எல்லாவற்றிலும் சிறப்பாக உங்கள் குழந்தைகள் வளர வேண்டுமா?

எல்லாவற்றிலும் சிறப்பாக உங்கள் குழந்தைகள் வளர வேண்டுமா?

குழந்தைகள் பூப்ப்போன்றவர்கள். அவர்களை நம்முடைய இஷ்டத்துக்கு வாட்டி எடுத்தால் வாடி விடுவார்கள்.

குழந்தைகள் பூப்ப்போன்றவர்கள். அவர்களை நம்முடைய இஷ்டத்துக்கு வளைத்தால் வாடி விடுவார்கள். குழந்தை வளர்ப்பு என்பது ஒரு கலை என்பார்கள். ஆனால் அது கலையையும் தாண்டி ஆன்மிகமான ஒரு விஷயம் என்று கூறலாம். காரணம் அடுத்த சந்ததியினரை பொறுப்புணர்வுடன் வளர்ப்பது சாதாரண விஷயம் இல்லை.  பொறுமையும், பேரன்புடனும் செய்ய வேண்டிய செயல் அது.  உங்கள் சிந்தனை செயல் எல்லாமே அதைச் சுற்றி இருந்தால்தான் சிறப்பாக உங்கள் குழந்தைகள் நாளை உலகை ஆள்வார்கள்.

தன்னைப் பற்றிய தெளிவான உள் உணர்வை முதலில் உங்கள் குழந்தைகளுக்கு ஊட்டுங்கள். காரணம் சுயமாக சிந்திக்கத் தெரிந்த குழந்தைகளுக்குத் தங்களுக்கு என்ன வேண்டும், எதை நோக்கி பயணிக்க வேண்டும் என்ற தெளிவு இருக்கு. வாழ்வில் தன்னால் முடிந்த அளவு உயர்வை நோக்கி யாரும் செலுத்தப்படாமல் தாங்களே அதனை நோக்கி செல்வார்கள். நீங்கள் படி படி என்று அவர்களிடம் சொல்லிக் கொண்டிருக்கவே வேண்டாம். அவர்களுக்கே அந்தத் தெளிவு இருக்கும். படிப்பது, விளையாடுவது, உடலைப் பேணிக் கொள்வது, மற்றவர்களுடன் சுமுகமாகப் பழகுவது, என பல நற்பண்புகளை இளமையில் பின்பற்றும் குழந்தைகள்தான் பின்னாட்களில் தனக்கு மட்டுமல்லாமல் தன்னை சார்ந்தவர்களின் உயர்வுக்காகவும் வாழ்வார்கள்.

தன்னம்பிக்கையுடன் வளரும் குழந்தைகள் ஒரு போதும் மற்றவர்களுடைய பாராட்டைப் பெறவும் மற்றவர்களின் கவனத்தையும் ஈர்க்க முயற்சிக்க மாட்டார்கள். மாறாக தங்களுடைய இலக்கில் கவனச் சிதறல்கள் எதுவுமின்றி தெளிவாக அப்பாதையை மாற்றிக் கொண்டு தங்கு தடையின்றிப் பயணப்படுவார்கள். 

சிந்தனையில் தெளிவுடைய குழந்தைகள் தங்களுடைய மேலாண்மை குணத்தை தாங்களே கட்டமைத்துக் கொள்வார்கள் அதே சமயம் மற்றவர்கள் மீது குற்றம் குறைகள் அல்லது பழிகளை சுமத்த மாட்டார்கள். எந்த விஷயத்திலாவது தோல்வி அடைந்தால், உடனே அதற்கு நீதான் காரணம் என்று கூறாமல் தன்னிடம் என்ன பிரச்னை, எங்கே சறுக்கினோம் என்று சுய பரிசோதனைக்கு ஆட்படுத்திக் கொள்வார்கள். மேலும் இளம் வயதிலேயே வெற்றி தோல்விகளை சமமாகப் பார்க்கும் பக்குவத்தை வளர்த்துக் கொள்வார்கள். வெற்றி கிடைத்தால் வான் வரை எம்பிக் குதிப்பதும், தோல்வி ஏற்பட்டால் துவண்டு சோர்ந்து போய் முடங்கிவிடாமல் எல்லாவற்றையும் வாழ்வானுபவமாகப் பார்ப்பார்கள். முக்கியமாக தலைகனம் இல்லாமல் இருப்பார்கள். 

ஒரு முடிவை எடுத்துவிட்டால் அதிலிருந்து பின்வாங்க மாட்டார்கள். மேலும் அதற்கு முழு பொறுப்பையும் எடுத்துக் கொள்வார்கள்.  அவர் என்ன நினைப்பார் இவர் என்ன சொல்வார் என்றெல்லாம் யோசித்துக் கொண்டிருக்க மாட்டார்கள். தன் மீதான நம்பிக்கையிலிருந்து பின்வாங்காதவர்களாக இருப்பார்கள். மற்றவர்களின் கருத்துக்கு மதிப்பு கொடுத்தாலும் அது தங்களை பாதிக்கும் என்று நினைத்தால் துணிச்சலுடன் தங்கள் தரப்பை எடுத்துச் சொல்ல தயங்க மாட்டார்கள்.

தன் மீதான நம்பிக்கையும் சுயமதிப்பும் மிகுந்தவர்களாக இருக்கும் அதே சமயம் மற்றவர்களை துச்சமாக நினைக்க மாட்டார்கள். அடுத்தவரின் உணர்வுகளுக்கு மதிப்பு கொடுப்பார்கள். உடன் இருப்போரின் வளர்ச்சிக்கு உறு துணையாக இருப்பார்கள். 

குடும்பம் சமூகம் என எல்லா இடங்களிலும் தங்களை எப்படி முன்னிறுத்திக் கொள்வது என்பது அவர்களுக்கு நன்றாகத் தெரியும். உறுதியானவர்களாக இருந்தாலும் தேவையான இடங்களில் வளைந்து கொடுக்கவும் செய்வார்கள்.   திருத்துகிறோம், நல்லவற்றை கூறுகிறோம் என்று அரைகுறை புரிதல்களோடு அடக்குமுறையில் உங்கள் குழந்தைகளை வளர்த்தால் ஆட்டு மந்தைகளைப் போல அவர்கள் கூட்டத்தில் காணாமல் போவார்கள். மாறாக சுயம் சார்ந்து உங்கள் குழந்தைகள் இருக்கத் தொடங்கினால் அவர்களை உங்கள் கருத்துக்களால் ஒருபோதும் தடுக்காதீர்கள். தங்கள் வாழ்க்கையை வடிவமைக்க அவர்களே கற்றுக் கொள்வார்கள். பெற்றோர்கள் வழிகாட்டியாகவும் நெறியாளர்களாகவும் இருந்தால் போதும். குழந்தைகள் பூத்துக் குலுங்குவார்கள். 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com