Enable Javscript for better performance
உலகளாவிய நீடித்த வளர்ச்சியில் தாய்ப்பால் ஊட்டும் பெண்களின் பங்கு!- Dinamani

சுடச்சுட

  

  உலகளாவிய நீடித்த வளர்ச்சியில் தாய்ப்பால் ஊட்டும் பெண்களின் பங்கு!

  By ஜங்ஷன் - intro  |   Published on : 01st August 2016 12:51 PM  |   அ+அ அ-   |    |  

  246433_522380837776948_1364810777_n

  கருவுருதலும், ஈன்றெடுத்த குழந்தைக்கு தன் உதிரத்தில் சுரந்த பாலை ஊட்டுவது என்பது தாயின் தனி உரிமையும் பெருமையும் அல்லவா! பெண்களுக்கு இயற்கை தந்திருக்கும் மணி மகுடம அது! இயற்கை பெண்களை மதிக்கிறது, போற்றுகிறது என்பதற்கு இதுவே சான்று!

  தாய்ப்பால் அளிப்பதால் உலகளவில் பல வளர்ச்சிகள் ஏற்படும் என்கிறது இந்த வருடத்திய உலகத் தாய்ப்பால் வாரத்தின் மையக் கருத்து “Breast feeding – key to sustainable developments’.

  இந்தப் புத்தாயிரம் ஆண்டில் பல வளர்ச்சி இலக்குகள் (Millenium Development Goals) நிர்ணயிக்கப்பட்டு அவற்றில் 17 நீடித்த வளர்ச்சிக்கான இலக்குகளாக முக்கியத்துவம் பெறுகின்றன. குழந்தைகளுக்கு தாய்ப்பால் அளிப்பதால் இதில் 7 இலக்குகளை அடையலாம் என்கிறது Lancet என்ற உலகத்தரம் வாய்ந்த மருத்துவப் பத்திரிகை!

  1. முதல் இலக்கு - வறுமையை ஒழிப்பது

  குழந்தை பிறந்த 6 மாதங்கள் தாய்ப்பால் மட்டுமே ஊட்டி அதன் பிறகு வீட்டில் தயாரிக்கப்படும் உணவுகளுடன் தாய்ப்பாலும் தருவதால் குழந்தையின் உடல் மற்றும் மனநலம் பேணப்படுகிறது. பால் மாவுகளுக்கான செலவுகளும் சிகிச்சைகளுக்கான செலவும் இல்லை. தாய் உடல் நலத்துடன் இருப்பதால் பணிக்குச் சென்று சம்பாதிக்கலாம். இதனால் வறுமை ஒழியும்.

  2. இரண்டாவது இலக்கு – பசிப்பிணியை ஒழிப்பது

  தாய்ப்பாலில் குழந்தைகளுக்குத் தேவையான கார்போஹைட்ரேட், புரோட்டீன், கொழுப்பு, வைட்டமின்கள், தாது உப்புகள், மற்றும் இரும்பு, தாமிரம், துத்தநாகம், அயோடின், செலினியம், மங்கனீசு, மக்னீஷியம் போன்ற பல நுண்ணூட்டச் சத்துக்கள் நிறைந்திருக்கிறது. எனவே பசிப்பிணி குழந்தையை நெருங்க முடியாது.

  3. மூன்றாவது இலக்கு – Good health and well being – உடல் மற்றும் மன நலம்

  நல்வாழ்விற்கான முக்கியமான இலக்கு! தாய்ப்பால் தருவதால் தாய்க்கும் குழந்தைக்கும் உடல் நலம் மற்றும் மன நலம் பேணப்படுகிறது.

  குழந்தைக்கு,

  1. நல்ல ஊட்டச் சத்துக்கள் கிடைப்பதால் ஊட்டச் சத்துக் குறைபாடு நோய்கள் இல்லை.

  2. தாய்ப்பாலில் நோய் எதிர்ப்புச் சக்திகள் இருப்பதால் பல உயிர்க்கொல்லி நோய்கள் வருவது குறைகிறது

  3. தாய் சேய் பாசப் பிணைப்பு அதிகமாகிறது

  4. தாய் குழந்தையை சேர்த்து அணைத்து கண்ணோடு கண் பார்த்து சிரித்து பேசி, பாடி பால் தருவதால் குழந்தையின் உணர்வுகள் தூண்டப்பட்ட நல்ல மனநிலை கிடைக்கிறது.

  5. குழந்தைக்கு Tender affection, love, care என்ற மென்மை, அன்பு, பாசம், அரவணைப்பு ஆகியவை கிடைக்கிறது.

  தாய்க்கு,

  1. என் குழந்தைக்கு, என் பாலை அளித்து வளர்க்கிறேன் என்ற பெருமிதத்தால் சுயமதிப்பு (self esteem) அதிகரித்து, அகத்தின் அழகு முகத்தில் மிளிர்கிறது.

  2. கர்ப்ப காலத்தில் உடலில் சேர்ந்த சுமார் 3 கிலோ கொழுப்பு பாலூட்டுவதால் குறைக்கப்பட்டு தாய் தன் பழைய உடல் அமைப்பை எளிதில் பெறுகிறாள்.

  3. கருப்பை எளிதில் சுருங்கி அடிவயிறு சமநிலைப் பெறுகிறது.

  4. பால் ஊட்டும் ஆறு மாதங்கள் தாய் கர்ப்பம் தரிப்பதில்லை.

  5. பாலூட்டும் தாய்க்கு மார்பகப் புற்றுநோய் மற்றும் சினை முட்டைப் பை புற்று நோய் வரும் வாய்ப்பு குறைகிறது.

  4. நான்காவது இலக்கு – Quality Education தரமான கல்வி

  தாய்ப்பால் குடித்து வளரும் குழந்தைக்கு IQ அதிகம் என்பதை Lancet (2015) பத்திரிகை குறிப்பிடுகிறது. குழந்தையின் மூளை வளர்ச்சி, திறன் வளர்தல், அறிவு மேம்படுதல் ஆகியவற்றுக்கான DHA, Epidermal growth factor, cystine, taurine போன்ற பலவகை பொருள்கள் தாய்ப்பாலில் உள்ளன. நோய்கள் இன்றி, நல்ல மனநிலையுடன் IQ அதிகமானால் கல்வி வளர்ச்சிக்கு வானமே தான் எல்லை!

  5. எட்டாவது இலக்கு – தகுந்த பணியும் பொருளாதார வளர்ச்சியும் – Decent work and economic growth

  தற்போது பெண்கள் பல சிகரங்களை எளிதில் அடைகிறாரக்ள். கல்வி, பணி, பணி உயர்வு, ஆராய்ச்சி, விளையாட்டு என்று பலப்பல துறைகளில் சாதனைப் பெண்களாக மகளிர் பரிமளிக்கிறார்கள். பணி புரியும் பெண்களால் வீட்டின் மற்றும் நாட்டின் பொருளாதாரமும் உயர்கிறது. பணிபுரியும் அனைத்து மகளிருக்கும் பேறு காலத்திலும் பாலூட்டும் காலத்திலும் போதுமான ஊக்கமும் ஆதரவும் அளிக்கப்பட வேண்டும்! இது Maternity Protection Act என்று பொதுவாக குறிப்பிடப்படுகிறது. ஊதியத்துடன் 6 மாதங்கள் விடுப்பு, பணி மாற்றம், பணி இட மாற்ற, பணியில் தினமும் பாலூட்டும் இடைவெளியில் அடிப்படை வசதிகளுடன் கூடிய தனி இடம் ஆகியவை அளிக்கப்பட வேண்டும். அடிப்படையில் பெண்களால் எளிதில் Multi tasking செய்ய முடியும். தேவையான ஆதரவு அளித்தால் மகளிர் வேலையையும், பாலூட்டுவதையும் எளிதில் சமாளிக்கலாம்.

  6. பத்தாவது இலக்கு -பொருளாதார ஏற்றத் தாழ்வை குறைத்தல் (Reduced In Quality)

  குடும்பத்தின் ஆணி வேரான தாயும், வாரிசான குழந்தைகளும் நல்ல உடல்நலம் மற்றும் மனநலத்துடன் இருந்தால் பொருளாதார வளர்ச்சி எளிதில் ஏற்படும். பொருளாதார ஏற்றத் தாழ்வுகள் குறையும்.

  7. 13 வது இலக்கு – Climate action – சுற்றுச் சூழல் பாதுகாப்பு

  தாய்ப்பால் அளிப்பதால் சுற்றுச் சூழல் பாதுகாக்கப்படுகிறது. இயற்கையான தாய்ப்பாலில் waste பொருட்கள் எதுவும் இல்லை. மாவுப் பால் வகைகள் தயாரிக்க எரிபொருள் செலவு, தொழிற்சாலைகள் வெளியிடும் புகை, மற்றும் தூசி மாசு, சந்தைப்படுத்த உதவும் வாகனங்களால் ஏற்படும் எரிபொருள் செலவு, புகை, பால் மாலை பேக்கிங் செய்ய அட்டைப் பெட்டி, டின், வீடுகளில் மாவிலிருந்து பால் தயாரிக்கத் தேவையான தண்ணீர், எரிபொருள் என்று இந்த மாசுப் பட்டியல் நீண்டு கொண்டே போகிறது. எந்த ஒரு இயற்கைச் சீற்றத்தின் போதும் பேரிடர் காலத்திலும் தொடர்ந்து தாய்ப்பால் தரப்பட வேண்டும். இது தாய்க்கும் குழந்தைக்கும் பாதுகாப்பு.

  சில புள்ளி விபரங்கள்

  1. தாய்ப்பால் கொடுப்பதால் இந்தியாவில் மட்டும் வருடத்துக்கு 1,56,000 குழந்தைகள் இறப்பதைத் தவிர்க்கலாம்.

  2. தாய்ப்பால் அளிப்பதால் உலக அளவில் வருடத்துக்கு 8,20,000 குழந்தைகள் இறப்பதைத் தடுக்கலாம்.

  3. குழந்தைகள் அறிவுத் திறன் மேம்படுவதால் இந்தியாவின் வருமானம் அதிகரிக்கும். இது வருடத்துக்கு சுமார் 4300 கோடி ரூபாய்.

  4. வருடத்துக்கு சுமார் 20000 மகளிர் மார்பகப் புற்றுநோயால் இந்தியாவில் மடிகின்றனர். தாய்ப்பால் அளிப்பதால் இதில் 4915 இறப்புகளை தடுக்க முடியும்.

  5. பிறக்கும் எல்லாக் குழந்தைக்கும் தாய்ப்பால் கொடுத்தால் வருங்காலத்தில் சர்க்கரை நோய் 35% குறையக் கூடும்.

  தாய் தன் குழந்தைக்குத் தாய்ப்பால் ஊட்டுவது என்ற ஒரு இயற்கையான செயலால் உலகளவில் வளர்ச்சிக்கு அடித்தளம் அமைக்க முடியும்.

  ஒவ்வொருவரும் நமது வீட்டிலிருந்து இந்த சாதனையைத் தொடங்கலாமா!

  (Dr.N.கங்கா,குழந்தைகள் மருத்துவ நிபுணர்,கும்பகோணம்,அலைபேசி - 094431 23313)

  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம்
   பகிரப்பட்டவை
  google_play app_store
  kattana sevai