Enable Javscript for better performance
கண்கள் நலமே!- Dinamani

சுடச்சுட

  

  “கண்ணே நலமா?” என்னும் கேள்விக்கு, “நலமே” என்ற பதில் சொல்ல வேண்டும் என்று நினைத்தீர்களென்றால், இவற்றை மனதில் கொள்ளுங்கள்.

  குழந்தை பிறந்தவுடன், கண்களை நன்றாகத் திறக்கிறதா என்று பாருங்கள். கருவிழி, நல்ல கருநிறமாக இருக்க வேண்டும். நீல நிறமாகவோ, கருவிழியின் நடுவே வெள்ளையாகத் தெரிந்தாலோ, உடனே கண் மருத்துவரிடம் காண்பிக்க வேண்டும். குழந்தை பிறந்து சில வாரங்கள் வரை, அவ்வப்போது, மாறுகண் மாதிரி காணப்பட்டால், பரவாயில்லை. சில மாதங்கள் கழித்தும், மாறுகண் இருக்குமானால், பரிசோதனை செய்ய வேண்டும்..

  மூன்று வயதிலேயே, கண்ணாடிக் குறைபாடு ஏதேனும் உள்ளதா , என்று பார்த்து விடுவது நல்லது.

  ஒரு வயதுக் குழந்தை ஒன்றை, அதன் பெற்றோர், எல்லாவற்றையும் கிட்டே கிட்டே போய் பார்க்கிறது என்று கூட்டி வந்தார்கள். மைனஸ் எட்டு பவர் இருந்தது…கண்ணாடி போட்டுக் கொண்டால் கண் தெரிகிறது என்பதை உணர்ந்து கொண்டு, அழகாய் அணிந்து கொண்டது..,

  குழந்தைகளுக்கு, பள்ளிப்படிப்பு முடியும் வரையில் கண்ணாடி பவர் ஆரம்பிக்க வாய்ப்புள்ளது.

  எப்போது கண்ணில் அடிபட்டாலும், கண் மருத்துவரிடம் காண்பித்து விடுவது நல்லது.

  தலைவலி, கண்வலி, கண்கட்டி எற்படுதல் போன்றவை இருந்தாலும் கண்ணைக் கட்டாயம் பரிசோதிக்க வேண்டும்.

  தொலைக்காட்சி, கணினி விளையாட்டுக்கள் போன்றவற்றை, வெகுவாகக் குறைத்துக் கொள்ள வேண்டும்.. படுத்துக்கொண்டே, தொலைக்காட்சி பார்ப்பது, படிப்பது, கண்ணுக்குக் கெடுதல். அதேபோன்று, எல்லா விளக்குகளையும் அணைத்து விட்டு, இருட்டில் தொலைக்காட்சி பார்ப்பது, இருட்டில் அலைபேசித் திரையைத் தொடர்ந்து பார்ப்பது, ஆகியவையும் கண்ணைக் கசையால் அடிப்பதற்குச் சமம் தான்.

  ஏறத்தாழ நாற்பது வயதில், வெள்ளெழுத்து கட்டாயம் வரவேண்டும். ஏற்கனவே, கண்ணில் மைனஸ் பவர் உள்ளவர்கள் மட்டும் தான், கண்ணாடி அணியாமலே சிறு எழுத்துக்களைப் பார்க்க முடியும்.

  கண்ணாடி பவர் உள்ள  குழந்தைகள் மற்றும் பெரியவர்கள், வருஷம் ஒரு முறை கண்ணைப் பரிசோதிக்கவும். சர்க்கரை நோய் உள்ளவர்கள், மற்றும் பரம்பரையாக கண் நீர் அழுத்த நோய் உள்ளவர்கள், முதலிலிருந்தே, சீரான இடைவெளியில், கண் பரிசோதனை மேற்கொள்ள வேண்டும்.

  கண்ணாடிக் கடைகளில், கண் பரிசோதனை செய்து கொண்டாலும் , கண் டாக்டரிடமோ, மருத்துவமனையிலோ சென்று, கண் பிரெஷர், விழித்திரை ஆகியவற்றைப் பரிசோதித்துக் கொள்ள வேண்டும்

  இப்போது முக்கியமான பகுதிக்கு வருவோம்…கண் புரையைப் பற்றி…

  நன்றாக மறைக்கத் தொடங்கி, உங்கள் வேலையைப் பாதிக்கும் போது, புரை அறுவை சிகிச்சை செய்து கொள்ளலாம். இரண்டு கண்களையும் நாளைக்கே செய்து கொள்ளாவிட்டால் வெடித்துவிடும் என்பதெல்லாம், மறு மதிப்பீடு செய்ய வேண்டிய கருத்துக்கள்.

  அறுவை சிகிச்சைக்கு முன் இரண்டே கேள்விகள்..

  1.   உங்களுக்கு மருத்துவரைத் தெரியுமா?[ செய்யப் போகிறவர்].

  2.   மருத்துவருக்கு உங்களைத் தெரியுமா?[அதாவது, உங்கள் கண் விவரங்கள்]

  இந்த இரண்டு கேள்விகளுக்கும் பதில், “ஆம்” எனில் மிக நன்று..

  விளம்பரங்கள், என்னென்ன சிகிச்சை எங்கெங்கு கிடைக்கிறது என்பதை அறியவே உதவும்…. சிகிச்சையின் தரத்தை, ஏற்கனவே அங்கு சிகிச்சை செய்து கொண்டிருப்பவர்களிடம் உறுதி செய்து கொண்டு மேற்கொள்ளுங்கள்…

  அனைத்து காப்பீட்டு நிறுவனங்களும், கண் அறுவை சிகிச்சைக்கு, ஈடு வழங்குகின்றன. விழித்திரை விலகலுக்கான [retinal detachment] அறுவை சிகிச்சை போன்ற குறிப்பிட்ட சிகிச்சைகள், அரசின் காப்பீட்டுத் திட்டத்திலும் செய்யப்படுகின்றன.

  தானத்தில் சிறந்தது கண் தானம்…..

  அருகிலுள்ள பெரிய அரசாங்க, தனியார் கண் மருத்துவமனைகளிலும், ரோட்டரி போன்ற சேவை அமைப்புகளிலும் முன்பதிவு செய்து, அட்டை பெற்று வைத்துக் கொள்ளலாம்…

  இறந்தவர்களின் நெருங்கிய உறவினரும் தானத்திற்கான முடிவை எடுக்கலாம்.

  இறப்பிலிருந்து, ஆறு மணி நேரத்திற்குள்ளாக கண்களை வழங்கி விட வேண்டும்.

  கண் தானத்திற்குப் பிறகு, இறந்தவரின் முகவடிவில் மாறுதல் இராது. கோரம் காட்டாது.

  தூங்குவது போலவே தெரியும்.

  யார் கண் தானம் செய்யலாம்?

  1. வயது பிரச்சினையில்லை..

  2. கருவிழி நன்றாக உள்ளவர்கள் எல்லோரும் கொடுக்கலாம்.

  3. புரை ஆபரேஷன் செய்து கொண்டவர்களும் வழங்கலாம்.

  4. சர்க்கரை நோய், ரத்தக்கொதிப்பு போன்றவற்றால் பாதிக்கப்பட்டவர்களும் கொடுக்கலாம்.

  யார் கண் தானம் செய்ய இயலாது?

  1. மூளைக்காய்ச்சல் மற்றும் வேறு தொற்று நோயால் இறப்பவர்கள்.

  2. ஹெச்.ஐ.வி. தொற்றுள்ளவர்கள், ஹெபடைடிஸ் தொற்றுள்ளவர்கள்.

  3. ஏற்கனவே கருவிழியில் தழும்பு, புண் , வெள்ளை உள்ளவர்கள்.

  4. லியூகீமியா போன்ற ரத்தப் புற்றுநோயால் இறப்பவர்கள்…….

  5. கருவிழியில், லாசிக் லேசர் போன்ற சிகிச்சை செய்து கொண்டவர்கள்…

  கண் தானம் செய்யும் போது, முழுக் கண்களையும் எடுத்துச் சென்றாலும், மாற்றி வைக்க முடிவது, கருவிழி மட்டுமே. ஆகவே, கருவிழியில் பூ விழுந்து, [வெள்ளை] பார்வை இழப்பவர்கள் மட்டுமே, கண் தானத்தின் பயனாளிகள்.

  கொண்டு வந்தது ஒன்றும் இல்லை,

  கொண்டு செல்வதும் ஒன்றும் இல்லை,

  கொடுத்துச் செல்வோம் கண்களிரண்டை –ஒளி

  கிடைக்கச் செய்வோம் இருவருக்கு…

  (முற்றும்)

  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம்
   பகிரப்பட்டவை
  google_play app_store
  kattana sevai