சுடச்சுட

  

  பன்றிக் காய்ச்சல் இறப்பைத் தடுக்க தனியார் மருத்துவமனைகளுக்கு இலவச மாத்திரைகள்: சுகாதாரத் துறை செயலாளர் தகவல்

  Published on : 16th February 2017 02:15 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

  பன்றிக் காய்ச்சல் இறப்பைத் தடுக்க, தனியார் மருத்துவமனைகளுக்கும் இலவசமாக டாமிப்ளூ மாத்திரைகள் வழங்கப்படும் என்றார் சுகாதாரத் துறை செயலாளர் ஜெ. ராதாகிருஷ்ணன்.
  திருச்சி அரசு மருத்துவமனையில் புதன்கிழமை நடைபெற்ற பன்றிக் காய்ச்சல் விழிப்புணர்வு கருத்தரங்கில் பங்கேற்ற அவர், செய்தியாளர்களிடம் கூறியது:
  தமிழகத்தில் கடந்த ஆண்டைக் காட்டிலும், பன்றிக் காய்ச்சல் இறப்பு விகிதம் சற்று அதிகம்தான். தமிழகத்தில் பன்றிக் காய்ச்சல் அறிகுறியுடன், இதுவரை 900 பேர் சிகிச்சை பெற்றுள்ளனர். இதில், 10 பேர் உயிரிழந்துள்ளனர். இதிலும், திருச்சி மண்டலத்தில் மட்டும் 9 பேர் உயிரிழந்துள்ளனர். பன்றிக் காய்ச்சல் இறப்புகளைக் கட்டுப்படுத்த அரசு தீவிர முயற்சி எடுத்து வருகிறது.
  பன்றிக் காய்ச்சலுக்கான 11,14,000 டாமிப்ளூ மாத்திரைகளும், 31,722 டாமிப்ளூ சிரப் குப்பிகளும், மருத்துவப் பணியாளர்கள், துப்புரவுப் பணியாளர்களுக்கான 10,649 பாதுகாப்பு கவசங்களும், பாதிப்புக்குள்ளானவர்களுக்கான 30,581 என்95 முகக் கவசங்களும், மூன்று மடிப்புகளால் ஆன 3 லட்சம் முகக்கவசங்களும் கையிருப்பில் உள்ளன. நோய்தொற்று பாதிப்பை அறிய தமிழகம் முழுவதும் 21 இடங்களில் ஆய்வு மையங்கள் உள்ளன.
  பீதியடைய தேவையில்லை...: பன்றிக் காய்ச்சல் ஆங்காங்கே ஒரு சில இடங்களில், சிலருக்கு மட்டுமே வந்துள்ளது. பன்றிக் காய்ச்சல் நோய் வந்தால், உடனடியாக டாக்டரை அணுக வேண்டும். சுத்தமாக கை கழுவுவதால் 80 சதவீதம் இந்நோய் பரவுவது தடுக்கப்படுவது ஆய்வில் தெரிய வந்துள்ளது. இதன் காரணமாக ,பள்ளிகளில் கை கழுவும் பழக்கத்தை ஊக்குவித்து வருகிறோம். தமிழகத்தில் பன்றிக்காய்ச்சலை முழுமையாக ஒழிக்க முழு வீச்சில் கண்காணிப்பு மற்றும் தடுப்பு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. எனவே, பொதுமக்கள் யாரும் பீதியடைய வேண்டாம்.
  தனியார் மருத்துவமனைகளுக்கு இலவச மாத்திரைகள்...: தற்போது, தனியார் மருத்துவமனைகளுக்கு பன்றிக்காய்ச்சலுக்கான டாமிப்ளூ மாத்திரைகளை இலவச வழங்க அனுமதியளிக்கப்பட்டுள்ளது.
  இது மாவட்ட சுகாதாரப் பணிகள் இணை இயக்குநர் வழியாக வழங்கப்படவுள்ளது.
  40 லட்சம் பேருக்கு தடுப்பூசி...: தமிழகம் முழுவதும் இதுவரை 40 லட்சம் பேருக்கு தட்டம்மை, ரூபெல்லா தடுப்பூசி போடப்பட்டுள்ளது. இதுகுறித்து சமூக ஊடகங்களில் வதந்திகள் பரப்புவோர் மீது நடவடிக்கை எடுக்கக் கோரி, சென்னை, மதுரை ஆகிய இடங்களில் சைபர் க்ரைம் போலீஸில் புகார் அளிக்கப்பட்டுள்ளது. திருச்சி அரசு மருத்துவமனையில் தாய்-சேய் நலக் கட்டடம் விரைவில் திறக்கப்படும். புதுக்கோட்டை அரசு மருத்துவக் கல்லூரி இந்திய மருத்துவ கவுன்சிலின் ஒப்புதலுக்காக காத்துள்ளது. ஒப்புதல் கிடைத்தால் விரைவில் திறக்கப்படும். கரூர் அரசு மருத்துவக் கல்லூரி கட்டுமானப் பணிகள் நிலப் பிரச்னை காரணமாக தாற்காலிக நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது. மருத்துவத் துறையில் காலியாக உள்ள அனைத்து காலி பணியிடங்களும் விரைவில் நிரப்பப்படும் என்றார் ராதாகிருஷ்ணன்.

  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
  google_play app_store
  kattana sevai