
கொல்கத்தாவில் 1,000 கிலோ வெடிபொருட்கள் பறிமுதல் செய்யப்பட்ட விவகாரத்தில் இருமாநில சிறப்பு அதிரடிப்படையினர் 3 பேரை கைது செய்தனர். கொல்கத்தாவில் சிறப்பு அதிரடிப்படையினர் நடத்திய திடீர் தேடுதல் வேட்டையில் 27 பைகளின் மூலம் லாரியில் கடத்தப்பட்ட ஆயிரம் கிலோ வெடிபொருட்களை பறிமுதல் செய்தனர்.
இதுதொடர்பாக இந்திரஜித் பூயி (25) மற்றும் பத்மலோச்சன் தே (31) ஆகிய இருவரை கைது செய்து விசாரித்து வந்தனர். இவர்கள் இருவரும் ஒடிஸா மாநிலத்தைச் சேர்ந்தவர்கள் என முதல்கட்ட விசாரணையில் தெரியவந்தது. இதையடுத்து தொடர்ந்து நடைபெற்ற விசாரணையில் சுகந்த சாஹூ (42) என்பவரை ஒடிஸா சிறப்பு அதிரடிப்படையினர் கைது செய்தனர்.
இருமாநில சிறப்பு அதிரடிப்படையினர் இணைந்து செயல்பட்டு நடத்திய விசாரணையில், சாஹூ என்பவன் ஆந்திர மாநிலத்தில் இருந்து கொல்கத்தாவுக்கு தொடர்ந்து இதுபோன்று வெடிபொருட்களை கடத்திச் சென்றுள்ளது தெரியவந்துள்ளது. கொல்கத்தாவில் உள்ள பட்டாசு தொழிற்சாலைக்கு பலமுறை கடத்தப்பட்டுள்ளதாக ஒடிஸா டிஜிபி தெரிவித்தார். இதுகுறித்து விசாரணை நடைபெற்று வருகிறது.