எங்களை ஒதுக்காதீர்கள்! உலக எய்ட்ஸ் தினத்தில் ஒரு கோரிக்கை!

2003-ஆம் ஆண்டு புது தில்லியில் நடந்த ஒரு சம்பவம் இது. சின்மே தர்மேஷ் மோடிக்கு
எங்களை ஒதுக்காதீர்கள்! உலக எய்ட்ஸ் தினத்தில் ஒரு கோரிக்கை!

டிசம்பர் 1 - இந்த நாளை யாரும் மறக்க முடியாது. உலக எய்ட்ஸ் தினம் அது.

2003-ஆம் ஆண்டு புது தில்லியில் நடந்த ஒரு சம்பவம் இது. சின்மே தர்மேஷ் மோடிக்கு அப்போது ஒன்பது வயது நடந்து கொண்டிருந்தது. அவனுடைய பெற்றோர்களுக்கு எய்ட்ஸ் இருப்பதாக கண்டறியப்பட்டவுடன் அக்குடும்பமே பெரும் அதிர்ச்சி அடைந்தது. சிறுவன் சின்மேயிக்கு இந்நோயின் தாக்கத்தைப் பற்றி புரிய வைக்கக் கூடிய வயதும் இல்லை. பெற்றோர்கள் நிலைகுலைந்து போனார்கள்.

‘என்னோட அம்மாவுக்கு உடம்பு சரியில்லாம போனப்ப, எல்லா பரிசோதனையும் செய்து பார்த்துட்டோம். கடைசில விடுபட்டிருந்தது ஒரே ஒரு பரிசோதனை தான். அது ஹெச்ஐவி பரிசோதனை! எதுக்கு அதையும் எடுத்துப் பார்த்திடலாம்னு டாக்டர் எதுக்கும் முடிவு செஞ்சு எடுத்துப் பார்த்தாங்க. அம்மாவுக்கு ஹெச் ஐ வி பாதிப்பு இருந்ததை டாக்டர் உறுதி செய்தார். மேலும் அதிர்ச்சி என்ன வென்றால் என் அப்பாவுக்கும், சிறுவனான எனக்கும் கூட ஹெச் ஐ வி பாசிட்டிவ் என்று பரிசோதனை முடிவில் தெரிந்தது. மொத்த குடும்பமும்  அதிர்ச்சியில் உறைந்து போனார்கள்’ என்றார் சின்மே. அவருக்கு தற்போது 23 வயது.

'என்னுடைய குழந்தை பருவத்தை இப்போது நினைத்தால் கூட கசப்பாக இருக்கிறது. யார் என்னைப் பார்க்க வந்தாலும் எப்போதும் கத்தி கதறி அழுவார்கள். என்னுடைய வாழ்க்கையில் மறக்க முடியாத கொடும் காலம் அது’ என்றார் சின்மே.

ஹெச்ஐவியால் பாதிக்கப்பட்டவர்கள் உடலில் மட்டுமல்லாது மனத்தளவிலும் பிரச்னைகளை எதிர்கொள்வார்க்கள். நோயின் பாதிப்பால் அவர்களுடைய உடலில் எதிர்ப்பு சக்தி மிகவும் குறைந்துவிடும். இந்நிலையில் நரம்புகள் பாதிப்படையும், ஹெச்ஐவி கிருமி உடலுள்ள நோய் எதிர்ப்பு சக்தியைத் தகர்ந்துவிடுவதால், கடுமையான மன அழுத்தத்தை ஹெச்ஐவி நோயாளிகள் அடைவார்கள். வாழ்க்கையின் மீதும் வாழ்தலின் மீதும் நம்பிக்கை இழந்து கிட்டத்தட்ட நடைபிணமாக மாறிவிடுகிறார்கள். எந்த நேரத்தில் தனக்கு என்ன நேருமோ என்ற பயத்தில் சதா சர்வ காலம் மன உளைச்சலுடன் இருப்பார்கள். தவிர ஹெச்ஐவியினால் பாதிக்கப்பட்டவர்களின் மனநிலை அடிக்கடி மாறிக் கொண்டே இருக்கும், பெரும்பாலும் பதற்றமாகவே இருப்பார்கள்’ என்கிறார் புது தில்லியிலுள்ள துளசி ஹெல்த் கேர் நிறுவனரான கெளரவ் குப்தா.

இந்த நோயில் பாதிக்கப்பட்டவர்களை சமூகம் புறக்கணிக்கிறது. பல நோயாளிகளை அவர்களின் குடும்பமே கைவிட்டுவிடுகிறது. முறையான சிகிச்சையும் பலருக்குக் கிடைப்பதில்லை. எய்ட்ஸ் பற்றிய போதிய விழிப்புணர்வு இன்னும் நம் மக்களிடையே இல்லை என்பது வருத்தத்திற்குரியது. சின்மேயை பொருத்தவரையில் அவனுக்கு ஹெச் ஐ வி பாசிட்டிவ் என்று தெரிந்தவுடன் பள்ளி நிர்வாகம் அவனை நீக்கிவிட்டது. அதன்பிறகு என்.ஜி. ஓ அமைப்பொன்றின் மூலமாகவும் குஜராத் ஹெச்ஐவி பாதிப்பாளர்களின் ஒருங்கிணைந்த சங்கத்திலிருந்து கடுமையான எதிர்ப்பு வரவே, பள்ளியில் மீண்டும் அவனை சேர்த்துக் கொண்டார்கள்.

'பள்ளியில் நான் திரும்ப சேர்ந்து விட்டாலும் சக மாணவர்களும் சரி, டீச்சர்களும் சரி என்னை வித்தியாசமாகத்தான் பார்த்தார்கள். நண்பர்கள் என்னை ஒதுக்கி வைத்துவிட்டார்கள். எப்போதும் தனியாகவே இருந்தேன். இவ்வளவுக்கு ஏன், மருத்துவர்கள் கூட எங்களை அலட்சியப்படுத்திவிட்டார்கள். சொல்லப்போனால் தேவைப்பட்ட நேரத்தில் தேவையான சிகிச்சைகள் செய்யாமல் ஏமாற்றினார்கள். என்னுடைய பெற்றோர்களுக்கு கண்பார்வை குறையத் தொடங்கியது ஆனால் அதற்கான சிறப்பு சிகிச்சை எதுவும் அவர்கள் செய்யவில்லை. தற்போது அவர்கள் முற்றிலும் பார்வையை இழந்துவிட்டார்கள். பிரச்னையின் ஆரம்பத்திலேயே சிகிச்சை அளிக்கப்பட்டிருந்தால் அவர்களுக்கு இப்படி நேர்ந்திருக்காது. இது என் மனத்தை பெரும் துயருக்கு உள்ளாக்கிவிட்டது’ என்றார் சின்மே.

கடந்த சில வருடங்களுக்கு முன்னால் சின்மே பட்டப்படிப்பின் போது அவருக்குக் காச நோய் பாதிப்பு ஏற்பட்டது. எந்த நிலையிலும் மனத்தை தளர விடாதவர் சின்மே. அவருடைய உறுதியான நிலைப்பாட்டுக்கு கிடைத்த வெற்றி, அவர் தற்போது இந்தியாவில் உள்ள ஹெச் ஐ வி பாதிக்கப்பட்ட இளைஞர்களுக்கான அமைப்பான 'யூத் அண்ட் அடொலண்ட்ஸ் லிவ்விங் வித் ஹெச் ஐ வி’யின் முக்கிய பொறுப்பில் உள்ளார். அதே அமைப்பின் ஒருங்கிணைப்பாளரான பெரோஸ் கான் கூறும் போது, ‘ஹெச் ஐ வி பாசிட்டிவ் என்று எங்களை முத்திரை குத்தி ஒதுக்கி வைக்காதீர்கள். நாங்களும் உங்களைப் சாதாரண மனிதர்கள் தான். நாங்கள் கேட்பது உங்களின் கருணையை அல்ல, எங்களுடைய மரியாதையைத் தான். எல்லோரையும் போல நாங்கள் வாழத் தகுதி வாய்ந்தவர்களே, எங்கள் உணர்வுகளைப் புரிந்து கொள்ளுங்கள். புண்படுத்தியது போதும்’ என்றார்.

சமுதாயத்தில் ஹெச்ஐயைப் பற்றி நிலவும் கட்டுக்கதைகளையும் தவறான கண்ணோட்டத்தையும் மாற்ற வேண்டும். பாதிக்கப்பட்டவர்களின் குடும்பங்கள் சம்பந்தப்பட்ட நபரை முன்பு போல் அன்பும் மரியாதையுடனும் நடத்த வேண்டும். நோயின் பிடியில் அவதியுறும் அவர்களுக்கு நம்மால் முடிந்த அளவு ஆதரவு கரம் நீட்ட வேண்டும். சமூகம் இது குறித்து சரியாகச் சிந்தித்து அதற்கேற்றபடி செயல்பட வேண்டும்’என்றார்  ஃபோர்டிஸ் ஹெல்த்கேரின் மெண்டல் ஹெல்த் அண்ட் பிஹேவியரல் சயின்ஸ் பிரிவின் இயக்குனர் சமீர் பரீக்.

சின்மே தற்போது சமூக ஆர்வலராக உள்ளார். முன்னாள் குடியரசுத் தலைவர் மறைந்த ஏ.பி.ஜே அப்துல் கலாம், காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி, தெற்கு ஆப்ரிக கிரிக்கெட் குழு மற்றும் பழம்பெரும் நடிகை ஷர்மிளா தாகூர் போன்ற இந்தியாவின் பல முக்கிய தலைவர்களுடன் பணி புரிந்திருக்கிறார். இந்தியாவின் சார்ப்பாக பல சர்வதேச எய்ட்ஸ் விழிப்புணர்வு மாநாடுகளில் கலந்து கொண்டு சிறப்பித்துள்ளார். சமீபத்தில் ஆசியா, பங்களாதேஷ் மற்றும் இலங்கையில் நடந்த மாநாடுகளிலும் பங்கேற்றார்.

எய்ட்ஸ் பற்றி மக்கள் மனத்தில் நிலவி வரும் கருத்துக்களையும், தவறான புரிதல்களையும் மாற்ற வேண்டும். இந்த நோய் உண்மையில் எப்படி பலரைத் தாக்கியது என்று அனைவருக்கும் தெரியப்படுத்த வேண்டும். எய்ட்ஸ் பற்றி போதிய விழிப்புணர்வு அனைவருக்கும் ஏற்பட வேண்டும். அதற்கு நாங்களும் எங்களைப் பற்றி வெளிப்படையாக பேச வேண்டும். நாங்கள் யார், எங்களுடைய பிரச்னைகள் என்ன, எப்படிப்பட்ட துயரங்களை எதிர்கொள்கிறோம் போன்றவற்றை இனி உரக்க சொல்லப் போகிறோம். சமூகத்தில் இந்த புரிந்துணர்வு ஏற்பட்டுவிட்டால் போதும், மனத் தடைகள் நீங்கி, உற்சாகமும் மகிழ்ச்சியும் நிறையும்’ என்று உறுதியாகக் கூறினார் சின்மே.

- விவேக் சிங் செளஹான் (தமிழில் உமா ஷக்தி)

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com