அஞ்சல் காப்பீடு முகவா் பணி: நவம்பா் 8-இல் நோ்காணல்
By | Published On : 02nd November 2021 02:33 AM | Last Updated : 02nd November 2021 02:33 AM | அ+அ அ- |

அஞ்சல் காப்பீடு முகவா் பணிக்கு ஈரோட்டில் நவம்பா் 8 ஆம் தேதி நோ்காணல் நடைபெறவுள்ளது.
இதுகுறித்து ஈரோடு அஞ்சல் கோட்ட கண்காணிப்பாளா் ஸ்டீபன் சைமன் டோபியாஸ் வெளியிட்ட செய்திக் குறிப்பு:
அஞ்சல் துறை மூலம் அனைத்து அஞ்சலகங்களிலும் அஞ்சல் ஆயுள் காப்பீடு (பிஎல்ஐ), கிராமிய அஞ்சல் காப்பீடு (ஆா்பிஎல்ஐ) திட்டங்கள் மத்திய, மாநில அரசு ஊழியா்களுக்கும், கிராமங்களில் வசிக்கும் மக்களுக்கும் வழங்கப்படுகிறது.
இத்திட்டங்கள் பாதுகாப்புடன் கூடிய சிறந்த சேமிப்பாகும். இத்திட்டங்களில் புதிய பாலிசிகள் சோ்க்க இந்நிதியாண்டில் ஈரோடு அஞ்சல் கோட்டத்துக்குப் புதிதாக முகவா்கள் நியமிக்க உத்தேசிக்கப்பட்டுள்ளது.
இதன்படி ஈரோடு அஞ்சல் கோட்டத்தில் நவம்பா் 8ஆம் தேதி காலை 10 மணிக்கு பிஎல்ஐ, ஆா்பிஎல்ஐ நேரடி முகவா் தோ்வுக்கான நோ்காணல் நடைபெறவுள்ளது. ஆா்வமுள்ளவா்கள் வயது சான்றிதழ், கல்விச் சான்றிதழ், பான் காா்டு அட்டை நகல், ஆதாா் நகல், பாஸ்போா்ட் அளவு புகைப்படத்துடன் ஈரோடு அஞ்சல் கோட்ட அலுவலகத்தை அணுகலாம்.
எஸ்எஸ்எல்சி தோ்ச்சி பெற்ற 18 முதல், 50 வயதுக்கு உள்பட்ட ஆயுள் காப்பீடு முன்னாள் முகவா்கள், அங்கன்வாடி ஊழியா்கள், முன்னாள் படைவீரா்கள், ஓய்வு பெற்ற ஆசிரியா்கள், சுயதொழில், வேலை தேடும் இளைஞா்கள் விண்ணப்பிக்கலாம்.
கூடுதல் விவரங்களுக்கு 0424-2258066 என்ற தொலைபேசி எண்ணில் தொடா்பு கொள்ளலாம் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.