சேலம் தெற்கு தொகுதி: அதிமுகவுக்கு வெற்றி எளிதாகுமா?

கடந்த 2001 முதல் தொடர்ச்சியாக அதிமுக வெற்றி பெற்று வரும் நிலையில், இந்த முறையும் வெற்றி பெறும் முனைப்பில் களம் காண்கிறது.
சேலம் தெற்கு தொகுதியில்  உற்பத்தி செய்யப்படும் பிரசித்தி பெற்ற புவிசார் குறியீடு பெற்ற வெண்பட்டு வேஷ்டி.
சேலம் தெற்கு தொகுதியில் உற்பத்தி செய்யப்படும் பிரசித்தி பெற்ற புவிசார் குறியீடு பெற்ற வெண்பட்டு வேஷ்டி.

சேலம் மாவட்டத்திலுள்ள சேலம் தெற்குத் தொகுதியில் 60 சதவீதம் நெசவு, கைத்தறி முக்கியத் தொழிலாக உள்ளது. கைத்தறி, நெசவு, ஜவுளி ஏற்றுமதி, சாயப்பட்டறை தொழில், வெள்ளி, தங்க ஆபரணத் தொழில் பிரதானமானவையாக உள்ளன.

அம்மாப்பேட்டை, பொன்னம்மாபேட்டை, சீலநாயக்கன்பட்டி உள்ளிட்ட பகுதிகளில் கைத்தறி மூலம் தயாரிக்கப்படும் வெண்பட்டு வேட்டிகள் அதிக அளவில் கேரளம், ஆந்திரம், கர்நாடகம் உள்ளிட்ட பிற மாநிலங்களுக்கும், வெளிநாடுகளுக்கும் அனுப்பப்படுகின்றன. சேலம் வெண்பட்டு வேட்டிக்கு புவிசார் குறியீடு கிடைத்துள்ளது குறிப்பிடத்தக்கது.

வாக்காளர்கள் விவரம்:

ஆண்கள்: 1,26,698 
பெண்கள்:1,32,508 
இதரர்: 23 
மொத்தம்: 2,59,229 

தொகுதியின் பகுதிகள்:

2011 தொகுதி சீரமைப்பின்போது சேலம் -1 தொகுதி சீரமைக்கப்பட்டு புதிதாக உருவாக்கப்பட்டது சேலம் தெற்குத் தொகுதியாகும். இத்தொகுதி, சேலம் நகரின் மையப்பகுதியைக் கொண்டதாகும்.

சேலம் மாநகராட்சிக்கு உள்பட்ட 37 ஆவது கோட்டம் முதல் 60 ஆவது கோட்டம் வரை உள்ளிட்ட 23 கோட்டங்களை உள்ளடக்கியது இத்தொகுதி.

சமூக நிலவரம்:

சேலம் தெற்குத் தொகுதியைப் பொருத்தவரை, கன்னட தேவாங்கர் செட்டியார், முதலியார், சோழிய வேளாளர், ஆதிதிராவிடர்கள், வன்னியர், நாடார் என பல்வேறு சமூகத்தைச் சேர்ந்தவர்களும், இஸ்லாமியர்கள், கிறிஸ்தவர்களும் பரவலாக உள்ளனர்.

இதுவரை நடைபெற்ற தேர்தல்கள்:

சேலம்-1ஆவது தொகுதியாக இருந்து, தொகுதி சீரமைப்புக்குப் பிறகு உருவாக்கப்பட்ட சேலம் தெற்குத் தொகுதியில், அதிமுக 7 முறையும், காங்கிரஸ் 3 முறையும், திமுக 4 முறையும் வெற்றி பெற்றுள்ளன. 

திமுக கடந்த 1996 தேர்தலுக்குப் பிறகு வெற்றி பெறவில்லை. இத்தேர்தலில் இழந்த தொகுதியை மீட்டெடுக்க எத்தனித்துப் போட்டி களத்தில் குதிக்கிறது திமுக.

கடந்த 2016 தேர்தலில் அதிமுக சார்பில் போட்டியிட்ட ஏ.பி.சக்திவேல் 1,01,696 வாக்குகள் பெற்று வெற்றி பெற்றார். திமுக வேட்பாளர் எம்.குணசேகரன் 71,242 243 வாக்குகள் பெற்றார்.

இதுவரை நடந்த தேர்தல்களில் வென்றோர்:

1951: வரதராஜுலு நாயுடு (காங்கிரஸ்)
1957:  மாரியப்பன் (காங்கிரஸ்)
1962: சி.வெங்கட்ராமன் (காங்கிரஸ்)
1967: கே.ஜெயராமன் (திமுக)
1971:  கே. ஜெயராமன் (திமுக)
1977: எஸ்.வி.வரதராஜன் (அதிமுக)
1980: ஜி.கிருஷ்ணராஜ் (அதிமுக)
1984: ஜி.கிருஷ்ணராஜ் (அதிமுக)
1989: கே.ஆர்.ஜி.தனபாலன் (திமுக)
1991: எஸ்.ஆர்.ஜெயராமன் (காங்கிரஸ்)
1996: கே.ஆர்.ஜி.தனபாலன் (திமுக)
2001: செ.வெங்கடாசலம் (அதிமுக)
2006: எல்.ரவிச்சந்திரன் (அதிமுக)
2011: எம்.கே.செல்வராஜு (அதிமுக)
2016: ஏ.பி.சக்திவேல் (அதிமுக)

நிறைவேற்றப்பட்ட பணிகள்:

சேலம் தெற்கு தொகுதியில் ஒருங்கிணைந்த பத்திரப் பதிவுத்துறை அலுவலகம் ஏற்படுத்தப்பட்டுள்ளது. அதேபோல சேலம் கிழக்கு வட்டாரப் போக்குவரத்து அலுவலகம் ஏற்படுத்தப்பட்டுள்ளது. 

சீர்மிகு நகரம் திட்டத்தில் குமரகிரி ஏரியைச் சீரமைத்து, சுற்றுலாத் துறையுடன் இணைந்து படகு குழாம் அமைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. குமரகிரி ஏரி உபரி நீரை திருமணிமுத்தாறில் இணைக்க கால்வாய் அமைக்கும் பணிகள் முடிக்கப்பட்டுள்ளன. குமரகிரி முருகன் கோயிலில் ரூ. 2.5 கோடியில் திருமண மண்டபம் கட்டப்பட்டுள்ளது.

அம்மாப்பேட்டை மண்டல அலுவலகத்தில் ரூ. 27 கோடியில் சிறப்பு பல்நோக்கு மருத்துவமனை கட்டப்பட்டு வருகிறது. பாவடி ஆண்கள் பள்ளியில் ரூ. 1.16 கோடியில் தரம் உயர்த்தி, ஆய்வகக் கூடம் அமைக்கப்பட்டுள்ளது.

காந்தி மகான் தெருவில் மழைக் காலங்களில் நீர் தேங்காமல் இருக்க தாழ்வான பகுதி உயர்த்தப்பட்டு மழைநீர் தேங்காத வகையில் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. காந்திநகர் குடிசை மாற்றுவாரியக் குடியிருப்பை இடித்துவிட்டு புதிதாக 228 குடியிருப்புகள் கட்டித் தரப்பட்டுள்ளன.

பஞ்சதாங்கி ஏரியில் நீர் நிலை இல்லாத பகுதியில் வீட்டுமனைப் பட்டா கோரிக்கை வைத்தவர்களுக்கு வீட்டுமனைப் பட்டா வழங்கப்பட்டுள்ளது.

கரிய பெருமாள் கோயில் கரடில் மலைப்பாதை அமைக்க ரூ. 5 கோடி மதிப்பில் திட்டம் செயல்படுத்தப்பட உள்ளது. கொண்டலாம்பட்டி மகளிர் மாதிரிப் பள்ளி ரூ. 3 கோடியில் தரம் உயர்த்தி பல்வேறு வசதிகள் ஏற்படுத்தி தரப்பட்டுள்ளன. 

அதேபோல ஆசாரிகாடு பகுதியில் 300 குடும்பங்களுக்கு தண்ணீர் வசதி ஆத்தூர் கூட்டுக் குடிநீர் திட்டம் செயல்படுத்தப்பட உள்ளது என சேலம் தெற்கு தொகுதி அதிமுக எம்எல்ஏ ஏ.பி.சக்திவேல் தெரிவித்தார்.

தீர்க்கப்படாத பிரச்னைகள்:

சேலம் தெற்குத் தொகுதியில் ஜவுளித் தொழில் பிரசித்தி பெற்றதாக இருந்த போதிலும், ஒருங்கிணைந்த ஜவுளிப் பூங்கா அமைக்க வேண்டும் என்று கோரிக்கை கால் நூற்றாண்டு காலமாக நிறைவேற்றப்படாமல் இருந்து வருகிறது.

சேலம் நகரம், தேசிய நெடுஞ்சாலையையொட்டி அமைந்துள்ளதால் சென்னை, பெங்களூரு, தென்மாவட்டங்களுக்குச் செல்லும் பேருந்துகளால் சீலநாயக்கன்பட்டி புறவழிச்சாலை மேம்பாலம் பகுதியில் எந்நேரமும் போக்குவரத்து நெரிசல் உள்ளது; அடிக்கடி வாகன விபத்துகளும் நிகழ்ந்து வருகின்றன. எனவே, சீலநாயக்கன்பட்டி பகுதியில் நிலவும் போக்குவரத்து நெரிசலுக்குத் தீர்வு காணும் வகையில் பாலம் விரிவாக்கப் பணிகள் தொடங்கப்படும் என்று அரசு அறிவித்தது. அத்திட்டம் கிடப்பில் போடப்பட்டுவிட்டது.

ஆடித் திருவிழாவுக்கு பெயர் போன சேலம் கோட்டை மாரியம்மன் கோயில் திருப்பணிகள் முழுமை பெறாமல் உள்ளது. திருப்பணியை விரைந்து முடிக்க பக்தர்கள் கோரிக்கை வைத்துள்ளனர்.

ஒரு காலத்தில் திருமணிமுத்தாறு எப்போதும் நீர் ஓடிக் கொண்டிருந்த வேளையில், தற்போது சாயப்பட்டறையில் இருந்து வெளியேறும் கழிவுநீர், சாக்கடை நீரால் ஆக்கிரமிப்பால் திருமணிமுத்தாறு சக்கடையாகிவிட்டது. இந்த ஆற்றை மீட்டெடுக்க வேண்டும் என்பது இயற்கை ஆர்வலர்கள், சமூக ஆர்வலர்களின் கோரிக்கை.

மேலும் பாதாளச் சாக்கடை திட்டப் பணிகள் முழுமை பெறாத நிலையில் ஆங்காங்கே தோண்டப்பட்டுள்ள குழிகளால் பொதுமக்கள் மிகுந்த அவதிக்குள்ளாகின்றனர். மந்த கதியில் பணிகள் நடைபெறுவதால் கடைகள் வைத்திருக்கும் வணிகர்கள் பெருமளவில் பாதிக்கப்பட்டுள்ளனர்.

பச்சப்பட்டி கால்வாய் ஆக்கிரமிப்பு காரணமாக, மழைக் காலங்களில் குடியிருப்புப் பகுதிகளில் மழை நீர் புகுவதால் மக்கள் பாதிப்புக்குள்ளாகி வருகின்றனர். ராஜவாய்க்கால் ஆக்கிரமிப்பை அகற்ற வேண்டும் என்பது மக்களின் கோரிக்கையாக உள்ளது.

மக்கள் நெரிசல் மிக்க அம்மாப்பேட்டை, கிச்சிப்பாளையம், களரம்பட்டி ஆகிய பகுதிகளில் சாக்கடைக் கால்வாய் பிரச்னை தீர்க்கப்படாததாக உள்ளது. இதனால் சுகாதாரச் சீர்கேடு நிலவி வருகிறது.

இத்தொகுதியில் குடிநீர்ப் பிரச்னையும் உள்ளது. சேலம் நகரில் சீர்மிகு நகரத் திட்டப் பணிகள் இத்தொகுதிக்குள் வந்த போதிலும் தீர்க்கப்படாத அடிப்படை வசதிகள் ஆங்காங்கே உள்ளது.

அரசியல் நிலவரம்:

2021 தேர்தலில் சேலம் தெற்குத் தொகுதியில் அதிமுகவும் திமுகவும் நேரடியாக மோத உள்ளன. கடந்த 2001 முதல் தொடர்ச்சியாக அதிமுக வெற்றி பெற்று வரும் நிலையில், இந்த முறையும் வெற்றி பெறும் முனைப்பில் களம் காண்கிறது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com