காலாவதியாகும் மருந்துகள்!

தமிழகம் முழுவதும் உள்ள 42 அரசு மருந்துக் கிட்டங்கிகளில் முழு நேர மருந்தாளுநர் பணியிடங்கள்
காலாவதியாகும் மருந்துகள்!

தமிழகம் முழுவதும் உள்ள 42 அரசு மருந்துக் கிட்டங்கிகளில் முழு நேர மருந்தாளுநர் பணியிடங்கள் இல்லாததால், ஒவ்வோர் ஆண்டும் பல லட்சம் ரூபாய் மதிப்பிலான மருந்துகள் காலாவதியாவதாகப் புகார் எழுந்துள்ளது.

தமிழகத்தில் 21 அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைகள், 31 மாவட்டத் தலைமை மருத்துவமனைகள், 240 வட்ட (தாலுகா) அளவிலான மருத்துவமனைகள், 1,600 ஆரம்ப சுகாதார நிலையங்கள் உள்ளன. இவற்றில் தினமும் 5 லட்சத்துக்கும் மேற்பட்டோர் புறநோயாளிகளாக சிகிச்சை பெறுகின்றனர். 50 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் உள்நோயாளிகளாக சிகிச்சை பெறுகின்றனர்.

மருத்துவமனைகளில் மருத்துவர்களுக்கு அடுத்தபடியாக மருந்தாளுநர்களின் பணி முக்கியமானது. உயிர் காக்கும் மருந்துகளின் இருப்பு, தேவை, விநியோகம் இவற்றில் மருந்தாளுநர்கள் பணி இன்றியமையாதது. மேலும், தினசரி உள் மற்றும் புறநோயாளிகளுக்கு மருந்து, மாத்திரைகள் விநியோகிப்பதும் இவர்களின் பணியாக உள்ளது.

அரசு மருத்துவமனைகளில் நாளுக்கு நாள் அதிகரித்து வரும் நோயாளிகளின் எண்ணிக்கைக்கு ஏற்ப மருந்தாளுநர் பணியிடங்கள் உருவாக்கப்படுவதில்லை. மருந்தாளுநர்களுக்கு பணிச் சுமை என்பது தவிர்க்க முடியாததாக இருக்கிறது.

மருத்துவக் கவுன்சில் விதிமுறைகளின்படி அரசு மருத்துவமனைகளில் 100 புறநோயாளிகளுக்கு ஒரு மருந்தாளுநர், 75 உள்நோயாளிகளுக்கு ஒரு மருந்தாளுநர் என்ற விகிதத்தில் இருக்க வேண்டும். இதன்படி, தமிழகம் முழுவதும் 11 ஆயிரத்துக்கும் மேற்பட்ட மருந்தாளுநர்கள் பணியில் இருக்க வேண்டும். ஆனால், தற்போது 3,500 பணியிடங்கள் தான் அரசால் ஒப்புதல் அளிக்கப்பட்டு உள்ளன. அதிலும், 1,200 பணியிடங்கள் காலியாக உள்ளன. ஒவ்வொரு மருத்துவமனையிலும் சராசரியாக பாதிக்கும் மேற்பட்ட பணியிடங்கள் காலியாக இருக்கின்றன. தமிழகத்தின் இரண்டாவது பெரிய மருத்துவமனையான மதுரை அரசு மருத்துவமனையில் 120 மருந்தாளுநர்கள் இருக்க வேண்டிய நிலையில் 54 பேர் மட்டுமே பணியில் உள்ளனர். பெரும்பாலான ஆரம்ப சுகாதார நிலையங்களில் தினசரி ஆயிரத்துக்கும் குறையாமல் நோயாளிகள் வந்து செல்கின்றனர். அங்கு ஒரு மருந்தாளுநர் மட்டுமே பணியில் உள்ளார். இதனால், மருந்தாளுநர்களுக்கு பணிச் சுமை இரட்டிப்பாகிறது. அதோடு, நோயாளிகள் நீண்ட நேரம் காத்திருக்க வேண்டிய நிலையும் உள்ளது.

இதுகுறித்து மருந்தாளுநர் சங்கத்தினர் கூறியதாவது:

தமிழகம் முழுவதும் சுகாதாரத் துறை துணை இயக்குநர் அலுவலகங்களில் 42 மருந்துக் கிட்டங்கிகள் உள்ளன. இங்கிருந்துதான் அனைத்து மருத்துவமனைகளுக்கும் மருந்துகள் அனுப்பப்படும். ஆனால், இங்கு மருந்தாளுநர்கள் பணியிடங்களே இல்லை. அலுவலக ஊழியர்கள்தான் மருந்துக் கிட்டங்கிகளை நிர்வகிக்கின்றனர். அவர்களுக்கு மருந்துகளைப் பற்றிய துறைசார் தெளிவு இல்லாததால் மருந்துகளின் காலாவதி தேதி, பராமரிப்பு, இருப்பு தொடர்பான விவரங்கள் தெரிவதில்லை. இதனால், 42 மருந்து கிடங்குகளிலும் ஆண்டுதோறும் பல லட்ச ரூபாய் மதிப்பிலான மருந்துகள் காலாவதியாகி வீணாகின்றன.

மருந்துக் கிட்டங்கிகளில் மருந்தாளுநர்களை பணியில் அமர்த்தினால் மருந்துகள் பாதுகாக்கப்படும். மருத்துவமனைகளுக்குத் தேவையான மருந்துகளும் காலதாமதமின்றி கிடைக்கும். தமிழகத்தில் ஆண்டுதோறும் மருந்தாளுநர் படிப்பு முடித்த ஒரு லட்சம் இளைஞர்கள் வெளிவருகின்றனர். அரசு மருந்தாளுநர் பணியிடங்களை நிரப்பும்பட்சத்தில் இவர்களில் ஆயிரக்கணக்கானோருக்கு பணி வாய்ப்புக் கிடைக்கும் என்றனர் அவர்கள்.

இதுதொடர்பாக சுகாதாரத் துறை அதிகாரிகள் கூறியதாவது:

மதுரை உள்ளிட்ட ஒரு சில இடங்களில் அயல்பணி முறையில் மருந்தாளுநர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர். அவர்கள் மருந்துகளை முறையாகப் பராமரித்து வருவதால் அவை காலாவதியாவதில்லை என்றனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com