சுடச்சுட

  

  தட்டம்மை ரூபல்லா தடுப்பூசி வதந்திகளால் பயனாளிகள் எண்ணிக்கை குறைகிறது: தடுப்பூசியால் பாதிப்பு இல்லை!

  By ஜெனி ஃப்ரீடா  |   Published on : 16th February 2017 02:33 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

  Baby

  தமிழகத்தில் பரப்பப்பட்ட வதந்தியினால் தட்டமை ரூபல்லா தடுப்பூசி போட்டுக் கொள்ளும் சிறுவர்கள், குழந்தைகளின் எண்ணிக்கை குறைந்துள்ளது. எனினும் இதுவரை 40 லட்சம் குழந்தைகள், மாணவர்களுக்கு இந்த தடுப்பூசி வழங்கப்பட்டுள்ளது.
  தட்டம்மை ரூபல்லா: பிறந்த குழந்தைகளுக்கு வழங்கப்படும் தட்டம்மை தடுப்பூசியுடன், ரூபல்லா அம்மைக்கான தடுப்பூசியையும் சேர்த்து ஒரே ஊசியாக போடும் திட்டத்தை மத்திய அரசு அறிமுகப்படுத்தியுள்ளது. பிறந்து 9 மாதம் நிறைவடைந்த குழந்தைகளில் இருந்து 15 வயது வரையுள்ள குழந்தைகளுக்கு இந்த தடுப்பூசி வழங்கப்படும்.
  தமிழகத்தில் தட்டம்மை ரூபல்லா தடுப்பூசி முகாம் பிப்ரவரி 6-ஆம் தேதி முதல் நடைபெற்று வருகிறது. புதன்கிழமை வரை சுமார் 40 லட்சம் பேருக்கு தடுப்பூசி வழங்கப்பட்டுள்ளதாக சுகாதாரத் துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.
  வதந்தி பரவியது: தமிழகத்தில் முதன்முறையாக அறிமுகப்படுத்தப்பட்டுள்ளதால், இந்தத் தடுப்பூசி குறித்து சமூக வலைதளங்கள், கட்செவி அஞ்சல் உள்ளிட்டவற்றில் பல்வேறு வதந்திகள் பரவின. இதனால் பல பெற்றோர்கள் தங்கள் பிள்ளைகளுக்கு தடுப்பூசி போடுவதற்கு தயக்கம் காட்டி வருகின்றனர்.
  ஒரு நாளைக்கு சுமார் 9 லட்சம் முதல் 10 லட்சம் என மொத்தம் 1.8 கோடி பேருக்கு தடுப்பூசி வழங்க இலக்கு நிர்ணயிக்கப்பட்டிருந்தது. ஆனால், தற்போது ஒரு நாளைக்கு 5.5 லட்சம் முதல் 6 லட்சம் பேருக்கு மட்டுமே தடுப்பூசி வழங்கப்பட்டு வருகிறது என்று அதிகாரிகள் தெரிவித்தனர்.
  140 நாடுகளில்: ஆப்பிரிக்க, ஐரோப்பிய நாடுகள், ஆஸ்திரேலியா, அமெரிக்கா உள்ளிட்ட நாடுகளிலும் இந்தத் தடுப்பூசி ஏற்கெனவே வழங்கப்பட்டுள்ளது. நமது அண்டை நாடான நேபாளத்தில் கூட 95 சதவீதம் குழந்தைகளுக்கு இத்தடுப்பூசி அளிக்கப்பட்டுள்ளது.
  இதுதொடர்பாக பொது சுகாதாரத் துறை இயக்குநர் டாக்டர் குழந்தைசாமி கூறியது:
  தமிழகத்தில் இந்த தடுப்பூசி குறித்து வதந்தி பரவுவது குறித்து இந்திய மருத்துவக் கழகம், சைல்ட் லைன் உள்ளிட்டவை புகார் அளித்ததையடுத்து வதந்தி பரவுவது குறைந்துள்ளது. அரசின் சார்பிலும் விளக்கக் கையேடு, அகில இந்திய வானொலியில் விளம்பரம் உள்ளிட்டவற்றின் மூலம் இந்தத் தடுப்பூசி குறித்த விழிப்புணர்வு பணியில் ஈடுபட்டு வருகிறோம்.
  எனவே, தடுப்பூசி வழங்குவதில் அவசரம் காட்டத் தேவையில்லை. மக்களுக்கு முழுமையாக விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்ட பின்பு தடுப்பூசி போட்டால் போதுமானது என இந்தப் பணிகளில் ஈடுபட்டுள்ள அங்கன்வாடி ஊழியர்கள், கிராமப்புற சுகாதார செவிலியர்கள் ஆகியோருக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது. தடுப்பூசி குறித்து பெற்றோருக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்ட பின்பும் விடுபட்ட குழந்தைகளுக்கு தடுப்பூசி போட தீர்மானிக்கப்பட்டுள்ளது என்றார் அவர்.
  தடுப்பூசியால் பாதிப்பு இல்லை!
  தட்டம்மை ரூபல்லா தடுப்பூசி போட்டுக் கொள்ள செல்லும் குழந்தைகள் காலை உணவைக் கட்டாயம் சாப்பிட்டிருக்க வேண்டும். தடுப்பூசி போட்ட உடன் ஒரு சிலருக்கு அந்த இடத்தில் அரிப்பு ஏற்படலாம். அது 15 நிமிடங்களில் சரியாகிவிடும். அவ்வாறு குணமாகாத குழந்தைகளுக்கு மாத்திரை, களிம்பு போன்றவை ஊசி போடும் இடங்களிலேயே வழங்கப்படும்.
  ஊசி எடுத்து கொண்டவர்களில் சிலருக்கு 6 அல்லது 7 -ஆவது நாள் காய்ச்சல் வர வாய்ப்புள்ளது. உரிய மருந்தை எடுத்துக் கொண்டால் காய்ச்சல் குணமாகிவிடும். எனவே, தடுப்பூசியினால் பாதிப்பு எதுவும் ஏற்படாது. மேலும் தடுப்பூசி போடும் இடங்களில் மருத்துவர்கள் இருப்பது கட்டாயமாக்கப்பட்டுள்ளது என்று மருத்துவர்கள் தெரிவித்தனர்.
  ஆலோசனைக்கு 104!
  தட்டம்மை ரூபல்லா குறித்த சந்தேகங்களுக்கு தமிழக அரசின் 104 இலவச மருத்துவ சேவையை பொதுமக்கள் அழைக்கலாம். மேலும், இந்த தடுப்பூசி குறித்த விவரங்கள், பயன்கள் உள்ளிட்டவை குறித்தும் அவர்கள் தெரிந்து கொள்ளலாம். தற்போது ஒரு நாளைக்கு 150 -க்கும் மேற்பட்டோர் 104 சேவையை அழைத்து, இதுதொடர்பான விளக்கங்களை பெற்று வருகின்றனர் என்று அதிகாரிகள் தெரிவிக்கின்றனர்.

  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
  google_play app_store
  kattana sevai