ஆசிரியர் தகுதித் தேர்வு முதல் தாள்: கடினமான உளவியல், எளிதான கணிதம்: இன்று பட்டதாரி ஆசிரியர்களுக்கான தேர்வு

தமிழகம் முழுவதும் சனிக்கிழமை (ஏப்.29) நடைபெற்ற இடைநிலை ஆசிரியர் தகுதித் தேர்வு முதல் தாளை 2.7 லட்சம் பேர் எழுதினர்.
சென்னை அண்ணா நகர் அண்ணா ஆதர்ஷ் மெட்ரிக் மேல்நிலைப்பள்ளியில் சனிக்கிழமை நடைபெற்ற ஆசிரியர் தகுதித் தேர்வைப் பார்வையிடும் மாவட்ட ஆட்சியர் வெ.அன்புச்செல்வன்.
சென்னை அண்ணா நகர் அண்ணா ஆதர்ஷ் மெட்ரிக் மேல்நிலைப்பள்ளியில் சனிக்கிழமை நடைபெற்ற ஆசிரியர் தகுதித் தேர்வைப் பார்வையிடும் மாவட்ட ஆட்சியர் வெ.அன்புச்செல்வன்.

தமிழகம் முழுவதும் சனிக்கிழமை (ஏப்.29) நடைபெற்ற இடைநிலை ஆசிரியர் தகுதித் தேர்வு முதல் தாளை 2.7 லட்சம் பேர் எழுதினர். குழந்தைகளுக்கான உளவியல் பகுதி வினாக்கள் கடினமாகவும் கணிதம், தமிழ் பகுதி வினாக்கள் எளிதாக இருந்ததாகவும் தேர்வர்கள் தெரிவித்தனர்.
முதல் வகுப்பு முதல்...: தமிழகத்தில் ஆசிரியர் தகுதித் தேர்வு சனிக்கிழமை தொடங்கியது. முதல் வகுப்பு முதல் 5-ஆம் வகுப்பு வரை பணியாற்றுவதற்கான இடைநிலை ஆசிரியர் பணிக்கான (முதல் தாள்) தேர்வு நடைபெற்றது. இதற்கு கல்வித் தகுதி ஆசிரியர் பட்டயப் பயிற்சி முடித்திருக்க வேண்டும்.
இத்தேர்வுக்காக தமிழகத்தில் 598 மையங்களில் 2 லட்சத்து 37 ஆயிரம் பேர் தேர்வு எழுதினர். காலை 10 மணிக்குத் தொடங்கிய தேர்வுக்கு அரை மணி நேரத்துக்கு முன் தேர்வு எழுதுபவர்கள் மையத்துக்குள் அனுமதிக்கப்பட்டனர்.
செல்லிடப்பேசி, கால்குலேட்டர், கைக்குட்டை போன்றவற்றைத் தேர்வர்கள் எடுத்துச் செல்லத் தடை விதிக்கப்பட்டது. இதனால் தீவிர சோதனைக்குப் பிறகே தேர்வு எழுத அனுமதிக்கப்பட்டனர். முறைகேடுகளைத் தடுக்க பறக்கும் படை, கண்காணிப்புக் குழு அமைக்கப்பட்டிருந்தது.
மாவட்ட ஆட்சியர் ஆய்வு:சென்னை மாவட்டத்தில் அண்ணாநகரில் உள்ள அண்ணா ஆதர்ஷ் மெட்ரிகுலேஷன் பள்ளித் தேர்வு மையத்தை மாவட்ட ஆட்சியர் வெ.அன்புச்செல்வன் பார்வையிட்டார்.
அசோக்நகர், கோடம்பாக்கம் அரசு மேல்நிலைப் பள்ளிகளில் அனைவருக்கும் இடைநிலைக் கல்வி இயக்குநர் எஸ்.கண்ணப்பன் ஆய்வு மேற்கொண்டார். சென்னை மாவட்டத்தில் தேர்வு எழுத அனுமதிக்கப்பட்ட 10,147 பேரில் 9,657 பேர் தேர்வெழுதினர்.
அசோக்நகர் அரசு மேல்நிலைப்பள்ளியில் தேர்வெழுதிய என்.பிரபாகரன், எஸ்.கோகிலா உள்ளிட்டோர் கூறியது:
தமிழ், ஆங்கிலம், கணிதம், குழந்தை மேம்பாடு மற்றும் கற்பித்தல் (கல்வி உளவியல்), சூழ்நிலை அறிவியல் ஆகிய 5 பாடப் பகுதிகளில் தலா 30 கேள்விகள் வீதம் மொத்தம் 150 கேள்விகள் கேட்கப்பட்டிருந்தன.
உளவியல் பகுதியில் தானியங்கி நரம்புத் தொகுதியில் மனவெழுச்சிகளால் தூண்டும் செயல்களால் ஏற்படும் மாற்றங்களின் வேகத்தை அளவிடப் பயன்படும் கருவியின் பெயர், ஒரு நியூரானிலிருந்து மற்றொரு நியூரான் தூண்டலைப் பெறும் பாகம் உள்பட 10-க்கும் மேற்பட்ட வினாக்கள் கடினமாக இருந்தன. தமிழ் பிரிவில் சில இலக்கண வினாக்களுக்குப் பதிலளிப்பது சற்று சிரமமாக இருந்தது.
கணிதப் பிரிவில்...கணிதப் பிரிவில் ஒரு தொலைக்காட்சிப் பெட்டியின் விலை 8 சதவீத மதிப்புக்கூட்டு வரியுடன் ரூ.15,660 எனில், மதிப்புக்கூட்டு வரியின்றி அதன் விலை என்ன உள்பட சூழ்நிலை அறிவியல், ஆங்கிலம் ஆகிய பிரிவுகளில் கேட்கப்பட்ட பெரும்பாலான வினாக்கள் எளிதாக இருந்தன. கடந்த தேர்வுகளில் 30 சதவீதம் வரை பாடப் பகுதிக்கு வெளியிலிருந்து வினாக்கள் கேட்கப்பட்டன. ஆனால், இந்த முறை 50 சதவீத வினாக்கள் அவ்வாறு கேட்கப்பட்டிருந்தன. ஒட்டுமொத்தமாகப் பார்க்கும்போது இடைநிலை ஆசிரியர்களுக்கான தகுதித் தேர்வு முதல் தாள் சற்று கடினமாகவே இருந்தது என்றனர்.
பட்டதாரி ஆசிரியர்களுக்கான (இரண்டாம் தாள்) தேர்வு ஞாயிற்றுக்கிழமை (ஏப்.30) நடைபெறவுள்ளது. இதில் 5 லட்சம் பேர் தேர்வு எழுதவுள்ளனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com