அமெரிக்க மருத்துவ பல்கலைக்கழக வேலையைத் துறந்து இந்திய பாரம்பரிய வைத்தியத்திற்கு திரும்பிய முனைவர் ஹரிநாத் காசிகணேசன் பேட்டி!

அமெரிக்கா, இன்றைக்கும் இந்தியர்களின் கனவு பூமி. சொகுசு வாழ்க்கை... தரமான உணவு... பொருளாதார வசதி
அமெரிக்க மருத்துவ பல்கலைக்கழக வேலையைத் துறந்து இந்திய பாரம்பரிய வைத்தியத்திற்கு திரும்பிய முனைவர் ஹரிநாத் காசிகணேசன் பேட்டி!

அமெரிக்கா, இன்றைக்கும் இந்தியர்களின் கனவு பூமி. சொகுசு வாழ்க்கை... தரமான உணவு... பொருளாதார வசதி... சுத்தம்.. சுகாதாரம்... இவைதான் அமெரிக்காவின் கவர்ச்சிகள். அமெரிக்க சென்றவர் யாரும் இந்தியாவிற்குத் திரும்பாததற்கு இவைதான் காரணம். ஆனால், அமெரிக்காவில் விஞ்ஞானியாக இருந்தவர், நிறைய சம்பளம், கெளரவம், சொகுசு வாழ்க்கையை விட்டு விட்டு தமிழகம் வந்து இயற்கை விவசாயம் பார்க்கிறார் என்றால் நம்ப முடியுமா? நம்பித்தான் ஆக வேண்டும். முனைவர் ஹரிநாத் காசிகணேசன். அமெரிக்காவில் நோய் தீர்க்கும் மருந்துகளைக் கண்டுபிடிக்கும் ஆய்வகத்தில் ஆராய்ச்சியாளராகப் பணிபுரிந்து வந்தவர் முனைவர் ஹரிநாத். தற்போது, தமிழகத்தின் பெண்ணகரம் கிராமத்தில் பாரம்பரிய இயற்கை முறை உழவுத் தொழில் செய்து கொண்டிருக்கிறார். இதுகுறித்து அவர் பகிர்ந்து கொண்டவை: 
'அமெரிக்கா செல்வதற்கு முன், இந்திய அரசின் பாதுகாப்பு ஆராய்ச்சி மற்றும் அபிவிருத்தி நிறுவனத்தில் பணியாற்றி வந்தேன். அந்த நிறுவனத்தின் ஆணி வேறாக இருந்த டாக்டர் அப்துல் கலாம் ஐயாவை நன்றாகத் தெரியும். உழைப்பிற்கு இலக்கணம் அவர். அவரிடமிருந்து நான் கற்றவை அநேகம். அவை எனது வாழ்க்கையில் பலவிதத்தில் உதவியுள்ளன.

நான் அடிப்படையில் விவசாயக் குடும்பத்தைச் சேர்ந்தவன். அப்பா சின்ன வயதிலே காலமானார். அம்மாதான் தனியாக என்னை வளர்த்தார். சென்னையில் முதுகலை முடித்து விட்டு, வேலூர் சிஎம்சியில் பேராசிரியராகப் பணிபுரிந்தேன். பிறகு 1993-ம் ஆண்டு வாக்கில் மத்திய அரசின் DRDO நிறுவனத்தில் முதுநிலை ஆராய்ச்சியாளராக பணியில் சேர்ந்தேன். 2005-இல் அமெரிக்கா சென்றேன். அங்கே சார்ல்ஸ்டன், தெற்கு கலிஃபோர்னியா மருத்துவ பல்கலைக்கழகத்தில் என்னை இணைத்துக் கொண்டேன். தொடர்ந்த பத்து ஆண்டுகளில் இருதயத் துறையில் மருந்து ஆராய்ச்சியாளராக பொறுப்பேற்றேன். 

ஊரில் அம்மாவின் உடல்நிலை சுகவீனம் ஆனதால் தமிழகம் திரும்பினேன். அம்மாவிற்கு தீவிர மூட்டுவாதம் மற்றும் ஸ்பாண்டிலைடிஸ் எனப்படும் கழுத்து வலியால் அவதிப்பட்டார். மூட்டு, கழுத்து வலிகளை குறைக்கவும், வலியை உணராமல் செய்யவும் வீரியமுள்ள வலி போக்கி மருந்துகள் செலுத்தப்பட்டன. இதன் காரணமாக அம்மாவின் குடலில் புண்கள் ஏற்பட்டன. கூடவே வலியும். 

அம்மாவின் உடல்நிலையில் முன்னேற்றம் ஏதும் ஏற்படவில்லை. ஒவ்வொரு நாளும் அவரது நிலைமை மோசமாகிக் கொண்டு வந்தது. அமெரிக்காவில் மருந்துகளைக் கண்டு பிடிக்கும் தொழிலில் பணிபுரிந்த என்னால் அம்மாவின் உடல் பிரச்னையைத் தீர்க்கும் மருந்தினைத் தர முடியவில்லை. அது என்னை மிகவும் வேதனைப் படுத்தியது. அம்மாவுக்கு வலியிலிருந்து நிவாரணம் தர முடியவில்லையே என்று நானும் மன வலியின் தீவிரத்தை உணர்ந்தேன். ஒரு கட்டத்தில் பாரம்பரிய மருத்துவ முறை எனது நினைவுகளில் வந்து போனது. முருங்கை இலையைக் கொத்தாக தண்ணீரில் போட்டு கொதிக்க வைத்து அந்த நீரை அம்மாவுக்கு கொடுத்து வந்தேன். வலி சிறிது சிறிதாகக் குறையத் தொடங்கியது. சில மாதங்களில் அம்மா முழுமையாகக் குணம் அடைந்தார். மூட்டு, கழுத்து வலி மாயமாக மறைந்தது. இந்தத் திருப்பம் என்னுள் ஒரு பொறியை ஏற்படுத்தியது. பாரம்பரிய வைத்தியம் அத்துடன் இயற்கை விவசாயம் நோக்கி எனது கவனம் திரும்பியது. 

பெண்ணாகரத்தில் 2015 -இல் நிலம் வாங்கினேன். பாரம்பரிய முறையில் காய்கறிகளையும், மூலிகைச் செடிகளையும் பயிரிட்டேன். தமிழகத்தின் பல பகுதிகளுக்கு பயணித்தேன். 'மாப்பிள்ளை சம்பா', 'கிச்சிலி சம்பா', 'கருங்குருவை', 'வாசனை சீரகச் சம்பா' போன்ற மருத்துவ குணம் கொண்ட அரிசிவகைகள் குறித்து கேட்டுத் தெரிந்து கொண்டேன். தமிழ்நாட்டின் பாரம்பரிய மருத்துவ முறையான சித்தர் பாடல்களில் மருத்துவ குணங்கள் உள்ள உணவுப் பொருள்கள் பற்றி சொல்லப்பட்டுள்ளன. அவற்றைப் பயிரிடவும் செய்தேன். இன்னொரு பக்கம், முருங்கை, கறிவேப்பிலை, நெல்லி வளர்த்தேன். 

சிறிய கால இடைவெளியில் 'முருங்கை' வைத்தியத்தைத் தொடங்கினேன். மூட்டுவலி, சர்க்கரை நோய், ரத்தசோகை, உயர் ரத்த அழுத்தம் போன்ற பிரச்னைகளுக்கு இந்த முருங்கையின் மருத்துவ மூலங்களுடன், சில மூலிகைகளையும் சேர்த்து மருந்தாகக் கொடுக்க ஆரம்பித்தேன். அது வெற்றி பெற்றுள்ளது. கூடுதல் ஆராய்ச்சிக்காக சில நிறுவனங்களை அணுகியுள்ளேன். விவசாயமும் ஒரு விஞ்ஞானம்தான். பாரம்பரிய முறையில் இயற்கை விவசாயம் செய்து விளையும் காய்கறிகள், அரிசி வகைகளை உண்டு வந்தால், ரசாயன உரங்களைக் கொண்டு வளரும் உணவுப் பொருள்களால் உடலில் வந்து சேர்ந்திருக்கும் ரசாயன உரம், பூச்சிக்கொல்லிகளின் தாக்கங்களை சிறிது சிறிதாகக் குறைத்து இல்லாமல் செய்து விடலாம். பாரம்பரிய முறையில் அரைத்து எடுக்கப்படும் எண்ணெய் வகைகள் பார்க்க பொன்னிறமாக இருக்காது. ஆனால் உடலை பொன்னாக மின்னச் செய்யும்' என்கிறார் விஞ்ஞானியும் விவசாயியுமான முனைவர் ஹரிநாத். 
- சுதந்திரன்

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com