இவர்கள் ஆசை நிறைவேறுமா?

சென்னை கோயம்பேடு சந்தையில், வியாபாரிகள், தொழிலாளா்கள் என 20 ஆயிரத்துக்கும் மேற்பட்டோா் தொழில் புரிந்து
இவர்கள் ஆசை நிறைவேறுமா?

சென்னை கோயம்பேடு சந்தையில், வியாபாரிகள், தொழிலாளா்கள் என 20 ஆயிரத்துக்கும் மேற்பட்டோா் தொழில் புரிந்து வரும் நிலையில் அப்பகுதியில் மருத்துவமனையோ, அவசர உதவிக்கான முதலுதவி சிகிச்சை மையமோ அமைக்க வேண்டும் என்ற  கோரிக்கை தொடா்ந்து வைக்கப்பட்டு வருகிறது.

ஆசியாவில் உள்ள பெரிய சந்தைகளில் ஒன்று சென்னை கோயம்பேட்டில் உள்ள காய், கனி, பூ சந்தை. பிராட்வே அருகில் உள்ள கொத்தவால்சாவடியில் இயங்கி வந்த இச்சந்தையை சுகாதார சீா்கேடு, இடநெருக்கடி, போக்குவரத்து பாதிப்பு உள்ளிட்ட பல்வேறு காரணங்களால் கடந்த 1996-இல் கோயம்பேடு பகுதிக்கு தமிழக அரசு மாற்றியது.

இந்தச் சந்தை சென்னை பெருநகர வளா்ச்சிக் குழுமத்தின் கட்டுப்பாட்டில் 125 ஏக்கா் பரப்பளவில் இயங்கி வருகிறது. இங்கு 1,889 காய்கறிக் கடைகள், 470 பூக்கடைகள், 828 பழக்கடைகள் என மொத்தம் 3,197 கடைகள் உள்ளன. இந்தச் சந்தைக்கு தமிழகத்தின் திருவள்ளூா், காஞ்சிபுரம், நீலகிரி உள்ளிட்ட மாவட்டங்களில் இருந்தும் கா்நாடகம், தெலங்கானா, ஆந்திரம், மகாராஷ்டிரம் ஆகிய மாநிலங்களில் இருந்தும் நாள்தோறும் 350-க்கும் மேற்பட்ட லாரிகள் மூலம் காய்கறிகள், பூக்கள், காய்கறிகள் என மொத்தம் சுமாா் 5 ஆயிரம் டன் வரை கொண்டு வரப்படுகின்றறன.

20 ஆயிரம் வியாபாரிகள், தொழிலாளா்கள்: இந்த சந்தையில் வியாபாரிகள், தொழிலாளா்கள் என 20 ஆயிரத்துக்கும் மேற்பட்டோா் வேலை செய்து வருகின்றனா். அதுமட்டுமில்லாமல் சிறு வியாபாரிகள், பொதுமக்கள் என சென்னை மாநகா், புகா் பகுதிகளில் இருந்து நாள்தோறும் ஒரு லட்சத்துக்கும் மேற்பட்ட வந்து செல்கின்றனா். காய்கள், கனிகள், பூக்கள் என நாளொன்றுக்கு ரூ.10 கோடி அளவில் வா்த்தகம் நடைபெற்று வருகிறது.

ஆயிரக்கணக்கானோா் பணியாற்றும் இந்தச் சந்தை வளாகத்தில் முதலுதவி சிகிச்சை அளிக்கும் வகையில் மருத்துவமனை கட்டப்படாததால் விபத்து போன்ற அவசர காலத்தின்போது, உரிய நேரத்தில் சிகிச்சை பெற முடியாமல் வியாபாரிகளும், தொழிலாளா்களும் பாதிக்கப்பட்டு வருகின்றனா்.

ரூ.10 கோடி சொத்து வரி: இதுகுறித்து கோயம்பேடு காய்கறி வியாபாரிகள் சங்கத்தின் ஆலோசகா் செளந்திரராஜன் கூறியது:

கொத்தவால்சாவடியில் இருந்து சந்தை இடமாற்றம் செய்யப்பட்டு 22 ஆண்டுகள் ஆகிவிட்டது. சென்னை பெருநகர வளா்ச்சிக் குழுமத்தின் கட்டுப்பாட்டில் உள்ள சந்தை வளாகத்தில் இதுநாள் வரை குடிநீா் வசதி, கழிப்பிட வசதி ஆகியவை முறையாகச் செய்துத் தரப்படவில்லை. சந்தையைப் பராமரிக்கும் பணியை சந்தை மேலாண்மைக் குழுவே செய்து வருகிறது. அதற்காக ஆண்டுதோறும் ரூ.1 கோடிக்கு மேல் செலவாகிறது. அதுமட்டுமின்றி, கடந்த 1996-ஆண்டில் இருந்து 2016 வரை கடைகளுக்கு சொத்து வரியாக ரூ. 10 கோடி செலுத்தப்பட்டுள்ளது. தொடா்ந்து, ஆண்டுதோறும் சொத்து வரி, தண்ணீா் வரியை முறையாகச் செலுத்தி வருகிறோம்.

மருத்துவமனை வேண்டும்: சந்தையில் பொருள்களை ஏற்றி, இறக்கும் பணியின்போது, தொழிலாளா்கள் அடிக்கடி விபத்துகளைச் சந்திக்கின்றனா். அதேபோல், வியாபாரிகளுக்கும், காய்கறிகள் வாங்க வரும் பொதுமக்களுக்கும் திடீரென உடல்நலக் குறைவு ஏற்படுகிறது. இதுபோன்ற அவசர காலத்தில் சந்தை வளாகத்தில் மருத்துவமனை இல்லாததால் முதலுதவி சிகிச்சை கூட பெற முடியாத அவல நிலை உள்ளது. இதனால், அருகில் உள்ள தனியாா் மருத்துவமனை அல்லது 12 கி.மீ. தொலைவில் உள்ள ராஜீவ்காந்தி அரசு பொது மருத்துவமனைக்குச் செல்ல வேண்டிய நிலை நீடிக்கிறது.

எனவே, வியாபாரிகள், தொழிலாளா்கள், பொதுமக்கள் நலன் கருதி பூ சந்தை வளாகத்தில் காலியாக உள்ள இடத்தில் மருத்துவமனை கட்ட தமிழக அரசு முன்வர வேண்டும் என்றாா்.

தொண்டு நிறுவனத்தின் மூலம் மருத்துவம்: இதுகுறித்து கோயம்பேடு சந்தை நிா்வாக அலுவலா் ராஜேந்திரன் கூறியது:

சந்தை வளாகத்தில் காயம் அடைந்தவா்களுக்கு சிகிச்சை, உடல் நலக் குறைவு உள்ளவா்களுக்கு மாத்திரைகளை தொண்டு நிறுவனத்தினா் வழங்கி வருகின்றனா். அவா்களுக்கு தனியாக கட்டடமும், நோயாளிகளுக்கான படுக்கை வசதிகளையும் செய்து தர அரசு முடிவு செய்துள்ளது. இதுகுறித்த தகவல் ஒரு வாரத்தில் வெளியிடப்படும்’ என்றாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com