சுடச்சுட

  

  எண்ணெய் கசிவை அகற்றியோரை கண்காணிப்பது அவசியம்: மருத்துவர்கள் வலியுறுத்தல்

  Published on : 22nd February 2017 02:17 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

  doctor

  சென்னை பத்திரிகையாளர் மன்றத்தில் செவ்வாய்க்கிழமை ஆய்வறிக்கையை வெளியிட்ட மருத்துவர் அமரன், மருத்துவர் ஸ்ருதி, அருண் கிருஷ்ணமூர்த்தி, சுவேதா நாராயண்.

  புற்றுநோய் தாக்கும் அபாயம் உள்ளதால் சென்னை துறைமுகத்தில் எண்ணைய் கசிவை அகற்றியோரை தொடர்ந்து கண்காணிக்க வேண்டும் என்று மருத்துவர்கள் வலியுறுத்துகின்றனர்.
  சென்னை துறைமுகப் பகுதியில் கடலில் கலந்த கச்சா எண்ணெயை அகற்றும் பணிகள் நிறைவடைந்த நிலையில், அதனால் ஏற்படும் உடல்நலப் பாதிப்புகள் குறித்து 'ஹெல்தி எனர்ஜி இனிஷியேட்டிவ் இந்தியா' என்ற அமைப்பின் சார்பில் ஆய்வு மேற்கொள்ளப்பட்டு, செவ்வாய்க்கிழமை வெளியிடப்பட்டது.
  இதுதொடர்பாக ஆய்வில் ஈடுபட்ட மருத்துவர் ஸ்ருதி, மருத்துவர் அமரன், சுவேதா நாராயண் ஆகியோர் கூறியது:-
  எண்ணெய்க் கசிவை அகற்றும் பணியில் கடலோர பாதுகாப்புப் பிரிவு, தீயணைப்பு மற்றும் மீட்புப்பணிகள் துறை, சென்னை மாநகராட்சி, அப்பகுதி மீனவர்கள் உள்ளிட்டோர் அதிக அளவில் ஈடுபட்டனர்.
  இவற்றில் யாருக்கும் பேரழிவு மேலாண்மை குறித்த எந்தப் பயிற்சியும், விவரங்களும் தெரிவிக்கப்படவில்லை. கையுறைகளும், கால்களில் ஷூக்களும் அணிந்திருந்தாலும், போதுமான பாதுகாப்பு முன்னெச்சரிக்கைகளை முழுமையாக எடுக்கவில்லை.
  கச்சா எண்ணெயில் 2 முக்கிய வேதிப் பொருள்கள் உள்ளன. அவை 2 நாள்களில் ஆவியாகி காற்றில் கலந்துவிடும். ஆனால் காற்றில் அதிக அடர்த்தி காணப்படுவதால் வேதிப் பொருள்கள் தரைமட்டத்திலேயே தங்கிவிடும்.
  இந்த மாசுபட்டக் காற்றை சுவாசிக்கும்போது மூச்சுத்திணறல், இருமல், ஆஸ்துமா, நுரையீரல் புற்றுநோய் உள்ளிட்ட பிரச்னைகள் ஏற்பட வாய்ப்புள்ளது.
  இந்த வேதிப் பொருள்களில் உள்ள நச்சு ரத்தத்தில் கலந்தால் ரத்தப் புற்றுநோய், ரத்தசோகை ஆகிய பிரச்னைகளும், கச்சா எண்ணையை நேரடியாகக் கையாளும்போது தோல் புற்றுநோய் ஏற்படுவதற்கும் வாய்ப்புள்ளது. ஏற்கெனவே பல்வேறு நாடுகளில் ஏற்பட்ட எண்ணெய்க் கசிவு தொடர்பான ஆய்வுகளில் இது கண்டறியப்பட்டுள்ளது.
  பதிவு இல்லை: கசிவை நீக்கும் பணிகள் நடைபெற்றபோது அங்கு அரசின் சார்பில் நடத்தப்பட்ட முகாம்களில் சிகிச்சை பெற்றவர்களின் விவரங்கள் சேகரிக்கப்பட்டவில்லை.
  துறைமுகம் பகுதியில் வசிப்போர், சுத்தப்படுத்தும் பணிகளில் ஈடுபட்டோரைக் கண்டறிந்து, தமிழக அரசு தொடர் மருத்துவக் கண்காணிப்பில் ஈடுபடுத்த வேண்டும்.
  இதற்கென்று தமிழக அரசின் சார்பில் குழு ஒன்று அமைக்கப்பட வேண்டும். உண்மை நிலவரத்தை முழுமையாக மக்களுக்கு தெரிவிக்க வேண்டும் என்றனர்.

   

   

  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
  google_play app_store
  kattana sevai