சுடச்சுட

    

    குழந்தைகள், மாணவர்களுக்கு குடற்புழு நீக்க மாத்திரைகள்: சென்னை மாநகராட்சி அறிவிப்பு

    Published on : 10th February 2017 02:22 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    சென்னை மாநகராட்சிக்குட்பட்ட அங்கன்வாடி மையங்கள், மாநகராட்சி பள்ளிகள், அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகள் மற்றும் தனியார் பள்ளிகளில் பயிலும் 19 வயதிற்குட்பட்ட குழந்தைகள், மாணவர்களுக்கு குடற்புழு நீக்க மாத்திரைகள் வெள்ளிக்கிழமை (பிப்.10) வழங்கப்படும் என்று மாநகராட்சி ஆணையர் தா.கார்த்திகேயன் தெரிவித்தார்.
    இது குறித்து வியாழக்கிழமை வெளியிடப்பட்ட செய்திக் குறிப்பு: உலக சுகாதார நிறுவனத்தின் கணக்கின்படி இந்தியாவில் 1 முதல் 14 வயதுடைய 24.1 கோடி குழந்தைகள் குடற்புழு தொற்று ஏற்படக்கூடிய அபாய நிலையில் உள்ளனர்.
    பெருநகர சென்னை மாநகராட்சியில் நாடு தழுவிய குடற்புழு நீக்க நாள் வெள்ளிக்கிழமை கடைப்பிடிக்கப்படுகிறது. இதனையொட்டி முகாம் நாளான வெள்ளிக்கிழமையன்று விடுபட்ட குழந்தைகளுக்கு வரும் பிப்ரவரி 15-ஆம் தேதி குடற்புழு நீக்க மருந்து வழங்கப்பட உள்ளது.
    ரத்த சோகை காரணமாக...: இந்தியாவில் ஊட்டச்சத்து குறைபாடு மற்றும் ரத்த சோகையினால் குழந்தைகள் அதிக அளவில் பாதிக்கப்படுகின்றனர். 6 முதல் 59 மாதம் வயதுடைய குழந்தைகளில் 10-இல் 7 குழந்தைகள் ரத்த சோகையினால் பாதித்துள்ளனர். 15-19 வயதினரிடையே, 56 சதவீத பெண்களும், 30 சதவீத ஆண்களும் ரத்த சோகையினால் பாதித்துள்ளனர்.
    இந்த முகாம் மூலம் பெருநகர சென்னை மாநகராட்சியில் 15 லட்சத்து 95 ஆயிரத்து 611 குழந்தைகள் பயனடைவார்கள். மேலும் 1 முதல் 2 வயதுக்குட்பட்ட குழந்தைகளுக்கு மாத்திரை (200 மி.கி.) மற்றும் 2 முதல் 19 வயது வரை உள்ள குழந்தைகளுக்கு 1 அல்பெண்டசோல் (400 மி.கி) மாத்திரை குழந்தைகளுக்கு அளிப்பதன் மூலம் குழந்தைகளின் ஆரோக்கியம் மேம்படுவதுடன் ஊட்டச்சத்து குறைபாடு இல்லாமல் ஆரோக்கியமாக வாழ்வதற்கும், கல்வித்திறன் அதிகரிக்கவும் உதவுகிறது.
    ஆகவே, அனைத்து பெற்றோர்களும் தங்களது குழந்தைகளுக்கு குடற்புழு நீக்க மாத்திரையை அருகிலுள்ள ஆரம்ப சுகாதார மையங்களில் பெற்று பயன் பெற வேண்டுமாய் கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளது.

     

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
    google_play app_store
    kattana sevai