ஒரே நாளில் 20,000 குழந்தைகளுக்கு ரோட்டா வைரஸ் தடுப்பு மருந்து அளிப்பு
By | Published On : 21st September 2017 03:00 AM | Last Updated : 21st September 2017 03:00 AM | அ+அ அ- |

தமிழகத்தில் ஒன்றரை மாதமுள்ள 20 ஆயிரம் குழந்தைகளுக்கு ரோட்டா வைரஸ் தடுப்பு மருந்து புதன்கிழமை வழங்கப்பட்டுள்ளது.
ரோட்டா வைரஸ் தடுப்பு மருந்து வழங்கும் திட்டம் தமிழகத்தில் தொடங்கப்பட்டுள்ளது. இந்தத் தடுப்பு மருந்து குழந்தை பிறந்த ஒன்றரை மாதம், இரண்டரை மாதம், மூன்றரை மாதம் என 3 தவணைகளாக வழங்கப்படும். ஒவ்வொரு தவணைக்கும் 5 சொட்டு ரோட்டா வைரஸ் தடுப்பு மருந்து வழங்கப்படும். இந்தத் தடுப்பு மருந்தானது தேசிய தடுப்பூசித் திட்டத்தின் கீழ் இணைக்கப்பட்டுள்ளது.
அனைத்து அரசு ஆரம்ப சுகாதார நிலையங்கள், நகர்ப்புற ஆரம்ப சுகாதார நிலையங்கள், துணை சுகாதார நிலையங்கள் மற்றும் அரசு மருத்துவமனைகளிலும் இந்தத் திட்டம் புதன்கிழமை தொடங்கப்பட்டது. இந்தத் தடுப்பு மருந்தை தனியார் மருத்துவமனைகளில் பெற ரூ.3,000 வரை செலவாகும். இதனை அரசு இலவசமாக வழங்கி வருகிறது.
உலக அளவில் 5 வயதுக்குட்பட்ட குழந்தைகள் இறப்பதற்கு வயிற்றுப்போக்கு இரண்டாவது முக்கியக் காரணமாக உள்ளது. இந்தியாவில் 5 வயதுக்குட்பட்ட குழந்தைகளுக்கு ஏற்படும் மிதமான மற்றும் கடுமையான வயிற்றுப்போக்குகளில் 40 சதவீதம் ரோட்டா வைரஸ் கிருமித் தொற்றினால் ஏற்படுகிறது.
ஓராண்டில் 32.7 லட்சம் குழந்தைகள் புற நோயாளிகளாகவும், 8.72 இலட்சம் குழந்தைகள் உள்நோயாளிகளாகவும் ரோட்டா வைரஸ் தொற்றினால் ஏற்படும் வயிற்றுப்போக்குக்காக சிகிச்சை பெறுகின்றனர்.
எனவே, வயிற்றுப்போக்கின் தாக்கம் மற்றும் இறப்புகளை முழுமையாகக் கட்டுப்படுத்துவதற்கு ரோட்டா வைரஸ் தடுப்பு மருந்து வழங்கும் திட்டம் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.
இதுதொடர்பாக பொது சுகாதாரத் துறை இயக்குநர் டாக்டர் குழந்தைசாமி கூறுகையில், 'திட்டம் தொடங்கப்பட்டுள்ள புதன்கிழமை மட்டும், ஒன்றரை மாத குழந்தைகள் 20 ஆயிரம் பேருக்கு ரோட்டா தடுப்பு மருந்து வழங்கப்பட்டது. தொடர்ந்து மூன்று பிரிவுகளாக தடுப்பு மருந்து வழங்கப்படும்' என்றார் அவர்.