தாய்லாந்து இளநீர் ஃபேக்டரி செயல்வீரர்களும் ‘கார்பல் டனல் சிண்ட்ரோமும்’!

இந்த சிண்ட்ரோம் தாக்குதல் தாய்லாந்து இளநீர் ஃபேக்டரி தொழிலாளர்களுக்கு மட்டுமே உரித்தானதில்லை. இம்மாதிரியான வேலைகளில் தொடர்ந்து ஈடுபடக்கூடிய யாருக்கு வேண்டுமானாலும் வரலாம்.
தாய்லாந்து இளநீர் ஃபேக்டரி செயல்வீரர்களும் ‘கார்பல் டனல் சிண்ட்ரோமும்’!

இணையத்தில் ரேண்டமாக தேடிக் கொண்டிருந்த போது இந்த வீடியோ கண்ணில் பட்டது. அலுவலகத்துக்கு வரும் வழியில் தினம் ஒரு இளநீர்க் கடை கண்ணில் படும். நம்மூரில் எல்லாம் இளநீர் என்றால் அது ஃப்ரெஷ் ஆக ரோட்டோரக் கடைகளில் சுடச்சுட வெட்டி ஸ்ட்ரா போட்டு நீட்டுவதாகத் தானே நாம் கண்டிருக்கிறோம். ஆனால் தாய்லாந்தில் இளநீர்களை விதம் விதமாக ருசிப்பார்கள் போல. இதோ இந்த வீடியோவில் இருவகையாக இளநீர்கள் தயாராகின்றன.

ஒன்று மிக மிக இளசான காய்களில் இருந்து பெறப்படுகிறது. அதை கை வாட்டமாகப் பிடித்துக் கொள்ளவோ அல்லது ஓரிடத்தில் இருந்து பிறிதொரு இடத்துக்கு எடுத்துச் செல்லவோ தோதாக இருக்குமாறு அடிப்பாகம் தட்டையாக்கப்பட்டு வெட்டி அடுக்கப்படுகிறது. ஒரு பொதிக்கு 10 காய்கள் வரை அடுக்குவார்கள் போல. இந்த இளநீர்கள் தாய்லாந்தில் மிகவும் பிரசித்தமானவை. அங்குள்ள ஃப்ளாட்ஃபாரக் கடைகள் தோறும் இந்த இளசான இளநீர்கள் கொட்டிக் கிடக்கின்றன. தாய்லாந்து டூர் செல்வோரை நிச்சயம் இப்படி வெகு இளசாக வெட்டப்பட்டு அருந்தத் தோதாக செதுக்கப்பட்ட தேங்காய்கள் பெரிதும் ஈர்க்கக் கூடிய அம்சமாக இருக்கும். 

இளநீர் வெட்டுவதில் நம்மைப் போலன்றி அவர்கள் கலைநயத்துக்கும் முக்கியத்துவம் அளிக்கிறார்கள். வழுக்கைத் தேங்காயாக இல்லாமல் சற்றே வழுக்கைப் பருவத்திலிருந்து முன்னேறி இளம் தேங்காய் உள்ளே மினுங்கும் அளவுள்ள டீனேஜ் தேங்காய்களாகப் (இளநீர்ல என்னங்கடா டீனேஜ்னு சுட்டு விரல் உயர்த்தாதீங்க, இப்படிச் சொல்லிப் பாருங்க இளநீர் கூடக் கொஞ்சம் இனிக்கும்) பார்த்து வெட்டி இறக்கி அவற்றின் தோலை உறித்து மேலே கொஞ்சமாகக் கடினப் பட்டுப் போன ஓட்டை சாணைக்கல்லில் தீட்டி வெள்ளை வெளேரென்ற ஓட்டை பால்கோவா நிறமாக்கி பாலீஷ் போட்டு சந்தையில் விற்கிறார்கள். இந்த வகை இளநீர்களையும் தாய்லாந்து டூர் அடிக்கும் விதம் விதமான மக்கள் வாங்கி அருந்தி ருசிக்கின்றனர்.

விடியோவைப் பார்க்கும் போது ஒரே தாள கதியில் செய்யும் தொழிலே தெய்வம் எனும்படியாக தாய்லாந்து ஆண்களும், பெண்களும் இளநீர் ஃபேக்டரியில் வேலை செய்வதில் ஒரு கலைநயம் மிளிரத் தான் செய்கிறது. இதெல்லாம் கலையுள்ளம் கொண்டவர்களுக்கு ஆனால் கருணையுள்ளம் கொண்டவர்கள் என்ன சொல்கிறார்கள் எனில்? இப்படி ஒரே விதமான வேலையை வெகு விரைவாக தொடர்ந்து செய்து கொண்டிருந்தால் அந்த வேலையில் ஈடுபட்டிருப்பவர்களுக்கு ‘கார்பல் டனல் சிண்ட்ரோம்’ என்று சொல்லப்படக் கூடிய குறைபாடு  தாக்கக் கூடும் என்கிறார்கள்.

இந்த சிண்ட்ரோம் தாக்குதல் தாய்லாந்து இளநீர் ஃபேக்டரி தொழிலாளர்களுக்கு மட்டுமே உரித்தானதில்லை. இம்மாதிரியான வேலைகளில் தொடர்ந்து ஈடுபடக்கூடிய யாருக்கு வேண்டுமானாலும் வரலாம்.

அதென்ன  ‘கார்பல் டனல் சிண்ட்ரோம்’ என்று புருவத்தை உயர்த்துபவர்களுக்காக அதைப் பற்றிய சிறு விளக்கம் இதோ...

உங்கள் கை விரல்களில் உணர்வின்மை, கூச்சம் மற்றும் ஒரு காகிதத்தைப் பற்றக்கூடிய முடியாத அளவுக்கு வலுவிழப்பை உணர்கிறீர்கள் என்றால் உங்களுக்கு கார்பல் டனல் சிண்ட்ரோம் தாக்குதல் இருக்கிறது என்று அர்த்தம். நீங்கள் உடனடியாக மருத்துவரை அணுகி உங்களுக்கு அந்தக் குறைபாடு இருக்கிறதா? என்று சோதித்துக் கொள்வது நல்லது. இந்தக்குறைபாடு ஏன் வருகிறது என்றால்? நமது கைகளின் முழு நீளத்துக்கும் பயணப்படும் மீடியன் நரம்பு மணிக்கட்டில் இருக்கும் கார்பல் டனல் (கார்பல் குகை) மூலமாக கை விரல்களில் முடிவுறுகிறது. இந்த நரம்பில் அழுத்தம் கூடும் போது தான் கார்பல் டனல் சிண்ட்ரோம் தாக்குதல் உண்டாகிறது. இந்த மீடியன் நரம்பு கைகளில் சுட்டு விரல் தவிர பிற அனைத்து விரல்களின் நடவடிக்கைகளையும் கட்டுப்படுத்தக் கூடியது. எனவே இந்த நரம்பு பாதிக்கப்பட்டால் கைகளும், விரல்களும் தங்களது முழுத்திறனை இழந்து வலிமை குன்றுகின்றன. மேற்கண்ட அறிகுறிகள் இருந்தால் உடனடியாக மருத்துவரை அணுகுவது உத்தமம்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com