மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வுக்கான விண்ணப்ப பதிவு ஒத்திவைப்பு!
Published on : 19th June 2018 02:40 PM | அ+அ அ- | எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

புதுதில்லி: மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வுக்கான விண்ணப்ப பதிவு வரும் 22-ஆம் தேதி தொடங்க இருந்த நிலையில், விண்ணப்ப பதிவு ஒத்திவைக்கப்பட்டுள்ளதாக மத்திய இடைநிலைக் கல்வி வாரியம் தெரிவித்துள்ளது.
தேசிய அளவில் நடைபெறும் மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வை ஆங்கிலம், இந்தி, சமஸ்கிருதம், தமிழ், மலையாளம், தெலுங்கு, கன்னடம், குஜராத்தி போன்ற 20 மொழிகளிலும் எழுதலாம் என்றிருந்த நிலையில், இந்த ஆண்டு தமிழ், தெலுங்கு உள்ளிட்ட 17 பிராந்திய மொழிகளை நீக்கிவிட்டு ஆங்கிலம், இந்தி, சமஸ்கிருதம் ஆகிய 3 மொழிகளில் மட்டுமே தேர்வு எழுதலாம் என அறிவித்த சிபிஎஸ்இ, 2 மொழிகளையே தேர்வர்கள் விருப்ப மொழியாக தேர்வு செய்ய வேண்டும் என அறிவித்திருந்தது.
சிபிஎஸ்இ நிர்வாகத்தின் இந்த திடீர் முடிவுக்கு நாடு முழுவதும் கடும் எதிர்ப்பு கிளம்பியதை அடுத்து படிந்த மத்திய அரசு தமிழ் உள்பட் 17 மொழிகளை ரத்து செய்யும் முடிவை ரத்து செய்துள்ளதாகவும், தமிழ், கன்னடம், தெலுங்கு, மலையாளம் உள்ளிட்ட 20 மொழிகளிலும் தேர்வு எழுதலாம் என்றும் இதற்கான புதிய உத்தரவை சிபிஎஸ்இ விரைவில் வெளியிடும் என்று மனிதவள மேம்பாட்டுத்துறை அமைச்சர் பிரகாஷ் ஜவடேகர் நேற்று தெரிவித்தார்.
இந்நிலையில், மத்திய அசிரியர் தகுதித் தேர்வுக்கான விண்ணப்ப பதிவு வரும் 22-ஆம் தேதி தொடங்க இருந்த விண்ணப்ப பதிவு ஒத்திவைக்கப்பட்டுள்ளதாக சிபிஎஸ்இ தெரிவித்துள்ளது.
இதுகுறித்து மத்திய இடைநிலைக் கல்வி வாரியம் (சிபிஎஸ்இ) வெளியிட்டுள்ள அறிக்கையில், மத்திய அரசின் ஆசிரியர் தகுதித் தேர்வுக்கான ஆன்லைன் மூலம் விண்ணப்ப பதிவு, நிர்வாக காரணங்களுக்காக ஒத்தி வைக்கப்படுகிறது. விண்ணப்ப பதிவு குறித்த மறு தேதி விரைவில் அறிவிக்கப்படும் கூறப்பட்டுள்ளது.