இவர்களுக்கு ஒரு தேநீராவது வாங்கித் தர முடியுமா?

ஃபர்கட்டன் வுமன் (Forgotten Woman) என்ற தீலிப் மேதாவின் குறும்படம் சமீபத்தில் பார்த்தேன்
இவர்களுக்கு ஒரு தேநீராவது வாங்கித் தர முடியுமா?

ஃபர்கட்டன் வுமன் (Forgotten Woman) என்ற தீலிப் மேதாவின் குறும்படம் சமீபத்தில் பார்த்தேன். கண்ணில் நீர் வழிய வைக்கும் ஆவணப் படம் அது. இதற்கெல்லாம் என்ன தீர்வு, அரசியல், சமூகம் என எல்லாரும் தானே பொறுப்பு? மனித நேயத்தையே கேள்விக்கு உட்படுத்திவிடும் படமிது. நிற்க இக்கட்டுரை அந்த ஆவணப்படத்தைப் பற்றியது அல்ல. 

கலாச்சாரம் தாய்மை என்று ஒரு புறம் கொண்டாடப்பட்டிருக்கும் ஒரு நாட்டில் ஒவ்வொரு விநாடியும் முதியவர்கள் கைவிடப்படுகிறார்கள் என்பது உண்மை. பல குடும்பங்களில் ஒதுக்கி வைக்கப்பட்டு தனிமையில் அவதியுறுகிறார்கள். அல்லது அதிக வேலைச் சுமை கொடுக்கப்பட்டு சுதந்திரம் மறுக்கப்பட்டு மிச்ச நாட்களை கழிக்கின்றனர். நூறு கோடிக்கும் அதிகமான மக்கள் தொகை உள்ள இந்த பாரதத் திருநாட்டில் ஒவ்வொரு இரண்டாவது மூத்த குடிமகனுக்கும் இந்த கதி என்பது எத்தகைய அவல நிலை. 

கிராமங்களில் கூட பரவாயில்லை. கடைசி வரை என் கையை நம்பிப் பிழைத்துக் கொள்வேன் என பல முதியோர்கள் தனிமையை தங்களுக்கே உரிய போர்க்குணத்துடனும் தன்னம்பிக்கையுடனும் கடக்கின்றனர். ஆனால் நகர்ப்புறத்தில் 1000 த்திற்கு 750 முதியவர்கள் தனித்து விடப்பட்டுள்ளனர். ஒரு ஆய்வறிக்கை நகர்ப்புறப் பகுதிகளில் 64.1 சதவிகிதம் முதியோர்கள் தங்கள் குடும்பத்தை விட்டு பிரிந்து வாழ்கிறார்கள் என்று கணித்துள்ளார்கள். இதுவே கிராமப்புறங்களில் 39.19 சதவிகிதமாக உள்ளது.

முதியோர்கள் ஏன் கைவிடப்படுகிறார்கள் என்று ஒவ்வொருவரும் யோசித்துப் பார்க்க வேண்டும். பள்ளியில் படிக்கும் போது ஒரு பாடம் படித்திருப்போம். வயதான பெற்றோர்க்கு பிளாஸ்டிக் தட்டில் சாப்பாடு வைக்கும் ஒரு குடும்பத்தில் உள்ள சிறுவன் அந்த தட்டை எடுத்து பத்திரப்படுத்தி தன் பெற்றோரிடம் உங்களுக்கு வயதானபிறகு இது பயன்படும் என்று கூறுவான். அப்போதுதான் அவர்களுக்கு தாங்கள் செய்த தவறு உரைக்கும். இதுதான் அனைவரின் நிலை. வயதின் காரணமாக தனிமைச் சிறையில் சிக்கி உடல் மற்றும் உளரீதியாக துயரினை அனுபவிக்கும் முதிய குடிமக்களின் நிலை மிகவும் அவலத்துக்குரியது.

இளம் வயதில் விதவையானவர் அவர். அரசாங்க வேலையும் சொந்த வீடும் அவருக்கு இருந்தது. பணி ஓய்வு கிடைத்ததும், கிடைத்த ஓய்வூதியத்தில் அவர் சிக்கலின்றி வாழ்ந்தார். ஆனால் அவரிடம் பணம் உள்ளது எனத் தெரிந்து அக்கம் பக்கத்தினர் அவருக்கு ஆதரவாக இருப்பது போல நடந்தனர். அவரிடம் நைச்சியமாக பேசி அவர் உடல் நலக் குறைவாக இருந்த போது அவருடைய பணம் சொத்து போன்றவற்றை சதி செய்து அபகரித்து அவரை வீதியில் விட்டுவிட்டார்கள். எதிர்த்துப் போராடவோ தட்டிக் கேட்கவோ அவருக்கு யாரும் இல்லை. மனநல மருத்துவமனையில் யாரோ சேர்த்துவிட, அங்கு அவர் பணம் போச்சு, ஏமாத்திட்டாங்க என்ற வார்த்தையை மட்டும் திரும்ப திரும்ப கூறிக் கொண்டிருக்கிறார். எத்தகைய கொடூர மனம் இருந்தால் பணத்துக்காக இப்படி ஒருவரை நிராதவராக்கி இருப்பார்கள். இது போல கணக்கற்ற கதைகள் நம் நாட்டின் ஒவ்வொரு வீதியிலும் உண்டு.

இது ஒரு புறமிருக்க தனியாக இருக்கும் வயோதிகர்களை குறிவைத்து அவர்களிடம் எஞ்சியிருக்கும் பணம் நகையை கொள்ளை அடிப்பதுடன் அவர்களை கொன்றும் விடுகிறார்கள். 2010-ஆம் ஆண்டு புதுதில்லியில் நேஷனல் க்ரைம் ரெக்கார்ட்ச் பீரோ (NCRB) நடத்திய ஆய்வில் ஐம்பது வயதுக்கு மேற்பட்ட 3339  முதியோர்கள் கொள்ளையடிக்கப்பட்டிருக்கிறார்கள் இதில் 35 நபர்கள் கொல்லப்பட்டுள்ளார்கள். ஒவ்வொரு ஆண்டும் இந்த எண்ணிக்கை அதிகரிக்கிறது எனும் போது இந்தச் சமூகம் இன்னும் என்னவெல்லாம் கொடுமைகளை பார்க்கப் போகிறதோ என்று பதற்றமாகவே இருக்கும். தங்களைத் தாங்களே பாதுகாத்துக் கொள்ளும் வலுவை இழந்த நிலையில் முதியோரைப் பாதுகாக்கும் பொறுப்பை யார் ஏற்றுக் கொள்வார்கள். அரசாங்கம் என்று குடும்பங்களும் அந்தந்த குடும்பங்கள் என்று அரசும் சாடிக் கொண்டிருப்பதை விடுத்து நிரந்தரமான ஒரு தீர்வுக்கு வழி வகை செய்யவேண்டும்.

முதியவர்களில் எத்தனையோ நபர்கள் தங்கள் குடும்பத்தினரோடு பேச்சுவார்த்தை இல்லாமல் மெளனமாக ஒரு வேளை உணவுக்காக தன்மானம் இழந்த நிலையில் இருக்கிறார்கள். உடல் நலமின்றி இருப்பவர்களை காசி ராமேஸ்வரத்துக்கு அழைத்துச் சென்று அங்கு நிராதவராக விட்டுவிட்டு வீடு திரும்பும் கல் நெஞ்சக்காரர்களைப் பற்றிய ஆவணப்படம் தான் மேற்சொல்லப்பட்ட ஃபர்கட்டன் வுமன்.  

வயோதிகர்களில் கணவனை இழந்த மனைவியரை விட, மனைவியை இழந்த கணவர்கள் அதிகப் பிரச்னைகளை எதிர்கொள்கின்றனர். அவர்கள் பலவிதமான உளவியல் சிக்கல்களுக்கு தள்ளப்படுகிறார்கள். மூத்தக் குடிமக்கள் என்று அவர்களுக்கு அரசாங்கம் சில சலுகைகளை அளித்தாலும் அவர்களின் வாழ்வாதாரத்துக்கு வழி வகை செய்து தருவதில்லை. உழைக்க முடியாத பலீவனத்தில் பலர் பிச்சையெடுத்து வாழும் இழிநிலைக்கும் தள்ளப்படுகிறார்கள்.

மனித உயிர் எல்லாவற்றையும் விட மகத்தானது என்கிறார்கள். ஆனால் பெற்ற உயிரை வீதிகளில் விடும் கொடுமையை என்னவென்று சொல்வது. வறுமை என்பது அல்ல பிரச்னை, சுயநலம் தான் இதற்கான காரணம். நன்றி மறந்த பிள்ளைகள் இருக்கும்வரை இதுபோன்று முதியவர்களை வீதியில் காணப்படுவது தொடரத்தான் செய்யும். முதியோர் இல்லங்களின் தனிமைச் சிறைகளிலிருந்து அவர்களது ஹீனமான குரல் மெல்லியதாக கேட்டு சமூகத்தின் ஆன்மாவை கீறிக் கொண்டுதானிருக்கும்.

வீதிகளில், மரத்தடிகளில், கோவிலில், ஏடிஎம் வாசல்களில் சோர்வாக உட்கார்ந்திருக்கும் ஒரு முதியவரை நாம் பார்க்க நேர்ந்தால் நம்மால் முடிந்த வரையில் ஏதேனும் உதவிகள் செய்யலாம். முடியவில்லை எனும்போது ஒரு தேநீராவது வாங்கிக் கொடுக்கலாம். குறைந்தபட்சமாக ஆறுதலாக ஒரு வார்த்தை அல்லது ஒரு புன்சிரிப்பு அது போதும் அவர்களின் நொந்த மனத்துக்கு சிறு வெளிச்சம் கிடைக்கும். 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com