Enable Javscript for better performance
home remedies for gastric problems | வாயு உபாதைகளிலிருந்து விடுபட ஆயுர்வேதத்தில் ஏதேனும் வழி உள்ளதா?- Dinamani

சுடச்சுட

  

  வாயு உபாதைகளிலிருந்து விடுபட ஆயுர்வேதத்தில் ஏதேனும் வழி உள்ளதா?

  By பேராசிரியர் எஸ். சுவாமிநாதன்  |   Published on : 05th August 2019 02:48 PM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

  kadhir7

  என் வயது 80. நான் ஆஸ்துமா நோயாளி. ஒரு வருடமாக முதுகுவலி, இடுப்புவலி, வயிற்றுவலி ஏற்பட்டு கஷ்டப்பட்டு வருகிறேன். எல்லாவிதமான சிறப்பு டாக்டரிடமும் சென்று எல்லா விதமான பரிசோதனைகளும்  செய்து மருந்து சாப்பிட்டுக் கொண்டிருக்கிறேன். "உடலில் எந்தக்  குறையும் இல்லை; வயது ஆகிவிட்டதால் வருகிறது, வலி வரும் பொழுது வலி மாத்திரை சாப்பிடுங்கள்' என்று  சொல்லி விட்டார்கள். 2 மாதம் அல்லது 3 மாதத்திற்கு ஒரு முறை மருத்துவமனையில் இரண்டு அல்லது மூன்று நாள் தங்கியிருந்து மருந்து கொடுத்து வருகிறார்கள்.  இதுவரை முப்பதிலிருந்து நாற்பதாயிரம் வரை செலவு செய்து விட்டேன். இப்போது தினமும் தூக்க மாத்திரை மற்றும் வலி மாத்திரைகளைச் சாப்பிட்டு வருகிறேன். எல்லாவிதமான மூலிகை எண்ணெய்களையும் உபயோகித்து வருகிறேன். மேற்குறிப்பிட்ட உபாதைகளிலிருந்து விடுபட ஆயுர்வேதத்தில் ஏதேனும் வழி உள்ளதா?

   -த. ஷண்முகம், கோவை.

  உங்களுடைய வயோதிகம், வாயுவின் சீற்றத்தை ஏற்படுத்தியிருப்பது தெள்ளத் தெளிவாகப் புரிகிறது. உடலின் நெய்ப்பையும், கனத்தையும், வழுவழுப்பையும் பதம் பார்த்து விடும் வறட்சியும், லேசும், சுரண்டும் தன்மை கொண்ட குணங்களின் ஆட்சி ஒய்யாரமாக நடைபோடுவதால், நாடி நரம்புகள், ரத்தக் குழாய்கள் தசைநார்கள், எலும்புகள் ஆகியவை கல கலத்து விட்டன. "எண்ணெய்யால் என்னைக் கவனி' என்று அவற்றின் தனிப்பட்ட கூச்சல், வலி வழியாக உங்களுக்குத் தெரிய வருகிறது.   இதற்கான தீர்வை, நெய்-மஜ்ஜை - மாமிசநெய்ப்பு - நல்லெண்ணெய் ஆகியவற்றின் மூலமே நீங்கள் பெற முடியும் என்பதால் அவற்றை எப்படிச் சாப்பிட்டால், ஆஸ்துமா கூடாத வகையிலும், அதே சமயத்தில் சூழ்ந்துள்ள குணங்களின் சீற்றத்தை மட்டுப்படுத்தி, உடலை மறுபடியும் நல்ல நிலைக்குக் கொண்டு வர முடியும் என்பதை மட்டுமே ஆலோசிக்க வேண்டிய கட்டாய நிலை ஏற்பட்டுள்ளது.

  மேற்குறிப்பிட்ட நான்கு வகை நெய்ப்பிலும், நெய்யே சிறந்தது. 

  ஏனென்றால், தன்னுடன் சேரும் எந்தப் பொருளின் தன்மையையும் குறைத்துவிடாமல், தன் சிறப்பையும் வெளிக் காட்டும் திறமை நெய்க்கு மட்டுமே இருக்கிறது. மேலும் நெய் இனிப்பான பொருளாக இருப்பதால், செரிமானத்தின் போது அது வயிற்றில் எரிச்சலை ஏற்படுத்துவதில்லை என்பதாலும், குழந்தைப் பருவம் முதலே அதை எளிதில் பழகி வருவதாலும் அது மற்றவற்றை விட மிகச் சிறந்ததாகக் கருதப்படுகிறது.

  நெய்யை விட தைலம் செரிப்பதற்குக் கடினமானது, மாமிச நெய்ப்பு தைலத்தை விட செரிப்பதற்குக் கடினமானது. மஜ்ஜை இவை மூன்றையும் விட செரிமானம் செய்வதில் மிகக் கடினம். எனவே, உங்களுடைய செரிமான நிலையை உத்தேசித்தே இவற்றைப் பயன்படுத்தி விடை காண முயற்சிக்க வேண்டும். தயிர் மற்றும் பாலிலிருந்து நெய்யைக் கடைந்து எடுக்கலாம். மாமிச சூப்பு வகைகளில் மாமிச நெய்ப்பு அடங்கியிருக்கிறது. பழம், விதை மற்றும் தண்டுப் பகுதிகள் அடங்கிய தாவரங்களிலிருந்து தைலம் சேகரிக்கப்படுகிறது. அதனால், உங்களுடைய பசியானது திடமான நிலையிலிருந்தால், உணவில் தயிர் சேர்ப்பதாலும், பாலை வெறும் வயிற்றில் வெதுவெதுப்பாக அருந்துவதாலும், நெய்யின் சேர்க்கையைக் குடல் வழியாக, நாடி நரம்புகளுக்குக் கொண்டு போய் சேர்க்கிறீர்கள். மாமிசசூப்பு வகைகளில் சிட்டிகை திப்பிலி சூரணம், உப்பும் சேர்த்துச் சாப்பிட அவற்றிலுள்ள மாமிச நெய்ப்பானது விரைவாக குடல் வழி உறிஞ்சப்பட்டு, நரம்புகளுக்கு வலுவூட்டும்.
  நல்லெண்ணெய்யை உணவோடும், வெளிப்புறமாகவும் உடலில் பயன்படுத்தி உங்களுக்கான தீர்வைப் பெறலாம்.

  ஆயுர்வேத மூலிகை நெய் மருந்தாகிய இந்துகாந்தம் எனும் மருந்தை காலையிலும், விதார்யாதி எனும் நெய் மருந்தை மாலையிலும் குடல் தன்மை, பசியின் நிலை, கால நிலை, வயது, வசிப்பிடம் ஆகியவற்றை மனதிற் கொண்டு, அளவை நிர்ணயித்துச் சாப்பிட, முதுகுவலி, இடுப்புவலி, வயிற்றுவலி போன்றவை குணமடையலாம்.

  ஆட்டின் மாமிசத்தைக் கொண்டு தயாரிக்கப்படும் அஜஅஸ்வகந்தாதி லேஹ்யம், அஜமாம்ஸரஸாயனம் ஆகியவையும் நீங்கள் சாப்பிட உகந்தவையே. தான்வந்திரம் தைலம், மஹாமாஷ தைலம், பலாஅஸ்வகந்தாதி தைலம் போன்றவற்றில் ஒன்றிரண்டைச் சூடாக்கி உடலில் தேய்த்துக் குளிப்பதும் நலமே. வாயுவை சீற்றமுறச் செய்யும் காரம், கசப்பு, துவர்ப்புச் சுவையுடைய உணவுகள் தவிர்க்கப்பட வேண்டியவை.

  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
  google_play app_store
  kattana sevai