சுடச்சுட

    

    இந்தியா-அமெரிக்கா கூட்டு ஆய்வு செய்ய நல்ல வாய்ப்பு: அமெரிக்க துணை தூதரக அலுவலர் தகவல்

    Published on : 28th February 2017 02:36 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    மருத்துவம் சார்ந்த ஆய்வுகளில் இந்தியாவும், அமெரிக்காவும் இணைந்து செயல்பட அதிக வாய்ப்புகள் உள்ளன என்று அமெரிக்கத் துணை தூதரக அரசியல்- பொருளாதார அலுவலர் கென்னத் மேக் பிரைட் தெரிவித்தார்.
    போரூர் ஸ்ரீ இராமச்சந்திரா பல்கலைக்கழகம் சார்பில், ஆய்வுத்திறமை வளர்த்தல் என்னும் இந்திய- அமெரிக்க கூட்டுப் பயிலரங்கம் திங்கள்கிழமை தொடங்கியது. இதில், கென்னத் மேக் பிரைட் பேசியது:-
    கடந்த 3 ஆண்டுகளில் பிரதமர் நரேந்திர மோடிக்கும், அமெரிக்க முன்னாள் அதிபர் ஒபாமாவுக்கும் இடையே நல்லுறவு இருந்தது. இதனால், இரு நாட்டு உறவுகள் மேம்பட்டன. அடுத்த சில ஆண்டுகளில் மேலும் வலுப்பெற வாய்ப்புள்ளது.
    இரு நாடுகளும் மருத்துவச் சிகிச்சை, அறிவியல் தொழில்நுட்ப ஆய்வுகளில் இணைந்து செயல்பட அதிக வாய்ப்புகள் உள்ளன. இதனால், அறிவியல், தொழில்நுட்பம் மேம்படும். இதுதவிர, குறைந்த விலையில் மருத்துவம் சார்ந்த பொருள்கள் கிடைக்க வாய்ப்பு உள்ளது என்றார் கென்னத் மேக் பிரைட்.
    நிகழ்ச்சியில் ஒஹையோ கெண்ட் மாநில பல்கலைக்கழகத்தைச் சேர்ந்த மேக்லவ்க்லின் பேசியதாவது:-
    புகழ்பெற்ற பன்னாட்டு பல்கலைக்கழகங்களைப் போன்று விளங்க மற்றவர்கள் முயற்சிகளையும், அவர்கள் அடைந்த தரங்களையும் பின்பற்ற வேண்டும். பன்னாட்டு பல்கலைக்கழகங்களிடையே கூட்டு முயற்சிகளும், பன்னாட்டு ஆய்வு திட்டங்களும், பன்னாட்டு மருத்துவ ஆய்வு மையங்களும், பன்னாட்டு ஆசிரியர்கள் மற்றும் மாணவர்களிடையேயான பரஸ்பர பரிமாற்றங்களும் இருந்தால் நாம் உலகளாவிய கவனத்தை அடைய முடியும் என்றார் மேக்லவ்க்லின்.
    நிகழ்ச்சியில்,பல்கலை. துணைவேந்தர் ஜெ.எஸ்.என்.மூர்த்தி, ஆய்வுத் துறை தலைவர் எஸ்.பி.தியாகராஜன், கல்வித் துறைத் தலைவர் பி.வி.விஜயராகவன், பல்துறைத் தலைவர் கே.வி.சோமசுந்தரம், நுரையீரல் சார் மருத்துவத் துறை தலைவர் விஜயலட்சுமி தனசேகரன், மருத்துவ ஆய்வுத் துறையைச் சேர்ந்த பி.எஸ்.துவாரகநாத் உள்ளிட்டோர் பேசினர்.

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
    google_play app_store
    kattana sevai