சுடச்சுட

  

  அறுவைச் சிகிச்சையின்றி செயற்கை வால்வு பொருத்தம்: ஓமந்தூரார் மருத்துவமனை புதிய சாதனை

  Published on : 13th January 2019 02:25 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

  hospital

  நாட்டிலேயே முதன் முறையாக தனியாருக்கு நிகராக அதி நவீன முறையில் செயற்கை இதய வால்வு பொருத்தும் சிகிச்சையை மேற்கொண்டு சென்னை ஓமந்தூரார் அரசு பல்நோக்கு மருத்துவமனை சாதனை படைத்துள்ளது.
   டிஏவிஐ (டிரான்ஸ் அயோர்ட்டிக் வால்வு இம்ப்ளான்டேஷன்) எனப்படும் நுண்துளை சிகிச்சையானது அறுவைச் சிகிச்சைக்கு மாற்றாக அறிமுகப்படுத்தப்பட்ட ஒன்றாகும்.
   இரு நோயாளிகளுக்கு அதி நவீன முறையில் செயற்கை இதய வால்வினை பொருத்தி புதிய மைல்கல்லை எட்டியுள்ளது தமிழக சுகாதாரத் துறை கட்டுப்பாட்டின் கீழ் வரும் ஓமந்தூரார் மருத்துவமனை.
   பொதுவாக இதய ரத்த வால்வுகளின் செயல்பாடு குறையும்போது அதற்கு மாற்றாக செயற்கை வால்வுகள் பொருத்தப்படுவதுண்டு. அறுவைச் சிகிச்சைகள் மூலமாகவே இன்றளவும் வால்வுகள் பொருத்தப்பட்டு வருகின்றன. அதேவேளையில், அறுவைச் சிகிச்சைக்கு உடல் நிலை ஒத்துழைக்காதவர்களுக்கு செயற்கை வால்வு பொருத்துவதில் பெரும் சவால் இருந்து வருகிறது.
   இந்த நிலையில்தான் அதற்கு மாற்றாக டிஏவிஐ என்ற சிகிச்சை முறை அறிமுகமானது. அதாவது, தொடை வழியே சிறிய துளையிட்டு, அதன் வழியாக இதயத்தில் வால்வினை பொருத்தும் சிகிச்சை முறை அதுவாகும். ஏறத்தாழ ஆஞ்சியோவை ஒத்த சிகிச்சை இது. மருத்துவ உலகின் நவீன நடைமுறைகளில் ஒன்றாக டிஏவிஐ கருதப்பட்டாலும், அதனை அதிக அளவில் மேற்கொள்ள முடியாத சூழல் நிலவி வருகிறது.
   அந்த வகை சிகிச்சைகளை அளிக்கக் கூடிய மருத்துவ நிபுணர்கள் போதிய அளவில் இல்லாததே அதற்கு அதி முக்கிய காரணம்.
   இதனால், இதுவரை அத்தகைய இதய வால்வு சிகிச்சையானது அரசு மருத்துவமனைகளில் எட்டாக் கனியாகவே இருந்து வந்தது. இந்தச் சூழலில், ஓமந்தூரார் அரசு மருத்துவமனையில் ராஜபாளையம், கரூர் ஆகிய நகரங்களைச் சேர்ந்த இருவர் இதய வால்வு பாதிக்கப்பட்டு அனுமதிக்கப்பட்டிருந்தனர்.
   அவர்கள் இருவரது உடல் நிலையும் அறுவைச் சிகிச்சைக்கு ஒத்துழைக்கும் வகையில் இல்லை. இதையடுத்து, வெளியில் இருந்து மருத்துவ நிபுணர்களை வரவழைத்து அவர்களுக்கு டிஏவிஐ சிகிச்சை அளிக்க முடிவு செய்யப்பட்டது.
   இதற்காக பிரபல இதய அறுவைச் சிகிச்சை நிபுணர்கள் டாக்டர் கோபாலமுருகன், டாக்டர் பிரசாந்த் வைத்தியநாதன் ஆகியோரது "ஹார்ட் டீம் இந்தியா' அமைப்புடன் புரிந்துணர்வு ஒப்பந்தம் போடப்பட்டது. அவர்கள் இருவர் தலைமையில் ஓமந்தூரார் மருத்துவமனையின் மருத்துவர்கள் டாக்டர் கார்த்திகேயன், பார்த்தசாரதி ஆகியோர் அடங்கிய குழு, கடந்த நவம்பர் மாதம் இரு நோயாளிகளுக்கும் டிஏவிஐ முறை மூலம் இதய வால்வுகளை பொருத்தியது. தற்போது நோயாளிகள் இருவரும் நலமுடன் இருப்பதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
   தனியார் மருத்துவமனைகளில் இந்த வகையான சிகிச்சைக்கு குறைந்தது ரூ.28 லட்சமாகும் எனக் கூறப்படுகிறது. ஆனால், ஓமந்தூரார் மருத்துவமனையில் இலவசமாகவே அந்த சிகிச்சை அளிக்கப்பட்டுள்ளது. நோயாளிகளின் இதயத்தில் பொருத்தப்பட்டுள்ள வால்வு மட்டும் தலா ரூ.13 லட்சம் மதிப்புடையவை என மருத்துவமனை வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.
   
   
   

  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
  google_play app_store
  kattana sevai