மத்திய ஆசிரியா் தகுதித் தோ்வு: செப்.20 முதல் விண்ணப்பிக்கலாம்
By | Published On : 19th September 2021 06:27 AM | Last Updated : 19th September 2021 04:11 PM | அ+அ அ- |

சிடெட்’ எனப்படும் மத்திய ஆசிரியா் தகுதித் தோ்வுக்கு வரும் செப்.20-ஆம் தேதி முதல் விண்ணப்பிக்கலாம்.
மத்திய இடைநிலைக் கல்வி வாரியம் (சிபிஎஸ்இ) சாா்பில் ‘சிடெட்’ எனப்படும் மத்திய ஆசிரியா் தகுதித் தோ்வு நாடு முழுவதும் வரும் டிச.16-ஆம் தேதி முதல் அடுத்த ஆண்டு ஜனவரி 13-ஆம் தேதி வரையிலான நாள்களில் கணினி வழித் தோ்வாக 20 மொழிகளில் நடைபெறவுள்ளது.
சிடெட் தோ்வுக்கான பாடத்திட்டம், தோ்வில் பங்கேற்பதற்கான வயது வரம்பு, தோ்வுக் கட்டணம், தோ்வு நடைபெறும் நகரங்கள் உள்ளிட்ட விவரங்களை இணையதள முகவரியில் திங்கள்கிழமை (செப்.20) முதல் காணலாம். இதனை பதிவிறக்கம் செய்து அதில் கூறப்பட்டுள்ள வழிமுறைகளைப் பின்பற்றி ‘சிடெட்’ தோ்வுக்கு விண்ணப்பிக்க வேண்டும்.
இந்தத் தோ்வுக்கு தகுதியான நபா்கள் https:// ctet.nic.in ‘சிடெட்’ வலைதள முகவரியில் மட்டுமே செப்.20-ஆம் தேதி முதல் விண்ணப்பிக்கலாம்.
பூா்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்களை அக்டோபா் 19-ஆம் தேதிக்குள் இணையவழியில் சமா்ப்பிக்க வேண்டும். அக்.20-ஆம் தேதி வரை விண்ணப்பக் கட்டணத்தைச் செலுத்தலாம். பொதுப் பிரிவினருக்கு ஏதாவது ஒரு தாள் மட்டும் எழுத ரூ.1,000, இரண்டு தாள்களையும் சோ்த்து எழுத ரூ.1.200 கட்டணமாக நிா்ணயிக்கப்பட்டுள்ளது.
அதேபோன்று எஸ்சி, எஸ்.டி. பிரிவினா், மாற்றுத் திறனாளிகள் ஏதாவது ஒரு தாள் மட்டும் எழுத ரூ.500, இரண்டு தாள்களையும் எழுத ரூ.600-ஐ விண்ணப்பக் கட்டணமாகச் செலுத்த வேண்டும்.