சிக்ஸ் பேக் என்ன எய்ட் பேக் கூட பெற முடியும்! எப்படி?

நாம் ஏனோ நம் மனநிலை பற்றி பேசுவதற்கு பல சமயம் தயங்குகிறோம். மனநலத்தைத் துச்சமாக கருதிவிடுகிறோம்.
சிக்ஸ் பேக் என்ன எய்ட் பேக் கூட பெற முடியும்! எப்படி?

நாம் ஏனோ நம் மனநிலை பற்றி பேசுவதற்கு பல சமயம் தயங்குகிறோம். மனநலத்தைத் துச்சமாக கருதிவிடுகிறோம். நலம் என்பதில், நம் உடல், மனம் இரண்டும் அடங்கும். ஒன்றின் நிலை சரியில்லை என்றால் கூடவே இன்னொன்றும் அத்துடன் உடனடியாக கைகோர்த்துக் கொள்ளும். உதாரணத்திற்கு, தலை வலித்தால் கூடவே சலிப்பு தட்டும். வயிற்றில் வலி வந்தால், வேலை ஓடாது, எரிச்சல் படுவோம். ஒருவருக்கு உடல்ரீதியான நோய்களான, புற்றுநோய், இருதய நோய் இருந்தால், வருத்தம், மனக்கசப்பும் கூடவே நேர்கிறது. உடலில் நிகழ்வதை மனம் தன் மொழியினால் வெளிப்படுத்தும்.
 

உடலில் உபாதை இருக்கையில், செய்ய முடியாததை Body language காட்டிவிடும்

முகபாவங்களாக, கண்ணீராக, உணர்வுகளாக. அதே போல், மனதில் பயம் நேர்ந்தால், கை நடுங்கும், உடல் சிலிர்க்கும். வெட்கத்தில் கன்னம் சிவப்பது, வருத்தத்தில் குரல் கரகரப்பது எல்லாம் மனம்-உடல் சேர்ந்து செயல் பட்டு பேசும் மொழிகளின் பிரதிபலிப்பே. உடலுக்காக மனம் பேசும், மனதிற்கு உடல் பேசும். இவ்விரண்டையும் பிரித்து, புரிந்து கொள்ள முடியாது.

எதற்கு அவமானம்?

பொதுவாக, நம் உடலுக்கு எந்த உபாதை வந்தாலும் எவ்வளவு சீக்கிரமாக முடிகிறதோ நாம் டாக்டரைப் பார்த்து அதைச் சரி செய்ய முயற்சிப்போம். எவ்வளவு செலவானாலும், எவ்வளவு தொலைவில் டாக்டர் இருந்தாலும், போய் ஆலோசிப்போம். இது நம் உடலுக்கு நாம் செலுத்தும் மரியாதை என்று கூடச் சொல்லலாம். உடல் நன்றாக இல்லை என்றால், பல வேலைகள் நின்று போய்விடும் என்பதும் இதற்கு ஒரு காரணம்.

அதே, நம் மனம் தளர்ந்தோ, வேதனைப்பட்டுக் கொண்டு இருந்தாலோ, பயம் கவ்வி சூழ்ந்திருந்தாலோ, அதைத் தானாக சரி செய்ய முயற்சிப்போம், அல்லது ஏதேனும் ஒருவரிடம் பகிர்ந்து கொள்வோம், அவர்கள் அதைக் குத்திக் காட்டாமல் இருப்பவர்களாக இருந்தால். இல்லை டைரி எழுதி மனக் கஷ்டங்களை அதில் கொட்டுவோம். இப்படி பலவிதமாக முயலுவோம். இவை, உடல் உபாதைகளுக்கு விக்ஸ், ஐயோடெக்ஸ் தடவிக் கொள்வது போல், சாதாரணமான உபாதையாக இருந்தால் நாளடைவில் சரியாகி விடும். இப்படி முயற்சிக்க வேண்டியது தான். ஆனால் வாரங்கள் ஆயினும் சரியாகவில்லை என்றால்?

உடல் உபாதைகளுக்கு மருத்துவரிடம் காண்பித்து சிகிச்சை எடுத்துக் கொள்வோம். ஆனால் மன உபாதைகளுக்கோ, அதை அப்படியே அமுக்கிக் கொண்டு, யாருக்கும் தெரியாதபடி இருக்க முயலுவோம். யாராவது விசாரித்தால், உடலின் உபாதை ஒன்றைச் சொல்லி சமாளிக்கப் பார்ப்போம். உடல் உபாதை என்றால் மற்றவரும் எளிதாக ஏற்றுக் கொள்வார்கள்.

இருப்பதை மாற்றிக் கூறுவது, மருத்துவரைப் பார்க்கத் தயங்குவது, மற்றவர்களுக்குத் தெரிந்தால் அவமானம் என்று நினைப்பதினாலா,  இல்லை நம் மனமும் ஒரு உறுப்பு, கோளாறுகள் ஏற்படும் என்பதற்குத் துளிகூட மரியாதை கொடுக்காமல் இருப்பதாலா?

மூடி மூடி வைத்தால் இருக்கிற பிரச்னை அதிகரிக்கச் செய்யும். நாம் அன்றாடம் செய்து வருவதில் நம் மனநலம் குறுக்கே வந்து கொண்டே இருக்கும். உடல் உபாதைகள் சிலவற்றுக்கும் (ஸொரியாஸிஸ், எச்.ஐ.வி. எனப் பல) இது பிறருக்குத் தெரிந்தால் அவமானம் என்ற கதி நேர்கிறது. ஏன் பயந்து, தொல்லைகளைப் பொறுத்துக் கொண்டு  இருக்க முயற்சிக்கிறோம்? மனம் சரி இல்லை என்றால், அவமானம் என யூகிப்பதால், ஏற்கனவே தவிக்கும் தவிப்புடன் இதையும் தாங்கி கொள்வது நாம் நமக்கே செய்யம் அநீதி என்பேன்.

பாரபட்சம் கண்ணோட்டம்

மனநல ஆலோசகரைப் பார்க்க முடிவெடுத்த பின்னும் பிறகு காலைப் பின் வாங்கிக் கொள்வோர் உண்டு. இப்படி நடப்பது புதிது அல்ல. முன்காலங்களை விட இப்பொழுது நிலமை கொஞ்சம் பரவாயில்லை எனலாம்.

மனநல சிகிச்சை பெற்று வந்தால் மற்றவர்கள் தன்னை பற்றி என்ன நினைப்பார்கள் என்ற சிந்தனை பலருக்கு உண்டு. ‘பைத்தியம்’ என்ற முத்திரை கொடுத்து விடுவார்கள் என அச்சம், அதனாலேயே தயக்கம். மனநலத்திற்குத் சமுதாயம் தரும் அந்தஸ்தாலேயே இது நேர்கிறது. முதல் முறையாக வக்கீல், போலீஸ் ஸ்டேஷன் போகும் பொழுது புதிய அனுபவத்தின் பதற்றம் இருக்கத்தான் செய்யும். ஆனால் தேவை, என்றால் உதவியை நாடத் தான் வேண்டும்.

மனநல ஆலோசனை தேவைப்பட்டால் அது தன் இயலாமை என எண்ணி, கூச்சப்படுபவதாலும் அப்படியே இருந்து விடுவதுண்டு. முயன்ற பின்னும், விடை கிடைக்காததுதான் அணுகுவதற்கான காரணம் என்று உணர்வது மிக அவசியம். தன்னால் சமாளிக்க முடியவில்லை என்றால் தன்மதிப்பு குறைய வேண்டாம். தன்னுடைய குறைபாடுகளை அறிந்து செயல்படுவது நம் புத்திசாலித் தனத்தையும், பணிவையும் காட்டும், மதிப்பை உயர்த்தும். மற்றவர்கள் நம்மை “லூசு” என்பார்களோ என்ற முத்திரைக்கு அச்சப்பட்டால்,  மற்றவர்கள் தரும் முத்திரைகளுக்கு முக்கியத்துவம் தந்து, சுயமாக யோசித்து முடிவெடுப்பது பின் தங்கிப் போகிறது.

‘மன நலம்’  என்ற இரு வார்த்தையில் விடை இருக்கிறது. நிலையை மாற்றி கையை மீறிப் போகும் முன்பே அணுகினால் சீக்கிதரத்தில் நன்றாகும், கூடவே, மனத்திடத்தை மேம்படுத்திக் கொள்ள முடியும். எது நல்லது - மனத்தைத் திடமாக்குவதா? அஞ்சி-நடுங்கி-பயந்து மனம் தளர்ந்ததை, தவிப்புகளைப் பதுக்கி வைப்பதா? இல்லை காரணிகளைப் பிளந்து, விடை தேடுவதா? வழிகள் பல இருக்க ஏன் நிம்மதியற்ற நிலையில் இருக்க வேண்டும்?

மனதிடம்

நம் மனநிலைகளைத் திடப்படுத்திக் கொண்டு ஒரு நல்ல அஸ்திவாரம் அமைத்துக் கொண்டால், நாம் செயல்படும் விதமே வேறு விதமாக இருக்கும். புது மனதிடம் நமக்கும், மற்றவர்களுக்கும் நன்றாகத் தென்படும்! அதை, எப்படிக் கண்டறிந்து கொள்ள முடியும்?

மனதிடம் இருந்தால், தன்னைப் பற்றி நல்ல மதிப்பும், அபிப்பிராயமும் இருக்கும், சிந்தனை தெளிவாக இருக்கும். விஷயங்களை ஆராயும் திறன், பிரச்னைகளைச் சந்தித்து, சுதாரிக்கும் பக்குவம்; தாமாகவே இயங்கிச் செய்வது, மற்றவர்களுடன் கூடிச் செய்வது; சந்தோஷமாக இருப்பது, கூட இருப்பவரின் நலன் கருதுவது என்ற பல விதங்களில் மனதிடம் தென்படும்.

இதில் ஏதோ ஒன்று பல நாட்களுக்குத் தண்டவாளம் இறங்கிய படியே இருப்பதால் தான், மனநல ஆலோசனை தேவைப்படுகிறது. சில சமயங்களில், நமக்கு நிகழ்ந்த அனுபவங்கள், குடும்ப சூழ்நிலைகள்  சமாளிக்க முடியாமல் போனாலோ, தாங்க முடியாமல் போகும் பொழுதோ இப்படி நேரலாம். அப்போது மனநல உதவியை  நாடுவது அவசியம்.

உதவி நாடுவது தைரியத்தின் அடையாளம். மனத்திடத்தின் முதல் அடையாளம்!

பக்குவமும் தைரியமும்

உதவி கேட்பதில் நம் பக்குவம் தெரியும். நம்முடைய நிலைமையை அறிந்து, அதைப் பற்றி சிந்தித்து, முடிவு செய்வதே பக்குவத்தின் அடையாளமாகும். நம் வீட்டார், தெரிந்தவருடன் நம் நிலைமையைப் பற்றி பகிர்ந்து கொள்வோம். பதில் கிடைக்காமல் இருக்கும் தறுவாயில் என்ன செய்வது என்ற குழப்பம் எழும். யாரிடம் சொல்வது? என்றெல்லாம் சிந்திப்போம்.

அது மட்டுமின்றி, தன்னுடைய சொந்த அந்தரங்க விஷயங்கள், குடும்பத்தாரைப் பற்றி எல்லாம் மூன்றாமவரிடம் எப்படிப் பேசுவது என்றும் குழம்பிப் போகலாம். ‘என்னையும் என் குடும்பத்தையும் என்னவென்று எடை போடுவார்கள்?’ என்ற மைன்ட் வாய்ஸ் வேறு ஓடிக்கொண்டிருக்கும். இதனாலேயே தயங்கி, மூடி வைப்பது. காலத்தைக் கடத்தி கொண்டே போவது.

பகிர்ந்து, பேச ஒரு எளிதான விடை இருக்கிறது. மனநலனைப் பற்றி படித்து, தேர்ச்சி பெற்றவர்களை நாடலாம். நம் சமுதாயத்தில், சில சூழ்நிலையில் சமூக மூத்தவர்கள், மடாதிபதி, ஆசிரியர்களிடம் தன் நிலமையைப் பற்றிப் பேசுவது பொதுவாக நடப்பதே.

அதே போல் தான் மனநல ஆலோசகரிடம் பகிர்வதும். உளவியல் நன்கு புரிவதினாலும், பயிற்சி பெற்றதாலும், நாங்கள் (மனநலத் துறையில் உள்ளவர்கள்) அவரவரின் வளங்களை உபயோகித்து நிலையைச் சரி செய்வோம். நிகழும் சூழலை விவரிக்கத் தேவைப்படும். அதில் நம்மைப் பற்றியும், நம்மை சேர்ந்தவரைப் பற்றியும் பேசத் தேவைப்படும். இது வம்பளத்தல் இல்லை.

நிலையைப் புரிந்து, மனத்திடத்தை மேம்படுத்த என்ன செய்ய வேண்டும் என்ற புரிதலுக்காக இந்த விஷயங்கள் சேகரிக்கப்படும். பகிர்ந்து கொள்வது ஒவ்வொன்றும் மிகவும் ரகசியமானதால் வெளியே பகிர்ந்து கொள்ள மாட்டோம், இது எங்கள் தொழில் தர்மம்.

எங்களிடம் வந்து நன்மை பெறுவதற்கு ‘சரி செய்ய வாய்ப்பு உண்டு’ என்ற நம்பிக்கை தான் மூலப் பொருள். ‘ஆம் இதைப் பற்றி பேசி, தெளிவடைய வேண்டும்’ என்ற முடிவே இந்தத் தயாரான நிலையைக் காட்டுகிறது. இப்படி இல்லாமல், மற்றவர்கள் சொல்லுக்காக வந்தால், வற்புறுத்தலினால் வந்தால், இந்த ஒத்துழைப்பும், தயாரான நிலையம் இருக்காது, நன்மை பெறுவது கடினம். மாறாக, இந்தக் கலவை இருந்துவிட்டால், ஸிக்ஸ் பேக் என்ன எய்ட் பேக் மனதிடம் எளிதாகப் பெற முடியும் - ரெடியாக இருந்தால்!

மனநல ஆலோசகரை ஆலோசித்து, மனநலன் மேம்பட்டால், மதிப்பு கூடுமே தவிரக் குறையவே குறையாது. பரிவு இல்லாதவரே ‘லூசு’, ‘க்ராக்’ போன்ற வார்த்தைகளை உபயோகிப்பார்கள், இது அவர்களின் மனநலக் குறைவைக் காட்டுகிறது. அச்சமின்றி நம்முடைய நிலையைச் சுதாரிக்கும் வழியை மேற்கொண்டால் அப்படிப்பட்ட சொற்களுக்குப் பலியாகாமல் இருப்போம்.

சுதாரிப்பது, அவர்களுக்காக அல்லவே அல்ல. நாம் மேம்படவே தான். இது நிகழ நம் மனநலனை நாம் மதிக்க வேண்டும்!

- மாலதி சுவாமிநாதன், மனநலம் மற்றும் கல்வி ஆலோசகர்
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com