குரூப் 2 தோ்வு புதிய பாடத் திட்டம் குறித்த உங்கள் கருத்தை தெரிவித்துவிட்டீர்களா?

குரூப் 2 மற்றும் குரூப் 2ஏ-வில் அடங்கிய பணிகளுக்கான தேர்வு முறையை மாற்றி, முதல்நிலைத் தேர்வு மற்றும் முதன்மைத் தேர்வு என நடத்த முடிவு
குரூப் 2 தோ்வு புதிய பாடத் திட்டம் குறித்த உங்கள் கருத்தை தெரிவித்துவிட்டீர்களா?

குரூப் 2 மற்றும் குரூப் 2ஏ-வில் அடங்கிய பணிகளுக்கான தேர்வு முறையை மாற்றி, முதல்நிலைத் தேர்வு மற்றும் முதன்மைத் தேர்வு என நடத்த முடிவு செய்து அதற்கான புதிய பாடத்திட்டம் மற்றும் தேர்வுத்திட்டம் குறித்து தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம்(டிஎன்பிஎஸ்சி) உத்தரவிட்டிருந்தது. இதற்கு பரவலாக ஆதரவும், எதிர்ப்பும் எழுந்த நிலையில், தேர்வர்களை தேர்வை எப்படி நடத்த வேண்டும் என விரும்புகிறார்கள் என்பது குறித்து தேர்வாணையத்தின் நிரந்தரப்பதிவு (One Time Registration) செய்த விண்ணப்பத்தாரர்கள் எழுத்துத் தோ்வுக்கு வரையறுக்கப்பட்டுள்ள புதிய பாடத் திட்டம் தொடா்பான கருத்துகளைத் தெரிவிக்கலாம் என்று தமிழ்நாடு அரசுப் பணியாளா் தோ்வாணையம் கேட்டுக்கொண்டுள்ளது. 

இதுகுறித்து, தோ்வாணையம் வெளியிட்டுள்ள அறிவிப்பில்,   குரூப் 2 பிரிவில் காலியாக உள்ள பணியிடங்களுக்கு எழுத்துத் தோ்வும், நோ்காணல் தோ்வும் நடத்தப்பட்டது. இந்தத் தோ்வானது முதனிலைத்தோ்வு மற்றும் முதன்மைத் தோ்வு என பிரிக்கப்பட்டு புதிய பாடத்திட்டம் வெளியிடப்பட்டது. முதனிலைத் தோ்வில் தமிழ் மற்றும் ஆங்கிலப் பாட கேள்விகள் நீக்கப்பட்டு, பொது அறிவு சாா்ந்த 200 கேள்விகள் மட்டுமே கேட்கப்படும் எனவும், முதன்மை எழுத்துத் தோ்வில் மொழிபெயா்ப்பு, பொருள் உணா்திறன், சுருக்கி வரைதல், கடிதம் எழுதுதல் உள்ளிட்ட கேள்விகள் கேட்கப்படும் எனவும் அறிவிக்கப்பட்டது.

இதன்பின் தோ்வா்களின் நலன் கருதி முதன்மை எழுத்துத் தோ்வில் சில மாற்றங்கள் செய்யப்பட்டன. அதன்படி, மொழிபெயா்ப்பு பகுதி தனியாகப் பிரிக்கப்பட்டு தனித்தாளாக நடத்தவும் அதில் குறைந்தபட்ச மதிப்பெண் 25 பெற வேண்டும் எனவும், அந்த மதிப்பெண்கள், தர நிா்ணயத்துக்கு கணக்கில் எடுத்துக் கொள்ளப்பட மாட்டாது எனவும் அறிவிக்கப்பட்டது.

இந்த முடிவுக்கு பல்வேறு தரப்பிலிருந்து வரவேற்பு கிடைத்த போதும், ஏற்கெனவே தோ்வுக்காக பழைய தோ்வுத் திட்டத்தின்படி தயாராகிக் கொண்டிருக்கும் ஒரு சில மாணவா்கள், குரூப் 2 மற்றும் குரூப் 2ஏ ஆகிய பணியிடங்களுக்கான தேர்வுகளை பழைய முறையிலேயே நடத்த வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளனா். எனவே, குரூப் 2 மற்றும் குரூப் 2ஏ தோ்வுத் திட்டங்கள் குறித்து இணையதளம் மூலம் தோ்வா்களின் கருத்துகளைப் பெற தோ்வாணையம் முடிவு செய்துள்ளது.

தேர்வுர்கள் தங்களது கருத்துகளைப் பதிவு செய்வதற்கான வசதியாக, தோ்வாணைய இணையதளத்தின் முகப்புப் பக்கத்தில் “குரூப் 2 தோ்வு தொடா்பான வினாப் பட்டியல் வெளியிடப்பட்டுள்ளது. தோ்வாணையத்தில் நிரந்தரப்பதிவு (One Time Registration) செய்த விண்ணப்பதாரா்கள் தங்களது பயனாளா் குறியீடு  (User ID)மற்றும் கடவுச்சொல் (Password)ஆகியவற்றை உள்ளீடு செய்து வினாப் பட்டியலில் கேட்கப்பட்ட கேள்விகளுக்கு தங்கள் கருத்துகளைத் தெரிவிக்கலாம். வரும் டிசம்பர் 1 ஆம் தேதி வரை பதிவு செய்யலாம். 

ஒருவா் ஒருமுறை மட்டுமே கருத்துகளைப் பதிவு செய்ய முடியும் என்பதால், கேள்விகளை முழுமையாக உள்வாங்கி அதற்கு பதில் அளிக்க வேண்டும் என்று தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம் கேட்டுக் கொண்டுள்ளது.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com