சுடச்சுட

  
  Yoga_breathing_techniques-1296x728-header

  இரவு தூங்கும்பொழுது மூன்று, நான்கு முறை விழித்துக்கொள்கிறேன்  அது சமயம் இடது நாசியில் நன்கு மூச்சுவிடும் பொழுது வலது நாசி அடைத்துக் கொள்கிறது . வலது நாசியில் நன்கு மூச்சுவிடும் பொழுது இடது நாசி அடைத்துக் கொள்கிறது. இது இயற்கையானதா? இயற்கைக்கு மாறானதா? மாறானது என்றால் இதற்கான மருத்துவத்தை  தெரிவிக்குமாறு வேண்டுகிறேன்.

   -கே. வேலுச்சாமி,   தாராபுரம்.

  இது இயற்கைக்கு மாறானது. சாதாரணமாக இரு நாசித்துவாரங்களின் வழியே மூச்சுக் காற்றை உள்ளிழுப்பதும் வெளியேவிடுவதும், தலையைச் சார்ந்த பிராண வாயுவின் செயலாகக் கூறப்படுகிறது. தொண்டை, மார்பு ஆகிய பகுதிகளில் எளிதாகச் சென்று வரக்கூடிய இந்த வாயுவின் மற்ற செயல்களாகிய புத்தியின் பகுத்தறியும் தன்மையும், அத்தன்மையின் விளைவாக ஏற்படக் கூடிய நன்மை, தீமைகளைச் செயலாக்கம் பெறச் செய்வதற்கான உத்தரவுகளையும் பிறப்பிக்கிறது. மூளை, புலன்கள் மற்றும் மனம் ஆகியவற்றைத் தன் சீரான செயல்களால் பாதுகாத்துக் காப்பாற்றுகிறது. துப்புதல், தும்முதல், ஏப்பம் விடுதல் மற்றும் உண்ணும் உணவை வாயிலிருந்து நெகிழ வைத்து, உணவுக் குழாயிலிருந்து இரைப்பை வரை எடுத்துச் செல்லுதல் போன்ற செயல்களையும் செய்கிறது. இத்தனை சிறப்பு வாய்ந்த பிராணவாயுவானது, உங்களுக்கு இரவு நேரங்களில் ஒத்துழையாமை நிலைக்கு மாறிவிடுகிறது என்றே குறிப்பிடலாம். நவீன ஆராய்ச்சியாளர்களின் பார்வையிலிருந்து பார்த்தால், மூளையின் சில நரம்பு மண்டலங்கள், பிராண வாயுவின் கட்டுப்பாட்டில் தான் இயங்குகின்றன என்பது தெளிவாகிறது. 

  இடது மூக்குதுவாரம் வழியே ஸாம குணம் (குளுமை) அதிகமாக சுவாசம் சஞ்சரிக்கிறது. வலது மூக்கு வழியில் சஞ்சரிக்கும் சுவாசத்தில் தாபம் (உஷ்ணம் - சூடு) அதிகம். இவற்றை இரவில் சீராகப் பெறுவதற்கு நீங்கள் பிராணயாமம் எனும் மூச்சுப்பயிற்சியை, யோகப் பயிற்சி செய்பவர்களிடமிருந்து கற்றுக் கொள்ளலாம்.

  பிராணயாமம் செய்யும் விதத்தையும், பிராணயாமத்தைத் தொடர்ந்து பழக்கப்படுத்துவதால் உடலிலும் உள்ளத்திலும் உண்டாகும் பயன்களையும் தர்மசாஸ்திரங்கள், உபநிஷத்துகள், யோகசாஸ்திரம் எல்லாம் தெளிவாய் விஸ்தாரமாய் போதிக்கின்றன. பயன்களை முதலில் தெரிந்து கொள்ளுவது பிராணயாமத்தைச் செய்ய நன்றாய் தூண்டிவிடும், உற்சாகப்படுத்தும்.

  ஆண், பெண் இருபாலர்களும், பத்து வயதிற்கு மேற்பட்ட எல்லா வயதினரும் பிராணயாமம் செய்யலாம். பெண்கள் மாதவிடாய் 4 நாட்களிலும், பிரசவித்தவர்கள் சுமார் 45  நாட்கள் வரையிலும் பிராணயாமம் செய்யக் கூடாது. பகல், இரவு எந்த நேரத்திலும் செய்யலாம். குளித்துவிட்டு பிராணயாமம் செய்தால் அதிக விசேஷமுள்ள பலன் தரும். ஆனால் முழுமையாக குளிக்காவிட்டாலும் பரவாயில்லை. ஈரத்துணியினால் உடம்பை பூரா சுத்தமாய் துடைத்துக் கொண்டு அழுக்கில்லாத ஆடையணிந்து கொண்டாலும் போதுமானதே.

  உண்ட உணவு முற்றிலும் நன்றாய் ஜீரணமடைந்து, ஓரளவு நல்ல பசியும் உண்டான நேரம்தான் பிராணயாமத்திற்கு மிகவும் உகந்த நேரமாகும். சிறிது பால் அல்லது ஏதாவது திரவ பதார்த்தம் பருகியிருந்தாலும் அது ஜீரணமாகி பசி ஆரம்பித்த பின்புதான் பிராணயாமம் ஆரம்பிக்க வேண்டும். காற்று அடைப்பு இல்லாத, புழுக்கம் வெப்பம் இல்லாத, பேய்க்காற்றும் இல்லாத காற்று பரவின இடம், கண்ணைக் கூசும் விளக்கு வெளிச்சமில்லாததும், முழுவதுமாக அந்தகாரமாயில்லாத ஓரளவு கொஞ்சமான வெளிச்சம் உள்ள இடம் உபகாரம். வெயில் தாபம், பேய்க்காற்று இல்லாமலிருந்தால் வெட்ட வெளியில் செய்வது நலம். அருகில் மற்ற மனிதர்களின் சஞ்சாரம் இல்லாமலும், இரைச்சல், சத்தம், சாக்கடை, மலம் சிறுநீர்  கழிக்குமிடத்தின் துர்நாற்றம் இல்லாததுமான தனிப்பட்ட அறையில் பிராணயாமம் செய்வது உசிதம் நெருப்புப் புகை, ஊதுவத்திப் புகை, பறக்கும் தூசி ஒன்றும் பக்கத்தில் அண்டவே கூடாது.

  பத்மாசனம் அல்லது ஸ்வஸ்திகாசனத்தில் உட்கார்ந்து கொண்டு செய்ய வேண்டும். ஸ்வஸ்திகாசனம் இரு பாதங்களையும் மடித்து இரு தொடைகளுக்கு அடியில் அடக்கி உட்கார்வது. பத்மாசனம் இரு பாதங்களை இரு தொடைகளுக்கு மேல்புறத்தில் உள்ளங்கால்கள் மேலே தெரியும்படியாக தூக்கி வைத்துக்கொண்டு உட்கார்வது. இதில் எந்தக்கால் எந்தத் தொடையின் மேல் தூக்கி வைத்துக் கொள்ள வேண்டும் என்று விசேஷ நியமம் இல்லை. செளகர்யம் போல் கால்களை மாற்றிக் கொள்ளலாம்.

  சாஸ்திரங்களில் ஆசன விதங்களைக் கூறும் எல்லா இடங்களும் பத்மாசனமே போற்றப்படும் என்று முடிக்கின்றன. பத்மாசனம் சிறந்ததாயினும் அதைச் செய்ய முடியாதவர்கள் ஸ்வஸ்திகாசனத்தில் உட்கார்ந்து பிராணயாமம் தாராளமாய் செய்யலாம். பலனில் குறைவே கிடையாது. பத்மாசனத்தில் கால்களை மாற்றவே செய்யாமல் ஒரேயடியாக இடது காலை வலது தொடையின் மேல் நீண்ட நேரம் வைத்திருக்க வேண்டியதும் அவசியமில்லை. நீண்ட நேரம்  தியானம் செய்யும் சந்தர்ப்பத்தில் 15- 20 நிமிஷங்களுக்கு ஒரு தரம் காலை மாற்றிப் போட்டுக் கொள்வதில் உடலில் சௌமய குணமும் ஆக்னேய குணமும் சமானமான நிலையில் அமையும் என்ற நன்மையுண்டாகும்.

  சிலருக்கு பத்மாசனத்தில் கால்களில் ரத்த ஓட்டம் மந்தப்பட்டு கால்கள் மரத்துப் போகும். மரத்துப் போன நிலையை அப்படியே வைத்துக் கொள்ளக் கூடாது. அங்கு பத்மாசனத்தை மாற்றிக் கொண்டு ஸ்வஸ்திகாசனத்தில் அமர்ந்தால், உடனே கால்களில் ரத்த ஓட்டம் நன்றாய் ஏற்படும், மரத்துப் போவது நீங்கி விடும். பிறகு முன்போல் பத்மாசனத்தில் அமரலாம். மேலும் அஷ்ட சூரணம் எனும் மருந்தை 5 கிராம் அளவில் எடுத்து உருக்கிய இந்துகாந்தம் எனும் நெய் மருந்தை 10 மில்லிலிட்டர் அளவில் அதனுடன் சேர்த்து காலை, இரவு உணவிற்கு நடுநடுவே நக்கிச் சாப்பிட்டால் உங்கள் உபாதைக்கான தீர்வு கிடைக்கலாம்.

  - பேராசிரியர் எஸ். சுவாமிநாதன்

  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
  google_play app_store
  kattana sevai