நிலைப்பெறச் செய்ததால் அதிமுகவின் கோட்டையாக விளங்கி வருகிறது.

இதைத்தவிர, அதிமுகவை எதிர்த்து போட்டியிட்ட திமுகவைச் சேர்ந்த என்.ஆனந்த், எம்.பழனியாண்டி ஆகியோர் திமுகவிலும், ஆர்.மனோகரன் அமமுகவிலும், காங்கிரஸ் மாவட்ட தலைவர் ஜவஹர் ஆகியோர் செல்வாக்கு உள்ளவர்களாக இருக்கின்றனர். இவர்கள் அனைவருமே செல்வாக்கு உள்ள அனைவருமே போட்டியிட ஆர்வம் காட்டி வருகின்றனர். அதிமுக - பாஜக கூட்டணி வைத்துள்ளதால், பாஜக வேட்பாளர் இத்தொகுதியில் போட்டியிட வாய்ப்புள்ளது.

தற்போதைய வாக்காளர்கள்:

ஆண்- 1,50,036, பெண்- 1,60, 676, மூன்றாம் பாலினம்- 27, மொத்தம்- 3,10,739.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com