காற்று மாசுபாட்டில் இருந்து உங்களது சருமத்தை பாதுகாக்க வேண்டுமா? இதைச் சாப்பிட்டால் போதும்..

தில்லியில் ஏற்பட்டுள்ள காற்று மாசுபாடு உலகையே உலுக்கியுள்ளது என்று கூறலாம். அண்டை மாநிலங்களில் எரிக்கும் பயிர்க் கழிவுகளாலும், அதிக வாகனப் பயன்பட்டாலும் தில்லியில் காற்று மாசுபாடு அதிகரித்து வருகிறது.
காற்று மாசுபாட்டில் இருந்து உங்களது சருமத்தை பாதுகாக்க வேண்டுமா? இதைச் சாப்பிட்டால் போதும்..

தில்லியில் ஏற்பட்டுள்ள காற்று மாசுபாடு உலகையே உலுக்கியுள்ளது என்று கூறலாம். அண்டை மாநிலங்களில் எரிக்கும் பயிர்க் கழிவுகளாலும், அதிக வாகனப் பயன்பட்டாலும் தில்லியில் காற்று மாசுபாடு அதிகரித்து வருகிறது. இதனைக் கட்டுப்படுத்த மத்திய மற்றும் மாநில அரசுகள் பல்வேறு முயற்சிகளை மேற்கொண்டு வருகின்றன. இதேபோன்ற ஒரு நிலை சென்னை, மும்பை, பெங்களூரு உள்ளிட்ட மற்ற நகரங்களுக்கும் வரும் நிலைமை வெகு தூரத்தில் இல்லை என நகர மக்கள் அனைவருமே கவலை கொண்டிருக்கின்றனர். 

தில்லியில் காற்று மாசுபாடு அதிகரிக்க, வாகனப் பெருக்கமும் முக்கிய காரணமாக பார்க்கப்படுகிறது. இதுதவிர தொழிற்சாலைக்கழிவுகள் எரித்தல், கட்டுமானப்பணிகள், மெட்ரோ ரயில் பணிகள் என பல காரணங்கள் இருக்கின்றன. தில்லியைத் தொடர்ந்து சென்னையின் பல்வேறு பகுதிகளிலும் காற்று மாசுபாடு கடந்த சில நாட்களாகத் தொடர்ந்து அதிகரித்த வண்ணம் இருக்கிறது. இது மக்களிடையே பெரும் கவலையை உண்டாக்கியுள்ளது. 

ஒருபக்கம் காற்று மாசுபாடு அதிகரிப்பதை தடுக்க அரசு நடவடிக்கை எடுத்தாலும், மற்றொரு பக்கம் காற்று மாசில் இருந்து நம்மை நாம் காத்துக்கொள்வது அவசியமாகிறது. காற்றில் மிதக்கும் நுண்ணிய துகள்களாக இருக்கும் நச்சுகளை நமது சருமம் உறிஞ்சுவதை தடுக்கலாம். 

நமது சருமம் இந்த நச்சுகளை உள்வாங்கும் போது தோல் அழற்சி, சரும எரிச்சல், முகப்பரு, படை நோய் என பல்வேறு தோல் பிரச்சினைகள் ஏற்படும். இதன் காரணமாக சருமத்தில் ஏற்படும் மாற்றத்தின் விளைவாக முகம் வயதானவர் போன்ற தோற்றத்தை ஏற்படுத்தும். இதனைத் தடுக்க வைட்டமின் சி உள்ள உணவு வகைகளை எடுத்துக்கொள்ள வேண்டும் என்று தோல் நிபுணர்கள் அறிவுறுத்துகின்றனர்.

நெல்லிக்காய், கொய்யா, கிவி பழம், பப்பாளி, ஸ்டிராபெர்ரி, ஆரஞ்சு, எலுமிச்சம் பழம், காலிபிளவர், திராட்சைப்பழம், முட்டைக்கோஸ்,  அன்னாசிப்பழம், மாம்பழம், உள்ளிட்ட வைட்டமின் சி நிறைந்த உணவுப்பொருட்களை அதிகமாக உணவில் எடுத்துக்கொள்ள வேண்டும். 

விட்டமின் சி அதிகம் எடுத்துக்கொள்வதனால் நம் உடலில் என்ன மாற்றங்கள் நிகழ்கின்றன? 

1. ஆக்ஸிஜனேற்றியாக செயல்படுகிறது

காற்றில் உள்ள நச்சுகளை நாம் சுவாசிக்கும் போது அது உடலில் உள்ள செல்களை சேதப்படுத்துகிறது. அவை நுரையீரலுக்குள் நுழைந்தால் கடுமையான சேதத்தை ஏற்படுத்தும். இந்த ஃப்ரீ ரேடிகல்கள் இதய நோய்கள், சுவாசப் பிரச்சினைகள் மற்றும் சில சூழ்நிலைகளில் புற்றுநோய் போன்றவற்றுக்குக் கூட காரணமாக அமையலாம். வைட்டமின் சி அதிகம் எடுத்துக்கொள்வதால் உடலில் ஆன்டி ஆக்ஸிடன்ட்கள் அதிகம் உருவாகின்றன.  

நச்சுகள் உடலில் சேதத்தை ஏற்படுத்தத் தொடங்குவதற்கு முன்பு, ஆன்டி ஆக்ஸிடன்ட்கள் ஃப்ரீ ரேடிக்கல்களை அழிக்கும். இதனால் நோய்களில் இருந்து உடல் பாதுகாக்கப்படும். 

2. பாதுகாப்பு அடுக்கை உருவாக்குகிறது

தீங்கு விளைவிக்கும் காற்றை நம் சருமம் உறிஞ்சுவதைத் தடுக்க வைட்டமின் சி முக்கிய பங்கு வகிக்கிறது. உடலைச் சுற்றி ஒரு பாதுகாப்பு அடுக்கு போல செயல்படுகிறது. காற்றில் உள்ள நச்சுகள், சருமத்தில் ஏற்படும் விளைவுகளை குறைக்க வைட்டமின் சி மிகவும் உதவுகிறது. 



3. புற ஊதாக் கதிர்களிடமிருந்து பாதுகாப்பு

புற ஊதாக் கதிர்களை சமாளிக்க சன்ஸ்கிரீனைத் தவறாமல் பயன்படுத்துவதன் மூலம் சிறந்த முடிவுகளைப் பெறலாம். சன்ஸ்கிரீன் ப்ரொடெக்ஷன் கிரீமைப் பயன்படுத்துவதற்கு முன்பு வைட்டமின் சி சீரம் பயன்படுத்தலாம். வெளியில் செல்லும்போது இதனை உபயோகிப்பதன் மூலம் காற்று மாசில் இருந்து உங்கள் சருமத்தை பாதுகாக்கலாம். 

4. சருமத்தை ஹைட்ரேட் செய்கிறது

ஆரோக்கியமான சருமம் வேண்டுமானால் அதிகமாக நீர் குடிக்க வேண்டும். சருமம் எப்போதும் வறட்சியாக இருக்க கூடாது. இருப்பினும், வெளியில் அதிக வெயில் மற்றும் காற்று மாசு காரணமாக கடுமையான சேதம் ஏற்படுவதால் சருமத்திற்கு தண்ணீர் மட்டும் போதுமானதாக இருக்காது. வைட்டமின் சி சீரம் பயன்படுத்துவது உங்கள் சருமத்தை ஈரப்பதமாக்குவதற்கு உதவும்.

5. வைட்டமின் சி உட்கொள்வது போதுமானதா?

வைட்டமின் சி- யை மாத்திரைகள் வடிவிலோ அல்லது வெவ்வேறு உணவுப் பொருட்கள் மூலமாகவோ நாம் எடுத்துக்கொள்வது போதுமானதாக இருந்தது. ஆனால், தற்போதைய சூழ்நிலையில், முழுவதுமாக ஆரோக்கியமான உணவை எடுத்துக்கொள்ள வேண்டும். ஆரோக்கியமில்லாத உணவுகளைத் தவிர்ப்பது சிறந்தது. சரியான நேரத்தில் ஆரோக்கியமான உணவுகளை எடுத்துக்கொள்வதும் உங்களது சருமப் பாதுகாப்பிற்கு உதவும். 

காற்று மாசு அதிகரித்து வரும் இந்த சூழ்நிலையில், சரும பராமரிப்பில் கவனம் செலுத்துங்கள்... 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com