சுடச்சுட

    

    மருத்துவர்கள் அலட்சியத்தால் சிறுமி உயிரிழப்பு: ரூ. 20 லட்சம் இழப்பீடு கோரி குடும்பத்தினர் மனு: அரசிடம் விளக்கம் பெற்று தெரிவிக்க உத்தரவு

    Published on : 18th February 2017 01:51 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    மருத்துவர்கள் அலட்சியத்தால் சிறுமியை இழந்த குடும்பத்துக்கு ரூ. 20 லட்சம் இழப்பீடு கோரிய வழக்கில், அரசிடம் விளக்கம் பெற்று தெரிவிக்க, சென்னை உயர் நீதிமன்ற மதுரைக் கிளை வெள்ளிக்கிழமை உத்தரவிட்டது.
    விருதுநகர் மாவட்டம் அருப்புக்கோட்டையைச் சேர்ந்த தமிழ்ச்செல்வி, சென்னை உயர் நீதிமன்ற மதுரைக் கிளையில் தாக்கல் செய்த மனு:
    எனது மகள் சங்கீதாவுக்கு, தொண்டை பகுதியில் வலி ஏற்பட்டதையடுத்து அவரை அருப்புக்கோட்டை அரசு மருத்துவமனையில் கடந்த ஆண்டு ஏப்ரல் மாதம் சிகிச்சைக்காக அனுமதித்தோம். அவரைப் பரிசோதித்த குழந்தைகள் நல மருத்துவர், டான்சில் அறுவை சிகிச்சை செய்ய வேண்டும் என்று கூறினார். அதன்படி, ஏப்ரல் 14ஆம் தேதி அறுவை சிகிச்சை நடைபெற்றது. சிகிச்சை முடிந்தும் எனது மகள் சுயநினைவின்றி இருப்பதாகவும், அவரை மேல் சிகிச்சைக்காக மதுரை அரசு ராஜாஜி மருத்துவமனைக்கு கொண்டு செல்லவும் மருத்துவர்கள் அறிவுறுத்தினர்.
    இதையடுத்து, மதுரை அரசு ராஜாஜி மருத்துவமனையில் எனது மகளை சிகிச்சைக்காக அனுமதித்தோம். அங்கு தொடர்ந்து 83 நாள்கள் கோமாவில் இருந்த என் மகள், ஜூலை மாதம் 5ஆம் தேதி உயிரிழந்தார். தகவல் அறியும் உரிமைச் சட்டத்தின் கீழ் எனது மகளின் மருத்துவ அறிக்கையை பெற்ற போது அதில் அதிக வீரியமுள்ள மருந்துகள் வழங்கப்பட்டதும், அதனால் உடல்நிலை பாதிப்புக்குள்ளானதும் தெரியவந்தது.
    எனவே, எனது மகளின் சிகிச்சையில் அலட்சியமாக செயல்பட்டு அவரது மரணத்திற்கு காரணமான மருத்துவர்கள் மீது நடவடிக்கை எடுக்கவும், எனது குடும்பத்தினருக்கு இழப்பீடாக ரூ. 20 லட்சம் வழங்கவும் உத்தரவிட வேண்டும் என்று குறிப்பிடப்பட்டிருந்தது.
    இந்த மனு, நீதிபதி எம்.எஸ்.ரமேஷ் முன் வெள்ளிக்கிழமை விசாரணைக்கு வந்தது. மனுவை விசாரித்த நீதிபதி, இதுகுறித்து தமிழக அரசிடம் உரிய விளக்கம் பெற்று தெரிவிக்க அரசு வழக்குரைஞருக்கு உத்தரவிட்டு, விசாரணையை மார்ச் 14ஆம் தேதிக்கு ஒத்திவைத்தார்.

     

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
    google_play app_store
    kattana sevai